Tuesday, December 27, 2011

சின்னச் சின்ன...

சம்பிரதாயம்...தவமாய்
சில ஒட்டுப் பொட்டுக்கள்
கண்ணாடியில்
வெள்ளைச் சேலையின்
விவரம் அறியாமல்!!!

குப்பைத்தொட்டி...
தவறியவள்
போட்டுவி(ட்)ட
பரிதவிக்கும்
உயிருக்காக
உயிரற்ற என்
தவிப்பு!!!

அசுத்தங்கள்...
அலுக்கவில்லை
அள்ளிக்கொண்டே இருக்கிறது
காற்று ஊத்தைகளை
மனிதனைத் தவிர்த்து
பூமி சுத்தமாகவேயில்லை!!!

காவல்...
நாய்க்கு உணவிட்ட
வீட்டுக்காரரிடம்
நேற்றிரவெல்லாம்
மாறி மாறி
முற்றத்திலும்
கொல்லையிலும்
படுத்தபடியும்
ஓடியபடியும்
உறுமியபடியும்
குரைத்த நாயைப்
புகழ்ந்துகொண்டிருந்தார்
அயல்வீட்டுக்காரர்!!!

வயதுக்கேற்றபடி...
நெஞ்சில் படுத்தபடி
இடக்கு முடக்கான கேள்விகள்
பதில்கள் சரியானதாயில்லை
வளைந்தேன்
நிமிர்ந்தேன்
முறிந்தேன்
வார்த்தைகள் இல்லாமலில்லை
இருந்தும்...!!!

பெண்...
சில...
எழுத்துப் பிழைகளோடு

எழுதப்பட்ட கவிதை
சிலரால்...
திருத்த விரும்பாத பக்கத்தில்!!!


ஹேமா(சுவிஸ்)

Tuesday, December 20, 2011

முந்தி ஒரு காலத்திலே...

மூலையில் பயந்தொதுங்கும்
எலியென ஒரு கும்பி உருவம்
உக்கிய சப்பல் குச்சியென
கைதொட உதிர்ந்து கரைய
ஆயுள் முழுதும் சேமித்த மூச்சை
விட்டு விட்டு இழுத்தபடி
சரிவரப் புரியாதபடிக்கு.

நூற்றாண்டின் நினைவலைகள்
புரட்டித் திருப்ப
எண்ணற்ற முகங்கள்
சிரித்தும் அழுதும்
கைகுலுக்கியும்
இரவும் பகலுமில்லா ஒரு பொழுது
நீர்த்து மறைந்துகொண்டிருக்க...

தூக்கத்தின் நடுவில்
சொண்டு சுளித்தழுது
அம்மாவைத்
தொட்டுப் பார்க்கும் குழந்தையாய்
சொல்லி முடியா
கதைகளை
விக்கி விழுங்கி
சொல்லிச் சொல்லி
களைத்துப் போகுமது
ஒரு சாடையில் நானாக!!!

உயிரோசையில் ஹேமா(சுவிஸ்)

Friday, December 16, 2011

மழை முத்தம்...

அன்றைய நாளில்...
நம் முத்தச்சண்டை குறித்து
யோசிக்கையில்
காற்றும் மழையும் குசுகுசுத்தபடி
ஏதோ சதித்திட்டமாயிருக்கலாம்.

இன்னொரு நாளில்...
உன்னை வெளியில் தள்ளி
கதவுகளை மூடிக் கொஞ்சம்
அழுது துயில்வோம் என்று
முற்றத்து நிலவில்
அண்ணாந்து சரிகையில்
வார்த்தைகள் பிடுங்கி
கண்களின் கனவுக் கோடுகளை
அழித்துப் போனது அதே மழை.

மற்றொரு நாளில்...
நீ என்னை விட்டுப் பிரிவாய்
என மின்னலாய் இடியாய்
மழைச் சாத்திரம் சொல்லி
என்னை நனைத்துச் சேறாக்கியது
மீண்டும் அந்த மழை.

அதே நாளில்...
என் கன்னத்து
உன் இதழ்ப் பதிவைப்
பறித்து போனது
அந்தப் பாவிக் காற்றும்.

பிறிதொரு நாளில்...
இரண்டும் இயல்பு மாறாமல்.

என்னருகில் அணைத்தபடி
அன்று நீ...!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, December 08, 2011

சும்மாவே போனது...

MySpace Graphics

நீ...
தோழனாய் கை கோர்த்தபோது
நான் இருப்பேன்
இறுதிவரை என்றேன்
சும்மா...எதுவரை என்றாய்.

பின்னொருநாள்
நம் தோழமைக்குள்
சும்மா...எத்தனை நாள்தான்
காதலை ஒளிப்பாயென்றாய்.

நீயும் இருப்பாய்
நானும் இருப்பேன்
அதுவரை என்றேன்
நீ...சும்மா
காதல் சொன்ன முதல் நாளில்.

அம்மா என்றாய்
சமூகம் என்றாய்
நானும் இருப்பதைச் சொன்னேன்
எதுவும் இப்போ நம்மோடு இல்லை
எதுவும் இருக்கப்போவதுமில்லை
சும்மா...ஒரு தத்துவம்
சொன்னோம் இருவரும்.

இருக்கும் எல்லாமே
இல்லாத ஒன்றைத்தான்
இருப்பதாய் சும்மா சொல்கிறது
இருக்கும்...
இந்தக் கணம் மாத்திரம் இருப்பில்
இப்போ அதுவும் "சும்மா"தான்
இல்லாமல் போய்விடும் பாரேன்!!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, December 03, 2011

இல்லாத ஒன்றுக்கு...

உதறிவிட்ட கைகளில்
திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது
ஒற்றை இறகோடு இலையான் ஒன்று
தோலைத் துளைக்க மறந்ததோ
இல்லை இயலாமையோ
இருக்கிறது அசையாமல்.

குப்பையாய்
கூட்டி அள்ளிய சொற்கூட்டம்
இலக்கியங்கள்
வல்லின மெல்லினங்கள்
யாப்பு தொகை தொடையென்று
கண்சிமிட்டியபடி
ஒற்றை இறக்கையாலேயே
கோர்த்து அடுக்கத் தொடங்க...

தலையணையோடு
சொட்டிக் காய்ந்த இரத்தக் கறை
உயர்த்திக் காட்டிய ஊனக்கைகளோடு
விளங்காமலே விழிக்கிறேன்
தலைமாட்டிலும் கொழுவியிருக்கிறது
யாரோ பரிசளித்த வீணையொன்று
கை இருக்குமிடத்திலோ
மொட்டுப்போல் ஒரு மழுங்கல்.

இறக்கை அசைத்து
படபட வென வட்டமிட்ட அது
தன் ஒற்றை இறகையும் உலர்த்தித் தர
பலமாய் சிரிக்கத் தொடங்கினார்கள்
வால் இல்லாக் கோணங்கிகள்!!!

ஹேமா(சுவிஸ்)