*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, June 20, 2011

நட்சத்திர வாரம்...

வணக்கம் வணக்கம் தமிழ்மணத்திற்கும் சுற்றி வரும் நட்பின் வட்டங்களுக்கும்.
இன்றுமுதல் தமிழ்மண நட்சத்திரமென்றார்கள்.என்னைப்பற்றியும் சொல்லச் சொன்னார்கள்.நான் யார்.உண்மையில் தடுமாறித்தான் நிற்கிறேன்.ஈழம் என் தேசமென்றார்கள்.நானோ சுவிஸ்ல் அகதித் தமிழிச்சியாய் அடிமைப்படாமல் சுதந்திரமாய் ஆனால் எல்லாம் இருப்பவளாயும் அதேசமயம் எதுவுமே இல்லாதவளாயும்.

அறிமுகமென்று ஒருமுகம் எனக்கில்லை.நான் ஹேமவதி.ஈழத்தமிழச்சி.சுவிஸ்ல் 13 வருடகாலமாக அகதியாய் வாழ்கிறேன்.உயிர்காக்க என்னை மாற்றி.......வாழ்கையையே மாற்றிவிட்டார்கள் பெற்றவர்கள்.ஆரம்பகாலத்தில் இலண்டன் ஐபிசி வானொலிக்காக ஹேமா(சுவிஸ்) என்று எழுதத் தொடங்கி மனதில் பட்டதை இன்றுவரை மனச்சுத்தியுடன் பொய்யற்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.என் மனம் அமைதியடைகிறது.அல்லது எவரையோ அமைதிப்படுத்துகிறது.நேர்மையான விமர்சனங்களால் ஊக்கப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நண்பர்களால் இன்னும் கைபிடித்து அழைத்துச் செல்லும் குழந்தை நிலா.உப்புமடச்சந்தி என் தளங்கள்.

என் ஊரின் சந்தி பெயர்தான் உப்புமடச்சந்தி.இன்றும் நான் அளைந்த புழுதி எனக்காகக் காத்திருப்பதாக அப்பா சொல்கிறார்.புழுதிக்கும் போருக்கும் பயந்து ஓடி வந்த கோழை நான்.என் தேசத்து உண்மைகள் போல அநாதை நான் இப்போ.ஆதரவற்றதெல்லாம் அநாதைதான்.அந்த வகையில் என் தேசத்து உண்மைகளும் நானும்.

4 வருடங்களாக கொஞ்சம் ஏதோ எழுதுகிறேன்.ஆரம்ப எழுத்துக்களை விட இன்றைய எழுத்துக்கள் வளர்ந்து ஓரளவு நிறைவைத் தருவது போலவும் உணர்கிறேன்.என் வீட்டில் யாரும் எழுத்தாளர்கள் இல்லை.அப்பா ஒரு பாடசாலை அதிபர்.நிறையவே வாசிப்பின் பக்கம் இருப்பவர்.அவரின் பழக்கம் மட்டும் என்னிடமிருக்கிறது.பெரிதாக என்னை ஊக்கப்படுத்த யாருமில்லை.அப்பா கொஞ்சம் ரசித்து விமர்சிப்பார்.மற்றவர்கள் பார்ப்பார்கள்.
ம்ம்...நல்லாயிருக்கு என்பார்கள்.அவ்வளவுதான்.

சுற்றியிருக்கும் நண்பர்கள்தான் என்னை வளர்ப்பவர்கள்.மனதின் உணர்வுகளை வெளியில் கொட்ட நினைக்கிறேன்.இதில் புதுக்கவிதை மரபுக்கவிதை இலக்கியம் எதுகை மோனை தாண்டி கண்ணில் பேச்சில் தெறிக்கும் என் ஆவேசத்தை எழுத நினைக்கிறேன்.சில கவிதைகளுக்கு என் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு என் ஆத்மாவைச் சந்தோஷப்பட வைக்கும்.அதேபோல அவர்கள் காட்டும் திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் என்னிடமுண்டு.

என் கவிதைகளின் கருவும் பொருளும் நானேதான்.என் மண்ணும் அங்கு கை விட்டுப்போன வாழ்வுமே என்னை எழுத வைக்கும் கருவிகள்.என் சில எழுத்துக்களை ஆவணப் பதிப்புக்களாகவே நான் நினைக்கிறேன்.நாம் ஏன் துரத்தப்பட்டோம்.ஏன் அகதித் தமிழரானோம்.என்ன கேட்டோம்.எதைக் கேட்கிறோம்.ஏன் உயிரோடு கொல்லப்பட்டோம் ஏன் மூச்சோடு புதைக்கப்பட்டோம்.இது போன்ற சின்னச் சின்னக் கேள்விகளால் நிறைந்த கேள்விகள் நிறைந்த ஈழத்தமிழன் வாழ்வை நம் எதிர்காலமும் தெரிந்துகொள்ள ஒரு சின்னத் தளம்.என் மண்ணில்தான் என் சுவாசம்.மண்ணைத்தான் காதலிக்கிறேன்.நேசிக்கிறேன்.

மண்ணோடு வாழ்வும் வானோடு அகதிவாழ்வும்தான் வாத்தியார் எனக்கு !தாய் மண்...

கவிகள் காவி வரும் காற்றே
கனத்த மனங்களையும் சுமந்து செல்
ஒரு கணம் என் தாய் தேசம்
என் தாய் கண்டு பதில் கொண்டு வா.

என்னை அகதியாய்
தொலைத்துவிட்டு கலைத்துவிட்டு
கவலையோடு தனிமையாய்
என் தாயவள் ஈழத்தில்
அம்மா...அம்மா
உன்னையும் என் மண்ணையும் பிரிந்து
ஏதிலியாய் நான் இங்கு.
உன் மடி தாங்குமா
இன்னும் ஒரு முறை என்னை.

சுட்ட பிணம் பாதியில்
விட்டெழும்பித் திரிவதாய் ஒரு வாழ்வு.
அளைந்து விளையாடிய மண்
அலசித் தலை கழுவி விடுவாயா
சுவாசித்த தாய் மண்ணும்
சுவாசம் தந்த உன்னையும்
தவறவிட்ட குழந்தையாய் நான்.

நிலவின் வெளிச்சத்தில்
மணல் கும்பலில் விளையாடியிருக்க
மொட்டவிழ்ந்த மல்லிகை மாலை சூட்டி
அழகு பார்த்த காலங்களை
கவர்ந்த கள்வர் யார் அம்மா.
பள்ளியால் திரும்பும் என்னை
அள்ளியெடுத்துக்
காக்கைக்கும் குருவிக்கும்
அணிலுக்கும் எனக்குமாய்
பாட்டிக் கதையோடு பராக்குக் காட்டி
உணவு ஊட்டிய
கணத்தைப் பறித்தவர் யார் அம்மா.

நித்தமும் சுற்றியெரியும்
நெருப்பும் கொலையும் கூக்குரலும்
ஞாபகப் படுத்துகிறது
நீ சொன்ன பழைய ராஜாக்கள் கதையை.
இசையும் இன்பமுமாய்
எப்படித்தான் வாழ்ந்தாலும்
அம்மா உன் பாத(ச)ம் தேடியே
மனம் அலைந்த படி
களைத்த கண்களுக்குள்
அகதித் தூக்கம் வரும் வரை.

என்றோ ஒரு நாள் மீண்டும் உன் மடி மீது
என் மண்ணின் புது மணத்தோடு புரண்டு எழும்பி
பனங்கிழங்கும் பனாட்டு ரொட்டியும் பங்கிட்டு
கிணற்றுக் கட்டுக்குள் கால் தொங்க
தங்கமணி அக்காவோடு
கதை பேச வேணும் அம்மா.

ஏதோ ஒரு தேசத்தில் என் உயிர் பிரியுமுன்
ஒரே ஒரு முறை உன்னையும்
என் மண்ணையும்
எனக்குள் நிறைவாய் நிறைத்துக் கொள்ள
எப்போது...எப்போது...அம்மா எப்போது !!!

ஹேமா(சுவிஸ்)

58 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா. அறிமுக வரிகளும் கவிதையும் நெகிழ்வு.

மேவி... said...

அதானே பார்த்தேன் ...என்னடா ஹேமா தளத்துல கட்டுரை இருக்கேன்னு படிச்சிட்டு வந்தேன் ....கடைசில கவிதை பார்த்த பிறவு தான் நிம்மதியாச்சு ...

வாழ்த்துக்கள்

(கவிதையை இன்னும் படிக்கல )

me the first ah

Unknown said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் ஹேமா...

மேவி... said...

ரொம்ப பிஸியா இருக்கேனுங்க ...அதனால தான் அடிக்கடி இந்த பக்கம் வரல முடியல

கவிதையை படிச்சிட்டேன்... ஹேமா கவலை படாதீங்க : நாளை என்று ஒரு நாள் இருக்கும் வரைக்கும் நம்பிக்கையோடு இருங்க.

Paleo God said...

நட்சத்திர வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

அற்புதம் ஹேமா. முதலில் நட்சத்திர வாரத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு வாழ்த்துகள். அறிமுகக் கட்டுரையில் வரிகள் மனதின் காயத்தால் வலியுடன், வலிவுடன் விழுந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து வரும் கவிதையும் அதே போன்ற தாக்கத்தால் அற்புதமான கவிதையாய் வந்திருக்கிறது.

Unknown said...

அறிமுகத்துக்கு நன்றிகள் ஹேமா...கவிதை கனக்கிறது!

Ramesh said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.. வலிகளால் ஆன ஆகின்றவைகளின் நிஜமாக நட்சத்திரம் கொப்பளிக்கட்டும்..

ஜோதிஜி said...

எங்கள் குடும்பத்தின் நல்வாழ்த்துகள். அற்புதமான அறிமுகம்.

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா..உங்கள் அறிமுக உரை உங்கள் பக்குவத்தையும் அனுபவத்தின்பால் கிடைத்த உறுதியும் தெளிவும் உணர்த்துகிறதும்... ம்ம்ம்ம் இந்த பதிவுலகம் நம் எண்ணங்களை வெளிப்படுத்த நமக்கு கிடைத்த தோழமை தளம்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் சகோதரி ...
இனி தூரம் அதிகமில்லை விடியலும்,விடுதலையும்
தமிழுக்கும் தமிழினத்திற்கும் ...
கவலைவேண்டாம் .

எனது நட்சத்திர வாழ்த்துக்கள் .

அப்பாதுரை said...

வாழ்த்துக்கள் ஹேமா.
நெகிழ வைக்கும் கவிதை.
அதைவிட அறிமுகக் கட்டுரை நெகிழ்ச்சி. உங்களைப் பற்றி சற்று அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் கோழையா என்பது கேள்விக்குறி.

Bibiliobibuli said...

ஊர் நினைவுகளின் வாசத்தோடு நட்சத்திர வாரம் இன்னும் மின்னட்டும். விரிவாக எழுத முடியவில்லை. கடமை அழைக்கிறது. தொடருங்கள். நானும் இந்த வாரம் முழுக்க வருகிறேன் உங்களோடு.

Poud of you Hemaa!!!

Kanchana Radhakrishnan said...

நட்சத்திர வாழ்த்துகள் ஹேமா.

Kanchana Radhakrishnan &
T.V.Radhakrishnan.

தமிழ் உதயம் said...

வாழ்த்துகள் ஹேமா. இனி இந்த வாரம் முழுக்க உங்கள் படைப்புகளை வாசிக்கலாம்.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்

http://rajavani.blogspot.com/ said...

அட..அட...வாங்க..வாங்க ஹேமா...ம்ம்ம் ஜமாய்ங்க...

இன்னும் ஒருத்தர எதிர்பார்க்கிறேன் தமிழ்மணநட்சத்திவாரத்தில்...

RVS said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். கனமான கவிதை!! ;-))

தனிமரம் said...

அழகான மொழிநடை என்று மட்டும் சொல்லிவிட்டுப் போகும் விடயம் இல்லை இது துயரம் எங்கள் வலிகளை உங்கள் கவிதையில் பார்க்கிரேன் புலம் பெயர் தேசத்தில் ஒவ்வொரும் மனதுக்குள் புழுங்கியழும் விடயத்தை எழுதியுள்ளீர்கள்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் தோழி அசத்துங்கள் இந்த வாரம் தமிழ்மணத்தில் !

sathishsangkavi.blogspot.com said...

தமிழ்மண நட்சத்திரத்திற்க வாழ்த்துக்கள்...

உங்கள் இக்கட்டுரையில் உங்கள் மனவழி தெரிகிறது....

உங்கள் கவிதையிலம் அப்படியே..

தமிழ் மண்ணை விட்டு பிரிந்தாலும் உங்கள் மனம் உப்புமடச்சந்தியில் தான் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது...

நசரேயன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

vaazththukkal..

வந்தியத்தேவன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா.

vidivelli said...

tamil mana nadchaththira naayakikku enathu vaalththukkaL.
supper arimukam..
athuve oru asaththalthaan.....
kavithai supper...
adadaa vealaikku oodivanthiddinkaLaa suwisstku....
ok ok .........
nalla vealai seyyungko...
anaiththirkum enathu manamaarntha nanrikalum,vaalththukkalum...

3 thadavai thamilil typepanni net kaddaakidduthu...
4vathu thadavai ippadiyea typepanniyirukkiran..
sorry..........

vidivelli said...

நண்பி எனது மெயில் ஊடாக தொடர்புகொள்ள முடியுமா?

vidijal99@gmail.com

Riyas said...

வாழ்த்துக்கள் ஹேமா அக்கா...

மனதின் வலிகளையும் ரனங்களையும் வார்த்தையாய் கொட்டியிருக்கிறீர்கள்..

அத்திரி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா

அம்பிகா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா.
நெகிழவைக்கும் அறிமுகம்.

Unknown said...

சகோதரி
பெரும் பாலும் என்
கருத்துரைகளை கவிதை வடிவிலேயே எழுதிவரும் நான்
உங்கள் கவிதையை படித்தபின்
எழுத கவிதை வரவில்லை இரு
கண்களிலும் கண்ணீர்தான் வரு கின்றன. மன்னிக்க.
தாங்கள் "நட்சத்திர வாரத்
தின் விடி வெள்ளியாகத் திகழ வாழ்
துகிறேன்
புலவர் சா இராமாநுசம்

சிநேகிதன் அக்பர் said...

//என் தேசத்து உண்மைகள் போல அநாதை நான் இப்போ.ஆதரவற்றதெல்லாம் அநாதைதான்.அந்த வகையில் என் தேசத்து உண்மைகளும் நானும்.//

இந்த வரிகளை படித்தவுடன் மனது பாரமாகிவிட்டது ஹேமா.

இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் கருத்துக்களை அழுத்தமாக பதியுங்கள்.

நட்சத்திர வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

ஹேமா!வாழ்த்துக்களுடன் என்னை நட்சத்திர நாற்காலியிலிருந்து தள்ளி விட்டதுக்கு கோபமும்.இன்றைக்குத்தானே எனது பதவிக்காலம் முடியுது!

ராஜ நடராஜன் said...

முகவுரை எழுதிவிட்டு கவிதை சொல்லும் போது கவிதை உணர்வோடு ஒட்டிக்கொள்கிறது.இதே மாதிரி கவிதை சொல்லும் அந்த கணங்களை சில வரிகளில் சொன்னால் கவிதைகளின் உள்ளீடு புரியாத எனக்கெல்லாம் உதவியாக இருக்குமே!

கலா said...

அன்புத் தோழியே!
என் இதயபூர்வமான வாழ்த்துகள்
உங்கள் உழைப்புக்குக்{எழுத்துக்கு}
கிடைத்த ஊதியம்{பரிசு}தான்
இவ் அழைப்பு மேலும்,மேலும் மேம்படுத்தி
இன்னும் ...முத்திரை பதித்துவிடு பதிவுகளில்..

க.பாலாசி said...

சந்தோஷம்.. நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா..

நெகிழ்ச்சியான பதிவு...

நட்புடன் ஜமால் said...

ஆஹா! சந்தோஷமும், வாழ்த்துகளும் ஹேமா ...

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துகள் சகோதரி :)

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புதிய தாயகம் மலரும்...
உங்கள் கனவுகள் மெய்ப்பட்டு அந்த புழுதிகாடுகளில் உங்கள் கால்ப்படும்....


நட்சத்திர வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

நட்சத்திரமாக ஜொலித்து,
எம்மையெல்லாம் தங்களின் கவிதைகளால் தொடர்ந்தும் கட்டிப் போட,
என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிரூபன் said...

கூண்டை விட்டு/ தன் சொந்தங்களை விட்டுத் தொலை தூரம் போன பறவை ஒன்றின்,
தாய் மண் மீதான நேசிப்போடு இருக்கும் மன உணர்வுகளை உரை நடை சொல்கிறது,
அதனை மெய்ப்பிக்கும் வகையில் கவிதை பின்னே வந்திருக்கிறது,

மாலதி said...

உங்களின் முன்கதை சுருக்கத்தை எளிமையை பரட்டும்படியாய் எத்தனையோ சுமைகளை இதயத்திலேந்து கிறது உங்கள் வாழ்வு பாராட்டும் படியாக நீங்கள் இன்னும் நிறையவே சாதிப்பீர்கள் வாழ்த்துகள் என கூற இயலாது எனவே வெற்றியடைக தாய்மண் மீளட்டும் தமிழீழம் மலரட்டும் எனவேண்டுகிறேன் முன்பு ஒரு இடுகையில் அவசரத்தில் எது எழுதாமலே விட்டுவிட்டேன் மன்னிக்கவும்

திகழ் said...

வாழ்த்துகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் ஹேமா! இந்த வார நட்சத்திரமாக தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்!

ஒரு நட்சத்திரமாக ஜொலிப்பதற்குரிய அத்தனை தகுதிகளும் உங்களுக்கு இருக்கின்றன!

உங்கள் எழுத்து கூர்மையானது மட்டுமல்ல நேர்மையானதும்கூட!

நீங்கள் வடிக்கும் ஒவ்வொரு கவிதையும் ஆழ்மான பொருள்கொண்டவை!

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!!

கானா பிரபா said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் ஹேமா

Angel said...

வாழ்த்துக்கள் தோழி !.உங்கள் வலிகள் எல்லாம் வைர வரிகளாக,நெகிழ்ச்சியான கவிதை .எதற்கும் கலங்க வேண்டாம் .வானம் உங்கள் வசப்படும் .

அன்புடன் அருணா said...

நட்சத்திரத்துக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் ஹேமா!

ஷர்புதீன் said...

நட்சத்திர பதிவரானதர்க்கு வாழ்த்துக்கள்

Admin said...

முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.

உங்கள் வலிகளை உணர்கின்றேன்..

Anonymous said...

வாழ்த்துக்கள் தொடருங்கள் சகோதரி ...

தூயவனின் அடிமை said...

வாழ்த்துக்கள் .

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் ஹேமா.

சத்ரியன் said...

நட்சத்திரா-வுக்கு,

முதலில் வாழ்த்துக்கள்.உங்களைப்பற்றிய தகவல்களை உலகறியத் தெரியப்படுத்தி இருக்கின்றீர்கள்.


//ஏதோ ஒரு தேசத்தில்
என் உயிர் பிரியுமுன்
ஒரே ஒரு முறை உன்னையும்
என் மண்ணையும்
எனக்குள் நிறைவாய் நிறைத்துக் கொள்ள....//

நிறைவேறும்.

சுந்தரா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ஹேமா.

கவிதை கலங்கவைத்தது.

மாதேவி said...

நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள் ஹேமா.

ப்ரியமுடன் வசந்த் said...

நட்சத்திர வாழ்த்துகள் ஹேம்ஸ்

மிக்க சந்தோஷம்..!

meenakshi said...

வாழ்த்துக்கள் ஹேமா! மிகவும் சந்தோஷம்.

//ஏதோ ஒரு தேசத்தில்
என் உயிர் பிரியுமுன்
ஒரே ஒரு முறை உன்னையும்
என் மண்ணையும்
எனக்குள் நிறைவாய் நிறைத்துக் கொள்ள....//
விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்!

Post a Comment