*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, June 13, 2013

அன்பின் நெளிகுரல்...


கோடுகள் வெட்டிய சதுரத்துள்
நிறைந்த மழைநீர்
காத்திருக்கிறது
ஒற்றை மழைப்பூச்சிக்காய்.

எங்கிருந்தோ ஓருருவம்
உள்ளங்கைக்குள் அணைக்கும்
பொழுதுகளைச் சேகரிக்கிறது
மனம் வஞ்சனையற்று
இரவை நீளமாக்கியும்
பகலைக் கனவுகளாக்கியும்
தனலெறிந்த அவலத்தோடு.

ஒன்றிழந்து ஒன்று பெற்ற
குழந்தையென
சடுகுடு விளையாட்டு
அப்பாவின் சாயல்
சமாதானத்தோடு.

கரையாப் பொழுதை
செரித்திக்கொண்டிருக்கும்
நினைவுகளுக்கு
திரையிட்டு சாதுர்யமாய்
நவீனச் சித்திரத்தின் கோடுகளை
நெளித்தும் வளைத்தும் வரைந்து
தன் வல்லமை
காட்டிக்கொண்டிருக்கிறது
அந்தப் பேரன்புப் பேனா.

அன்பின் பேரிரைச்சலுக்குள்
அனாவசியாமாய்
கேலிச் சிரிப்பின்
வன்மமொன்று
தவளை விழுங்கிய
பாம்பின் அவஸ்தையோடு.

கண்ணில் நீர் நிறைய
சாதுர்யமாய்
அப்பாவின் மார்பில்
படுத்தபடி பாடிய தேவாரம்
நினைவுகளில் நெளிய
கிடத்துகிறேன் என்னை
இன்னும் நான்
தூங்கவில்லை!!!

ஹேமா(சுவிஸ்)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// கண்ணில் நீர் நிறைய
சாதுர்யமாய்
அப்பாவின் மார்பில்
படுத்தபடி பாடிய தேவாரம்
நினைவுகளில் நெளிய
கிடத்துகிறேன் என்னை
இன்னும் நான்
தூங்கவில்லை!!! ///

அருமை...

Post a Comment