*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, February 14, 2012

சிறகானவனுக்காக...

தொட்டுக்கொண்டே நகர்ந்துபோகும் முகிலாய் நம் நட்பில் முளைத்த காதல் பட்டுக்கொண்ட நொடியிலேயே பட்டும்போனது.வெற்றிடம் நிரப்பும் காலமாய் நீ....இப்போதும் கைபற்றித்தான் வைத்திருக்கிறாய்.பேச்சு,பார்வை,தொடர்பு,இணைப்பு எதுவும் தேவையில்லை.உயிருக்குள் வாழும் உணர்வுக்குத் தீண்டல் அவசியமற்றது.ஒரு அழகான இறகு காற்றின் திசையில் வந்ததாகவே முதன் முதலில் அறிந்துவைத்திருந்தேன் உன்னை.பௌர்ணமி பூஜித்த ஒரு நாளில் சிறகுகளோடு நுழைந்த நீ கை குலுக்கிச் சிரித்தாய்.பின் இடப்பக்கச் சிறகில் இருத்தி மெல்ல மெல்ல அழைத்துப்போனாய் ஓரிடம்!

அழகான அல்லது ஒளிர்மையான இல்லை இல்லை துளிர்காலமென்று உவமை சொல்லமுடியாத தனித்த தீவின் ஒரு மூலையாய் இருக்குமோ அது.வெக்கை பரவிய மணல் தரையை உன் நிழலைப் போர்த்தி ஈரமாக்கினாய்.நட்புக் கலந்த காதலோடு கைகுலுக்கினாய்.காய்த்திருந்த கைகளை வெடுக்கென இழுத்து இது களம் தந்த வடுக்களென வெளிறிச் சிரித்தாய் உயிரை எனக்குள் புதைத்து!சில பகல்கள் பல இரவுகளின் பின் ஒரு நட்சத்திரங்களற்ற இரவைத் தேர்ந்தெடுத்தாய்.அன்றைய நாளில்தான் உன் தத்துவங்கள் சேமிக்கும் போதிமரமானேன்.அணுவின் துகள்களைக்கூட அனுபவித்துச் சேர்த்த ஒரு அமைதி உன்னிடமிருந்தது.நானறியா ஒரு மலையின் பெயர் சொல்லி அங்குதான் வாழப் பிடிக்குமென்றாய் அடிக்கடி.பத்து நிமிடத்தில் இருபத்தொரு முறை அந்த மலையின் பெயர் வந்தது.நடு நடுவில் காத்திருப்புப் பற்றிய கதையும் சொன்னாய்.எனக்கானதா நம் தேசத்திற்கானதா என அறியமுடியவில்லை.அந்த இரவில் உன் முகமும் சரிவரத் தெரியவில்லை!

காலத் திசைகள் வேறுபட்டிருந்தாலும் அணையாது காதல் தீ என்றும் கை பிடித்துச் சொல்லியிருந்தாய்.அன்று பற்றிய தீ உன்னிடமும் என்னிடமும்.தீயில் உருகி உருமாறும் காலத்திலும் காதல் குழந்தையோடு நாமிருக்கலாம் என்றும்,தீயில் வெந்தாலும் சாம்பல் விலக்கி உனக்குள் இருக்கும் என்னையும் எனக்குள் வாழும் உன்னையும் பார்த்துவிடலாம் தீ வளர்த்த அந்த புதுத் தேசத்தில் என்றும் சொல்லியிருந்தாய்.தீயாய் நீராய் குளிர்தரு நிழலாய் இருந்தாலும் ஒற்றை இறகாகவே பறக்கும் லாவகம் உன்னிடமிருந்தது.காலமாற்றங்களின்போது உதிர்ந்த இறகுகளைப் பரிசாகவும் தந்திருந்தாய்.காதலின் மிகுதியாய் எப்போதுமிருக்கும் என்னிடம் அவைகள் உன் வீரம் சொன்னபடி!

தீ வளர்த்த தேசத்தில் சாம்பல் விலக்கி என்னைத் தேடு.நானும் முயல்கிறேன் உன்னைத் தேட.அங்குதான் நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!


அன்றைய இரவில்தான்
உன் முழுமையான
காதலைக் கண்டுகொண்டேன்
சாமங்கள் தாண்டிய இரவது
காதலின் முழுபலத்தையும்
முத்தங்கள்கொண்டு
மூர்ச்சடைய வைத்திருந்தாய்.

வேப்பம்பூவும்
தென்னங்கீற்று நிலவும்
கொஞ்சம் வெட்கி
மொழிமறந்த அழகு நேரமது
ஓவியக் கிறுக்கல்கள் பழகுகிறாய்
குழந்தையென என்மீது
அத்துமீறல்கள்தான்
என்றாலும்....
அளவோடு அனுமதிக்கிறேன்.

எல்லைவரை கூட்டிப்போன
நீ.....
என் ஒற்றை அதட்டலுக்குப் பணிந்து
வியர்வைக் குளியலோடு
தலைகுனிகிறாய்
"போடா பொறுக்கி நீயும் உன் வீரமும்"
தலைகோதி அணைக்கையில்
ஒற்றைக் கண்ணீர்த்துளி சொன்னது
வானம் தாண்டிய
உன் அன்பை!!!

அத்தனை என் உறவுகளுக்கும் என் அன்பான காதலர்தின வாழ்த்துகள்.
காதலொடு ஹேமா(சுவிஸ்)

47 comments:

ஸ்ரீராம். said...

அருமை அருமை ஹேமா...பாராட்ட வார்த்தைகள் போதவில்லை....சேமித்த கணங்களுடன் இதையும் சேமித்து வைத்துக் கொள்வேன்!

தீபிகா(Theepika) said...

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும்.
பாடல் ஞாபகம் வருகிறது. அத்தனையும் அனுபவத்தின் விழி துளிர்த்த வார்த்தைகளாய் தான் வலிக்கிறது. எத்தனை கதைகள்...எத்தனை காயங்கள். எம் தீயெரிந்த தேசத்தில்.

சத்ரியன் said...

தீராக்காதல் சொல்லும் குறிப்புகள் அடங்கிய கவிதையை மிகவும் ரசித்தேன்.

பாவம் அந்த பொறுக்கி.

பால கணேஷ் said...

காதலின் அழுத்தத்தை அழகாய் வெளிக்காட்டிய கவிதையான உரைநடையையும், கவிதையையும் மிக ரசித்தேன். காதலர் தினத்தில் காதலுக்காய் உங்கள் பங்களிப்பு பிரமாதம் ஹேமா! கிறுக்கல்களை அனுமதித்த பெண்ணும், வியர்வையுடன் தலைகுனிந்து நின்ற ஆணும் சித்திரங்களாய் நின்றார்கள்- மனதில்!

மகேந்திரன் said...

உள்ள உணர்சிகளின்
எல்லை தொட்டுவிட்டீர்கள்
சகோதரி.
கவிதை படிக்க படிக்க இனிக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை இனிக்கிறது.

தமிழ் உதயம் said...

காதலர் தினத்துக்கு இதைவிட சிறந்த பதிவு வேண்டுமோ. உங்களோடு காதலை நாங்களும் அனுபவித்தோம்.

Asiya Omar said...

சிறகானவனுக்காக ! காதல் பகிர்வு ! வாழ்த்துக்கள்.

நிலாமகள் said...

அணுவின் துகள்களைக்கூட அனுபவித்துச் சேர்த்த ஒரு அமைதி உன்னிடமிருந்தது.//

தீயில் வெந்தாலும் சாம்பல் விலக்கி உனக்குள் இருக்கும் என்னையும் எனக்குள் வாழும் உன்னையும் பார்த்துவிடலாம் தீ வளர்த்த அந்த புதுத் தேசத்தில்//

தீயாய் நீராய் குளிர்தரு நிழலாய் இருந்தாலும் ஒற்றை இறகாகவே பறக்கும் லாவகம் உன்னிடமிருந்தது.காலமாற்றங்களின்போது உதிர்ந்த இறகுகளைப் பரிசாகவும் தந்திருந்தாய்.காதலின் மிகுதியாய் எப்போதுமிருக்கும் என்னிடம் அவைகள் உன் வீரம் சொன்னபடி!//

நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.//

கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!//

மொழிம‌ற‌ந்த‌ அழ‌கிய‌ நேர‌மாகிய‌து வாசித்த‌ க‌ண‌ங்க‌ளில்!

"காத‌ல் ஒரு அதிச‌ய‌ம்
அங்கே
காய‌ங்க‌ள் பூக்க‌ளாகின்ற‌ன‌
க‌ண்ணீர் ம‌துவாகிற‌து"
-‍‍'மின்மினிக‌ளால் ஒரு க‌டித‌ம்'
அப்துல் ர‌ஹ்மான்.

கூடல் பாலா said...

கவிதை அருமை சகோதரி!

தனிமரம் said...

அனுபவித்து எழுதிய காதல் பதிவும் கவிதையும் தென்றல் வருடுகின்றது உணர்ந்து கொண்டவர்களின் அன்பில் குழந்தை ஆகின்றது மனசு.

test said...

என்னமோ நீங்க பெரியவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்! :-)

Learn said...

பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Admin said...

மிகவும் சிறப்பு.பொறுமையாக ரசித்துப் படித்தேன்.உணர்வுகளை உசுப்பிவிட்டது. அருமை.

Marc said...

நட்சத்திரங்களற்ற இரவைத் தேர்ந்தெடுத்தாய்.அன்றைய நாளில்தான் உன் தத்துவங்கள் சேமிக்கும் போதிமரமானேன்.அணுவின் துகள்களைக்கூட அனுபவித்துச் சேர்த்த ஒரு அமைதி உன்னிடமிருந்தது.நானறியா ஒரு மலையின் பெயர் சொல்லி அங்குதான் வாழப் பிடிக்குமென்றாய் அடிக்கடி.


இந்த வரிகள் அர்த்தங்களை தாண்டி ஏதோ சொல்கின்றன.

அருமை பதிவு வாழ்த்துகள்

Anonymous said...

ஹேமா நாளும் கிழமையுமா இப்படியெல்லாம் எழுதி பொறாமை பட வைக்க கூடாது, சொல்லிட்டேன்.எந்த ஊற்றில் சுரக்கிறது உங்களுக்கு சொற்கள் தெரியவில்லை, அவை காதலுக்காய் சுரக்கும் போது அமிர்த்தமாகிறது..சிறகானவனே இந்த தேவதையை எப்படி அள்ளிச் சென்றாய்..

நிரூபன் said...

நீண்ட நாளைக்குப் பின்னர், உங்களிடமிருந்து உரை நடை + காதல் கலந்த படைப்பு.

காதலர் தினத்திற்கேற்றாற் போல, அவனிடம் தோற்றும் போன அவளின் உணர்வுகள் இங்கே கவிதையாக மலர்ந்திருக்கிறது.

Angel said...

//.உயிருக்குள் வாழும் உணர்வுக்குத் தீண்டல் அவசியமற்றது.//


காதலை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமென்றால் அது ஹேமாவால்தான் முடியும் .

Anonymous said...

காதல் பலரை பல மாதிரி செய்கிறது...உங்கள் படைப்புகளை மெருகேற்றி நிற்கிறது சகோதரி...

கவிதையும் படைப்பும் போட்டி போட்டு மனதை அள்ளுகின்றன...

வாழ்த்துக்கள் ஹேமா..

யியற்கை said...

ஆஹா ஆஹா.... ஒரு இதமான ஒரு அழுத்தமான ஒரு வலியான ,,,, எல்லாமுமான கவிதை , இது கவிதையில் கதையா கதையில் கவிதையா
மனதை பிசைந்து நெகிழ்த்தி தொண்டைக்குள் கொணர்ந்து இருத்திவிட்டது இந்தப் படைப்பு. மொத்தத்தில் நான் ம் என்ற சொல்லில் இத்தனை நாளாய் உணர்த்தியதை ஒட்டுமொத்தமாய் இந்த ஒரு படைப்பில் காண நேர்ந்தது, வாழ்த்துக்கள்
பின் குறிப்பு ( அனுபவமின்றி இப்படி முடியாது., முடியவே முடியாது )

சித்தாரா மகேஷ். said...

//"போடா பொறுக்கி நீயும் உன் வீரமும்"
தலைகோதி அணைக்கையில்
ஒற்றைக் கண்ணீர்த்துளி சொன்னது
வானம் தாண்டிய
உன் அன்பை!!!//

ஆழமான உண்மைக் காதலை அறிந்துகொண்ட உணர்வு. சிலிர்க்க வைக்கிறது அக்கா.வாழ்த்துக்கள்.காதலில் வாழ்ந்து பார்க்க துண்டுகிறது தங்கள் பதிவு.

manichudar blogspot.com said...

சிறகானவனுக்காக ததும்புகிற காதல் பொங்கி பிரவாகமாய்! எப்படி சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் காதலும் அருமையானது தங்களது படைப்பை போலவே.

மதுரை சரவணன் said...

//தீ வளர்த்த தேசத்தில் சாம்பல் விலக்கி என்னைத் தேடு.நானும் முயல்கிறேன் உன்னைத் தேட.அங்குதான் நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!//

vaalththa vaarththaikal thedukiren.... vara marukkinrana ... iruppinum muyalkiren... kathal rasam thanthamaikku vaalththukkal

K said...

ஹேமா, எனக்கு எப்படிப் பாராட்டுவதென்றே தெரியாம முழுசிக்கொண்டு இருக்கிறன்! கவிதையைப் படிச்சு விசர் வருது ஹேமா!

சொல்லாழமா? பொருளாழமா? கவியாழமா? மொழியாழமா? ஒரே குழப்பம் தான் போங்கள்!

சத்தியமா இந்த வருட காதலர்தினத்தை மறக்க மாட்டன் ஹேமா! உங்கள் கவிதை அவ்வளவு இனிமை!

டெலிஃபோனில ஒராளுக்கு வாசிச்சு காட்டினன்! அவவும் நிறையப் பாராட்டினா....!

தாமரைக்குட்டி said...

ஐயோ!!! என்ன ஒரு காதல் பரிசு இந்த கவிதை!

வாயடைத்துபோயிருக்கேன்!

Seeni said...

enna sollanumnu theriyala!
oththa variyil sonnaal-
arumai!

சுதா SJ said...

அக்காச்சி....... எப்படி இருக்கீங்க....!!! கவிதை அவ்ளோ அருமையா இருக்கு அக்காச்சி... நிறைய சொல்லி பாராட்டனும் போல இருக்கு.... ஆனாலும் நீங்கள் தப்பாக நினைப்பீங்களோ என்று பயமா இருக்கு :(

சத்தியமா.. மனசுவிட்டு சொல்லுறேன்..... நான் இதுவரை படித்த காதல் கவிதைகளில் இதுதான் சிறந்தது என்பேன். எவ்ளோ அழகான வார்த்தைகள் கொண்டு வடித்து இருக்கீங்க......!!!! ரெம்ப ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கு அக்காச்சி.

இப்படிப்பட்ட திறமையானவரின் சாகோதர பாசம்+நட்பு எனக்கு கிடைத்து இருக்கு என்று நினைக்கும் போது மனசு பெருமிதம் கொள்ளுது...

இந்த காதல் கவிதையை பத்திர படுத்திக்கொண்டேன்... நல்ல+சிறந்த காதல் கவிதை கேட்ப்பவர்களுக்கு என் பரிசு இனி இந்த அழகியல் கவிதைதான்

காட்டான் said...

வணக்கம் சகோதரி!
உரை நடையோடு சேர்ந்த காதல் கவிதை அருமை,அருமை!!!
பாராட்ட வார்த்தைகளே இல்லை..

Yaathoramani.blogspot.com said...

எப்படி இப்படி உணர்வுகளை
வார்த்தைகளை மீறி வழியவிட முடிகிறது
உணர்வின் மின்சாரப் பாய்ச்சலுக்கான வெறும் கடத்திகளாக
வார்த்தைக்ள் மௌனமாக நிற்பது தங்கள் படைப்பில் மட்டுமே
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

வந்து வந்து வெறுமனே படித்துவிட்டு மட்டும் போறேன் ஹேமா.. என்ன சொல்றதுன்னே தெரியல. வார்த்தைகள் கடந்த உணர்வுகளின் குவியலே இந்தப் பதிவுக்கு பதிலாய் தர முடிகிறது. ஹேமா... காதலை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த இதமான வலியின் சுகம் புரியும். வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

வணக்கம் ஹேமா!நன்று.கொஞ்சம் கடுந்தமிழோ?எனக்குக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது,புரிந்து கொள்ள!வாழ்த்துக்கள்!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

காதலர் தினத்திலும் சோகமா?

rajamelaiyur said...

அழகிய கவிதை

ஆமினா said...

ஒரு காதல் கதையை இதை விட யாரால் கவிதையில் அழகாய் வடித்திட முடியும்?????

அப்பப்பா... ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்பட்ட உணர்ச்சிவார்த்தைகள் உடம்பெல்லாம் பரவுது :-)


மறக்க முடியாத கவிதை ஹேமா

வாயடைத்து போயிருக்கேன். ஒன்னும் சொல்ல முடியல...

Unknown said...

கல்லில் வடிப்பது சிலையே-ஹேமா
கவிதையில் வெடிப்பது கலையே
சொல்லில் தொடுப்பது சுவையே-என
சொல்லில் மிகையல இவையே
வில்லின் அம்பெனப் பாயும்-மேலும்
விளங்கிட தெளிவுடன் ஆயும்
அல்லியின் மென்னிதழ் காதல்-என
அறிந்தால் வாரா மோதல்

புலவர் சா இராமாநுசம்

Prakash Angappan said...

Sema :)

விச்சு said...

சாரி.. வலைச்சரத்தில் கவனம் முழுவதும் இருந்ததால் கவனிக்காமல் இருந்துவிட்டேன். உணர்ச்சிகளை இத்தனை அழகாய் சொல்லவும் முடியுமா!! என ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள்.

shanmugavel said...

ஊடுருவும் வார்த்தைகள்,நன்று.

மாலதி said...

மானுடக் காதலை மிகவும் அழகாக சொல்லியுள்ளீர் உமக்குள் இவ்வளவு காதல் கொட்டிக் கிடப்பது உம்ம காதலுக்கு பெருமை சிறப்புகள் பாட்டுகள் வாழ்த்துகள்

ராஜி said...

தலைகோதி அணைக்கையில்
ஒற்றைக் கண்ணீர்த்துளி சொன்னது
வானம் தாண்டிய
உன் அன்பை!!!
>>>
இதைவிட நல்ல தருணம் ஏது காதலை வெளிப்படுத்த

ஞா கலையரசி said...

"தீ வளர்த்த தேசத்தில் சாம்பல் விலக்கி என்னைத் தேடு.நானும் முயல்கிறேன் உன்னைத் தேட.அங்குதான் நாம் நாமாக நமக்குள் பூத்திருப்போம்.கலையாத காதலும் உன் ஒற்றை இறகும்...அப்போதும்!!!"

அற்புத கவிதைக்கோர் இலக்கணம் சொல்லும் உணர்ச்சிக்குவியல்! பிரமாதம் ஹேமா! பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

என் காதல் உள்ளங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பு என்றும்.உங்கள் அன்போடும் வாழ்த்தோடும்தான் என் கிறுக்கல்கள்.நன்றி நன்றி !

ஸ்ரீராம்...சேமித்த கணங்கள் உங்கள் மனதில் நன்றாகவே பதிந்திருக்கிறது.எத்தனையோ கவிதைகளை சேமித்த கணங்களோடு சேமித்து என்னையும் சந்தோஷப்படுத்திவிட்டீர்கள்.இதுவும் சந்தோஷமான சேமிப்பு எனக்கு.
எங்கே மீனம்மாவைக் காணவில்லை.தேடுகிறேன் என்று சொல்லிவிடுங்கள் !

meenakshi said...

நீங்க தேடற தொலைவுல எல்லாம் நான் இல்லை ஹேமா. மனசு உங்க எழுத்துல எல்லாம் சுத்திக்கிட்டு இருக்கறப்போ நான் எங்க போக முடியும். :) எல்லா கவிதைகளிலும், உப்புமடசந்தி பதிவுகளிலும் விடாம உங்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கேன். கருத்து எழுததான் நேரம் கிடைக்க மாட்டேங்குது.
கொஞ்சம் பிஸி. அவ்வளவுதான். உங்கள் அன்புக்கு என்றுமே என் அன்பும், நன்றியும்.

துரைடேனியல் said...

காதலை எழுதும்போது பேனாவுக்கும் உற்சாகம் வந்துதான் விடுகிறது. காதலின் ரசம் நிரம்பி வழிகிறது இந்த கவிதைப்பாத்திரத்தில். பருகப் பருக இன்பம்.

nila said...

vanakkam hema... nalamthanae... mudhalla ippadi tanglishla type panrathuku mannikanum... hospital computerla thideernu thamizh ezhuthukkal type panna mudiyalai.. romba naal achu naan ungal pakkam vandhu.. konjam velai adhikamnu saakku sonnalum.. kidaikira neram samaikurathukkum thoongurathukkum sariya poiduthu... thodarnthu varamudiyalainalum appapo unga kavithaikala padichuttu varen.. sila samayam manasu leysakidum.. pala samayangalla romba ganamakidum.. azhagana ezhuthukkal hema.. vazhththukkal :)

nila said...

vanakkam hema... nalamthanae... mudhalla ippadi tanglishla type panrathuku mannikanum... hospital computerla thideernu thamizh ezhuthukkal type panna mudiyalai.. romba naal achu naan ungal pakkam vandhu.. konjam velai adhikamnu saakku sonnalum.. kidaikira neram samaikurathukkum thoongurathukkum sariya poiduthu... thodarnthu varamudiyalainalum appapo unga kavithaikala padichuttu varen.. sila samayam manasu leysakidum.. pala samayangalla romba ganamakidum.. azhagana ezhuthukkal hema.. vazhththukkal :)

Athisaya said...

அழகு.அத்தனையும'; அருமை.இப்போது தான் படித்தேன்.நானே இறக்கச் செய்த சில நினைவுகளை உசுப்பிப் போகிறீர்கள்.அணு அணுவாய் அனுபவித்துப்படித்தேன்.

Post a Comment