*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, August 12, 2014

மழை குடிக்கும் ஓரிரவு...

உன் இரவில் என் விழிப்பு
என் இரவில் உன் நித்திரை.

அடைமழையின்
இரவிங்கே
அங்கே ?

உலர்ந்த இறகில் அடர்மகிழ்வு
நனைந்த இறகில் தளாத்துக்கம்
கை நிறைய உன் வார்த்தை மழை
காளான்களில் தவளை உருவம்.

அம்மாவுக்கு மாத்திரை சரியாகக் கொடுத்தாயா
சின்னச்சின்ன வேலைகளைத் தாங்கிக்கொள்
உன் புகை நாற்றத்தை அவளிடம் காட்டாதே
அணைத்து முத்தம் கொடு அழாது அந்தப்பறவை.

பசியென்று சொல்லிவிட்டு காத்திருக்கிறாய்
செய்மதிக் கோபுரத்தில்
இணையம் சொல்வதை நான் சமைக்கும்வரை
வயிற்றிற்குள் பிரபுதேவாவும் பீஷ்லூசியும்.

தூரத்துப்பச்சை நீயும் சரி நானும் சரி
இலைகள் அசைந்தாலும்
காற்றுத் தொங்கி நிற்கும் கடலுக்குள்.

கண்ணா...
பாலகுமாரனின் நாவல்கள் வாங்கியனுப்பு
உடையார் நாவல் பாலகுமாரனின் பிறவிக் கடன்
சோழ தேசத்தின் ஒட்டுமொத்த வாழ்வியல் பல
ராஜராஜத்தேவரும் பஞ்சவன் மாதேவியும்
இறப்பின் பின் தஞ்சைக் கோவிலைச் சுற்றியே
ஆன்ம வடிவமாக உலவுகின்றனராமே.

மனக்குளத்தில் என்னயுமறியாமல் கல்லெறிந்தேனா
சலசலப்பும் குழப்பமும் பிரார்த்தனையும் கேட்கிறது
பிளவுறும் மௌனமுடைத்தலறுகிறது சில சொற்கள்
உன் அழுகையின் மொழி கனக்கிறது
அன்பின் பற்றாக்குறையாக.

தெருவில் இருவரின் அன்பின் பிணைப்புப் பார்த்தேன்
இவர்கள் போல் போலியாய் நாமில்லை
மனங்கள் சாகும்வரை
அக்காதல் வருமா நீறு பூத்த என் வாழ்வில்
தேசத்தில் என் உயிரும்
ஊசலாடும் உள்ளூடலுமாய் நானிங்கு.

நம்பிக்கைக் கடவுளொருவர் உயிர்ப்பித்ததாய் சொன்னாய்
அவர் கழுத்திலும் ஆயிரம் வடை மாலைகள் பார்
வேண்டுதலுக்கும் விற்பனைக்கும் லஞ்சத்திற்குமாய்.

இப்போதைக்கு....
உன் முத்தத்தை தள்ளி வை தீயாய் சுடுகிறது.

கண்ணா...
கை கொடு பாரதி பாடலில் இளையராஜா இசை தொடு
இந்த மழையில் குடையாய் நானென்றேன்
மழையாய் நீயென்கிறாய்
காதல் தவிர்த்துக் கட்டிக்கொள் கொஞ்சம்
குடை வேண்டாம்
ஈரம் சொட்டச் சொட்ட நனைதலே இதம் இருவரும்!!!

குழந்தைநிலா ஹேமா !


1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment