Thursday, July 31, 2014

ஜூலை 30...

ஓ...
வருடங்கள் எண்ணவில்லை
எண்ணத்தில் நீயிருப்பதால்.

கடக்கிறது இன்றைய
ஜூலை 30 ம்
நீ...விட்டு விட்டுப்போன
இடத்திலேயே
அப்படியே
இன்றும் நான் .

சாத்தான்களின் கனவுகளில்
வண்ண இறக்கைகளோடு
நான் வருவதாகவும்
தங்கள் இறகுகளைப்
பறிப்பதாகவும்
பறித்து
நிறம் மாற்றுவதாகவும்
குற்றம் சொல்கிறார்கள்.

எனக்கோ உறங்குகையில்
நீ விட்டுப்போன இறகும்
பறித்துப்போன இறகும்
வர வர
வண்ணமிழந்தபடி
பிறப்பின் கடனில்
இன்னொரு இறகும்
வளர்ந்தபடி.

ஒவ்வொரு விடியலிலும்
என் பல்கனி
கண்ணாடி தொட்டுப்போகும்
நீலநிறப் பொன்வண்டின்
எதார்த்தம்
சாத்தான்களைத்
துளைக்குமென்கிறேன்.

நீ.....
என்ன சொல்கிறாய் ?

அடுத்த 30 ஜூலையில்
சந்திக்கும்வரை
வண்ணத்தமிழ்
வணக்கங்கங்கள் கூறி....!!!

ஹேமா(சுவிஸ்)

நிமித்தமான இரங்கற்பா...

ஒரு மாறுதலுக்காக
யசோதரைகளுக்கு
முள்கிரீடம் அணிய
உத்தரவிடுகிறார்கள்
சித்தார்த்தன்கள்.

போதிமரங்களுக்குப் பதிலாக
சிலுவைகளை நிலைநிறுத்தி
ஆணிகளும்
அங்கே ஆயத்தமாய்.

நீதியும்
மறுதலிப்பும்
தண்டனையும்
மறுபரிசீலனையற்றே
சிவனின்
இறுக்கிய குரல்வளைகளில்
நீலம்பாரிக்க...

சித்தார்த்தனின் கருணை
பலிக்கான ஆயுதங்களுக்காக
தேர்வெழுதுகிறது
அடிக்கடி
காலாவதியான
திகதிகளில்...

இரக்கம் கேட்டவர்களுக்கு
இரத்தம் கொடுத்து
தற்காலிகமாய்
தள்ளிப்போடுகிறார்கள்
புத்தனாகாமல்
16 முதல் 30 வயதான
விடலைச் சித்தார்த்தன்கள்!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, July 27, 2014

முகவரியில்லாப் புழுதிகள் ...

எனதான முகவரி
என்னிடமில்லை இப்போ
ஒரு முடக்கில்
வைரவர் கோயில் பின்புறத்தில்
என் வீடென ஞாபகம்.

நான் அளைந்த புழுதிகளையும்
கூழாங்கற்கள் நிறைந்த
சிரட்டையையும்
தாத்தா அம்மம்மாவின்
புகைப்படங்களையும்
றங்குப்பெட்டியில்
சேர்த்துவைத்திருக்கும் அது.

ஒவ்வொரு சந்தியிலும் தரித்து
பயணிக்கிறது என் கால்கள்
கை நீட்டி அழைக்கும்
உறவுகளுக்குள்
என் கண்களை
தேடி அலைந்தாலும்
எதுவும் எனதாயில்லை.

பரவாயில்லையென
தொடரும் பயணத்தில்
சந்திகள்
பழக்கபட்டதாயில்லாமல்
கிளைகள் விட்டு
வலம்சுழிவிட்டும்
குச்சு வேலிகளில்
பொட்டு விட்டும்.

வானங்களுக்குள்
தவறவிட்ட
சிறு சிறகுகளுக்காய்
என் தேடல்கள்
நனையும் கண்களை
காயவைத்தபடி.

பற்றி எரியும் என் மனம்
குரங்கு வம்சமாய்
காற்றை
எரித்தபடி
முடியாத தேடல்களோடு
சந்திகளில் மட்டும்
நிறுத்திப் பின் தொடர்கிறது
கால்கள் புதைய!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 24, 2014

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து...

சாபங்களைச் சுமந்துகொண்டே
சுகமாயிருப்பதாய்
சோடனைகள்.

வேர்களை அழிக்க
விஞ்ஞானத் தேடல்
நிழலில் நின்றுகொண்டே.

பலவீனமே பலமாகவும்
பலமே பலவீனமாகவும்
தைரியமில்லா
நாகரிகக் கோமாளிகள்.

எதுவானபோனதும்
தாத்தாவின்
வீபூதிக் குடுவைக்குள்
மஞ்சள் பூசிய துணியில்
ஒற்றை ரூபா
நேர்த்திக் கடனாய்.

வியர்வை துடைக்கும் மரங்கள்
விட்டெறிந்த பெருமூச்சில்
பட்டைகள் வெடித்து
தெறித்த குருதியில்
குழந்தைகள்
மூன்றாம் கையாய்
நான்காம் காலாய்.

"பூவரச மரங்களை
பூக்கவிடு
என் கல்லறை சுற்றி"

தாத்தனின் நாட் குறிப்பிலிருந்து!!!

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6400

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 23, 2014

இரண்டு கவிதைகள்...

நீ...நான்...வெட்கம்

வெட்க ரேகைகளை
மெல்ல மெல்ல
அழித்துக்கொண்டிருக்கிறாய்.

பொய்யாய் வெட்கப்படும்
குறிப்புகள் ஏதும்
எழுதிவைக்காமல்
விட்டது என் பிழை.

கண்ணில்லாதவரின்
ஒற்றைக் கைத்தடியை
என் விரலிடுக்கில்
உதவிக்குச் செருகி
ரேகைகள் புதிதாக
இனி வளராதென்கிறாய்.

வெட்கப்பட்ட ஞாபகங்களை
தட்டித் தடவி
மீட்டெடுக்க நினக்கிறேன்
நீயோ மற்றக் கையிலும்
இன்னொரு
கைத்தடியைச் செருகிறாய்.

இனி நானும்
என் வெட்கங்களும்...!!!



ப்ரியமானவனே...

எதுவும் நினைவிலில்லை
நான்....
உடையத் துவங்கிய கணத்திற்கு
முன்புவரை.....

கொஞ்(ச)சும் முதல்
கொஞ்சிக்கொண்டிருந்தாய்
பின்னராய்
என் முலைகளில்
பாலருந்திக் கொண்டிருந்தாய்...

பேசித்தீரா பிரியங்களை
பெருவெளி மணலிலும்
வானின் எரிநட்சத்திரங்களின்
இருண்ட முனைகளிலும்
புதைத்து வெளியேறும் உன்னை....!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 22, 2014

எதிர்க்கவிதையொன்று...

தூரத்தில் உன்னைப் பார்த்த போது
புலியின் கண்ணில்
மானைப் பார்த்தேன் அம்மு
பார்வை இன்னும் பார்வையாகவில்லை அங்கே..
உன்னைச் சந்தித்த போது
மானின் வயிற்றில்
ஆழப் புதைந்தது
புலியின் நகம்..
மரணம் இன்னும் வடிவமாக்கப்படவில்லை அங்கே.

மெதுவாய்
உன்னைக் கடக்கிறபோது
இரத்தத்திற்கு விடைகொடுக்கிறது மான்..
நான் உன்னைக் கடந்து முடித்தபோது
மரணம் அங்கே வடிவமாகி இருக்க வேண்டும்.
இப்படித்தான் அம்மு கடக்கிறேன் உன்னை..
..... ..... ..... ....

சத்யா
சென்னை 

Sathya Raj Ph D

ஒரு உயிர்வதை பார்த்தும் கடக்கிறாய் சத்யா
இரத்த வாடை சுவாசிக்கமுடியாமல் நீ...

சூன்யப் பூனைகள் புலிகளாவது பற்றி
முன்னமே அறியத்தரவில்லை எனக்கு நீ...

அவைகளைக் கட்டுப்படுத்தி
மூக்கின் நுனிகளை வளைத்து
என் நிக்கரின் அடிவரை உந்தி
பின் தோல்வியுற்றபோதே
மரணத்திற்கு வடிவமானது
அவைகள்.

அப்போது புலியின் நகக்கீறல்களை
நக்கிக்கொண்டிருந்தது மான்
அதன்பின் தான்
இன்னும் ஆழப்புதைந்தது
புலியின் நகம் மானின் வயிற்றில்.

எனக்குத் தெரியும்
புலியொன்று என் வயிறு கிழிக்கும்
கனவொன்றைக் கண்டு
கடந்துகொண்டிருப்பாய்
சத்யா நீ ..... இப்போதும் !

ஹேமா(சுவிஸ்)

கடக்கும் வாழ்வில்...

மழைக்குப்பின்
எறிக்கும் ஊமைவெயிலாய்
சிலரின் வார்த்தைகளை
கழற்றவும் முடியாமல்
எறியவும் முடியாமல்
அவிந்தபடி...
அணிந்துகொண்டு.

மூடும் கதவை
உறுதியாய் நம்பும்
அவிழ்ந்த
நம்பிக்கை உள்ளாடைகளை
ஏமாற்றும்
பிணைப்பின் இருப்பு.

ஓடும் ஆறு இது
பாசி தங்காது.

மனமேந்தும் சொற்கள்
புறக்கணிப்பின் சாடல்களின்
வேகம் தாங்காது
ஆனாலும்
இயல்பாய் ஓடும்
வன்மமின்றி.

உமிழ்ந்துகொண்டேயிருக்கும்
வார்த்தைகளில்
வழுக்கி விழுந்து
எழும்பி நடப்பதுதான்
'இதுவும் கடந்து போகும்'
என்கிற
போகுதலோ?!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 17, 2014

வீணையடா நீ எனக்கு...

என்னிடம் நீ...
விடைபெறுமுன்
எத்தனை முறை
அந்த மலையுச்சியின்
பெயர் சொல்லியிருந்தாய்
இப்போதும்....
அங்குதானா இருக்கிறாய்
தூதென
இல்லை சாட்சியென
மலைக்குருவியொன்றை
அனுப்பிவிடேன்
அலகில் மீசைமுடி சுத்தி !

மிரட்டிச் சிரிக்கும்
உன் பார்வையை
ஒற்றியெடுத்துப் படிக்கிறேன்
போதாதோ
இதமாய்
விரல்வழி இறங்குகிறது
மென்சூட்டு
மஞ்சள் வெயில் !

காலம் கறள் பிடித்து
கறகறக்கும் ஓசை
என் காதுகளுக்குள்
இன்னும்...
உன் ஞாபகம் மட்டும்
கொல்லன் பட்டறை
பச்சை இரும்பாய் !

மீண்டும் மீண்டும்
சுழலும் இசைத்தட்டில்
உன் குரலில்
என் பாடுகள் சத்தமாய்
நினைவறுத்தல்
அத்தனை
சுலபமாயில்லை !

இதயத்தோடு பேசுவது
இசை என்றால்
நீ....அதன் மொழி
எந்த நேரமும்
கேட்கப்பட்டாலும்
சில நேரங்களில் மட்டுமே
உணரப்படுகிறது !

தேடிப் பறந்த
களைப்பின்
தாகம்
உன் கூட்டில்
இளைப்பாற'வா'
ஒரு வலி
ஒரு மருந்து
நீ
நான் !

ஹேமா(சுவிஸ்)

உள்பெட்டி இரகசியம்...

உள்பெட்டிச் சீனிச்சரையில்
ஊர்ந்து உரசும்
சிட்டெறும்பொன்று கடிக்கிறது
வலிக்காமல்.

சொல்லிக்கொண்டிருக்கிறேன் பதில்...

வாழ்க்கை இதுதான் என்றானபிறகு
மனம் மரத்துவிடுகிறது
ஏக்கமில்லை
கவலையுமில்லை
அதேநேரம் சந்தோஷமுமில்லை
என்கிறேன்.

பிரார்த்தனைகள் உனக்காக
என்கிறது பிறகும்...

பிரார்த்தனைகளால்தான்
கொஞ்சமாய் மிஞ்சிக்கிடக்கிறோம்
மிஞ்சாமலே போயிருக்கலாம்
முணுமுணுக்கிறேன்
பல்லும் இதழும்
ஒட்டாப்பொழுதில்.

சமை கொஞ்சம்
தேநீர் பருகலாம்
என்கிறது
இமைக்க மறுக்கும்
வாஞ்சையோடு!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, July 16, 2014

எவனோ ஒரு மனிதன்...

இறப்பைப் பசித்திருக்கிறேன்
எவரும் கவனிக்கவில்லை
கடல் தின்னும் அலையேதும் கூட.

பெருமூச்சின் சுவரில்
களைத்திருக்கிறது ஆன்மா
கால்களில் கண்களையெழுதி
உயிரிழை பொரித்த துளையில்.

ஆதியிருப்புத் துளிகளை அளாவி
புல்வெளிகளை நிரப்பிவிட்டு
உந்தித் திரும்புகிறது
உதிரப்போகுமொரு இலை.

மீசையில் ஒட்டா இனிப்பை
காவிச் செல்லும் எறும்பின்
புற்றைச் சிதைக்க
பாதையோர ஜந்துக்கள்.

புத்தனுக்குமுன் பிறந்திருந்த
புத்தனை
யாரும் இத்தனை
வதைத்ததில்லையென
அரசமரங்களின் கிசுகிசுப்பு
மெலிகுரலில்.

இனவிருத்திக்காய்
பகலில் மூதாதையருக்கும்
இரவில் இளையோருக்குமாய்
உணவிட்டுப் பிண்டம் வளர்க்கிறது
பலியாட்டுக் களவிளையாட்டோடு
இறப்புக்கான பசி !!!

ஹேமா(சுவிஸ்)

"எவனோ ஒரு மனிதன்'' என்றொரு கவிதை எழுதவேணும் என்னால் ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு வாய்க்கலாம். புனைவுகள் இல்லாமல் எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது மிக அரிதான வாய்ப்பல்லவா..!
Vasu Murugavel.... நன்றி வாசு

Saturday, July 12, 2014

ஈழம் இப்போ காஸா...

நிலா...நீ
கனடாவில்
காவலரண்களற்ற பூமியில்
எண்ணங்களை
விரித்துப் பறக்கவிடுகிறாய்
ஓவியமாய்.

எனக்கும் ஆசை
வானம் கீறி
பஞ்சுத் தேரைப் பறக்கவிட.

ஆனால்...
இங்கும் (ஈழம்)
இஸ்ரேலிலும்
கடத்திப்போகிறது
காவல்களே
பறவைகளையும்

வானத்தையும்.

பதுங்குகுழிப் பாம்புகூட
பாவம் இவர்களென
ஒதுங்கி ஊர
இஸ்ரேலரின் துவக்குகள்
இரக்கமேயில்லாமல்.

இலை தறித்து
கிளை தறித்து
அடிமரம் தறிப்பதைவிட
வேர்களைத் தறிப்பதுதான்
முழு அழிப்பின் தந்திரம்.

அம்மாவின் மார்பை
கடத்திவிட்டார்கள் நிலா.

பாலிரங்கும்
உறிஞ்சிய மார்பில்
இலையான் மொய்க்க
அம்மா அழுதுகொண்டிருப்பாள்
எங்கோ ஏதோவாய்
பசியோடு பதுங்கியிருக்கும்
என்னையெண்ணி.

சுடலை மாடர்கள்
குழந்தைகளைக்
கொன்று காவுகையில்
பாரம் சுமக்காதோ மனம்
ஒருகணம்.

என்னையும் கீறிக்
காற்றில் பறக்கவிடேன்
நிலா ஒருமுறை.

தூரம் தின்னும்
நம்பிக்கைகளைச் சுமப்பேன்
உதறிச் சிதறுமுன்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 10, 2014

மாயவனோ நீ கண்ணா...

போதைக்கலவரம்
ஏன்
கீதையுரைத்தவன்
முகத்தில் ?!

நுதல் நோக்கிப்பின்
இதழ் நெருங்கி
தாழ்வடம் திருகி
நீள்வாதை தருபவன்
ஓரடியால் உலகளந்தவன்
கண்ணில் குழப்பம்
ஏன் ?!

வேய்ங்குழல்
தனித்துத் தவிக்க
துளையில்
மழை நுழைந்தழ
உஷ்ண மூச்சின்
காத்திருப்புக் கண்ணா
தண்ணென்ற
நினைவும் நீண்டழ.

பாலூட்டும்
அன்னை கையில்
பறித்த பாலடையென
தனித்துச் சேகரிக்கும்
என் வெறும்பொழுதுகள்
உன் குறும்புகளை.

தீராக்காதலும்
சமர் செய்து
சமமாக்கும் காமமும் தீர
அணைத்தென்னை
முத்தமிட்டு
முகில் வண்ணம்
நிரப்பென் மேனி முழுதும்
அடித்துத் தோய்த்தாலும்
போகாத ஆயுள்வர்ணமாய்.

பிணை என்னை
சாதுர்யமாய்
நெளியக்கிடத்தி
எடுத்துக்கொள்.

கள்வனென்றார் கோதையர்
காதலனென்பேன்
கண்ணா உன்னை
பாற்கடலில் பள்ளிகொண்டு
வெட்கிக் கவிழ்ந்த
ஒவ்வொரு பிரியப்பொழுதிலும்.

வண்ணப்பொடி தூவு
வந்தென்னை வம்புசெய்
சேலையிழு
உன்னையெடு
என்னில் புதைத்துவிடு.

கள்ளன் போல
இயல்பொளித்த
கோபித்த முகமதில்
அன்னையில்லை
அணைப்புமில்லை கண்ணா
கன்றாய் கணன்று
கதறுமென் மனதில்
இறப்புத்தவிர ஏதுமில்லை
ஏற்றுக்கொள்
ஆலிலை மாதவா என்னை!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 07, 2014

இருப்பிடங்களின் குறிப்புகள்...

அங்கெதுவும்
இல்லா வெறுமையென்று
எண்ணாதீர்கள்.

ஒரு சருகின் கீழ் ஒளிந்திருக்கலாம்
ஆயிரக்கணக்கான
புழுக்களின் நிராசைகள்

இல்லை...

மழை கழுவிய முகில்களின்
சிறு துகள்களோ
பூக்களின் பெருமிதமோ
அனாதையாய் செத்த மூஞ்சூறோ
இல்லை ஒரு கூனல் காக்கையோ

முதலில் .....

அங்கேதும்
இல்லையென்பதை நிறுத்துங்கள்
கதவு காத்திருக்கிறது.

மறுபக்கத்தில்...

அந்தரத்து இசைத்தோரணங்கள்
பனிமூட்டக் கனவுகள்
வருவேனெனச் சொல்லிச்சென்றவர்
முகங்கள்
சிறுவயதின் ஆழ்மனமூச்சுக்களோ

ஏன்.....

எதிர்பார்த்த எதுவுமே
இல்லாமல்கூட....

ஆனாலும்
ஏன் பூட்டி வைக்கிறீர்கள்
நமக்கான வெளிகளை
தொலைத்தவை
தேவையானவை
ஏதோ ஒன்று கிடைக்காமலா...

வெற்று வெளி
என்பதை மட்டும் மறவுங்கள்
ஏதோ ஒன்றிருந்த இடம்தான் அது!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, July 05, 2014

கரும்புலிகள் நாள்...

கருப்பொன்றும் இருட்டல்ல
கருப்புடையும்
வெள்ளை மனமுமாய்
நம்முள் வாழும்
வரலாற்றுத் தெய்வங்களின்
வண்ணமது.

கொள்ளையடிக்கும் மண்காக்க
வெந்து வெடித்தவர்
சிந்தும் சதையைக்கூட
சிநேகிதர்கூடக் காணாமல்
சொந்த மண்ணில்
சாம்பலோடு சங்கமித்தவர்.

ஈழம்தான் வாழ்வென்றார்
ஈழம்தான் கனவென்றார்
சாத்தான்களோ...
கனவுதான் ஈழமென்றார்
கனவுகளை ஒத்திவைத்தார்.

காலம் பதில் சொல்லும்
நமக்கும்
அவர்களுக்கும்.

கருப்புக் கடவுள்களை
நினைப்போம் தொழுவோம்
மறவோம் மூச்சுள்ளவரை!!!

ஹேமா(சுவிஸ்

Thursday, July 03, 2014

கண்டுகொண்டேன்...

கண்டுகொண்டேன்...

மறந்திருப்பாளோவென
என்னையறிய
அப்பப்போ வந்து வட்டமிடுகிறாய்.

என் பாடுகள் வேறானாலும்
வார்த்தைகள்
வலிகள்
மகிழ்ச்சி
மன்றாட்டம்
இசை
கனவு எல்லாவற்றிலுமே
என்னுடன் கலந்து
நீதான் இன்னும்.

நீ...
என்னைத் தொலைத்துவிட
வழி தவற விட்ட
மொழியில்லாக் குழந்தையாய்
உன் ஒற்றை விரல் தேடியபடி.

சுட்டெரித்த உன்னிடம்
நேர்பட
சூரிய விசாரிப்புக்கள்தான்
இல்லாமல் போனது.

மற்றும் படி
சாம்பல் தேசத்தில்
அதே நான் தான்
இன்னும்
உன் பிழை திருத்தங்களோடு!!!

ஹேமா(சுவிஸ்)