Friday, May 27, 2011

நிகழ்வுகள்...

உடைந்த‌ தாழியின் ஓர‌த்தில்
ஒட்டியிருக்கும்
ஒற்றைப் ப‌ருக்கைக‌ள்
க‌ழுவ‌ப்ப‌டாம‌ல் காத்திருப்போடு.
காக்கைக‌ளும்
கழிவகற்றும் கைகளும்
தம் அவ‌ச‌ர‌த்துள்.

காட்சி மாறும் திசையில்
ப‌சி ம‌ய‌க்க‌த்து
தெருவோரச் சிறுமியை
அள்ளி எடுத்த‌படி சூரியக்க‌திர்.
விடாப்பிடியான‌
ந‌ச்ச‌மில‌ வார்த்தையை
கொட்டியும் வீசியுமாய்
அந்த‌க் கைக‌ள்.

கொல்லைப்புற
ஓட்டை வ‌ழியே வ‌ரும் எலி
மெல்ல‌ நுழைகிறது.
நலிந்தோரை
கொத்தியும் க‌ல் எறிந்தும்
களைத்தே போகின்றன
அவைக‌ள்!!!

ஹேமா(சுவிஸ்) நன்றி - உயிரோசை.

Tuesday, May 24, 2011

ஒரு சொல்...

நீ சொன்னாய்
நீயா சொன்னாய்
நீதான் சொன்னாய்
நீதானா சொன்னாய்
நீயேதான் சொன்னாய்
நீயும் சொன்னாய்.

மாற்றி மாற்றி
நீ....
சொன்னதை மாற்றிட
நினைக்கிறது உள் மனம்
சொன்ன ஒற்றைச் சொல்
சொன்னது சொன்னதுதான்.

சொல்லவில்லை என்றாகும்
இயல்பில்லா
ஒரு பொய்
தேவையில்லை எனக்கும்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, May 18, 2011

மே பதினெட்டோடு போகட்டும்...

புதைத்துவிட்டால் உயிர்க்காது
என்றுதான் நினைக்கிறீர்கள்
உயிர்மூச்சில்
சிலுவை அறையப்பட்டதை
அறியாத நீங்கள்.

மழையிலும் வெயிலிலும்
குளிக்கும் மலரென
வாழ இசைத்தீர்கள்
பழக்கப்பட்டுவிட்டோம்
முட்களையும் பூக்களாக்க
பயமில்லை இப்போ
வாசனையாகிறது இரத்தவாடைகூட.

சுவைக்கும் உணவுக்குமான தூரமாய்
எங்கள் தேவைகளை
உங்கள் இடைவெளிகளே நிதானித்து
கடத்தி இருத்தி தீர்மானிக்கிறது.

மாற்றிய சரித்திரமும் மகாவம்சமும்
கருவுரும் தலைமுறை தலைசுமக்க
காலகாலமாய் விலகாத வெறுப்போடு.

எனவே......
வேண்டாம் இனியும்
ஒரு நாள் மலரும்
நம் வீட்டு முற்றத்தில்
கார்த்திகைப் பூக்கள் நிறைவாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 16, 2011

தலைமுறை விளையாட்டு...

இரத்த வாடை குறைந்திருந்தாலும்
ஈழமுகாம்களின் வாசல்கள்
மூடப்படவில்லை.
நிலத்தின் மீதான
பெருங்கனவு கலைக்கப்பட
காலைகள் விடியாமலே.

"ஆமி சுடுறான் ஓடு ஓடு ஒளி்
குண்டு விழுந்திட்டுது
அப்பாவைக் காணேல்ல
குழறி அழுகிறா அம்மா
பதுங்கு குழி்க்குள்ளும்
படமெடுக்குது பாம்பு
முள்வேலியும் அகதிமுகாமுமாய்"
முகாம்களில் விளையாடும் குழந்தைகள்.

சப்பித்துப்பிய எலும்புகள் ஏந்திய
பேய்களும் பிசாசுகளும்
புரியாத மொழி பறைய
சொல்லாமலே புரிகிறது
நம்மைப் பிடித்த நோய்கள்
இவர்களென.

விளையாட விடுங்கள்
எங்கள் குழந்தைகளின்
கண்களைக் கட்டாமலே
தோழனின்
கண்ணைத் தோண்டியவனை
தாயின் மார்பறுத்தவனை
அடையாளம் காணட்டும்.

பேசவிடுங்கள்
மண்டையோடுகளோடும்
மூடிய மண் கிளப்பும்
பெருமூச்சுக்களோடும்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 12, 2011

மே 12 - 18...2011.

உயிர் மூச்சு.
~~~~~~~~~~~~~~
நிலவாழ் குழந்தைகளுக்காகவும்
நிலக்கீழ் குழந்தைகளுக்காவும்
ஈரவிழிகளோடு ஈழத்தாய்.

உயிர் மூச்சோடு
மண்ணுக்குள் மூடினாலும்
இழுத்து முடித்த இறுதி மூச்சு
தாய் மண்ணில்.

மூச்சடைக்க
நினைவுகள் மறையும்போதும்
ஒற்றைச் சொல் உதிர்ந்திருக்குமோ
தமிழீழத் தாயகமென!!!





பதிலில்லாக் கேள்விகள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிணங்கள் இன்னும்
மூச்சுவிட்டபடிதான் ஈழத்தில்
இறுதி மூச்சின் பதில்களுக்காய்.

அப்பா எங்கே
கணவனைக் கண்டீர்களா
என்னை ஏன் சுட்டார்கள்
முள்வேலிக்குள் ஏன் இன்னும்
இது நான் பிறந்த தேசமா
ஏன் நான் அகதியாய்...

பிணங்களின் கேள்விகள்
அவர்களின் காதுகளுக்கு
எட்டப்போவதில்லை எப்போதுமே!!!

ஹேமா(சுவிஸ்)

Monday, May 09, 2011

எம் கையில் எதுவுமில்லை...

காற்றின் தெறிப்பில்
காதில் படும் அவலங்கள்.
கண்ணெதிரே
கடந்து நடக்கும் மனிதர்கள்.
முத்தமென்று நடுத்தெருவில்
எச்சில் அப்பும் அட்டைகள்.
வியர்வை மணத்திற்காய்
முறைக்கும் கண்கள்.

குழந்தைகளின் கூச்சல்கள் அழுகைகள்.
நடுநிலையில்லா ஊடகங்களின் உளறல்கள்.
போகிற போக்கில் கண்டதைக் காணாமல்
கேட்டதைக் கேளாமலேயே
நேரத்தை அளந்து ஓடும் கால்கள்.
இடையே நானும் ...
கடந்து போக வேண்டியதாய் இருக்கிறது.

தவற விட்ட புகையிரதத்திற்காக
புகையிரதத்தைத்
திட்டித் தீர்க்கும் பயணிகள்.
பொது இடங்களில் கைபேசியோடு
பைத்தியமாய் வளவளக்கும் இளசுகள்.
கவர்ச்சியாய் இடையசைக்கும் நாகரீகங்கள்.

பேரூந்துக்குள் பறையடிக்கும்
பக்கத்து வீட்டு அலசல்கள்.
தீமைகளைத் திரையிட்டுத்
துயருக்கு ஆடையிட்டு
பம்மாத்துக் காட்டும் பூதங்கள்.

யார் எப்படித்தான்
எதைப்பற்றிக் கருத்துரைத்தாலும்
அவரவர் திசை
அவரவர் கால்கள் வழியே.
எரிச்சலாய்தான் இருக்கிறது.
என்றாலும்....
எதுவுமே எம் கையில் இல்லை.

திருப்தியாய் இல்லாவிடிலும்
வாழ்வின் சக்கரங்கள் சுழன்று
எங்களை அரைத்தபடிதானே!!!

ஹேமா(சுவிஸ்)