*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை!!!!!*****

Saturday, August 30, 2008

நீயும் தமிழன்தான்...

நீயும் தமிழன்தான்
நீ... என் சகோதரன்
நீ... என் உறவு
நீ... என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்...

நீ...ஒரு இந்தியன்!!!

நீ...உன்
நாட்டிலேயே
நிராகரிக்கப் பட்டிருக்கிறாயா...
உன் உயிர் காக்க
ஓடி ஒழிந்திருக்கிறாயா
அநுபவித்திருக்கிறாயா...
அகதி வாழ்வு.
இரத்தமும் சதையும்
தந்த பெற்ற தெய்வங்கள்
கண் முன்னே
இரத்தமாய் சதையாய்
சிதறிக் கிடந்தும்
இறுதிக் கிரியைகள்
செய்யக் கூட
கையாலாகாதவனாகி
உன் உயிர் காத்து
ஓடி ஒளித்திருக்கிறாயா!!!

சிதறிய உடல்களைக்
கிண்டிக் கிளறி
அப்பாடி.....
எவருமில்லை
என் வீட்டில் என்று
நின்மதிப் பெருமூச்சு
விட்டிருக்கிறாயா!!!

இறந்து கிடக்கும்
தாயின் உணர்வறியாப்
பச்சைக் குழந்தை
முலை பிடித்துப்
பால் குடிக்கும்
பரிதாபம்
பார்த்திருக்கிறாயா!!!

சொட்டு அசைந்தாலும்
"பட்"என்று
உன் தலையிலும் வெடி
விழுமென்று
இரத்த வெள்ளத்துள்
பிணத்தோடு பிணமாக
பாதி இரவு வரை
படுத்திருக்கிறாயா!!!

உயிரோடு புதைகுழிக்குள்...
கழுத்தில்லா முண்டங்கள்...
காணாமல் போனவர்கள்...
கற்பையும் பறித்துக் கொண்டு
கருவறைக்குள்ளும்
குண்டு வைத்துச்
சிதறடிக்க விட்டவர்கள்...
ஐயோ ஐயோ...
எத்தனை எத்தனை
கொடிய நச்சு விலங்குகள்
நடுவில் நாங்கள்
அகப்பட்டிருக்கும்
வேதனை அறிவாயா நீ!!!

இலங்கைத் தீவில்
தமிழனாய்ப் பிறந்த
பாவம் தவிர......
தவறு வேறொன்றும்
செய்யவேயில்லையே!!!

ம்ம்ம்.....
கேட்டு உணர்வதை விட
பட்டு உணர்வதே மேல்.
இருந்தும்...
புரிந்துகொள்
இனியாவது என்னை...
உன் தமிழ் சகோதரர்
நிலைமை அறிந்துகொள்.

நீயும் தமிழன்தான்
நீ...என் சகோதரன்
நீ...என் உறவு
நீ...என் இனம்
நீயும் தமிழன்தான்
என்றாலும்....

நீ ஒரு இந்தியன்!!!

ஹேமா(சுவிஸ்)18.01.2007

Friday, August 29, 2008

மனிதனா இவன்?

ஒரு முறை...ஒரே ஒரு முறை


நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி.
தவறவிட்ட
எத்தனையோ ஆசைகள்
தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்.

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்.
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா.

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்.
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்.

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்.
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி.

சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்.
இருந்தும்...
சுயநலமில்லா உறவு
உங்களுக்காய் காத்திருக்கிறேன்.
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்.

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை...
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே.
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, August 26, 2008

திருமலை அதிர்வு...

இப்போ...இப்போ
ஒரு நொடிக்குள்
இரத்தம் உறைந்து நீராய்.

பெற்றவர் குரலோடு
இணைந்திருக்க
அவலக் குரல்களும்
வெடிச்சத்தமும்
வானூர்தியின் இரைச்சலும்
நாய்களின் குரைப்பும்
கைபேசியில் தெளிவாய்
மிக மிகத் தெளிவாய்.

"அப்பா வாங்கோ...
அம்மா லைட்டை நிப்பாட்டுங்கோ...
உள்ளுக்கு வாங்கோ...
பின் வேலி கேட்டைத் திற...
ஓடு..ஓடு...
புரியவில்லை
ஏன் எதற்குப் புரியவில்லை
அழுகிறேன் .
தவிர தெரியவில்லை எனக்கு.
திரும்பத் தொடர்பு தரவில்லை.

சுவிஸில் தம்பிக்கும்
ஜேர்மன் தங்கைக்கும் சொல்லிவிட்டு
அழுது கொண்டிருக்கிறேன்
கையாலாகதவளாய்.
என்ன நடந்திருக்கும்.
யாருக்கு என்ன ஆகியிருக்கும்.
ஐயோ...ஐயோ...

திசைகளின் நோக்கம் அரசியல்.
முடியுமோ முடியாதோ
பெரிய பாறாங்கற்களை
விரும்பியபடி
எங்கும் எதிலும்
தூக்க முடிந்த பாரம் தூக்கி
எறியப்படுகிறது.
ஆயுதங்களால்
பாறாங்கற்களைப் புரட்டி
பற்றைக் காடுகளை
வெட்டிப் புற்தரையாக்கி
பசுமையாக்கி
வா பந்தாடுவோம் என்றாலும்
வர மறுக்கும்
வன்மைப் புரட்சியாளர்கள்.

அழிவோம்
ஆனாலும் விட்டுக்கொடோம்
ஆணவ அதிகாரங்கள்.
எறிகின்ற கற்களுக்குள்
புதைபட்டு
ஆயுளை விடுவது
அற்பப் பதர்களே.

வயோதிபம் தள்ளாட
தானுண்டு தன் மருந்துண்டு
உயிர் போகும் வயதினில்
நின்மதியாய் மூச்சைவிட்டு
மூச்சைவிட
கொஞ்சம் விடுங்களேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, August 25, 2008

நிழல்...

தொலைத்துவிடுவேன் உன்னை.

ஏன் பின் தொடருகிறாய்?

ஐயோ....

முடியவும் இல்லையே.

உபத்திரவமே தவிர

உதவி எதுவுமே இல்லை

உன்னால்.

உன்னைப் பார்த்தே

அலறியிருக்கிறேன்

சில சமயங்களில்

நான்.

துன்பம்தான் நீ

எனக்கு.

காதலனாய்

கட்டிக்கொள்கிறாயா!

சிநேகிதியாய்

சேர்ந்து சிரிக்கிறாயா!

தோழனாய்

தோள் தருகிறாயா!

சகோதரியாய்

சோர்வு தீர்க்கிறாயா!

அம்மாவாய் அப்பாவாய்

அணைத்துக் கொள்கிறாயா!

மனப்பாரம் குறைத்தால்

ஆறுதல்

சொல்லியிருக்கிறாயா!

எப்போதாவது...எப்போதாவது.

பிறகு எதற்கு

நீ...என்

பின்னால்.

தொல்லைதான்

உன்னால்.

என் தனிமை...

இரகசியம்...திருட்டு

எதிலும் பங்கெடுக்கிறாய்.

வேண்டாம் நீ...

எனக்கு போய்விடு.

இருளில்தானே

துணை தேவை.

அவ்வேளை

நீ இல்லை.

ஒளிந்து கொள்கிறாய்.

பகலில் மாத்திரம்

முன்னாய்...பின்னாய்

இடமாய்...வலமாய்

ஐயோ எதற்கு நீ.

தொலைந்து போ.

பிரயோசனம் இல்லாத

பிசாசு நீ.

ஓ....

சுலபம் இல்லையோ

நீ விலகுவது.

நீ விலகினால்....

நானும் இல்லையோ

கடவுளே!!!!!!



ஹேமா(சுவிஸ்)03.06.2007

Sunday, August 24, 2008

கானல்...