*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, January 06, 2015

மரணத்துள் வாழ்பவர்கள்...

'வடக்கில் வசந்தம் சொந்தங்களே
பாதுகாப்பேன்
பயம் வேண்டாம்'

அழித்த பேயே
அறங்கூவி
அச்சம் விட்டு
அசிங்கமாய்
நம் வீட்டு வாசலில்
வெட்கமற்று
ஓட்டுப் பிச்சை கேட்டு.

நம் முகம் மூடி
மூடுண்ட வட்டத்தில் அமுக்கி
சாமர்த்தியமாய்
இரத்தம் குடித்த பேய்கள்
பிறழ்ந்த நாக்குகளோடு
நம்முன்.

இடுங்கிய மனங்களில்
நடுக்கம் இன்னும்.

பிசாசுகள்
துளைத்த கதவுகளில்
பூட்டில்லை இப்போதும்.

மறக்கவில்லை
வானத்திற்கும் பூமிக்குமிடையில்
நின்று நிலைத்த விழிகளை.

எங்கள் நகரங்கள்
ஏன் எரிந்து போயின ?

கோயில் முதல் நூல்கள்வரை
கொள்ளை போனது ஏன் ?
ஏன் எங்கள் குஞ்சுகளை
குண்டுகள் பொசுக்கின ?

இரத்தக்குழிகள் பூத்ததே
பெருமூச்சின் குமிழிகளை
எப்படி எப்படி ஏன் ஏன் ???

தெரியாதாம் தமக்கொன்றும்
'தம்ம பதம்' கூட
மறந்து போயிற்றாம்
புத்தனை எரித்த நாளிலிருந்து.

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே
மறந்துவிடலாம்
ஆனால் ஆனால்...

நாச்சாரம் வீடுகளுக்குள்
வெயில்கூட தீய்க்காமல்
பொத்தி வளர்த்த
குழந்தைகளின்
கொங்கைகள் அறுத்து
போரென்று எரித்ததும்
போவென்று பரதேசம் துரத்தியதும்
பொங்கிய பாத்திரம் உடைத்ததும்
சிதறிய பருக்கைகளையும்
எப்படி எப்படி ???

பேயாளும் திருநாட்டில்
திரு திரு விழிகளோடும்
திருவோட்டோடும்
ஓட்டுப் போடும்
மிஞ்சிய திரு தமிழன்!!!

”தேர்தல் காலம் “ 08.01.2015

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

3 comments:

Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!

-'பரிவை' சே.குமார் said...

அரக்கன் ஒழிந்தாலும் நம்மவர் இழப்புக்களும் திரும்பக் கிடைக்குமா?

வலி நிறைந்த கவிதை அக்கா.

yathavan nambi said...

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

(S'inscrire à ce site
avec Google Friend Connect)

Post a Comment