கொஞ்சம் நீ...
அருகே வருவாயா
நான் உன் குழந்தையாகி
உன் மடியில் தவழ்ந்திருக்க!
உன்னை நான்
கருச்சுமந்த நாட்களை
கண்ணீர் ஊறிய
கடந்துவிட்ட கனவான நினைவுகளை
தனித்து விடப்பட்ட
வெறுமையான நாட்களை
கதை கதையாய் சொல்லி அழுவேன்
என் தலை தடவி ஆறுதல் தருவாயா!
ஆண்டவன் எல்லாம்
நிறைவாய் தந்திருந்தும்
நீ...உன் தம்பி...உன் அப்பா
என்ற அழகிய கூடு இருந்தும்
எதுவுமே இல்லாமல்
யாருமே இல்லாமல்
உலகத்து உரிமைகள் எல்லாம்
எனக்கு மட்டும்
இல்லையென்றானது போல்
இதயத்தில் இரத்தமொழுக
என்னையே நான் நொந்து வெறுத்த
வேளையைச் சொல்கிறேன் கேட்பாயா!
நம் நாட்டுக் கலவரத்தைக்
காரணம் காட்டி
ஈரேழு வருடங்களுக்கு முன்
உன் அப்பாவை
என் வாழ்க்கையை
ஆர்ப்பரித்த என் ஆசைகளை
எனக்கேயான அந்த இனிய நாட்களை
வீசிய வசந்தத்தை
காலன் கவர்ந்து கொண்டதை
வகை வகையாய் பிரித்து
படம் பார்க்கும் உணர்வோடு காட்டுகிறேன்.
குழந்தை சொல்லும் கதையாக
கொஞ்சம் நீ...கேட்பாயா!
கனவில்தான் காண்கின்றேன்
கண்மணியே உன்னை
கருச்சுமந்து பெற்றெடுத்த
நினைவு மாத்திரமே எனக்குள்.
தாங்கிய வயிற்றைத்
தொட்டுத் தடவிப்பார்த்தே
உண்மையென்று உணர்ந்துகொள்கிறேன்.
பால் குடித்து என் மடி தவழ்ந்த பருவத்திலே
உன்னை விட்டு வந்தேன்
வெளிநாடு ஒன்று தேடி!
நாட்களோடு நீயும் ஓடி
தாவணிப் பருவம் தாண்டி
இன்று நீ புகுந்த வீடும்
போகத் தயாராகிவிட்டாய்.
நடுக்ககடலின் தத்தளிப்பில்
தாவிப்பிடித்த துடுப்படி நீ எனக்கு.
ஜீவனே...என் உயிரே...என் மகளே
உன் துணையின் கைகளுக்குள்
சொந்தமாகிப் போகுமுன்!
நீ...கொஞ்சம்
உன் மடியைத் தருவாயா
ஒரு குழந்தையாய் உன் மடியில்
நான் அணைந்திருக்க!!!
ஹேமா(சுவிஸ்)
Tweet | ||||