Wednesday, July 16, 2014

எவனோ ஒரு மனிதன்...

இறப்பைப் பசித்திருக்கிறேன்
எவரும் கவனிக்கவில்லை
கடல் தின்னும் அலையேதும் கூட.

பெருமூச்சின் சுவரில்
களைத்திருக்கிறது ஆன்மா
கால்களில் கண்களையெழுதி
உயிரிழை பொரித்த துளையில்.

ஆதியிருப்புத் துளிகளை அளாவி
புல்வெளிகளை நிரப்பிவிட்டு
உந்தித் திரும்புகிறது
உதிரப்போகுமொரு இலை.

மீசையில் ஒட்டா இனிப்பை
காவிச் செல்லும் எறும்பின்
புற்றைச் சிதைக்க
பாதையோர ஜந்துக்கள்.

புத்தனுக்குமுன் பிறந்திருந்த
புத்தனை
யாரும் இத்தனை
வதைத்ததில்லையென
அரசமரங்களின் கிசுகிசுப்பு
மெலிகுரலில்.

இனவிருத்திக்காய்
பகலில் மூதாதையருக்கும்
இரவில் இளையோருக்குமாய்
உணவிட்டுப் பிண்டம் வளர்க்கிறது
பலியாட்டுக் களவிளையாட்டோடு
இறப்புக்கான பசி !!!

ஹேமா(சுவிஸ்)

"எவனோ ஒரு மனிதன்'' என்றொரு கவிதை எழுதவேணும் என்னால் ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு வாய்க்கலாம். புனைவுகள் இல்லாமல் எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது மிக அரிதான வாய்ப்பல்லவா..!
Vasu Murugavel.... நன்றி வாசு

2 comments:

  1. // அரசமரங்களின் கிசுகிசுப்பு
    மெலிகுரலில். //

    அருமை...

    ReplyDelete
  2. கவிதை வரிக்கு வரி அருமை...
    வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete