*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, November 27, 2014

இளைப்பாறலின் விமர்சனம்...

மஞ்சாடி விதைகளை
சேமித்து
மூடி வைத்திருக்கிறது
அடி வேர்களில்
என் மண்
முகட்டு வளையில்
நகங்கள் கிள்ளிய வடுக்களோடு.

குருதி உலர்ந்த வெடிப்பின்
மூலை மடிப்புக்களில்
பொறுக்கியெடுத்த
ஆயிரமாயிரம் கதைகளை
வியாபாரத்துக்கென
திருடிக்கொண்டிருக்கிறது
சினிமாக்களும் இணையங்களும்
நிறை கொள்கலன்களில்
தப்புத்தப்பாய்.

வான்மேகம்
என் தேசப்படத்தின்
முகவரியழித்துத்
திருகிக்கொண்டிருக்க
காத்திராக் காலங்கள்
நழுவி அதிரும்
தந்திக் கம்பிகளில்.

வாழ்ந்த வீடு
சிதறிய சொந்தம்
கருக்குமட்டைப் படலை
குடல் சிதறிச் செத்த நாய்
என் பாப்பாத்திச் சேவல்
கைசயைத்த காவலரண் போராளி
அனாதரவற்ற உப்புமடச்சந்தி
அலைக்கழிக்கப்பட்டவர்களின் இரவு
வலமும் இடமுமாய்
சப்பித் துப்பி எஞ்சிக் கிடக்கும் குரல்கள்
உவத்தலற்ற காலத்தின்மீது
காய்ந்த விமர்சனங்கள்.

இன்னும் சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை.

புழு நெளிய
மலம் மேல் மலமிருக்கும்
என் மக்களின்
விடுதலைத் தகப்பனே
யுத்தத்தின் பிதாக்களே
உங்களைத் தேடுகிறேன்.

தலையில்லாமல் வாழ்வதும்
ஒரு வாழ்க்கைதான்
உயிரும் குருதியும்
வேண்டுமெனில்
இதோ என் தலை.
இழந்த உறவுகளை
அழிக்கப்படும் வரலாற்றை
நினைவூட்டுகிறேனே தவிர
வேறொன்றுமில்லை.

முழந்தாழிடுகிறேன் புத்தனே
குமுத மலரோடு
உனக்காய் ஒருமுறை
அகதி தேசத்து
பனிக்காட்டுப் பெண் நான்!!!

மனதிற்கும் உடம்பிற்கும் தைரியம் கேட்டபடி...
நமக்காய் விதையாய்ப்போன அத்தனை உயிர்களுக்கும்
என் தலை சாய்த்த வணக்கம் !

வரைதல் - சுரேஷ் குமார் Suresh Kumar

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

6 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நிலாமகள் said...

மனதைப் பிசைகிறது... கவிதை எனும் பேரில் ஒரு கதறல். இழப்புகளின் வேதனை ஒத்தடங்களால் ஆறப் போவதில்லை. புத்துளிர்ப்பை நம்பிக் கிடக்கிறது பிறந்த மண்.

Unknown said...

கண்ணீரை மையாக்கி
கவிதையிது எழுதினாயா?
மண்ணீரம் ஆகியதே
மகளேநான் படிக்க!

'பரிவை' சே.குமார் said...

முழந்தாழிடுகிறேன் புத்தனே
குமுத மலரோடு
உனக்காய் ஒருமுறை
அகதி தேசத்து
பனிக்காட்டுப் பெண் நான்!!!

மனதை வாட்டும் வரிகள் நிறைந்த கவிதை.

தனிமரம் said...

பதில் சொல்ல முடியாத கனத்த இதயத்துடன் கடந்து செல்வோம் காலத்தின் கையில் தீர்ப்பு.

விச்சு said...

மாவீரர்களை நானும் வணங்குகிறேன். தங்களின் கவிதையின் வீரியம் அனுபவித்தவர்களுக்கு புரியும். எழுத்தில் மற்றவர்களுக்கும் புரிய வைத்துள்ளீர்கள் ஹேமா..

Post a Comment