இப்போதான் என் முன் காண்கிறேன்
மென்னீரம் பரவிய இந்த முகத்தை
இலையுதிர்காலத்து மரத்தடியில்
உலர்ந்த இலைகள் சில கவிழ்ந்து
அவன் முகம்போல.
அடையாளப்படுத்துகிறான் தன்னை...
பிறப்பொன்றில்
சாளரக் கதவிடுக்கில்
பாதிப்பாதியாய் நாம் நனைந்ததாயும்
உடலை உலர்த்திவிட்டு
ஈரமனதை நான் விட்டுப்போனதாயும்
பின்னர்
தானே தத்தெடுத்து வளர்த்தாயும்.
நனைந்த ஈர நாட்களில்
நானே இலைகளை உடுத்தியிருந்தேனாம்
தன் முற்றத்தில்
ஒரு வசந்தகால துய்யிரவில்
பொதிகளாய் சுமந்து வந்திருந்தானாம்
என்னில் திருடிய அத்தனையையும்
கனவுக் கிளையில் என் காதலன் கண்டு
தராமலும் போனானாம்.
என்னதான் பொதியில் என்றால்...
மழைநாளில் சேகரித்த
என் யன்னல் மின்னல்கள்
ஆயிரக்கணக்கில்
நான் சேகரித்த என் கவிதைக்கான
சில நிறத்தூரிகைகள்
சில உளறல் வார்த்தைகளும்
மற்றும்
என் கையில் காய்ந்த மருதாணிச்
சிவப்புமென்கிறான் திருடன்.
இராணுவ நுட்பங்கள் நானறிவேன்
அவர்களின் ஒரு மாதிரியான
இறுக்க வாசனையும் நன்கறிவேன்
சப்பாத்தின் அழுத்தங்களையும் அளந்திருக்கிறேன்
முன்னும் பின்னுமாய் அவனைத்துளாவ
ஆயுதமேதுமில்லை
முட்டிய அன்புதானென்கிறான்.
கால் வலியெடுத்துக் கொஞ்சம் கொலுவசைய
கொழுந்திலைகளால் தாம்பாளமிடுகிறான்
என்ன செய்ய இவனை
மீனாய்ச் செதிலிழக்கிறேன் அவன்முன்!!!
ஹேமா(சுவிஸ்)