*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Tuesday, December 09, 2008

மீண்டும் பிறந்தால்...

நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பு என்பதில் எனக்கு
நம்பிக்கையே இல்லை.
ஆயினும்
கேள்வியோடு துளைத்து
நச்சரித்தபடி நீ.
விட்டு வைக்க விரும்பாத
ஆதங்கமாய் அது
கேட்டுக்கொள்.
உனக்குள்ளும் பதில் இருந்தால்
எடுத்து வை.

மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.

பாரம் சுமந்த உன்னை
நான் சுமக்கவும்,
உன் மடி சேர்ந்த நான்
உன்னை
என் மடி சேர்க்கவும்,

மிதிபட்ட பாதங்களிடை
முரட்டுத்தனமாய்
இழுபட்ட என்னை
சிறகுகளாய் ஆக்கிய
கைகளுக்குள்
காத்த உனக்கு,

வயிற்றுக்கு வெளியில்
கருவறை கட்டி,
காயங்களைக் காயப்படுத்த
கல் எறிந்தவரைத் தூரவிரட்டி
போர்த்தி அணைத்த உனக்கு,
பண்டமாற்றாய் பகிர்ந்து தர
எதுவுமேயில்லை என்னிடம்.

உள்ளதெல்லாம் தொலைத்து
முற்றும் அற்றுப்போய்
குட்டப்பட்டு...குற்றப்பட்டு
கூனிக்குறுகி நின்றபோது
அன்பின்
நிழலாகினாய் நீ.

நெருங்கிக் கேள் அன்பே!
எனக்கென்னவோ
நம்பிக்கையே இல்லை
மறுபிறப்பில்.
வேண்டவும் வேண்டாம்
மீண்டும் பிறப்பு ஒன்று.

என்றாலும்
இனிமை தரும்
பருவத்துக் காதலன்
என்கிற பருவம் தாண்டி
என் உயிர் காவலன்
உனக்காய்
உன் அன்பின் நிறைவோடு
நான் பிறந்தால்
மீண்டும் பிறந்தால்...
தாயாய் ஆவேன்
உனக்காய் மட்டும்
உன் தாய் நானாய் ஆவேன்!!!

ஹேமா(சுவிஸ்)

16 comments:

ஆயில்யன் said...

//என் உயிர் காவலன்
உனக்காய்
உன் அன்பின் நிறைவோடு
நான் பிறந்தால்
மீண்டும் பிறந்தால்...
தாயாய் ஆவேன்
உனக்காய் மட்டும்
உன் தாய் நானாய் ஆவேன்!!!//

மனம் முழுதும் அன்பால் நிரப்பி
அதை அழகா வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

:)

ஹேமா said...

வாங்கோ...வாங்கோ ஆயிலயன்,வணக்கம் வந்தனம்.எங்க வீட்டுப் பக்கமும் வந்தீங்களே.
சந்தோஷமாய் இருக்கு.அடிக்கடி வந்து போங்கோ.நன்றி ஆயில்யன்.
காதலின் சங்கீதம் அது.

மே. இசக்கிமுத்து said...

உண்மையான, தன்னலமற்ற அன்பில் திளைத்திருக்கும் போது எழுந்த சிந்தனையின் வெளிப்பாடே மறுபிறவி.

அன்பை ஆழமாக, அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!!
- இசக்கிமுத்து

மே. இசக்கிமுத்து said...

‍நான் நலம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
அக்கரையாய் விசாரித்ததற்கு நன்றி சகோதரி. அலுவலக பணி சற்றே அதிகமாக இருக்கின்ற காரணத்தால் வலை பூ பக்கம் வர முடியவில்லை.

விரைவில் என் எண்ணப் படைப்புகளை வலைப் பூவில் பார்க்கலாம். நன்றி ‍ஹேமா!!

thamizhparavai said...

சகோதரி ஹேமாவுக்கு....
காதலுக்கும், தாய்மைக்கும் அழகாகக் கவிதை முடிச்சிட்டிருக்கிறீர்கள். நன்றாக இருந்தது.
//வயிற்றுக்கு வெளியில்
கருவறை கட்டி,
காயங்களைக் காயப்படுத்த
கல் எறிந்தவரைத் தூரவிரட்டி
போர்த்தி அணைத்த உனக்கு,
பண்டமாற்றாய் பகிர்ந்து தர
எதுவுமேயில்லை என்னிடம்.//
கவிதைமனம் இருக்கிறதே...
அதிக வேலைப்பளுவில் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலவில்லை. பின்னூட்டம் அடிக்கடி இடாவிடினும், கூகுள் ரீடரில் படித்துக் கொண்டுதானிருக்கிறேன் ஹேமா....

ஹேமா said...

நன்றி இசக்கிமுத்து ரொ...ம்ப நாட்களாகவே உங்களையும் உங்கள் பதிவுகளையும் காணமுடியவில்லை.
வந்து செய்தி சொன்னதுக்கு மிக்க நன்றி.சந்தோஷம்.

மறுபிறப்பில் நம்பிக்கையில்லை என்றாலும் தொடர்ந்தும் வேண்டப்படுகின்ற அன்பால் மறுபிறப்புக்கூட பரவாயில்லை என்று படுகிறது மனதில்.

ஹேமா said...

வாங்கோ தமிழ்பறவை அண்ணா.என்னதான் வேலைப்பளு என்றாலும் கொஞ்சம் இந்தப் பக்கங்கள் வந்து கதைச்சுப்பேசிப் போனீங்க என்றால் மனசுக்கும் கொஞ்சம் நல்லதுதானே.
வாங்கோ...வாங்கோ.

காதலிச்சுப் பாருங்கோ...தாய்மை உணர்வு தானாய் விளங்கும்.

புதியவன் said...

//மீண்டும் ஒருமுறை நான் பிறந்தால்....?
எனக்குள்...நீ...எனக்குள்
எல்லாமுமாய் எப்போதும்.
என்றாலும்
என் ஆசை
நான் உனக்கு அன்னையாய்.//

வெகு அழகான வரிகள்...

Muniappan Pakkangal said...

Nice effortinvolving Rebirth,Love,Motherhood.the content & wordings are beautiful.

ஹேமா said...

வாங்க புதியவன்.இப்பத்தான் இந்தப்பக்கம் வரன்னு வழி தெரிஞ்சிருக்கு.சரி...சரி.இனி அடிக்கடி வாங்க.முதல் வரவுக்கும் காதல் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

நன்றி முனியப்பன் உங்கள் கருத்துக்கு.கருத்துக்களைத் தமிழில் தாங்களேன்.சந்தோஷமாயிருக்கும்.

Vishnu... said...

கவிதை மிக அருமை ஹேமா ...


தாய்மை உணர்வும் காதலும் இணைத்து அருமை ..

வித்யாசமாக சிந்தித்து
இருக்குறீர்கள்
இந்த கவிதையில் ...
இதுபோல கவிதைகள் மீண்டும் எதிர்பார்க்கலாமா நான் ?...

கவிதை மிக அருமை .. வாழ்த்துக்களோடு ....

(தாமதமான பின்னுட்டத்திற்கு வருந்துகிறேன் ..கடந்த நாட்களில் கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது ...)

அன்புடன்
விஷ்ணு

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

//மறுபிறப்பில் நம்பிக்கையில்லை என்றாலும் தொடர்ந்தும் வேண்டப்படுகின்ற அன்பால் மறுபிறப்புக்கூட பரவாயில்லை என்று படுகிறது மனதில்//

ஆம், ஹேமா, நானும் அதையேதான் சொல்கிறேன்.
என் வலைக்கு வந்ததற்கு நன்றி.
இழப்பை ஆற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும்,
கார்த்திக் அம்மா

ஹேமா said...

விஷ்ணு, நன்றி வாழ்த்துக்களுக்கு.
மனதில் சொல்ல நினைப்பதெலாம் கவிதை என்கிற பெயரில் நிச்சயமாய் வரும்.வேலை கூடுதலாக இருந்தாலும் வலைப்பக்கங்கள் வந்து போனீர்கள் என்றால் களைப்புக் கொஞ்சம் குறையும்.

ஹேமா said...

கார்த்திக் அம்மா,நன்றி வந்தமைக்கு.உங்கள் மகன் என்னென்ன ஆசைப்பட்டாரோ அவற்றோடு உங்கள் நேரங்களச் செலவு செய்யுங்கள்.மனதில் சின்ன ஆறுதலும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும் நிச்சயமாய்.

Poornima Saravana kumar said...

//தாயாய் ஆவேன்
உனக்காய் மட்டும்
உன் தாய் நானாய் ஆவேன்!!!
//

டச்சிங்கா இருக்கு :))

Post a Comment