*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, January 14, 2009

பொங்கல் திருநாள் 2009...

பொங்கல் பொருட்களும்
பானைகளும்
பிசாசுகளிடம்
அகப்பட்டுக் கிடக்கிறது
கொஞ்ச நாட்களாக.

பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.
பொங்கும் கைகள்கூட
அறுக்கப்பட்டு.

எங்கள் சுவாசங்களை
பறித்த பிசாசுகளிடமிருந்து
எங்களை மீட்கவே
எங்கள் மூச்சுத் திணறுகிறது.
பிறகு எங்கே
சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்.

எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.

பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.

சர்க்கரைப் பொங்கலும்
வடையும் வாழைப்பழமும்
அடிபட்டுத் தின்ற
காலங்கள் மட்டும்
மணம் மாறாமல் மனதோடு.

பொங்கிய முற்றமும்
அந்த மூன்று கற்களும்
ஞாபகக் குறிப்புக்களில் இருந்தாலும்
காணாமல் போன பட்டியலில்.

கறையான் புற்றுக்களும்
பாம்புப் புற்றுக்களும்
மூடிக் காத்து வைத்திருக்கும்
சிலசமயம்
எங்கள் எச்சங்களை.

புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.

அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!

ஹேமா(சுவிஸ்)

34 comments:

Muniappan Pakkangal said...

Pirapanchathin Verkalai aruththu & pongalin vaasam meendum- nalla vaarthaigal Hema.

நட்புடன் ஜமால் said...

\\பறிப்பிற்கான போராட்டம்
இரத்தம் சொட்டச் சொட்ட.
பொங்கல் பானைகள் முழுதும்
தமிழனின் இரத்தம் நிரப்பப்பட்டு.\\

கணம் நிறைந்த வார்த்தைகள்
இரணங்களோடு ...

புதியவன் said...

//எங்கள் கரங்கள் நிரந்தரமாய்
உணர்விழக்காது.
வேறு எந்த உதவியோ
ஊன்றுகோலோ அற்று
பிரபஞ்சத்தின்
வேர்களை அறுத்தல்லவா
ஆயுதமாக்கி
எதிரியை வழிமறித்துப்
போராடியபடி நாம்.//

அருமையான வரிகள்
உணர்வுகள் புரிகிறது ஹேமா...

புதியவன் said...

//பிரளயமும் பூகம்பமும்
பூக்களைத் தறித்து மறிக்கும்
இலையுதிர்காலமும்
நீண்டு நிலைப்பதில்லை.//

கால மாற்றம் அனைத்தையும் மாற்றும்...

புதியவன் said...

//புராதனமான
நகரம் ஒன்றை உருவாக்குவோம்
புதிய எம் தேசத்தில்.
நீண்ட நெடிய தேடலின்பின்
பொங்கலின் வாசம்
மீண்டும்
முற்றத்துக் கோலம்
மாவிலை தோரணத்தோடு.


அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!//

காலம் தனது காட்சியை சீக்கிரம் மாற்றும்...
உங்கள் நம்பிக்கை வீண் போகாது...

புதியவன் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஹேமா...

கானா பிரபா said...

வணக்கம் ஹேமா

உங்கள் கவி வரிகளில் தொனித்த யதார்த்தம் கனக்க வைத்தது. தமிழ்மணத்தில் உங்கள் பதிவு பின்னூட்டப் பக்கத்தில் காட்டப்படுவதில்லையா?

உங்களுக்கு இனிய திருநாள் வாழ்த்துக்கள். எமது தாயகம் நிரந்தர அமைதியோடு இந்த ஆண்டிலாவது இருக்க வேண்டும் என்பதே எல்லோர் அவாவும்.

Poornima Saravana kumar said...

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

தமிழ் said...

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

மு.வேலன் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!

ஆளவந்தான் said...

//
அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!
//
வரியில் கனம் அதிகம்.. “தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்”.. இதற்கும் ஒரு நல்வழி பிறக்கும்..

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஹேமா.

தமிழன்-கறுப்பி... said...

ம்...

தமிழன்-கறுப்பி... said...

வேறொன்றும் சொல்லத்தெரியவில்லை...

தமிழ் மதுரம் said...

ஹேமா நீதி தோற்றதாகவோ/ தர்மம் அழிந்ததாகவோ வரலாறு இல்லை... அவர்கள் வாழ்வுக்கு இப்போது வேண்டியது புது விடியல் மட்டுமே... அது இந்த ஆண்டில் என்றாலும் கிடைக்குமா பார்போம்???

தமிழ் மதுரம் said...

ஹேமா நீதி தோற்றதாகவோ இல்லைத் தர்மம் அழிந்ததாகவோ வரலாறு இல்லை... அவர்கள் வாழ்வுக்கு இப்போது வேண்டியது புது விடியல் மட்டுமே... அது இந்த ஆண்டில் என்றாலும் கிடைக்குமா பார்போம்???

உணர்வின் வரிகள்... கவிதையினூடாக உறுதி தெரிகிறது... எப்போது எம்மக்களுக்கான உறுதி கிடைக்குமோ???

ஹேமா said...

நன்றி முனியப்பன் உங்கள் பொங்கல் வருகைக்கு.

ஹேமா said...

நன்றி ஜமால்,எங்கள் ரணங்களை உங்களால் உணரமுடிகிறதே!அதே பெரிய விஷயம்.

ஹேமா said...

புதியவன் மனதிற்குள் புழுங்கியபடி கேள்விக்குறியோடுதான் எங்கள் வாழ்க்கை.உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

ஹேமா said...

//கால மாற்றம் அனைத்தையும் மாற்றும்...//
//காலம் தனது காட்சியை சீக்கிரம் மாற்றும்...
உங்கள் நம்பிக்கை வீண் போகாது...//

நம்பிக்கையின் கை பிடித்தே நம்பிக்கையோடு கால
மாற்றத்திற்காகக் காத்திருக்கிறோம்.கை கொடுக்கிறீர்கள்.
காற்றில் கை பிடித்து நன்றி.

ஹேமா said...

வாங்கோ பிரபா.நல்லா யானை வெடி,அனுமார் வெடியெல்லாம் கொழுத்தி அச்திட்டீங்கள் பொங்கலை.
சந்தோஷம்.என்ன புக்கைதான் தரேல்ல.அடுத்த வருஷம் என்ன....!

பிரபா,தமிழ்மணம் பற்றி எனக்கு நிறைய விஷயம் உங்களிடம் கேட்க இருக்கு.கதைக்கவேணும் உங்களோட.

ஹேமா said...

பூர்ணி வாங்கோ.உங்களுக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்.உங்கள் பொங்கலின் 10 பதிவை விடவா!

ஹேமா said...

திகழ் வாங்கோ வாங்கோ.இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
வீட்டில பொங்கினீங்களா?

ஹேமா said...

வேலன் வாங்க.அடிக்கடி இந்தப்பக்கம் வரலாம்தானே.இனிய பொங்கலின் வாழ்த்துக்கள்.

ஹேமா said...

கமல்,பயந்து துண்டு துணியோடு கடல் கடந்து ஓடி வந்த எங்களைவிட எங்கள் மக்கள் உறுதி நிறைந்தவர்கள்.அவர்களுக்காகவாவது அமைதி கிடைக்கவேணும்.

ஹேமா said...

தமிழன் பொங்கல் ஞாபகங்கள் வந்து போகுதா?என்னதான் செய்யலாம்.இனி அப்படி ஒரு காலம் வருமா!காத்திருப்போம்.உங்கள் ம்....என்ற சொல்லுக்குள் நிறையவே ஏக்கம் தெரியுதே!
இனிய பொங்கலின் வாழ்த்துக்கள்.

காரூரன் said...

*\\அன்றுவரை உறுதியோடு
காத்திருப்புக்கள் தொடரும்
மனதிற்குள் பொங்கியபடி!!!\\*

வலிகள் வரிகளாக‌
காலியாகி விட்ட முற்றத்தை
உலக்கையால் கோலம் போடும்
காலம் வெகுதூரம் இல்லை
நலிந்து விடாமல் உறுதியுடன்
பொங்கி எழும் அகதியின் வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஹேமா said...

காரூரன் எங்கள் அகதி வாழ்வின் ஊன்றுகோலே நம்பிக்கைதான்.
காத்திருப்போம்.

ஹேமா said...

ஆனந்த் உங்களுக்கும் இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கென்ன நீங்க எல்லாம் கொடுத்து வைச்சிருக்கீங்க பொங்கல் சாப்பிட.இங்க சூரியனையே காணோம்.

காமராஜ் said...

வணக்கம்.

இன்னும் ஓராயிரம் கவிதைகள் வந்தாலும்
வழி மறிக்கிற ரணமும் வேதனையும் புதிதாகிறது.

வளமை பறிக்கப்பட்ட வாழ்வோடு உயிர்கடத்தும்
எல்லோரும் போராட்டக்காரர்கள்.

இருக்கிற வேதனையை இறக்கிவைக்கிற
பேனாக்களின் பின்னால் தீராக்கனல்
புதைந்துகிடக்கிறது.

ஹேமா said...

நன்றி காமராஜ் ஐயா.உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் இன்னும் என் எழுதுக்களை உரமூட்டி ஊக்குவிக்கும்.மீண்டும் வருகைக்குகும் கருத்துக்கும் மிக்க நன்றி.நேரம் கிடைக்கிறப்போ எல்லாம் வந்து போங்களேன்.

Vishnu... said...

உணர்ச்சிகளை கொட்டி கவிதையாய் வடித்து விட்டீர்கள் ஹேமா ..

அனைத்து வரிகளுமே மிக அருமை உணர்ச்சி பிழம்பாய் வெடிக்கிறது ... வார்த்தைகளை தேர்வு செய்து கையாண்ட விதமும் மிக அருமை ...

அன்புடன்
விஷ்ணு

எனது பொங்கல் வாழ்த்துக்களும் ஹேமா ...

ஹேமா said...

விஷ்ணு வாங்க.நிறைய நாட்களுக்குப் பிறகு,நிறையப் பின்னூடங்களோடு. மனம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

நெல்லை விவேகநந்தா said...

லட்சியங்கள் இப்போதுதான் விதைக்கப்பட்டு இருக்கின்றன. நிச்சயம் அவை வீறு கொண்டு எழும். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது, எந்த சூழ்நிலையிலும் தளர்ந்துவிட வேண்டாம் - நெல்லை விவேகநந்தா.

Post a Comment