*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Wednesday, June 18, 2008

பட்டினிச் சாபம்...

பசி...பட்டினி
இறப்பு...இடப்பெயர்வு
அகதி...அனாதை
நிலம்...புலம்
இதைப்பற்றிய அக்கறை ஏதுமற்று,
எம் அரசியல்
நகர்வுகளும் பேச்சுக்களும்
அவர்களது அதிகாரம் பற்றியும்,
நீயா நானா என்பதிலும்,
விட்டுக்கொடாமையிலும்,
யுத்தத்தைச் சொல்லிச் சொல்லியே
அயல் நாடுகள் முழுதும்
பிச்சை எடுப்பது பற்றியும்,
இன ஒழிப்பிற்காய்
ஆயுதங்கள் வாங்கிக் குவித்திட
நிதி ஒதுக்கீடு பற்றிய
திட்டங்களிலுமாய்.

வேடன் வலையில்
சிக்கிய புறாக்களாய் மக்கள்
விடுவிப்பார் யார் என்கிற தவிப்பில்.
அரசியல் அரக்கர்கள் ஒரு பக்கமும்
பசி அரக்கன் மறு பக்கமுமாய்.
கேட்பார் அற்ற வீதியில்
அலறும் தத்துவப் பாடலாய்
தமிழரின் அழுகுரல்கள்.

வீராப்பையும் விரோதத்தையும்
அக்கிரமத்தையும் அநியாயத்தையும்
மனதில் நிறைத்துக்கொண்டு,
தம் தப்பை மறைக்க
தாமரைப் பூ வைத்து
புத்தரை முட்டுக்காலில்
ஆராதிக்கும் அரக்கரை,
பட்டினிப் பிடிக்குள் சிக்கி
சொட்டுச் சொட்டாய்
உயிர் விடுகின்ற உயிர்களில்
ஒரு உயிராவது
உரத்து
பசியின் வலி சொல்லி
பசியின் கொடுமை சொல்லி
இரக்கமாய்
அவர்கள் நெஞ்சைத் தொட்டு
மெதுவாய்
மனக் கதவைத்
தட்டித் திறந்து செல்லுமா!!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

தமிழ் said...

/பசி...பட்டினி
இறப்பு...இடப்பெயர்வு
அகதி...அனாதை
நிலம்...புலம்
இதைப்பற்றிய அக்கறை ஏதுமற்று,
எம் அரசியல்
நகர்வுகளும் பேச்சுக்களும்
அவர்களது அதிகாரம் பற்றியும்,
நீயா நானா என்பதிலும்,
விட்டுக்கொடாமையிலும்,
யுத்தத்தைச் சொல்லிச் சொல்லியே
அயல் நாடுகள் முழுதும்
பிச்சை எடுப்பது பற்றியும்,
இன ஒழிப்பிற்காய்
ஆயுதங்கள் வாங்கிக் குவித்திட
நிதி ஒதுக்கீடு பற்றிய
திட்டங்களிலுமாய்./

உண்மைதான்

தாங்கள்
நலமா

தமிழன்-கறுப்பி... said...

கவிதை நன்று தோழி
இந்தப்படம் வேண்டாமே பார்க்க முடிவதில்லை எனக்கு...

ஹேமா said...

வணக்கம் தமிழன் உங்கள் வருகைக்கு.என்ன செய்வது தமிழன்.எஙகள் தலை விதி இப்படித்தானே இருக்கு.எனக்கு மட்டும் பிடித்தா இப்படியான படங்களைப் போடுகிறேன்.உண்மை நிலை இதுதானே.அடுத்த நாட்டவர்களும் புரிந்து கொள்ளட்டுமே!!!

Post a Comment