*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Friday, April 18, 2008

இனியும் காத்திருப்போமா...

வறுமை...வறுமை
எங்கும் வறுமையின் ஓலம்.
மனித மனங்களில் வெறுமை.
வெட்ட வெளி வெறுமை.
தட்டுப்பாடு.
அன்பையே காணோம்.
என் இனிய நண்பனே...
ஒளிவில்லா ஒரு துளி
உண்மை அன்பு தெளிப்பாயா?
வாழ்கிறதா உனக்குள்?
வேராய் இருந்தால் அல்லவோ
மரமாய் நிழல் தர முடியும் உன்னால்
உன் மனக்கிண்ணத்தில்
எங்காவது...ஒரு துளியாய்
அன்பு என்கிற ஒரு பதார்த்தம்
ஒட்டி வாழ்கிறதா பார்.
பகிர்ந்து பசி தீர்ப்பாயா.
அன்பிற்காய் ஆணியில்
அறைபட்டவரை அறிவாயா.
ஆணியும் அறைதலும்
தேவையற்றது உனக்கு.
இருக்கும் அன்பை
அன்பிற்காய் ஏங்கும்
ஏழைக்குக் கொடுத்துப் பார்.
உலகின் உன்னதத்தையே
ஒரு துளி உன் அன்பால்
கண்டு களிப்பான்.
நன்றியாய் உன் நினைவோடு
காத்துக்கிடப்பான் காலடியில்.
கொடுத்தது கிடைக்காவிட்டாலும்
கோலப் புன்னகையாய் வாழ்வு
பூத்து மலரும்..மனமும் கூட.
நண்பனே,
கள்ளமில்லா வெள்ளை உள்ளத்தால்
அன்பை அள்ளிக்கொடு.
அன்பை அசிங்கமாக்காதே.
வேஷத்தோடு பசப்பி
பொய்யாய் வாழாதே.
பண்டமாற்றல்ல அன்பு.
அள்ள அள்ள நிரம்பியேயிருந்தது
அட்சயபாத்திரம்
தனக்கு மீறிய அன்பினாலதான்.
கர்ணனும் கொடை வள்ளளாகினான்.
நெஞ்சத்தில் அன்பு ஊற்று
உடைத்து ஓடினால்
அள்ளிக் கொடுப்பது...
அதுபெரும் அதிசயமில்லையே.
என் இனிய நண்பனே,
அன்பால் நிரம்பியிரு.
மலர்ந்த உன் முகம்
காணப் பசி பறக்கும்.
வறுமை வெறுத்தோடும்.
உனது...உனதென்று
சிறு முட்டைக்குள்
கோட்டை கட்டி குடியிருக்காதே.
முட்டை உடைத்து வெளி வா.
ஒரு துளி அன்பு தா.
வானத்திற்கும் பூமிக்குமாய்
அன்பின் பேரொளி காண்பாய்.
நண்பனே ஒரு துளி...
ஒரே ஒரு துளி...
உண்மை அன்புப் பிச்சை இடு.
நன்றியோடு அண்ணாந்து பார்க்கின்றார்
வறியோர் உன்னை.
இருளுக்குள் உருளாதே.
மலர்ந்த மனம் கொண்டு
அன்பைப் பகிர்ந்து கொடு.
அனுபவப் புண் நோக
அன்புப் பசியின் கொடுமை
அனுபவிப்பவள் நான்.
இன்னும் காத்திருக்கிறேன்.
இனியும் காத்திருப்போமா
பக்தராய்...
அன்பு நிறை பசி போக்கும்
இறைவனுக்காய் !!!

ஹேமா(சுவிஸ்)16.01.2001

1 comment:

விச்சு said...

இனியும் காத்திருப்போமா
பக்தராய்...
அன்பு நிறை பசி போக்கும்
இறைவனுக்காய் !!!
காதல் இறைபக்தர்..

Post a Comment