நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்...
நீர் தெளித்து
புள்ளியிட்ட கோலத்தில்
மஞ்சளாய்
காக்கை எச்சம்
திருஷ்டிப்பொட்டென...
சுழித்தோடும்
நீருக்குள் போராடி
கடலட்டையொன்று
செத்து
மீண்டும் மேலெழுந்து
சுழன்றபடி....
தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....
ஒரு ஆற்றாமைக்
கவிதையை
ச்சீ....என்கிறது
எழுத்துலகம்....
பிற்போடப்பட்ட செய்திகளை
வாசிப்பதாக உறுதியளித்தவன்
இறந்துவிட்டதாக
அடுத்த செய்தியில்....
கருத்தரிக்காத் தாயின்
கல்லறை நிழலில்
தேம்பியழும்
அநாதைக் குழந்தை....
ஊடறுத்த
சில சொற்களில்
குற்றம் இருப்பதாக
வரையறுத்து
தூக்கிலிடப்படுகிறது
நூலகமொன்று....
மாதங்களற்ற சிசுவொன்றை
பெற்றெடுக்கிறாள்
பார்வையற்ற
பெண்ணொருத்தி....
முலையறுத்த
எம் தேசப் பெண்களுக்கு
குறியறுத்த மனிதர்களை
காட்டி
போர் வேண்டாமென
போதிக்கிறது
உலக சமாதானம்....
இயற்கையில்
நஞ்சு படிகிறதாமென
போராடி
ஆயுத விற்பனையில்
வெற்றி பெறுகிறது மனிதம்...
எல்லாமும்
அவரவர் நினைவில்
சரியாகவும்
அடுத்தவர் பார்வையில்
தவறாகவும்....
தொடர்ந்துகொண்டிருக்க.....
நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
11 comments:
இந்தக் கவிதையைப் படித்ததும் நெஞ்சு கனக்கிறது.
பார்வைகளும் போதனைகளும் படித்தவருக்கு இல்லை பாட்டாளிகள் சுரண்டும் பூமியில்§ம்ம்ம் கவிதை பல படிமங்கள் கொண்டது!
வணக்கம்!
உலகத்தின் போக்கை! உள்ளத்தின் நோக்கை!
அலகிலாத் துன்பை அளித்தாய் - நிலத்தில்
மனிதம் மலா்ந்து மணக்காதே! புத்தன்
அணிந்த அறங்கள் அளித்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
vethanai thanthathu..!
வரிகள் அத்தனையும்
நெஞ்சில் பாரம் ஏற்றிச் செல்கின்றன....
குறிப்பாக கடைசி வரிகள்
நெஞ்சில் பதிகின்றன...
"" என் நிலையில் எனக்கு வருத்தமாக இருக்கும் நிலை...
மற்றவருக்கு செய்தி தானே....
அந்த செய்து விவாதத்துக்கும் விதண்டா வாதத்துக்கும்
அடைபட்டுப் போகிறது""""'
""" எனக்கு சரியென்பது வேறொருவருக்கு
தவறாக இருக்கலாம்..."""
அதையும் தாண்டி நம் ஜீவிதம் இவ்வாழ்வில்......
அந்த போட்டோவே ஒரு சூப்பர் கவிதையாகவே தெரிகிறது.
/// நானற்ற பெருவனத்தை
கடந்து கொண்டிருக்கிறது
என் நான்... ///
சிறப்பு வரிகள்... வாழ்த்துக்கள்...
கண்ணீர் துளிர்க்க படிக்கலாயிற்று. நிதர்சனத்தை காண இயலாமல் காலம் கூட மறுபுறமாய் முகம் திருப்பிக்கொண்டு நிற்கும் அவலம்..
எங்களுக்கான கவிதை...! வாழ்த்துக்கள் சகோ!
தளிர்கொன்ற சூரியன்
அதேமரத்தில்
வேரொட்டி வளரும்
குருவிச்சைக்கும்
பச்சையம் பகிர்கிறான்....
ஜொலிக்கும் வரிகள்.. பாராட்டுக்கள்..
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.
Post a Comment