*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, November 10, 2013

தமிழ் இசைப் ப்ரியங்கள்...


அவகாசமேதும் தந்து
பேசவில்லை அவர்கள்.

புணர்தல்
அதுவும்....
இவள்
'பிரபாகரனின் மகள்'
என்கிற நோக்கிலேயே
எத்தனை தரம்
எப்படிப் புணரலாம்
என்பதில் மட்டுமே
குறிக்கோளாயிருந்தனர்
புத்தனின் புத்திரர்கள்.

’நான் அவள் இல்லை’
என்பதை ஏற்கக்கூட
அவர்களிடம் நிதானமில்லை.

புதைகுழி மூடமுன்
விழும் துளிக் கண்ணீரை
அழிக்கும் மழைபோல்
தாட்சண்யமற்றுக் கிடந்தது
அவர்களின் திட்டும்
ஏச்சும் நடத்தையும்.

ஒவ்வொருவனின்
புணர்தலையும்
காறித்துப்புதலில்
வீணானது என் சக்தி.

ஒரு கோழிக்குஞ்சின்
பலம் கொண்டமட்டும் கொத்த
முத்தமிட முயல்வதாய்
டிக் டக் வார்த்தைகள்.

சமாதானத்துக்காய் ஏந்தி
சமாளிக்கப் போர்த்திய
வெள்ளைத்துணியில்
என் பரம்பரைக்கான
முட்டைகள் செத்திருக்கலாம்
சில உயிரணுக்கள்
மண்மூடிய
ஏதோவொரு மடியில்
நிறைந்திருக்கக்கூடும்.

நான்....
என்னைத் தின்று தின்றுதான்
செத்துக்கொண்டிருந்தேன்
யாரும் என்னைக்
கொல்லமுடியாதென்பதை
அறியாத சாத்தான்கள்
புணர்ந்தது
அவர்களின் காய்ந்த நாட்களை.

சேற்றில் கலைந்த
என் மானம் காத்திருக்கும்
சிவப்புச் சால்வைகளின்
கழுத்து வாசலில்.

அவர்கள்
வீட்டை நக்கும்
வளர்ப்பு நாயல்ல நான்
நான் நானாய்த்தான்
தமிழ் காத்த
தமிழச்சியாய்த்தான்
செத்துக்கொண்டிருந்தேன்!!!

ஹேமா(சுவிஸ்)

7 comments:

Anonymous said...

நெஞ்சு கணக்கிறது, தங்கச்சி.

Seeni said...

vethanai sako...

'பரிவை' சே.குமார் said...

சேற்றில் கலைந்த
என் மானம் காத்திருக்கும்
சிவப்புச் சால்வைகளின்
கழுத்து வாசலில்.

-------------

வலிக்கிறது சகோதரி.

Seeni said...

சகோதரி இசை ப்ரியாவிற்காக நான் எழுதிய கவிதை..!
------------------
வஞ்சகம் இல்லாமல்-
வந்து-
விழுந்தது-
குண்டுகள்!

இரக்கமின்றி-
எரித்தது-
ஏவுகணைகள்!

சீறி சென்றது-
துப்பாக்கி-
தோட்டாக்கள்!

எங்கும்-
ரத்தக்களம்!

எங்கெங்கும்-
மரண ஓலம்!

முட்கள் குதிடாத-
கால்கள்-
உண்டோ!?

சடலத்தை மிதித்து -
நடக்காத கால்களும்-
"அன்று"-
உண்டோ!?

சிதறி கிடந்த-
சதை துண்டுகள்!

அதனுடன்-
ஒட்டி இருந்த-
எலும்புகள்!

ரத்தமாக-
காட்சி தந்த-
தண்ணீர் தடாகங்கள்!

ரத்த சகதியான-
நிலங்கள்!

எங்கும்-
முக்கல்கள் -
முணங்கல்கள்!

அவர்களின்மேல் -
ஏறிய-
பீரங்கி வாகனங்கள்!

என் நிலை-
இவைகளுக்கும்-
மேலாக!

கிடந்தேன்-
கண்ணீர் கடலில்-
தத்தளித்தவளாக!

மாட்டினேன்-
ஓநாய்களிடம்-
வெள்ளாடாக!

துடித்தேன்-
பாலையில்-
விழுந்த-
மீனாக!

தவித்தேன்-
மானம் இழந்தும் -
மரிக்காத-
கவரி மானாக!

என் கதறல்கள்-
இருந்திருக்கிறது-
காம வெறி நாய்களுக்கு-
கிளர்ச்சி ஊட்டுபவைகளாக!

மானம்-
மறைக்க-
ஆடைகள்-
தைத்தோம்!

ஆடைகளை-
காக்கவே-
ஆயுதங்கள்-
தரித்தோம்!

என்னை-
எச்சை படுத்தியது-
வெறி நாய்கள்!

எச்சையிலும்-
இச்சை கொண்டது-
சொறி நாய்கள்!

என் கதறல்கள்-
வேட்டை நாய்களின்-
கொக்கரிப்பில்-
கரைந்தது!

உள் நாட்டு விவகாரம் என-
உலகமும்-
மௌனித்தது!

மூச்சை நிறுத்தியவர்கள்-
மூக்கில் பஞ்சை-
வைக்கிறார்கள்!

"எனக்கென்ன "!?-என
வாழ்பவர்கள் -
காதில் பஞ்சை-
வைத்து கொள்கிறார்கள்!

ஓ!
உறவுகளே!
துடித்த-
என் இதயம்-
துடிப்பதை-
நிறுத்தி விட்டது!

எனக்கான-
நிலைக்கு-
உங்கள் இதயங்கள்-
துடிக்க வேண்டியுள்ளது!
seeni-kavithaigal.blogspot.com

காமக்கிழத்தன் said...

நல்ல கவிதை.
இதில் புதைந்து கிடக்கும் அழுத்தமான சோகம்
மீண்டும் படிக்கவிடவில்லை.
வெப்பம் நிறைந்த கண்ணீர்த் துளிகள்
எழுத்தை மறைக்கின்றன.

கும்மாச்சி said...

நல்ல கவிதை.............வரிகளில்தான் எத்தனை சோகம். நெஞ்சம் கனக்கிறது.

தனிமரம் said...

கவிதையில் சாட்டையடி சிவப்பு சால்வைக்கார்ரரின் துப்பாக்கி மூடர்களுக்கு!

Post a Comment