*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Sunday, January 18, 2009

இரத்தம் சிந்தும் சித்தார்த்தன்...

நலிவுற்றுக் கிடக்கிறது என்நாடு
மெலிந்து கிடக்கிறது என் தேசம்.
தரைப்பாதை தடை.
வான்பாதை வழியடைப்பு.

குருதிக் கிடங்குகளுக்குள்ளும்
குண்டுக் குளங்களுக்குள்ளும்
நீந்தியபடியே எங்கள் பிரயாணங்கள்.
தேசம் வெளுத்து சலவை செய்யும்
புத்தன்கூட அசுத்தமாய்.

பிணம் தின்னும் கழுகும் நரியும் உலவும்
கவலைக்குரிய நாடாய் என் தேசம்.
ஊட்டச்சத்தில்லா ஊர்கள்.
கல்விச்சாலைகளோ காவலரண்களாய்.

எங்கள் உதிர்ந்த தெருக்களில்
படிந்த
எம் காலடித் தடங்கள் மாத்திரம்.
கொல்லையிலும்
காணாமல் போனவரின்
எச்சப் பருக்கைகள்.
வடகிழக்குத் திசைகாட்டியில்
"சுடுகாடு இங்கே".
புன்னகை இழந்த
புழுக்கள் வாழும் இலங்கை.

கல்வியறிவில்லா காட்டுவாசிகளாய்
எம் குழந்தைகள்.
காலாசாரம் வளர்ந்த இடமெங்கும்
அநாகரீகக் குப்பைக் கூடங்கள்.
புத்தனோ அழுதபடி.

போதி மரத்துக்குக் கீழும்
புதைகுழியாம்
அழுகுரலும் கேட்கிறதாம்.
சித்தார்த்தனும் சிந்தித்தபடி
சந்தேகத்தோடு!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

நட்புடன் ஜமால் said...

கணத்த வரிகள் ... :(

புதியவன் said...

//கல்வியறிவில்லா காட்டுவாசிகளாய்
எம் குழந்தைகள்.
காலாசாரம் வளர்ந்த இடமெங்கும்
அநாகரீகக் குப்பைக் கூடங்கள்.
புத்தனோ அழுதபடி. //

புத்தனே அழுதால்...நாமெல்லாம்...

புதியவன் said...

//குருதிக் கிடங்குகளுக்குள்ளும்
குண்டுக் குளங்களுக்குள்ளும்
நீந்தியபடியே எங்கள் பிரயாணங்கள்.
தேசம் வெளுத்து சலவை செய்யும்
புத்தன்கூட அசுத்தமாய்.//

கண்ணீர்த்துளிகள் கொண்டு வடித்தது
போல் இருக்கிறது வார்த்தைகள்...

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடிக்
கொண்டிருக்கிறேன் ஹேமா...

Anonymous said...

இதை படிக்கும் போது உள்ளம் நொருங்கி போய்கிறது ஹேமா.
இதயத்தின் வலி வார்த்தைகளாக தெறித்து இருக்கிறது கண்ணீர் துளிகளுடன்.
ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை ஹேமா.

Anonymous said...

\\எங்கள் உதிர்ந்த தெருக்களில்
படிந்த
எம் காலடித் தடங்கள் மாத்திரம்.
கொல்லையிலும்
காணாமல் போனவரின்
எச்சப் பருக்கைகள்.\\
யதார்தமான வ்ரிகள்

Muniappan Pakkangal said...

Bothi marathukku keezhum puthai kuzhikalam-no words to console you hema,your heart has burst out.

அப்புச்சி said...

வடகிழக்குத் திசைகாட்டியில்
"சுடுகாடு இங்கே".

கனமான வரிகள்

அப்புச்சி

ஹேமா said...

ஜமால் எப்பவும் என்னதான் அனுதாபம் தெரிவிக்கிறதுன்னு சின்னதா கருத்தோட விட்டுட்டீங்களோ!நன்றி ஜமால்.

ஹேமா said...

புதியவன்,எம்மை வழிநடத்தும் தெய்வங்களே கலங்கி நின்றால் எம் நிலை?

ஹேமா said...

புதியவன்,உங்கள் ஆறுதல் வார்த்தைகல்கூட சிலசமயம் நம்பிக்கைகளைக் கூட்டுகிறது.நன்றி.

ஹேமா said...

ஆனந்த்,உண்மையில் இந்தமுறை ஒரு காதல் கவிதை பதிவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் எங்கள் நிலைமை?

ஹேமா said...

கவின்,
எங்கள் கதி என்ன?
என்ன செய்யப் போகிறோம்?
இப்படியே அகதி வாழ்வுதானா?ஊரிலும் அடிமை வாழ்வா?

ஹேமா said...

நன்றி முனியப்பன்.உணர்வின் கருத்துக்களுக்கு.

ஹேமா said...

வாங்க அப்புச்சி.கனநாளுக்குப் பிறகு இந்தப்பக்கம்.ஊருக்குப் போய்ட்டீங்களோ எண்டெல்லோ நினைச்சேன்.சொன்னதே சொன்னீங்கள் கருத்து.அதைக் கொஞ்சம் விளக்கமாச் சொல்லக்கூடாதோ!

அப்புச்சி said...

வடகிழக்குத் திசைகாட்டியில்
"சுடுகாடு இங்கே".


எப்போதும் கைகாட்டி ஒரு திசை தான் காட்டும்,நீங்க‌ள் க‌விதையில் சொன்ன‌து போல‌ வ‌ட‌க்கும் கிழ‌க்கும் சுடுகாடுதான், அத‌னை எவ‌ராலும் ம‌றுக்க‌ முடியாது.க‌ற்பிட்டி சுட‌லைக்குள் எரிந்த‌ டெலோ போராளிக‌ள்,க‌ண்நோய் வ‌ந்திருந்து ப‌டுத்திருந்த‌ போராளிக‌ள்,க‌ழுத்தில் ட‌ய‌ர் போட‌ப்ப‌ட்டு க‌ல்விய‌ன்காட்டில் அரைகுறை உயிர்க‌ளாக‌ எரிக‌ப்ப‌ட்ட‌ ரெலோ போராளிக‌ள் இப்ப‌டியான‌ ம‌ர‌ண‌ங்க‌ள்,அருணா என்கிற‌ போராளி காட்டிய‌ விசுவாச‌ம், புளட் இயக்கம் போட்ட தீப்பொறி உறுப்பினர்கள்,இந்திய கைகூலி ஈரோசால் மலையக மக்களை புரட்சிக்காக அணி திரட்டும் வேலையில் ஈடுபட்ட வேளையில் சுட்டு கொல்ல பட்ட நெப்போலியன், வடமராட்சியில் தாஸ் குரூப்பால் கொல்லப்பட கச்சான் வியாபார குடும்பம்,

ஜெகன் டெலெ தலைவர் , சுடப்பட போது அவரை தூக்கி சுமந்த மக்களை சுட்டது,இதனை எல்லாம் மறந்துவிட கூடாது. அடிப்படையில் வடக்கு கிழ‌க்கு என்பது சுடுகாடுதான்.இன்றும் அதே வாடை வீசுகிறது,மாற்றுவோம் விதியை ,எம்ஜீ ஆர் புலிகளை வளர்த்தார்.கருணாநிதி டெலோ வை வளர்த்தார்,கம்னீசிய அமைப்புக்கள் ஈபிரல்வ் வை வள‌ர்த்தன,ஆனால் ரோஓ போராளி இயக்கத்துக்கிடையில் பகைமையை வளர்த்தது,,,,,,,


இன்றும் அறுவடை செய்கிறோம்

தமிழ் மதுரம் said...

பிணம் தின்னும் கழுகும் நரியும் உலவும்
கவலைக்குரிய நாடாய் என் தேசம்.
ஊட்டச்சத்தில்லா ஊர்கள்.
கல்விச்சாலைகளோ காவலரண்களாய்//

ஹேமா நிறைய அணிகள் கையாண்டுள்ளீர்கள். மனதின் ஆதங்கங்களை நிஜங்களின் பிரதிபலிப்பினூடாகக் காட்டியுள்ளீர்கள். ம்..... என்ன செய்வது எமது நிலமை.. அனலிடைப்பட்ட மெழுகு தான்.....

கபீஷ் said...

சொல்ல வார்த்தைகளில்லை வலியை விளக்க

ஹேமா said...

//வடகிழக்குத் திசைகாட்டியில்
"சுடுகாடு இங்கே".//

அப்புச்சி, இன்னும் மேலதிகமான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.நன்றி.

ஹேமா said...

கமல்,காலம் மட்டும் கடந்துகொண்டிருக்கிறது.மக்களின் அவலநிலை கேள்விக்குறியோடு!

ஹேமா said...

கபீஷ்,வாங்க.என்ன செய்ய்ப்போகிறோம் எம் மக்களுக்காக.எம் தேசத்திற்காக!

Vishnu... said...

உண்மையான கவிதை ஹேமா ..

உங்கள் வலைத்தளம் வருகையில் எப்போதுமே என்னை கொஞ்ச நேரம் சிந்திக்க வைப்பீர்கள் ..
நமது உறவுகளின்
இன்றைய நிலை ..
கவிதை மனதை மிக அதிகம் பாதித்தது ஹேமா ..


உண்மையில்
புத்தன் கண்ணீராக
ரத்தம் வடிப்பான்
இன்றைய நிலை கண்டால் ..

அன்புடன்
விஷ்ணு

ஹேமா said...

விஷ்ணு,பித்தர் கூட்டம் அநியாயம் செய்வதற்கு பாவம் புத்தர் என்ன செய்வார்.அவரும் எங்களோடு சேர்ந்துகொண்டு அழவேண்டியதுதான்!

தேவன் மாயம் said...

கல்வியறிவில்லா காட்டுவாசிகளாய்
எம் குழந்தைகள்.
காலாசாரம் வளர்ந்த இடமெங்கும்
அநாகரீகக் குப்பைக் கூடங்கள்.
புத்தனோ அழுதபடி. ///

வார்த்தைகளின்
கணம்
தாங்காமல்
வெடிக்கிறது
மனம்...

ஹேமா said...

தேவா உங்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வும் கரிசனையும் இருக்க வேண்டியவர்களிடம் காணவில்லையே.அதுதான் பரிதாபம்.

Anonymous said...

/
போதி மரத்துக்குக் கீழும்
புதைகுழியாம்
அழுகுரலும் கேட்கிறதாம்.
சித்தார்த்தனும் சிந்தித்தபடி
சந்தேகத்தோடு!!!
//

'வலி'ய வரிகள்.

சேவியர்

இடைவெளிகள் said...

என் கைகளுக்குள்
காதலின் நிறைவோடு
உன் உள்ளங்கை வெப்பம் திணி
எங்களைப் புதைத்த தெருக்களில்
(சு)தந்திர தினம்.

நெஞ்சு நொந்து
கிழிந்த பக்கங்களின்
கீறல்கள் கவிதைகளாய்

நெஞ்சில் வலி எடுத்து
வலிந்து வலிக்கும் குருதித் தெறிப்பே
கவிதைகளாய்

கசிகின்ற இரத்தம் கொண்டு
கிறுக்குவதும் கவிதைகளாய்.

எங்கள் உதிர்ந்த தெருக்களில்
படிந்த
எம் காலடித் தடங்கள் மாத்திரம்


ஒரு மெல்லிய இதயத்திலிருந்து
வலிகள் குழைக்கப்பட்டு
வரிகள் வந்து விழுந்திருக்கின்றன
கவலைகள்
வார்த்தைகளில் படிந்திருப்பதை
பார்க்க முடிகிறது

என் சொந்தங்களை
கை தூக்கிவிட இயலாத என்னால்
கவிதைகளை மட்டும்
பாராட்டாமல் இருக்கமுடியவில்லை

Post a Comment