*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, December 13, 2013

இந்த வேளையில்....


அறுத்து விடப்பட்ட காற்றலையில்
சுவாசிக்கவியலா அழுத்த அடர்வில்
மூச்சுக்குழல் புகுந்த உணவென ஒரு குரல்
இருண்ட பனைமரச் சுவர் உடைத்தெறிகிறது.

ஒரு சொல்லை
மனதில் புகுத்தவும்
பின் வாயால் கக்கிப் பறிக்கவும்
கற்றுக்கொடுத்திருந்தது சமூகம்.

கூதிர்கால நிலம்
கொஞ்சம் விறைத்து
வேர் மறந்த நிலையில்
இணக்கமற்ற ஒரு பனிநிரம்பிய
அதிசீதக் குளிரில் மலங்கி
பள்ளத்துள் தள்ளவைக்கிறது அது
உருப்போட்டு உருப்போட்டு
வளர்த்த ஆசையை.

பொழுதுகளைச் சுவீகரிக்கும்
சுவர்க்கோழியென
ஒக்கப்பாட்டற்ற அத்தியாயத்துள்
கூவத்தொடங்கும் கூத்தியாகி
ஒட்டடைக்குள்
கர்ப்பமற்ற அடைகாத்தல் ஆரம்பம்.

நேற்று இன்று நாளையென
பருவகாலங்களைப்
பிரித்திடா நிலையில்
அதீத துரவு மையப்புள்ளியொன்றில்
கேட்டுக்கொண்டிருக்கிறது அக்குரல்.

தொடர்ந்தும் துரத்தும்
துரக(த)த்தின் முதுகில்
உறவுகளை விட்டுவிட்டு
தீவொன்றில் ஊன்றிக்கொள்கிறது
இரண்டு வேர்கொண்ட மரம்
மீண்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை ஹேமா.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல்... வாழ்த்துக்கள் சகோதரி...

அம்பாளடியாள் said...

தொடர்ந்தும் துரத்தும்
துரக(த)த்தின் முதுகில்
உறவுகளை விட்டுவிட்டு
தீவொன்றில் ஊன்றிக்கொள்கிறது
இரண்டு வேர்கொண்ட மரம்
மீண்டும்!!!

சிறப்பான வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

தனிமரம் said...

தொடர்ந்தும் துரத்தும்
துரக(த)த்தின் முதுகில் //ஓட்டுக்கா ஓடுவார்கள் துட்டு வந்ததும் தூங்குவார்கள் என்ற நிலையை சொல்லும் வரிகள் அழகு!

Post a Comment