
அன்பு....
தூரத்தே தொங்கும்
திராட்சைப்பழமாகிவிட்டது
சிலசமயம்.....
அடிநாதம் வாய்விட்டலறும்
ஆனாலும் கேட்பாரில்லை
சிலர் அதை......
அழகான இசையெனவும்
வர்ணிக்கிறார்கள்
வாய்விட்டுச் சிரித்து
நாளாயிற்று
என்னைப் புறக்கணித்தோர்
நான் சிரித்த இடங்களிலேயே
ஒப்பாரி வைக்கிறார்கள்
சில நேரம்.....
நான் அழுத
மலைப்பாறைகளின் கீழே
சில்லறையாய்க்
கொட்டி வைக்கிறார்கள்
சிரிப்புக்களை
என்னை......
அவன் ரசித்த கணங்கள்
கானகக் கிளைகளில்
தொங்கும் வௌவால்களாய்
ஏன்...
என்மீது இன்னும்
இடிவிழாமல்
அப்படியாவது
எட்டிப் பார்க்காமலா
போவார்கள்
அவனும்
கூட வரலாமென்ற
நப்பாசை எனக்கும்
வந்தால்.....
இருளில் ஒளி கிடைத்த
அதிசயத்தோடு வியக்கும்
என் விழிகள்
கோபமாய் வந்த வார்த்தைகளை
அளக்கத் தெரிந்த அவனுக்கு
என் அடிமன அன்பின்
அளவு தெரியாமல் போனதெப்படி
காற்றில்லா பூமியில்
வண்ணத்துப்பூச்சி இறகசைக்கும்
காற்றுப் போதும்
நாம் சுவாசிக்க
வா..............
நீயும் நானும் வாழ!!!
ஹேமா(சுவிஸ்)
| Tweet | ||||








