*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, September 06, 2008

நினைவுக்குள் ஒரு நிழல்...

கணணி காவி வந்தது
"கனவில் எப்போதும் நீ மட்டுமே"
என்கிற வரிகளை.
யார் நீ எங்கிருக்கிறாய்.
எப்படி எனக்குள் இத்தனை ஆழமாக.

அதிசயம்தான் பிரியமானவனே!
உன்னை அறியவில்லை நான்.
கனவின் காடு தாண்டிய
ஒரு தொங்கலில் என்கூடு.
காலச்சக்கரம் ஓடிய திசையின்
வேகத்தில் சந்தித்ததாய்
ஒரு ஞாபகம்.
பின்னர்
ம்ம்ம்....
இல்லவே இல்லை.

என்றாலும்
சில சமயங்களில்
நக இடுக்குச் சறுக்குகளிலும்
நினைவு மேட்டு
வழுக்கல்களிலும்
விழுந்து எழும்பும்போது
முட்டி மோதிப் போவாய் நீயும்.

கவனிப்பார் அற்ற குடிசையில்
கிடக்கும் சிம்னி விளக்கிற்குள்,
அழுது களைத்த குழந்தையை
ஆசுவாசப்படுத்த
இரங்கிய தாயின் முலைக்குள்,
பருவ வயதில் திணறித்
திக்குமுக்காடும்
பருவங்களுக்குள்
உன்னைக் கண்டதாய் ஞாபகங்கள்.

சொல்லிக் கொள்ளாமலேயே
கதவு தட்டும் விருந்தாளியாய்
வந்து விரட்டும் உன் நினைவுகள்.
ஏன் என்று கேட்காமலேயே
வரவேற்றும் கொள்கிறேன்.

என்றாலும்...
வாழ்வுச் சகதிக்குள்
அமிழ்ந்து போகாமல்
காத்துக் கிடக்கிறேன்
உன்னைக் காண.
யார் நீ எங்கிருக்கிறாய்
ஏன் எனக்குள்
இத்தனை ஆழமாக!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

Unknown said...

நினைவுப் பங்கீடு அருமை, பாராட்டுக்கள் ஹேமா.

Anonymous said...

எப்போதும் சோகத்தையே கவிதையாக்கி மற்றவர்களை உருக வைக்கிறீர்களே ஹேமா, கொஞ்சம் சந்தோஷமான நிகழ்வுகளையும் கவிதை மாலையாக்கி மகிழலாமே....

Anonymous said...

7 Sep 08, 02:42
ஹாய் ஹேமா... நலமா? உங்களது " சலிப்பு " மிக அருமை.. மனம் தொட்டு சொல்கிறேன் உங்கள் கவிதை என் எண்ணங்களின் கவிதை பிரதிபலிப்பாக இருக்கிறது..உங்களை சந்திக்க மனம் விழைகிறது...Simply Superb Hema...மது.

ஹேமா said...

//நினைவுப் பங்கீடு அருமை, பாராட்டுக்கள் ஹேமா.//
நன்றி களத்துமேடு.நினைவின் பங்கீடுகள் என்றுமே மறக்க முடியாதவைதானே!

ஹேமா said...

நன்றி கடையம் ஆனந்த்.மனதை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தே சில சமங்களில் சந்தோசப் பந்தியில் இருத்தி வைக்கிறேன்.மற்றும்படி மனம் முடியவே இல்லை.என்னதான் செய்ய நான்?

ஹேமா said...

மது.சுகம்தானே!உங்கள் எண்ணங்கள் என் எண்ணங்களுக்குள் பிரதிபலிப்பதையிட்டு மனம் சந்தோஷப் படுகிறது.ஒருவேளை எங்கள் இருவரது சிந்தனைகளும் ஒன்றாக இருக்குமோ!
நிச்சயம் சந்திப்போம் ஒருநாள்.

NILAMUKILAN said...

நினைவுகளும் கனவுகளும் நம்மை கேட்காமல் நமக்குள் ஒரு நிழலாய் புகுந்து கொள்(ல்) வது உண்மை. அதனை வெளிப்படுத்த கவிதையே எளிய வழி. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

தமிழன் said...

என்ன என் மறுமொழி இடம்பெறவில்லை.

ஹேமா said...

ஒன்று மட்டுமே இருந்தது திலீபன்.
நான் தவற விட்டு விட்டேனா?

ஹேமா said...

முகிலன்,மனதின் சில உணர்வுகளுக்கு கவிதை நல்ல ஒரு வடிகால்.நன்றி.

Post a Comment