*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, August 13, 2008

ஒற்றையடிப்பாதையும் நானும்...

அதே ஒற்றையடிப் பாதை.

நானும் கலாவும் படக்கதையெல்லாம்
கதைத்துக் கதைத்துப்
பனம் பழம் பொறுக்கிச் சேர்த்த
பனங் கூடல்
அதே ஒற்றையடிப் பாதை.

வேப்பம்பழம் பொறுக்கிச் சூப்பித் துப்பிய
அதே ஒற்றையடிப் பாதை.
நெருஞ்சி முட்களை விலக்கி
இலந்தைப் பழம் பொறுக்கிச் சாப்பிட்ட
அதே ஒற்றையடிப் பாதை.

காக்காக் கூடும் குயிலின் கூவலுமாய்
குதூகலித்திருந்த அதே ஒற்றையடிப் பாதை.

முல்லைக் கொடியும்
பாம்புப் புற்றுமாய் படர்ந்திருக்க
தாத்தாவுக்காய்
கந்தன் இறக்கி வைத்த கள்ளைச்
சுவை பார்த்துச் சுள்ளித் தடியால்
குண்டி வீங்க அடி வாங்கிய
அதே ஒற்றையடிப் பாதை.

வருடம் இருபதைக் கடந்து
கால் வைக்கிறேன் என் மண்ணில்.
தேடி ஓடுகிறேன் ஆசையாய்
அதே ஒற்றையடிப் பாதைக்கு.

சிதைந்து கிடக்கிறது அது.
என்னில் கோபமோ என்னவோ
நெருஞ்சி முள்ளால்
மூடிக்கொண்டு தன் இடத்தில்
தடம் பதிக்க விடமாட்டேன் என்றபடி.
என்றாலும் செருப்போடு
அடம் பிடித்து தடம் பதித்து
நடக்கிறேன் நானும்.

நான் பழம் தின்று துப்பி முளைத்த வேம்பு
சரிந்து கிடக்க மனதின் சுமையோடு
கடந்து நடக்கிறேன்.
யாரோ கூப்பிடு குரலில் அசைகிறேன்.

கலாவின் வீடும் கலைந்தே கிடக்கிறது.
லெப்டினன் கலை வீரமரணம்.
அது கலாதான்.
மற்ற மகளோடு பிரான்சில் அவள் அம்மா.

யார் அது...என் பெயர் சொல்லி
அந்த வேம்பு அது.
கண்ணீர் கசியக் கதைத்தது வேம்பு.
நீதான் போவது போய்விட்டாய்
காக்கை எச்சத்தில்
எங்காவது முளைத்திருக்கும்
இரண்டு வேப்பங் கன்றுகள் எடுத்து வா.

என் தலைமுறை தளைக்க
என் இடம் பதித்து வாழ
இங்கு ஊன்றிப் போ என்றது
முகத்தில் அடித்தாற் போல்.

சொன்னதைச் செய்தேன் மௌனமாய்.
அதே ஒற்றையடிப் பாதை
பரிகாசமாய்ப் பார்த்துச்
சிரித்தது என்னை!!!

ஹேமா(சுவிஸ்)

14 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

ஒரு ஒற்றையடிப்பாதையில் பல விடயங்களை நினைவுக்குள் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

அருமையாக இருக்கிறது.

NILAMUKILAN said...

முகவரியை தொலைத்து விட்ட உணர்வின் வலி என்னை தாக்கியது.
எனினும்
/இரண்டு வேப்பங் கன்றுகள் எடுத்து வா.
என் தலைமுறை தளைக்க
என் இடம் பதித்து வாழ
இங்கு ஊன்றிப் போ என்றது/

என்ற வரிகளுடன்.. கவிதை முடிந்திருந்தால்.. இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் கவிதை..இது எனது தாழ்மையான கருத்து...

Unknown said...

//நீதான் போவது போய்விட்டாய்
காக்கை எச்சத்தில்
எங்காவது முளைத்திருக்கும்
இரண்டு வேப்பங் கன்றுகள் எடுத்து வா.
என் தலைமுறை தளைக்க
என் இடம் பதித்து வாழ//

ஈழத்தில் மரங்களுக்காவது தலைமுறை கிடைக்கட்டுமே!

ஹேமா said...

நன்றி நிர்ஷன்.நினைவுகளோடுதானே வாழ்வை விரட்டிக்கொண்டிருக்கிறோம்.

ஹேமா said...

வாங்க முகிலன்,

//அதே ஒற்றையடிப் பாதை
பரிகாசமாய்ப் பார்த்துச்
சிரித்தது என்னை!!!//

இந்த வரிகள் தேவையாய்ப் பட்டது எனக்கு.நாங்களாவது இங்கு தலைமுறையோடு வாழ்ந்துகொள்கிறோம் என்று என்னோடு நித்தம் பழகிய அந்த ஒற்றையடிப்பாதை கூட பரிகாசம் பண்ணுவது போல...

ஹேமா said...

வணக்கம் களத்துமேடு.
உண்மைதான்,நாங்கள்தான் அகதிகளாத் திரிகிறோம்.மரங்களாவது தலைமுறை ஊன்றி வாழட்டுமே.
நாங்கள் போகிற சமயத்திலாவது மரங்களை நட்டு வரவேணும்.

ers said...

நான் பழம் தின்று துப்பிய வேம்பு
சரிந்து கிடக்க மனதின் சுமையோடு
கடந்து நடக்கிறேன்.

ஈழம் குறித்த கவிதைகளை படிக்கும் போது இனம் புரியாத நெருடல்கள். மனம் கனத்து போகின்ற அளவிற்கு உங்களின் கவிதை இதயம் வருடியது.

மரங்களுக்கு பதிலாய் எத்தனை கன்றுகள் வேண்டுமானாலும் நடலாம் ஹேமா... ஆனால் இந்த ரணங்களுக்கு வித்தும் கிடையாது... விதையும் கிடையாது...

என்றும் அன்புடன்
மோகன்

Anonymous said...

ஹாய் ஹேமா... நலமா? உங்கள் கவிதைகளை வாசிக்கிற பொழுது நீங்கள் உணர்ந்ததை உணர முடிகிறது..."ஒற்றையடிப் பாதையும் நானும்" நமது கலைந்து போன நினைவுகளை மீட்டு தருகின்றது...இப்பணி தொடர வாழ்த்துக்கள். மது

ஹேமா said...

வணக்கம் மோகன்(தமிழ்சினிமா)வரவுக்கும் கருத்துக்கும் நிறைந்த நன்றி.எங்கள் ரணங்களுக்கு நாங்களேதான் ஆறுதல் தேடிக்கொள்ள வேணும்.நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் ரணங்கள்
ஆறும் என்று.

ஹேமா said...

நன்றி மது.ஒற்றையடிப்பாதையும் நானும்....அது கலைந்துபோனாலும் மனதில் கலையாத நினைவுகள் மது.சில கவிதைகளை எழுதி முடித்துப் பார்க்கும் போது நானே அழுதுவிடுவேன்.
அதிலொரு கவிதை இது.

Anonymous said...

Hi Hema manathirkul padamaakak kaadsikalaik kondu vanthu azha vaithu viddirkal.eppadiththan ungkal kanavukalodu vaazhkiriikal.ninaikkave kasdamaa irukku.vaazhthukkal Hema.Ram.

ஹேமா said...

வாங்க ராம்.கனவுகள் மட்டுமே வாழ்க்கை என்றகிவிட்டது.பார்க்கலாம்.

thamizhparavai said...

//நீதான் போவது போய்விட்டாய்
காக்கை எச்சத்தில்
எங்காவது முளைத்திருக்கும்
இரண்டு வேப்பங் கன்றுகள் எடுத்து வா.
என் தலைமுறை தளைக்க
என் இடம் பதித்து வாழ
இங்கு ஊன்றிப் போ என்றது
முகத்தில் அடித்தாற் போல்.


சொன்னதைச் செய்தேன் மௌனமாய்.
அதே ஒற்றையடிப் பாதை
பரிகாசமாய்ப் பார்த்துச்
சிரித்தது என்னை!!!//
நெத்தியடி...அருமையான கவிதை....
ஒத்தையடிப்பாதையில் நடக்கையில் குத்திவிடும் முட்களாய்ப் பழைய நினைவுகள். வலித்தாலும் சுகமே...ரணமும் வரமே...
//கந்தன் இறக்கி வைத்த கள்ளைச்
சுவை பார்த்துச் சுள்ளித் தடியால்
// கள்ளு எல்லாம் அடிச்சிருக்கீங்களா ஹேமா...? தூள்...

ஹேமா said...

நன்றி தமிழ்ப்பறவை அண்ணா.காத்திருந்து எல்லாக் கவிதைகளுக்கும் கருத்துக்களும் ஊக்கமும் தந்திருக்கிறீர்கள்.
ஒவ்வொன்றாகப் பார்த்து பதில் தருவேன்,கொஞ்சம் வேலைப் பளு.

இந்தக் கவிதை என் மன உணர்வுகளின் வலி.உண்மையில் அந்த வேப்பமரமும் ஒற்றையடிப் பாதையும் என்னுடன் பேசினால் இப்படித்தான் பேசியிருக்கும்.
கேலி பண்ணியிருக்குமோ!

கள்ளு...ம்ம்ம்.நல்லா அடி வாங்கினேன்.

Post a Comment