*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, December 23, 2013

அழுக்குக் கடவுள்...


பாதாளக்கரண்டியொன்றுக்கான
கவிதைதான் ஞாபகம் வருகிறது.

தொலைத்து விட்ட
உன் வாழ்வைத் தேடியெடுக்கிறேன்
நீ வளர்த்துவிட்ட உறவுகளுக்குள்.

பாதங்களைக் கிழிக்கிறது
காலமுட்கள்
நம்பிக்கைகளைப் பதம் பார்க்கிறது
வார்த்தைச் சம்மட்டிகள்.

கொஞ்சம் அண்ணாந்து பாரேன்...

விண்மீன்களை ஓடிப்பிடித்தும்
நிலவுக்குள் பாட்டியைத் தேடியும்
பறவை விட்டுப்போன சிறகோடு
வானலையும் உன்னையும் கண்டு
எத்தனை காலம் நீ....?

நிசப்தக் கற்களால் வீடமைத்து
நிலா வழிய ஒரு சிறு துவாரமிட்டு
சாணக வாசனை நாசிக்குள் நிரப்ப
உயிரசைக்கும் இசை ரசித்து
எத்தனை காலம் நீ....?

கற்களைக் கடவுளாக்கி
நேர்த்திகளை
மரங்களில் ஊஞ்சலாக்கும்
மனிதர்கள் நடுவில்
அழுக்கான கடவுள் அழகற்றவர்தான்
ஒத்துக்கொள்.

ஒரு இரவின் பெருவெளி நிரப்பும்
என்றோ பாடிய
தெருப்பாடகனின் பாடலொன்று.

பறவையின் பசியையும்
எண்ணிக் கசியும் குழந்தையின் மனம்.

கொஞ்சம் பொறு
அன்பின் நீள்சுவரில் உன் பெயர்.

என்றோ தொலைந்த
நெடுங்கனவொன்றில்
சற்று நேரம்
உன் இரவை அகலப்படுத்தி
உறங்கிக்கொள்.

உனக்கான சவப்பெட்டியின்
இறுதி ஆணி
உன் உள்ளங்கையிலேயே
இருக்குமென்று
ஒப்பமிட்டு வாழப்பழகு
இனியாவது!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம1வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகச் சொன்னீர்கள்...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை...

வாழ்க்கையின் நீளம் நம் நாம் செல்லும் பாதைகளிலே...
அதை விரிவுபடுத்த நமக்கு வேண்டும் தன்னம்பிக்கை

Chellappa Yagyaswamy said...

'பாதங்களைக் கிழிக்கிறது காலமுட்கள்' ...அருமையான வரிகள்! ஆம், காலம் என் கால்களை முழுதுமாகச் சிதைத்துவிடு முன்பாக எண்ணியதை முடிக்கவேண்டும் என்று நினைவு படுத்தினீர்கள். நன்றி!

K Gopaalan said...

பகுத்தறிவுத்தமிழனின் எண்ணமும் நோக்கமும் தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் இந்த BளாGஐ பார்த்து சிரிக்கவேண்டும். சிரித்து மகிழ வேண்டும்.

kgopaalan@blogspot.com

Subramaniam Yogarasa said...

சமர்ப்பணம்,அருமை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Post a Comment