*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Monday, May 10, 2010

சுடும் இரவுகளும் நீயும்...

 



உன்னுடன் பேசி முடித்தபின்
சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்.
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !

 


உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !

போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !

மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !


நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு நீதானே !

என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
ஓ...
நீதான் என்றோ இறந்துவிட்டாயே !

இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவளே நீதானே !

கல்லறை வந்தால் அழுது விடாதே
அன்பே.....
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!

ஹேமா(சுவிஸ்)

55 comments:

விஜய் said...

கவிதை பிழிகிறது மனதை காதல் வலியுடன்

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

Paleo God said...

உலகின் கடைசி
மனிதன் கல்லறையின் மேலும்
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும்
'
'
காதல் !

Ashok D said...

தனிமையின் உக்கிரம்...இழப்பின் நிதர்சனம்.. :(

என்ன சொல்வது என வார்த்தையில்லாமல் நிற்கிறேன் மனம்பதறி ஹேமா..

எல்லா இழப்புக்களுக்கும் பின்னும் வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது... வாழ்வை வசந்தமாக்குவதும்.. பாலைவனமாக்கி கொள்வதும் அவரவர் எண்ணங்களே...

அன்புடன் நான் said...

இந்த திகதியிலும் அந்த நினைவா?..... கவிதை அழகு.

Radhakrishnan said...

ம்... காதல் வலி...

க.பாலாசி said...

//கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!//

அருமைங்க....

தனிமையும் தவிப்பும் எதற்குமே அழகுதான்... கவிதையிலும் (மெ)மேன்மையாய்....

Ahamed irshad said...

//உன்னுடன் பேசி முடித்தபின்
சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்.
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !///

கவிதை வரிகளில் ஆரம்பமே அசத்தல்... அருமை ஹேமா...

Vel Tharma said...

நெஞ்சை நெகிழ வைக்கிறது

VELU.G said...

கலக்கறீங்க ஹேமா...

வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ஹேமா.

கண்ணகி said...

வலிக்கிறது....

நேசமித்ரன் said...

பெருந்துயரின் துளி பெயற்ற உயிராய் ஜனித்த யுகத்தில் நிகழ்ந்த மவுனப் பரவசம் இந்த வலி எல்லாம் துடைத்தழிக்கும் பொழுதும் வரும்

வான்மிசை ஏகினன் மீளுரு கொள்ளுதல் மீண்டும் நம்முள் திரள்தலில்தான் ....

ரிஷபன் said...

கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!
அப்படியே தளும்புகிறது இதயம்..

Ramesh said...

//போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !///
நினைத்துக்கொண்டிருக்க வேண்டிய கவிதையாகிறது ஹேமா...

காதல் பிழிந்து
மனசுல கரைந்து
போகிறது.....
கவிதை மழை
நனைத்து போகிறது காதல் மனதை

meenakshi said...

//இத்தனையும் கதைக்கிறேனே என்னை விசர் என்பாயோ
விசரி ஆக்கியவனே நீதானே!//
கவிதை வரிகள் மனதை கலங்கடிக்கிறது ஹேமா!

//மீனு....வாங்க வாங்க.
உங்களுக்காகவே நான் காதல்ல நனையனும் அடிக்கடி.அப்போதான் வருவீங்க இந்தப்பக்கம் !//
உங்களோட எல்லா கவிதைகளையும் விடாம படிக்கிறேன் ஹேமா. 'மகனே வந்து விடு' கவிதைக்கு கூட கருத்து எழுதி இருக்கேன். காதலே ஒரு கவிதைதானே. அதுலேயும் உங்கள் காதல் கவிதை வரிகள் எல்லாம் ரொம்பவே உணர்ச்சிபூர்வமா இருக்கே, அதான். ;)

ஈரோடு கதிர் said...

ஏன் இத்தனை வலி

பிரபாகர் said...

//நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு நீதானே !//

வலிகளை படிக்கும்போது இடம் மாற்றுகிறீர்கள் சகோதரி!

அருமை!

பிரபாகர்...

நசரேயன் said...

//சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்//

ஏன் எண்ணெய் சட்டி கிடைக்கலையா ?

//
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !
//

சுடச் சுடச் சூடான செய்தி

//
உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !
//

ஏன் தொலைபேசியிலே வாழ்த்து சொல்லைனா ?

//
போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !
//

இப்படி எல்லாம் கவுஜ எழுததான்

//
மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !
//

விழுந்த இடத்திலே தரைக்கு ஒண்ணும் அடி படலையே

//

நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
//

மின் விளக்கு போட்டு கும்மி அடிக்கலாம்

//
என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
//

இன்னும் கனகாலம் இருக்கு, எதுக்கு அவசரப் படுறீங்க, பேசி தீத்துக்கலாம்

//
இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
//

கண்டிப்பா அதிலே சந்தேகமா, விசருக்கு மருத்துவ சிகிச்சை சரியில்லைனா சொல்லி அனுப்புங்க.

//
கல்லறை வந்தால் அழுது விடாதே//

அழாம சிரிச்சா விசர்னு சொல்லுவாங்க

//
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.//

அல்லி மலரா இல்லை அரளி மலரா?

//
அதைவிட நம் இதயம்!!!//

இந்த விஷயம் இதயத்துக்கு தெரியுமா?

ராஜ நடராஜன் said...

கவிதைக்கு ரோஜாவும் சருகில்லா மரமும் அழகு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல் ஹேமா.. அருமை

vinthaimanithan said...

//போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !//

இந்த வரி போதும் மொத்தக் கவிதைக்கு...

நெஞ்சுக்குள் கல்லெறிந்து சென்றுவிட்டீர்கள்

ஜெயா said...

உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர்
தினத்தில்கூட!

நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு
நீதானே!

என் கல்லறையிலும்
உனக்கான இடம்
ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
ஓ...
நீதான் என்றோ
இறந்துவிட்டாயே!
உங்களால் மட்டும் தான் ஹேமா இது போன்று எழுத முடிகிறது.பிரிவுகளின் வலியைச் சொல்லும் ஒவ்வொரு கவிதையும் உங்கள் வலைப்பதிவில் தேடி தேடிப் படிக்கிறேன்.பிரிவினால் உண்டாகும் வலியும் வேதனையும் அதனை அனுபவித்தவர்களுக்கே புரியும்...
படங்கள் இரண்டும் அழகு.

நிலாமதி said...

காதல் கவிதை ..........கண்ணீர் வர வைக்கிறது. உயிரை பிரிந்து செல்ல உறவுக்கு எப்படி மனம் வந்தது........
.சரியான சோகம் ஹேமா ..மீண்டேளுங்கள.

அனு said...

//கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!//

அருமையான் "முத்தாய்ப்பூ"

Chitra said...

கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!


.......உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் வரிகள். . அருமை.

Madumitha said...

தமிழ் குறிஞ்சியில்
தங்களின் கவிதை
வாழ்த்துக்கள் ஹேமா.
ஆனாலும்
கவிதைப் படித்து
வலிக்கிறது மனசு.

அம்பிகா said...

\\உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !
அருமை
\\மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !\\
நிஜமான வரிகள்.
படங்கள் அழகு.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!அதைவிட நம் இதயம்!//
உண்மை ஹேமா உண்மை

தமிழ் உதயம் said...

காதல் கவிதையாயினி ஆகி விட்டீர்கள்.

Unknown said...

என்னங்க இப்படி பண்ணிட்டீங்க, எனக்கும் உண்டு இப்படி ஒரு வலி
இவ்வளவு வலியா?
கனத்த மனதுடன் ......

Uma said...

ரொம்ப வலிக்குது ஹேமா... எனக்காக எழுதிய மாதிரி இருக்கு.... உங்களுடைய அனைத்து கவிதைகளும் அருமை!

Unknown said...

Ennavo aagitu.. Idharku than pinniravugalil kavidhaigal padippadhillai..

- இரவீ - said...

//கல்லறை வந்தால் அழுது விடாதே
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.//
:(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழமா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு

ஸ்ரீராம். said...

கவிதைக்கு ஏற்றா மாதிரி அந்த ஒற்றை மரமும் ரோஜாவும் உள்ள படம் அழகு...பாராட்டிப் பாராட்டி வாய் வலிக்கிறது ஹேமா. எப்படிதான் எழுதுவீங்களோ...இதை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாய்ப் போடுங்களேன்...உங்கள் திறமை ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே சுழல்கிறதோ...வேறு பத்திரிகைகளுக்கும் எழுதி அனுப்புங்களேன்..கண்டிப்பாய் தொகுத்து புத்தகம் போடவும்.

கலா said...

சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே\\\\

பெண்களுக்கு கடவுள் அளித்த
வெகுமானம் இந்தக் கண்ணீர் ஹேமா

ஆண்கள்{சிலர்} சுடச்சுடப் பேசுவதும்,
சுட வைப்பதும்,சூடாக்குவதும்,சுமைதாங்கியென்பதும்
சுருட்டிக் கொள் என்பதும் மொத்தததில் அடங்கு.
“ஆண்”
என்ற ஆணவம் இவர்களிடம் இருக்கட்டும் என்று
படைத்தவன் கூட ஆண்தானடி. இவர்களின்
தன்மானமென நினைப்பதும் இதைத்தானோ!!??

சுட்டதால் வெறுக்கிறேனா...???

உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட\\\\\

நீ என்ன பேசினாலும்,திட்டினாலும்
உன்னை அன்னையைப் போல்....

{சில நேரங்களில் நீ எனக்கு
பழகிப்பேசும் சமயங்கில் அன்னை
மாதிரி அரவணைத்து,ஆறுதல் சொல்வாய்
அப்போது நீ சுட்டதை மறந்து அன்புக்கு
ஏங்கும் மகளாகிறேன் உன்னிடம்}

ஆண் சுட்டாலும்...சில நேரங்களில் குளிர்சியும்
உண்டென்றல்லவா உணர்கிறாய்

கலா said...

உன்னுடன் பேசி முடித்தபின்\\\\\
இத் தொடக்கத்திலிருந்து வரிகளிலிருந்து
.....அப்போதுதான்
நடந்தவைமாதிரி சொல்லி விட்டு....
சொன்ன விதம் அழகாய்த் தான் இருந்தது
ஆனால்...



ஓ...
நீதான் என்றோ இறந்துவிட்டாயே\\\\\
அதற்குள் இதை சொல்ல...
குழப்பமாய் இருக்கிறதடி

அவளின் மனதிலிருந்து இறந்து
விட்டாரா?
நிஜமாய் இறந்து விட்டாரா?

இவளை அவர் நிர்கதியாய் தவிக்க
விட்டுத் தலைமறைவாகியதை...நினைத்து
அவள் வெறுப்பில் உதித்ததா?


{கல்லறை வந்தால் அழுது விடாதே}

செத்தும்...உயிருடன் இருக்கின்றாரா???
செத்திருக்கும் அவரிடம் சொல்கிறாயா?

மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!\\\\

ஹேமா{விசர்} பைத்தியம் யாருக்கு?????
கவிதைக்கா?உனக்கா? கவிநாயகிக்கா?
இல்லை படிக்கும் எங்களுக்கா?

படங்கள் உன் கவிக்கு ஏற்றவை நன்றாக
இருக்கிறது

rvelkannan said...

கவியும் தேர்ந்த படமும் மனதை பிழிகிறது ஹேமா

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.//
இந்த வரிகள் எனக்குப் பிடித்தது.வலி ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது ஹேமா.

சிவாஜி சங்கர் said...

ஹேமா.., அன்பும் ஆறுதலும்........

சத்ரியன் said...

//என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.//

ஹேமா,

வரிகள்
உருக்கமோ உருக்கும்.

படிப்பவர் மனதையும் உருக்கும்.

சத்ரியன் said...

//என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவனே நீதானே !//

ஹேமா,
நீ இப்படியான காதல் கவிதைகள் பல எழுதி, அதைப்படித்து , பிடித்து நாங்கள் தான் உன் விசிறி யாகி கிடக்கிறோம்.

இப்போ சொல்லு. யாரு விசர்?

Prasanna said...

அடுத்தது கொஞ்சம் சிரிச்சா மாதிரி இருக்கணும்.. ok? :)

தமிழ் மதுரம் said...

சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்//


இந்த வரிகள் ஒன்றே போதும்... சுடும் இரவின் வலிகளையும் உள்ளத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த. இங்கே தண்ணீரின் வெப்பத்தை விடக் காதலின் வரிகளேக மிக மிகச் சுடுகின்றன. சுடும் இரவுகள்.... காதலினால் காயம் பட்ட ஜீவனின் உள்ளத்து உணர்வுகள்.

ஹேமா said...

நன்றி விஜய்...சகோதரனாய் உடன் ஆறுதலுக்கு.

ஷங்கர்...வாழும்போதே வாழவேணும் காதல் !

அஷோக்...சில இழப்புகளை ஈடு செய்யவே காதல் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது !

அரசு...இந்த நினைவுகளும் திகதியும்கூட இப்போதுதான் !

நன்றி ராதா வருகைக்கு.

பாலாஜி...நிறையவே என்னைப் புரிஞ்சிருக்கீங்க.

இர்ஷாத்...உண்மைகள் எல்லாமே அழகுதான் !

வேல் தர்மா ...வாங்கோ.
பார்த்தேன் உங்கள் பக்கமும்.
எங்கள் வலிகளைச் சுமந்தபடி !

வேலு...வாங்க.கலக்கிறதில நீங்களும் அடிக்கடி கலந்துக்கோங்க.

பா.ரா.அண்ணா...ஒண்ணும் யோசிக்காதீங்க.நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.

கண்ணகி...சும்மா சும்மா.இது கவிதை மட்டும்தான் !

மித்ரா....நேசன்...உங்க
ஆறுதலுக்கு சந்தோஷம்.

ரிஷபன்...தளும்பிய இதயங்களை கவிதை தாங்கும் !

றமேஸ்....கவிதை மழைதான்.ஆனால் கொஞ்சம் கவலை மழையாப் போச்சு.எங்களுக்கு இந்த மாதம் முழுக்கவே கவலை மாதம்தானே !

மீனு....ஈழத் தமிழர்களுக்கு எப்பவுமே துக்கமான தினங்கள்தான்.
அதுவும் இந்த வாரம் !எனக்கும்கூட !

பிரபா...உங்கள் பெயரைச் சொல்லவே முடியல !
மனசு கலங்குது !

ஹேமா said...

நசர்...உங்க பொ(ழி)ப்புரைக்க்கு நான் என்ன சொல்ல இருக்கு?எவ்ளோ ளொள்ளு !விழுந்த இடத்தில நிலத்துக்குத்தான் வலிச்சுதாம் !
3 - 4 வாரம் டைம் தந்து சீக்கிரமா எழுதி அனுப்புங்க உங்க பதிவை.

நன்றி தமிழ்குறிஞ்சி.இனிவரும் கவிதைகளையும் அனுப்பி வைக்கிறேன்.

நடா...வாங்கோ.உங்க வரவு வித்யாசமான சந்தோஷம்.கறுப்பில சிவப்பு டால் அடிக்கலதானே.இது கரும்சிவப்பு !எங்க புதுசா பதிவைக் காணோம்.பாதி முகத்தோட சிரிச்சிட்டே இருக்காதீங்க !

ராதாகிருஷ்ணன் ஐயா
உங்கள் வரவே ஒரு ஆசீர்வாதம்.

விந்தைமனிதன்...வலி உங்களுக்குமா கல்லெறி உங்க மனசிலயுமா !

ஜெயா...இனி உங்களுக்காகவே படங்கள் இனி நான் தேடுவேன்.
பிரிவின் வலி தந்தவர்களும் வாழ்க.
வாழ்த்துவோம் தோழி !

நன்றி நிலா....சகோதரியாய் என்றும் உங்கள் வார்த்தைகள் எனக்கு.

அனு...வெங்கட்...நன்றி புது வருகைக்கும் கை கோர்த்தலுக்கும்.

சித்ரா....உங்கள் அளவுக்கு எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவுதான்.
எங்கள் சூழ்நிலையும் அப்பிடியேதான்.

மது...உங்கள் அளவு நான் இல்லை.எனக்கென்ற சின்ன வட்டம்தான் என் கவிதைகள்.

அம்பிகா...என்றும்
தேவை உங்கள் அணைப்பு.

நண்டு....உங்களிடம் கண்டிப்பா உண்மை சொல்லியே ஆகணுமே !

ஹேமா said...

தமிழ்..எப்பிடி சொல்லாம என்னைத் திடீர்ன்னு கவிதாயினி ஆக்கிட்டீங்க !ஜோதிஜி வந்திருந்தார்.உங்களுக்கு நன்றி தமிழ்.

செந்தில்...வலி வலிதான்.
இதிலென்ன வித்தியாசம்.உங்கள் வலியும் என் வலியும் ஒன்றேதான் !

உமா...உங்கள் உணர்வோட ஒத்திருக்கா கவிதை.காதல் பிரிவு இயலாமை இழப்பு எல்லாருக்குமே ஒரே மாதிரித்தானே !
இன்னும் வாங்க !

பேநாமூடி...எங்க ரொம்பக் காலமா உங்களைக் காணோம்.உங்களை நீங்களே புரிஞ்சிருக்கீங்கதானே.
பின்னிரவில் மனசுக்குத் தாங்கமுடியாத கவிதைகளை இனி வாசிக்கவேணாம்.

ரவி...என்ன சொல்லியிருக்கீங்கன்னு தெரில.காதலில் மௌனம் மென்மையானது.உடைந்தாலும் சத்தம் இல்லாமல்தான்.
ம்...என்று மட்டுமே தனக்குள் சொல்லிக்கொள்ளும் !கேக்குதா !

தங்கமணி....ஆழமா அனுபவிச்சமாதிரியா இருக்கு கவிதை.எனக்கே சந்தோஷமாயிருக்கு !

ஸ்ரீராம்.....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.புத்தகமாக்க முயற்சி செய்வேன்.இப்போதைக்கு இல்லை.பார்க்கலாம்.

கலா..சரியாகப் புரிந்துகொண்ட கருத்துக்கள்.தாயாய் நினைத்திருந்தேன்.தவிக்கவிட்டுப் போனதேன் !கவிதையின்படி காதல்(காதலன்)இருக்கிறான் மனம் இறக்கவில்லை.இறந்தபோதும் இருக்கிறான் இறக்காமல்.
புரியுதா.யாருக்கும் விசரில்லை !

கண்ணன்...இந்தக் கவிதை கொஞ்சம் பிடிச்சிருக்கு உங்களுக்கு.
வந்திருக்கீங்க.நன்றி.

ஜெஸி....வலியும் ஒரு சுகம்.
தாங்குவோம் என்று
நினைத்துத்தானே தருகிறார்கள் !

சிவாஜி....அன்புக்கு நன்றி.

சத்ரியா....இந்த விசரி உங்களுக்கு விசிறியா !விசரும் விசரும் விசிறியாக விசருகள் எல்லாம் சேர்ந்துகொண்டு விசிறப்போகுதுகள்.கவனம் !

பிரசன்னா....ரொம்பக் கஸ்டம் சந்தோஷமா இந்த வாரத்தில
கவிதை தர.உங்களுக்கே தெரியும் !

கமல்.....சின்னப்பெடியா இந்தக் கவிதைக்கு மட்டும் கருத்துச் சொல்ல வளந்திடீங்கபோல !சரி சரி...சும்மாக்கு !காதலின் கனம் உங்களுக்கும் தெரியும் !

பத்மா said...

ஹேமா இங்கு ஒரு பத்து முறை வந்து விட்டேன் .ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புரிதல் .ஒவ்வொரு நினைப்பு. . பின்னூட்டம் போட கூட முடியாமல் ஒரு லயிப்பு
.
வான்மிசை ஏகினன் மீளுரு கொள்ளுதல் மீண்டும் நம்முள் திரள்தலில்தான் ....

என்பதை இங்கு படித்த பின் அது எனக்குமான ஒன்றாய் எடுத்துக்கொண்டு செல்கிறேன் .
அதைவிட மேலாய் சொல்ல இயலாது ஹேமா. அதைப் பற்றிக்கொள்ளுங்கள்.என்னுடன் சேர்ந்து

அன்புடன் மலிக்கா said...

காதல் காதல் காதல்
காதலின் வலி கன்னிப்பூவின் கண்ணீரின்வழியே..

மிக அருமை ஹேமா

ஹேமா said...

அன்பு கதிர் உங்கள் பெயர் மேலே தவறுதலாகத் தவறவிட்டிருக்கிறேன்.மன்னிப்போடு.
உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி கதிர்.

பத்மா... அன்புக்கும் ஆதரவிற்கும் அன்பின் நன்றி தோழி.இறுகப் பற்றிகொள்கிறேன்.

மல்லிக்கா ...அதே கண்வழி சந்தோஷமும்.

NILAMUKILAN said...

வலிக்கிறது. அருமை ஹேமா.

மேவி... said...

.........
...........
...............

Meera said...

"போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !
மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன்!"

varigal.....வலிக்கிறது....

விச்சு said...

//இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவளே நீதானே !// நிஜம்தானே..

விச்சு said...

//மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !//
இந்த கவிதை மிகவும் பிடித்துள்ளது. மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புதிதாகத்தான் உள்ளது.

Post a Comment