*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, November 07, 2014

பதுளையிலயும் புழுவானான் தமிழன்...


முத்தின மூணு இலையை
முணுமுணுக்காம
தோளில சுமந்து சுமந்து
சுகமா வாழக் குடுத்திட்டு
சொர்க்கம்ன்னு
சாணி மெழுகி
நாலு மூங்கில் கம்பு நட்டு
வீடாக்கிக் குந்தும் வச்சு
குபேரன் நினப்பா
வாழ்ந்திட்டு இருந்தவங்களை
மனுசரா மதிக்காம
மண்ணுக்குள்ள மூடிட்டாங்க.

சிராய்க் கட்டையா
விறைச்ச கை கால்ல
பாம்பு குடிச்சு
அட்டை குடிச்சு
மிஞ்சின ரத்தத்தை
கொஞ்சமும் அஞ்சாம
மிச்சத்தையும் குடிச்சுப்புட்டு
குஞ்சுகளை அநாதையாக்கி
எத்தனை பேர்ன்னு
எண்ணிக்கைகூட தெரில்லன்னு
தமிழனுக்கு
இதுதான் விதின்னு
பதுளைல மூடிட்டாங்க.

நாசமா போன இயற்கைகூட
எப்பவும்
நம்மளுக்கே நாசம் செய்து
மனுசப் பச்சயம் தேடிப் புதைக்குது
அழிச்சவங்க வருங்காலம்
வளமா வாழ.

மாரியம்மா பாப்பாத்தி
வெங்கடாசலம் காத்தையா
தங்கம்ன்னு
பொன்னு பொன்னா
புசுக்குன்னு வெத்தில எச்சி துப்பி
பொய்யில்லாக் கழுதைங்க சிரிச்சது
போக்கடி அம்மனுக்கும் பிடிக்கல.

குண்டு போட்டுக் கொன்னாங்க
ஈழத் தமிழன்னு.

இப்ப......
இலங்கைக்கே
லாபம் தரும்
இல்லாத ஏழைங்களை
அழிஞ்சிடுவாங்கன்னு தெரிஞ்சுமே
காப்பாத்த மாட்டாம
தழையாக்கிப் புதைச்சிட்டாங்க.

தேயிலை பறிப்பவங்க அடுப்பில
கடநிலைத் தேத்தண்ணியோட
மனசும் சேர்ந்து கொதிக்கிறதையும்
கண்மாயைப்போல கண் கலங்குறதையும்
கண்டாங்களா கதிரையில குந்தினவங்க.

ஏகாதிபத்தியக் காரங்களுக்கு
நம்ம குழந்தைங்க
நவீனக் குழந்தைகளா ?
குப்பைகளா ?
தீட்டுப்பட்ட சாதிகளா ?

வாழணும்ன்னு
விதிச்ச விதி சொல்ல
தமிழனா பிறந்த
விதி விதிச்ச சொல்ல
நாசமாப்போன சாமியை
நாக்கில வந்தமாதிரிக்கு
திட்ட வருது.

ஓட்டுக் கேக்கும்
கும்மாரிகளுக்கென்ன
கொன்னு புதைச்சிட்டாங்களே
விருத்தி கெட்ட தமிழனை
’பதுளை’யிலயும்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

6 comments:

Yarlpavanan said...

ஆண்டவரே! எங்கே போனீர்...?
பதுளையிலயும் புழுவானான் தமிழன்... என்ற
செய்தி ஆண்டவருக்கே தெரியாதா?
ஒரு முறை பதுளைக்கே வாரும்
நம் உறவுகளின் நிலையைக் கேளும்!

Unknown said...

துன்பியல் பாடல் கண்டே
துடிக்கிது இதயம் விண்டே
அன்பினில் சிறந்த மகளே
ஆறுமா காயம் புகலே!
என்பினில் பட்ட முறிவே
ஈழமே எனது உறவே
இன்பினைக் காணும் ஒருநாள்
என்னுடை வாழுவில் திருநாள்!

சிவகுமாரன் said...

தகிக்கிறது மனசு சகோதரி வேதனையிலும் இயலாமையிலும்.

'பரிவை' சே.குமார் said...

ஏகாதிபத்தியக் காரங்களுக்கு
நம்ம குழந்தைங்க
நவீனக் குழந்தைகளா ?
குப்பைகளா ?
தீட்டுப்பட்ட சாதிகளா ?

வேதனை நிறைந்த வரிகளால் வலி நிரம்பி தவிக்கிறது மனசு.

தனிமரம் said...

மக்களின் அறியாமையும், மந்தை போல அரசியல் அசட்டையினமும் தான் அழிவுக்கு எப்போதும் காரணம்! இயற்கைத்தாய் மீது ஏன் கோபம்!

Yoga.S. said...

உங்கள் ஆக்கம்,நேற்றைய 'உதயன்' பத்திரிகையில்,........."சூரிய காந்தி" பக்கம்-9-ல் ..............வாழ்த்துக்கள்,மகளே!

Post a Comment