புசுபுசு பூனைகளைத்தான்
நேசித்திருந்தேன்
ஒருபொழுதில்...
நெய்யும் கடலையும்
தின்று கொழுத்த பூனைகள்
என்னைத் தின்றபொழுதில்
முக்காடிட்டு
முள்வேலிகளே கிரீடங்களாய்
வடிவான அரூபியானேன்.
அறிவிக்கவிரும்பவில்லை
சமூகத்திடம் என்னை.
வெறுப்பின் இதயம் காடழித்தது
அன்போ அணைத்தணைத்து
பிரபஞ்சம் அளந்தது
ஆனாலும் போதவில்லை
கண்மூடிப் புத்தன்களுக்கு
அரூபிகளின் அலறல்.
வால் சுழற்றும் சிற்றசைவில்
உயிருள்ளதாய் நடிக்கும்
நெகிளிச் செடியென
இல்லா உயிரை
இழுத்து
மூச்சிட்டு வாழும்
தங்க நிற மீன் நான்.
சொண்டில் நிறமப்பி
தொட்டிக்குள்
உயிர் வாயுவை
விழுங்குவதுபோல
பசப்பி
குமிழிக்கனவோடு இறப்பேன்
மஞ்சள் நிறத்தோலுடன்.
தூக்கிப்போடுவார்கள்
பிளந்த போதிமர
வேர்களுகளுக்குள்
ஆயுதம் களைந்து
அப்போதும் என் முகம்
அரூபமாய்த்தான்
முள்முடியுடன்!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||
1 comment:
கண்மூடிப் புத்தன்களுக்கு................இது தான் 'அவர்' களுக்கு வாய்ப்பாகப் போயிற்றோ?
Post a Comment