*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, October 06, 2009

பயந்தாங்கோழிக் கடவுள்...

ஒரு பிடி மண் எடுத்து
மனிதனாய்...
மிருகமாய்...
இயற்கையாய்...
இன்பம் தந்த இறைவன்.
இன்று
தன்னைத் தானே குட்டிக்கொண்டு.
மானுடம் காணச் சகிக்காமல்
தப்பாய் ஒரு விதி செய்தோம்
என்று சலித்தவனாய்.

கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்.
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்.

மாறிக்கொண்டு இருக்கும் மனிதன்
அவனால் மாற்றப்படும் இயற்கை
அவஸ்தையோடு
முழி பிதுங்கிவனாய்.
வானத்தில் ஓட்டை
கடலுக்குள் ஓட்டை
பறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி
மரங்களை அழித்துவிட்டு
கட்டிடக் காடுகள்.

கொளுக்கட்டை பிடிக்கப் போய்
குரங்காய் ஆன கதைதான் என்கிறாள்
பார்வதி தேவி.
முருகனும் பிள்ளையாரும்
மீண்டும் அப்பனுக்கு
பாடம் சொல்லித்த் தர ஆயத்தமாய்.
செய்வது எதுவுமே இன்றி
படைத்தவனே பயந்து பின் வாங்கி
நடப்பது நடக்கட்டும் என்று ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் ஒருவனாய்.

சமைத்தே இருக்க மாட்டானோ
முன் கூட்டியே அறிந்து இருந்தால்!
படைத்துவிட்ட மனிதக் குரங்காலேயே
தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ
என்ற பயம் வேறு உள்ளுக்குள்!

முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.

அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!

ஹேமா(சுவிஸ்)

39 comments:

புலவன் புலிகேசி said...

//முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.
அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ!!//


சரியாக சொன்னீர்கள் ஹேமா!!! வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

//கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்//

உண்மையான வரிகள்...கொஞ்சம் நரியின் தந்திரத்துடன்....


//முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//

படைத்தழிப்பவன் என்பதே கடவுளின் அடையாளம்.

வலிகள் தாங்கிய, தேங்கிய கவிதை....

இறக்குவானை நிர்ஷன் said...

//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!//

நல்லாயிருக்கு.
உணர்ந்து ரசித்தேன்.

மண்கொண்டான் said...

மனிதனின் முட்டாள்தனத்திற்கும், பேராசைக்கும் இறைவனை பழிப்பது நியாயமா ? ஹேமா எதுகை, மோனை அழகாய் இருக்கிறது ஆனால் அதைவிட கவிதைக்கு கருத்து முக்கியம்...

சத்ரியன் said...

//முட்டாள் கடவுளே
கையால் ஆகாத உன் குருட்டாட்டம்
பேரழிவுகளின் அவலம்.
தடுக்கும் திராணி இல்லாத உனக்கெதற்கு
படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//

ஹேமா,

சுட்டுவிடுவோமா சொல் அவனை?
கோபம் கொப்பளிக்கும் கவிதைக்கு எனக்குத் தெரிந்து பாரதிக்குப் பின் நீதான்..!

உதிரத்தில் செத்துமிதக்கும் செல்களுக்கு புத்துயிர் பிறக்க வைக்கும்...சொற்கள்.

(எனக்கு ஒரேயொரு வருத்தம், உள் வைக்க முடியாத துயர‌ உணர்வுகளை சொல்லாக்கி வைக்கும் போது, படித்துவிட்டு " ரசித்தேன் " எனச் சொல்லிவிடுகிறார்களே! வெறும் ரசித்து விட்டுவிடவா இந்த கவிதைகள்? )

விஜய் said...

"பறவைகள் மிருகங்கள் படுக்க இடமின்றி
மரங்களை அழித்துவிட்டு
கட்டிடக் காடுகள்"

மறுக்க முடியாத உண்மை ஹேமா

வாழ்த்துக்கள்

புழுதிப்புயல் said...

பரவாயில்லை. படைப்பதற்கு ஒருத்தன், காக்க இன்னொருவன், அழிகாவோருவன் என கடவுள்களையே கூறு போட்டது எங்கட சமயம். அதைவிட சின்ன சாமிகள் வேற. இப்ப போதாது எண்டு மனிசர் சிலர் தாங்கள் சாமியாராயிட்டினம்.. இந்த கொடுமையை நான் எந்த கடவுளிட்ட சொல்லியள எண்டு கேக்கிறன். இப்பத்தான் யூசிக்கிறன்; கடவுள் எண்டு ஒருத்தர் இருந்தால் நல்ல இருந்திருக்கும் என்ன(என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குது தானே). நீங்கள் 'மதம் என்னும் மதம் ஓயட்டும்' என்ற எனது பதிவை வாசிச்சனிங்களோ?

Muniappan Pakkangal said...

It should be Payanthaankolli kadavul & not kozhi Hema.Kadavul mel yen ivalvu kobam Hema ?

Kala said...

ஒரு பிடி மண் எடுத்து
மனிதனாய்...
மிருகமாய்...
இயற்கையாய்...
இன்பம் தந்த இறைவன்.
இன்று
தன்னைத் தானே குட்டிக்கொண்டு.
மானுடம் காணச் சகிக்காத அவன்
ஏனடா இப்படி ஒரு விதி செய்தோம்
என்று சலித்தவனாய்.
மனிதன் மனிதனாய் இருக்கத்தான் கடவுள்
ஆற்றிவுடன் மனிதனைப் படைத்தான்.
மிருகங்களைவிட{சில}மனிதஇனம் நடக்குமென்று
தெரிந்திருந்தால் ஒருவேளை படைக்காமல் விட்டிருக்கலாம்.
மனிதனை பொண்ணாசை,பொன்னாசை,மண்ணாசை,பேராசை.
போட்டி, பொறாமை இவைகளுடனா படைத்தான்? தாங்களாகவே
ஏற்படுத்திக் கொண்டவைகள்தானே! இவைகளால்தான் உலகே
அழிந்துகொண்டிருக்கிறது.{எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே}
ஹேமா பாவம் கடவுள் திட்டவேண்டாம் மனிதர்கள் ஆடும் ஆட்டத்தைப்
பார்த்து நிட்சயமாய் இறைவன் சலித்திருப்பார்.
அன்பான,பண்பான,அடக்கமான,அறிவான,சாதுவான {தம்பதியருக்கு}
பெற்றோருக்கு இவையனத்துமே இல்லாமல்{அடாவடித்தனமாய்}
ஒரு மகனோ,மகளோ இருந்தால் ...அது அவர்கள் தப்பில்லை
அவர்களை ஒருபோதும் குற்றம் சுமத்தக் கூடாது
எல்லாம் செய்வது மனிதஇனம் ...பழிமட்டும் கடவுளுக்கு
இது நியாயமாகுமா???

S.A. நவாஸுதீன் said...

கோபம், கோபம், கோபம். கொத்து கொத்தா இருக்கு இங்கே.

வேல் கண்ணன் said...

இறை மறுப்பு கொள்கையா ?
உண்மைதானா ....
உண்மை என்றல் வாருங்கள்
வரவேற்கிறேன் ... வாழ்த்துகள்
அதே சமயத்தில் அதிகபடியான
கவனமும் தேவை தோழி

நேசமித்ரன் said...

ஹேமா

என்ன இது மிரட்டுகிறது கவிதை ?
கொஞ்சம் சொற்சிக்கனம் இருந்தால் இன்னும் அழுத்தம் கூடும் என்பது என் தாழ்மையான கருத்து
கோபம் மிக அருமை சொல்ல வந்ததை மிக தெளிவாக சொல்கிறது கவிதையின் வரிகள்

:)

RAGUNATHAN said...

//குரங்காகவே விட்டிருக்கலாம்
குரங்காய் இருந்தவனை//

நிதர்சனமான வரிகள்...புரட்டி எடுத்து விட்டீர்கள் கடவுளை...

Anonymous said...

தெய்வத்தை தூற்றுவதாலோ போற்றுவதாலோ நமது விதியை நாம் மாற்றிவிட முடியாது.

நடப்பது தான் நடக்கும்.

மன அமைதிகாகவே நாம் தெய்வம் என்று நாம் பற்றிக்கொண்டுள்ளோம், அவர் எங்களைப் பற்றிக்கொள்ளவில்லை.

அவர் எம்மைத் தூற்றுவதுமில்லை. எம்மைத் துன்புறுத்துவதும் இல்லை.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!//

கோபிக்காதீர்கள் ஹேமா. மனிதன் போடும் வெறியாட்டங்களுக்கு படைத்தவனை பகைக்காதீர்கள் ஹேமா. எனக்குப் பொறுக்க வில்லை. தெய்வம் நின்று காட்டும். நீங்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
இது கத்தி முனையில் உங்கள் தகப்பனிடம் pocket money கேட்பதைப் போல் இருக்கிறது.

sakthi said...

குரங்காகவே விட்டிருக்கலாம்
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்.
nach varigal hema

ஹேமா said...

அன்பான என் நண்பர்களுக்கு.நான் நாஸ்திகம் பேசவில்லை.எனக்கும் கடவுள் என்ற ஒருவன் தேவைப்படுகிறான்.எங்களைக் காக்கவும் வழி நடத்தவும் அன்பு காட்டவும் எல்லாத்துக்கும்.எனக்கு இருக்கிறானா என்கிற சந்தேகம்.
இருந்தால் நல்லதே.இருந்திருந்தால் என் நாட்டில் என் வீட்டில் ஏன் இழவுகளும் இழப்புக்களும் தொடர் தொடராய்.சுதர்ஷன் சொன்னது போல மனிதராயும் இப்போ கடவுளர்கள்.
கடவுளைத் திட்டவில்லை.இல்லை என்றும் சொல்லவில்லை.சரி எங்கே கடவுள்?ஏன் என் மக்களுக்கும் எங்களுக்கும் அகதியாய் இப்படி ஒரு வாழ்வு.நாங்களும் மனிதர்கள்தானே.ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பாவங்கள் செய்தோமா?எங்கள் குழந்தைகள் யாருக்கு என்ன செய்தார்கள்?
ஓ.....சிங்களவன் அப்போ புண்ணியம் செய்தவனாகி
விடுகிறானோ !அவன் நல்லாத்தானே இருக்கிறான்.எங்களைப்போல ஓடி ஒளிக்கவில்லையே !அப்போ கடவுள் இருக்கிறார்.ஆனால் இலங்கையில் இல்லையோ !நான் ஒத்துக்கொள்ளவா?

ஆ.ஞானசேகரன் said...

//அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!
//

நல்லாயிருக்கு ஹேமா

ப்ரியமுடன் வசந்த் said...

//படைப்பவன் என்று ஒரு பட்டம் வேறு.//

தவறாய் சொல்லிவிட்டீர்கள் ஹேமா

படைச்சவன் தன் கடமைய செய்திட்டான் அழிப்பவன் தன் கடமைய செய்திட்டான்

இடையில் காக்கும் கடவுள்ன்னு ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டாருன்னு நினைக்கிறேன்...

இவர்களுக்குள்ளே பிரிவினை இருக்கும்போது நாம் மானுடர்கள்தானே....

நசரேயன் said...

நான் ஆட்டைக்கு வரலை

ஸ்ரீராம். said...

எல்லாம் அவன் செயல்.
அவனன்றி ஓரணுவும் அசையாது.
காரணமின்றி எதுவும் நடப்பதில்லை.
குழந்தைகள் தவறு செய்தால் குழந்தைகளைதான் திருத்துவார்கள். பெற்றவர்களுக்கு தண்டனை தர மாட்டர்கள்!
கட்டிடக் காடுகள் உவமை அருமை.

சந்தான சங்கர் said...

வணங்கு தெய்வம்
இணங்கவில்லை
பிணங்கு ஒன்று
பீரிட்டபோதிலும்,

மனமெல்லாம் புரையோடி
இனமெல்லாம் தனலிட்டபின்
மணலிட்ட உரம்தானே!!
இனி வரமிட்டு வாழ்வது யாரடா?
கடவுளே.....

maruthamooran said...

வாழ்த்துக்கள் ஹேமா…….
நல்லாயிருக்கு.

thamizhparavai said...

////அக்கிரமங்கள் கூடி தலைகள் தகர்கிறது
அதையும் எடுத்து
மாலை கோர்த்துப் போட்டுக் கொள்
இன்னும் அழகாய் இருப்பாய் நீ !!!//

நல்லா இருக்கு..
அதே நேரம் நேசமித்ரனை வழிமொழிகிறேன்..

பித்தனின் வாக்கு said...

ஹேமா கடவுளிடம் ஏன் கோபம். மனிதர்களின் வக்கிரங்களுக்கும், மிருகதனத்திற்கும் அவர் என்ன செய்வார். கடவுளைத் திட்டினால் நிறைய பின்னுட்டம் வரும் என்ற பகுத்தறிவு பதிவர்கள் போல் பின்னூட்ட அடிமை ஆகிவிட்டீர்களா?

என்ன இருந்தாலும் நீங்க மீசை வைக்காத பாரதி, அவரின் கோபம் உங்கள் வரிகளில் புலப்படுகிறது.

எது நடந்தோ அது நன்றாக நடந்தது
எது நடக்கின்றதோ அது நடக்கின்றது
எது நடக்கப் போகுதோ அதுவும் நன்றாக நடக்கும்
என நம்பிக்கை வையுங்க ஹேமா எல்லாம் நன்றாக நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை.

பித்தனின் வாக்கு said...

நம்பிக்கைதான் வாழ்க்கை. பின்னாளில் ஒன்றுபட்ட இலங்கை. அமைதியாய் வாழ வழிபிறக்கும். நானும் நம்புகின்றேன். நீங்களும் நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை.

Anonymous said...

உங்கள் கவிதையில் வெளிப்பட்ட உங்கள் கோபம் என்னை உலுக்கி விட்டது.

Thenammai Lakshmanan said...

ஹேமா
உங்கள் கவிதைகள் படிக்கும்பொதெல்லாம் உங்கள் உணர்வு என்னையும் கடுமையாகப் பற்றிக் கொள்ளும்

இன்றும் அவ்வாறே

இயலாமை பொங்கச் செய்யும் கவிதை ஹேமா

வேல் கண்ணன் said...

//ஏன் என் மக்களுக்கும் எங்களுக்கும் அகதியாய் இப்படி ஒரு வாழ்வு.நாங்களும் மனிதர்கள்தானே.ஒரே நேரத்தில் அத்தனை பேரும் பாவங்கள் செய்தோமா?//
யாரேனும் ஒருவர் இதற்கு பதில் சொல்லுங்கள் குறிப்பாக இதோ இதற்கு
//எங்கள் குழந்தைகள் யாருக்கு என்ன செய்தார்கள்?//

பா.ராஜாராம் said...

அருமை ஹேமா!ஹேமா தொடாத சப்ஜக்ட் இல்லை என இனி சொல்லலாம்!நல்ல பொழிவு!

வால்பையன் said...

நச்

ஆரூரன் விசுவநாதன் said...

இருக்கிறானா? இல்லையா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை ஹேமா... இதில் என்ன தயவு,

நம்பிக்கை அவரவர் விருப்பம்.

எனக்கும் அப்படி(கடவுள்) ஒருவன் தேவைப்படுகிறான் என்ற வரிகள் ஏனோ வித்தியாசமானதாக படுகிறது.


மிக அருமையான வரிகள். நிறைய யோசிக்க வைக்கின்றன.

பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எது என்றுதான் தெரியவில்லை.... மொத்த அழிவும்,
அதன் பின் புதிய ஜனனமுமா?

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

தமிழ் அஞ்சல் said...

//இனமெல்லாம் தனலிட்டபின்
மணலிட்ட உரம்தானே!!
இனி வரமிட்டு வாழ்வது யாரடா?
கடவுளே.....//


TOUCHING

kanagu said...

Hema.. vazhakkam pol kavithai arumai.. rasithen..

aanal kaduvulai naam thituvathu thevai illai endre karuthukiren...

yeneneil, padaipavanathu kadamai padaththalodu mudindhu vidukirathu... pudhu uyiraana kuzhandhayil neengal ethum kutram koora mudiyuma..

manidhane anaithu archanaikkum ullakka pada vendiyavan...

யாழினி said...

//கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்.
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்.//

பிடித்தமான வரிகள் ஹேமா!

படைத்தவன் எததனை ஆசையுடன் மனிதனைப் படைத்திருப்பான். நானும் இன்று சிந்தித்தேன் பொதுவாக மிருகங்களுக்கு புலிம் சிங்கம் போன்றனவற்றிற்கு ஒரோ குணம் தான் இருக்கும் உ+ம்: ஒரு சிங்கத்திற்கு இருக்கும் குணம் தான் மற்றைய எல்லா சிங்கங்களுக்கும் இருக்கப் போகுது. ஆனால் மனிதனுக்கும் மட்டும் வித்தியாச வித்தியாசமான குணங்கள். போட்டி, பொறாமை...இப்படி எத்தனை எத்தனையோ வகை. ஏன் ஆற்றிவு இருப்பதனால? ஆனால் இதற்காக படைத்தவனை கோபித்து என்ன தான் செய்வது ஹேமா?

மேவி... said...

present madam

அன்புடன் நான் said...

கொடுத்ததை எடுக்கவும் முடியாமல்
கோணலாய் வளைந்த உலகை
திருத்தவும் முடியாமல்.
குரங்காகவே விட்டிருக்கலாம்.
குரங்காய் இருந்தவனை
மனிதனாய் மாற்றிவிட
மீண்டும் குரங்காகவே அவன்
புத்தியில் சிறிதும்
மாற்றம் இல்லாதவனாய்//

கவிதையெல்லாம் அருமையாத்தான் இருக்கு... ஆனா நீங்க ஏன் இவ்வளவு கோபப்டடுறிங்க ... கடவுள் உங்களிடம் கோவித்துக் கொள்ளமாட்டாரா???

துபாய் ராஜா said...

அழகான கவிதை எழுதி
அறச்சீற்றம் கொண்ட தோழி
குணம்மாறி கோபம் நீங்கி
மனம் குளிர்ந்து மகிழ்ச்சி கொள்ள
எல்லாம்வல்ல இறைவா நீ
ஏதாவது செய்துவிடு....

அரங்கப்பெருமாள் said...

” பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் “ ( கண்ணதாசன்,முள்ளும் மலரும்).

நீங்கள் பட்டம் வேறு எனத்திட்டி...
அது சரி.

”குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை” (கண்ணதாசன்)

//குரங்காகவே விட்டிருக்கலாம்//

சத்தியமாய் உண்மை.

Post a Comment