*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, April 07, 2015

அனுகரணவோசை...

அவிழ்த்த
நூல் பிரித்து
கயிறாக்கியிழுத்த
போட்டியின் வெற்றியில்
இரத்ததானப் பெருவிழா.

இத்தனை ஏக்கமா
இருந்திருக்கிறது
யாக்கைக் குடுவைக்குள்
காதலும் காமமுமாய்.

தோய்த்தெடுத்த
ஈரங்கள் காயப் போதுமாயிருந்தது
இருபது விரல்கள் பிணைத்த
நிமிட மென்வெப்பம்.

வியர்வையில் முளைத்து
மௌனித்த நாணம்
இதழ் இதழாய்
அவிழ்ந்த மணம் மடியில்.

ஒற்றை நிலைக்கண்ணாடி காண
கொழுக்கி விலகிய சங்கிலியில்
சம்பிரதாயச் சடங்கு.

இனி
ஊரும்
எறும்புகளும்
பிரிக்கா இடைவெளியற்ற
ஆடைகள்
தேடி உடுத்துவதே அழகு.

உதட்டு முத்தங்கள்
ஒட்டிய இடங்களில்
சுவாச வாசங்களாய்
அன்பின் தியானம்!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு வரிகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--

Post a Comment