*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 25, 2008

மனித நேயம்...

விண்ணைத் தாண்டி
விண்ணென்று நிமிர்ந்து நின்றான்.
ஊர்வலமும் வருகிறான்
ஒரே நிமிடத்தில் உலகைச் சுற்றி.
என்ன செய்து...என்ன இலாபம்
என் சாதி உயர்வு என்று
அடி ஒன்று தள்ளியே நிற்கிறான்.
கல்வியில் உயர்ந்தாலும்...
வாழ்வில் வளர்ந்தாலும்...
மனங்கள் மாறாத சேறாய்
மனம் கொண்டான் மானிடன்.

குண்டு வெடிக்கக் குளறியடித்துக்கொண்டு
கோவிலுக்குள் ஓடுகிறான்
மாடி வீடோ...மண் குடிசையோ
தலைமாடு கால்மாடு தெரியாமல்
தடுமாறித் தவிக்கும் வேளை கூட
சாதிச் சகதிக்குள்.
வேண்டியதை விலை கொடுத்து வாங்க
வெளி நாட்டு வெள்ளியிருந்தும்
வயிற்றுப் பசியோடு
வரண்ட தொண்டையுமாய்.
உயிரை உயிர்...
உருவிடும் வேளையிலும்
வறட்டு றாங்கியோடு
மனம் விட்டுக் கேட்காத
வாய் ஜாலத்தோடு.
ஏழ்மைக்குள் வாழ்கிறது
உண்மையான மனித நேயம்.
மனிதம்...
ஒன்று காண் உன் ஊருக்குள்.
உன் வீட்டு உப்பை ஒரு தரமாவது
ஒதுங்கி...
நின்று தின்ற நன்றியோடு
தெருவைத் தாண்டி
துண்டுப் பாணுக்காய்
தன் உயிர் நலம் மறந்து
கடந்து கொண்டிருக்கிறது
உனக்காயுமாய்...
இன்னும்...இன்னும்
மனிதம்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எங்கோ சில...
மனித மனங்களுக்குள் மட்டும்!!!

ஹேமா(சுவிஸ்)

5 comments:

தமிழன் said...

தங்கள் தளம் பார்த்தேன், தொடர்ந்து வருவேன். உங்கள் பாராட்டுக்கு என் நன்றிகள்.

தமிழன் said...

தங்கள் அனுமதி இல்லாமல் நீயும் தமிழன்தான் என்ற கவிதையை எடுத்து தமிழக தமிழ் நண்பர்களுக்கு அனுப்பிவிட்டேன் மன்னிக்கவும், தங்கள் பதிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. தமிழன் என்றும் சொரணை அற்றவன் தான் இல்லை என்றால் ஈழம் என்றோ மலர்ந்து இருக்கும். இன்று தமிழகத்தின் எழுச்சி நாளை ஈழத்தின் விடியல் கண்டிப்பாக உண்டு.

ஹேமா said...

வணக்கம் திலீபன்.
மனதின் வலிகளை தமிழின் உணர்வோடு பகிர்ந்து கொள்வோம்.
"நீயும் தமிழன்தான்" என்ற கவிதை இங்கும் பெரிய பரபரப்பை உண்டாக்கியது.இந்தியரைக் குறை சொல்லவில்லை. ஆனாலும் சிலர் எங்கள் வலியைப் புரிந்து கொள்வதில்லை."நீங்கள் சாப்பிட வழியில்லாமல் காசு உழைக்கத்தான் வெளி நாடு வந்திருக்கிறீர்கள்"என்று சொன்னார் ஒரு இந்தியர்.எங்கள் யாழ் ..எங்கள் வாழ்க்கைச் சூழல் பார்த்திருந்தால்..!எம் விதி இப்படியாபோச்சு.திலீபன் உங்களை வரவேற்றுக்கொள்கிறேன்.நன்றி.

தமிழன் said...

அன்பு சகோதரிக்கு,
உங்கள் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது, உங்களை கிண்டல் செய்த அந்த இந்தியர் தான் பிழைக்க அண்டை நாடு வந்து உள்ளார், ஏன் இந்த மடல் தட்டச்சு செய்யும் நானும் பிழைக்க வந்தவன் தான். நாங்கள் சுக வாழ்வு தேடிவந்தவர்கள் நீங்கள் கொள்கைக்காக நாடு பெயர்ந்து உள்ளிர்கள். சொன்னவன் இந்திய தமிழன் என்றால் நீங்கள் கன்னத்தில் அறைந்து இருக்கு வேண்டும், தமிழ் வலி தமிழனக்கு புரியவில்லை என்றால் அந்த ஈன பிறவி இருந்து என்ன பயன், நான் முதலில் தமிழன் பிறகு தான் இந்தியன், இதை சொல்லிகொள்வதில் எனக்கு சிறுமை இல்லை.

உண்மையில் ஈழ தமிழர்களே மானமுள்ள தமிழர்கள் ஈழ நாடு மலர்ந்தால் தமிழன் தலை நிமிர்ந்து வழுவான். உங்கள் வலிக்கும் வேதனைக்கும் ஆண்டவன் ஒருவன் இருந்தான் என்றால் நிச்சயம் ஈழ நாட்டிற்கு வழிவகுப்பன்.

ஈழ தலைவனே இனி உலக தமிழின தலைவன்

வாழ்க தமிழ் வளர்க தமிழ்

விச்சு said...

மனிதம் தழைக்கும்...உங்கள் ஆதங்கமும் வலிகளும் புரிகிறது.

Post a Comment