*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Thursday, October 23, 2008

உன் நினைவோடு...

வேலைப்பளு
தலையை அழுத்த
கடமை என்கிற
பூங்கொத்தோடு
எப்போதாவது
தொலைபேசியில் நீ.

கிடைக்கின்ற
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறும்
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்னச் சின்ன
விசாரிப்புக்களை மாத்திரமே
சேர்த்து அள்ளியபடி நான்.

மெல்ல மெல்ல
என்னை விட்டுத்
தூரமாகிறாயோ
என்கிற நினைவிலேயே
அழுதுவிடுகிறேன்.

வருடம் முழுதும்
வரும் ஏதாவது
நினைவு நாட்கள்
தீபாவளி...பொங்கல்
வருடப்பிறப்பு...பிறந்தநாள் என்று
நாட்களை எண்ணி எண்ணி
உற்சாகமாய்
நீ கொண்டாடிய தினங்கள்
நினைவுக்குள் இனிமையாக.

இன்று..
லண்டன்
பிக்பென் கடிகாரத்தோடு
கூட நீயும்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
பசியாறக்கூட நேரம் அற்று.

நானோ
தனிமைகளோடும்
உன் நினைவுகளோடும்
கவிதைகள் என்கிற பெயரில்
எதையாவது கிறுக்கியபடி.

ம்ம்ம்....
கூட ஒரு மணி நேரம்
வேலை செய்தால்
கைச்செலவுக்குத்
தாராளமாய்தான்.

வாழ்வின் கனவுகளோடு
நீ அலுவலகத்திலும்
நான் கனவே வராத
விழிப்போடுமாய்.

கனிகின்ற காலத்தில்
நீயும் நானும் கை சேர
அன்று சேரும்
அத்தனை நாட்களையும்
சந்தோஷ ஊஞ்சலாக்கி
அருகிருந்து
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய்
வாழ்த்திக் கொள்வோம்.

அதுவரை...
எப்போதாவது
தொலைபேசியில்
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறுகின்ற
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்ன சின்ன
அந்த விசாரிப்புக்களோடு
மாத்திரம் தொடரட்டும்
அழகான
நம் காதல்!!!

ஹேமா(சுவிஸ்)

26 comments:

Anonymous said...

அருமையான கவிதை ஹேமா. கவிதையில் உங்கள் மன ஓட்டம் பளிச்சிடுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறி, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலர இந்த அன்பு சகோதரனின் அன்பு வாழ்த்துக்கள் ஹேமா. தீபாவளி வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நன்றி ஆனந்த்.உங்களுக்கும் இனிய தீபாவளியாய் அமையட்டும்.நீங்கள் சொன்னதற்காகவே ஒரு காதல் கவிதை.அதுவும் முழுமையான சந்தோஷமாக இல்லைதானே!

நானும் நிறைய முயற்சி செய்கிறேன் சந்தோஷமாக எதையாவது எழுத.
வரமாட்டேன் என்கிறதே!நான் நினைக்கிறேன்...என் சுற்றுச் சூழலும் என் நாட்டின் வேதனையுமே மனதோடு அழுத்திக் கிடக்கிறது.
அதற்காகக் கவலையோடு இருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை.அன்றாட என் காரியங்கள் கடமைபோல இயல்பாகத்தான்.

thamizhparavai said...

ஹேமா....
இக்கவிதையில் கவிதையைவிடவும் தங்கள் காதல் தெரிகிறது.இதை நீங்கள் உரைநடையாகவே விட்டிருந்தால் நன்றாய் இருக்குமென்பது என் எண்ணம்.(கவிதைன்னு ஒண்ணே ஒண்ணு எழுதிட்டு ஓவராப் பேசுறான்னு' நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது)
இருந்தாலும் தங்களின் சந்தோஷக் கனவுகளுக்கு வாழ்த்துமலர்களால் சாலை அமைக்கிறேன்.

Anonymous said...

வணக்கம் ஹேமா அக்கா,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். கவிதை நல்லா இருக்கு. ஆனா அக்கா உங்களோட கவிதை உங்களை ரொம்ப அழகா என் மனசுக்கு காட்டுது....

தமிழன் said...

உங்கள் காதல் கைகூட வாழ்த்துகள் ஹேமா. திருமணத்திற்கு அழைப்பு உண்டுதானே.மறக்காமல் அனுப்புங்கள்.வாழ்த்துகள் அன்புடன் திலீபன்.

Anonymous said...

கவிதை வெகு அருமை !!

//மெல்ல மெல்ல
என்னை விட்டுத்
தூரமாகிறாயோ
என்கிற நினைவிலேயே
அழுதுவிடுகிறேன்//

நச் வரிகள். தன் தோளில் துயின்ற மழலை வளர வளர விலக்கிச் செல்லும் நிலையை ஒரு தந்தையின் மனம் சொல்வதாய் படுகிறது இந்த வரிகள் !!!

ஹேமா said...

தமிழ்பறவை அண்ணா,மிக மிக நன்றி.இப்படி ஒரு அண்ணா தொலை தூரத்தில் இருக்க நான் கொடுத்து வைக்க வேணும்.நீங்கள் அமைத்த மலர்சாலையிலேயே என் காதலோடு நடந்து கொண்டிருக்கிறேன்.
நன்றி அண்ணா.

இனிக் கவிதை.நீங்கள் சொன்ன கருத்தைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
அதற்காகக் கோவிக்கவில்லை.நல்லது சொல்லும்போது ஏற்றுக் கொள்வது போல இக்கருத்தையும் மனதில் பதித்துக்கொண்டேன்.அதன்பிறகு, சேவியர் அண்ணா தந்த கருத்தைப் பாருங்களேன்.உற்சாகமாகி விட்டேன்.

ஹேமா said...

நன்றி ஜெயா.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கூட என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

நீங்கள் நிறையவே என்னை உற்சாகப் படுத்துகிறீர்கள் ஜெயா.நான் அழகு.நீங்களும் அழகு.எங்கள் மனங்கள் அழகு.எங்கள் தேசம் அழகு.எல்லாமே அழகுதானே!

ஹேமா said...

திலீபன் நீங்கள் இல்லாமலா என் திருமணம்.ஆனால் நீங்கள் கொஞ்சம்(இல்லை கன காலம்)காத்திருக்கவேணுமே!

ஹேமா said...

வணக்கம் சேவியர் அண்ணா.
என்றாவது இருந்துவிட்டுத் தரும் கருத்து என்றாலும் என்னை உற்சாகப் படுத்தும் வழி நடத்தும் கருத்துக்கு நன்றி.

ஹேமா said...

உருப்படாத(வன்)து அணிமா தயவு செய்து உங்கள் மின் அஞ்சல் முகவரியைத் தருகிறீர்களா?உங்கள் பதிவுகளுக்கு என்னால் பின்னூட்டம் போட முடியாமல் இருக்கிறது.மின் அஞ்சலிலாவது பின்னூட்டம் தருகிறேனே!

Anonymous said...

''கனிகின்ற காலத்தில்
நீயும் நானும் கை சேர
அன்று சேரும்
அத்தனை நாட்களையும்
சந்தோஷ ஊஞ்சலாக்கி
அருகிருந்து
உனக்கு நானும்
எனக்கு நீயுமாய்
வாழ்த்திக் கொள்வோம்''.


மனதின் மெளன மொழிகள் உங்கள் கவிதையின் ஊடாக வார்த்தைகளாகியுள்ளன.
உங்கள் எண்ணங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற வாழ்த்துகின்றேன். நம்பிக்கை என்பது வீண் போகாது, காலம் நிச்சயம் ஒரு நாள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்பது வெள்ளிடை மலை. என் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உங்கள் அன்புத் தம்பி........

Unknown said...

இப்படியும் ஓர் காதலா! அருமை சோதரி! பாராட்டுக்கள்.

அப்புச்சி said...

அதுவரை...
எப்போதாவது
தொலைபேசியில்
உன்
ஒரு நிமிடத் துளிகளுக்குள்
சிதறுகின்ற
சில சில வார்த்தைகள்
சிரிப்புக்கள்
சின்ன சின்ன
அந்த விசாரிப்புக்களோடு
மாத்திரம் தொடரட்டும்
அழகான
நம் காதல்!!!
அபாரமான வார்த்தைகளால் கோர்த்துள்ள கவிதை,கவிதையின் முடிவின் வரிகள் மிகவும் நன்றாக உள்ளன.ஒரு சந்தேகம் உங்களின் நீயும் தமிழன் தான் கவிதையை படித்த பின்னர் தான் தமிழ்நாடு விழித்து கொண்டதோ

அன்புடன்
அப்புச்சி

ஹேமா said...

நன்றி கமல்.தீபாவளி கொண்டாடக்கூடிய மனநிலையிலா நாம் இருக்கிறோம்.வாழ்வு இருட்டுக்குள்தானே.இன்னொரு நினைவு நாளும்கூட.தமிழ்செல்வன் அவர்கள் தன் புன்னைகையோடு மறைந்த காலம் அல்லவா தீபாவளி.

ஹேமா said...

என்ன ஈழவன் இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்குள்!எங்கே கன நாளா உங்களைக் காணேல்ல மாதிரி இருக்கு.

ஹேமா said...

நன்றி அப்புச்சி.கவிதையை பொறுமையாக ரசித்திருக்கிறீகள்.

இராமனுக்குப் பாலம் கட்ட அணில் உதவியதுபோல என் கவிதையும் ஒரு சிறு பொறியாக இருந்திருக்குமா!அப்படியாய் இருந்திருந்தால் சந்தோஷமே.

மே. இசக்கிமுத்து said...

சகோதரிக்கு எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!

thamizhparavai said...

ஹேமா ஒரு பதிவு போட்டிருக்கேன்

http://thamizhparavai.blogspot.com/2008/10/blog-post_27.html

உங்களை சினிமா தொடர்பதிவுக்குக் கூப்பிட்டிருக்கேன்..முடிந்தால் தொடரவும்...

தனிமதி.. said...

யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்தேன்..

வாழ்த்துகள் ஹேமா..

thamizhparavai said...

சகோதரி...
என் ஒருவனுக்குத்தான் இக்கவிதை விளங்கவில்லையோ என்னவோ? பாரே பாராட்டுகிறது பறவையைத் தவிர...
நடக்கட்டும் நடக்கட்டும்...

ஹேமா said...

தமிழ்பறவை அண்ணா,கொஞ்சம் பாராட்டும் கொஞ்சம் வயித்தெரிச்சலும் மாதிரி இருக்கே!

thamizhparavai said...

//கொஞ்சம் வயித்தெரிச்சலும் மாதிரி இருக்கே! //
இப்பின்னூட்டம் கூட விளங்க வில்லை...

ஹேமா said...

//இப்பின்னூட்டம் கூட விளங்க வில்லை...//

தமிழ்பறவை அண்ணா!

ஹேமா said...

//யதார்த்தமாக எடுத்து வந்த கவிதையில் நானும் நனைந்தேன்..//

மதி வாங்கோ.அடுத்த கவிதைக்கும் பின்னூட்டம் போட வரவேணும்.
கவனம்.வாழ்த்துக்கும் நன்றி.

ஹேமா said...

வாங்கோ இசக்கி முத்து.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.தீபாவளி கொண்டாடக் கூடிய மன்நிலை இல்லாவிட்டாலும் அந்த நாளை மனதுக்குள் நினத்துக்கொண்டேன்.நன்றி.

Post a Comment