Thursday, July 30, 2009

எல்லாம் சும்மா...

காத்துக் கிடப்பதிலேயே
வாழ்வின் காலம் கழிந்தபடி.

கரு தாண்டி வெளி உலகம் வர
அம்மாவின் முகம் காண
அப்பாவைச் சந்திக்க
இயற்கையை சுவாசிக்க
நடக்கப் பயில
பேசிப் பழக
பாடசாலை போக
பள்ளி படிக்க
காதலி தேட
வானத்தை வில்லாய் வளைக்க
காற்றோடு ஊர்வலம் போக
உத்தியோகம் பார்க்க
கல்யாணம் பண்ணிக்கொள்ள
கனவுகளைத் தூரம் தள்ள
குழந்தை பெற்றுக்கொள்ள
எதிர்காலத்தை எதிர்த்துப் பேச
பணம் சேர்க்க
வீடு கட்ட
உறவுகளுக்காக
உரிமைகளுக்காக என்றபடி
எத்தனை...எத்தனையோ...

இதற்குள்...
இறைவனும் காத்திருக்கிறான்
தந்த உயிரைத்
திரும்பவும் எடுத்துக் கொள்ள.

இதற்கு நடுவில்...
மனிதனின் காத்திருப்புக்கள்
அர்த்தமே இல்லாமல் !!!

ஹேமா(சுவிஸ்)

Monday, July 27, 2009

கண்ணுக்குள் என்னவன்...

கண்ணாடி வழி கவனித்தேன்
கண் ஒன்று என்றுதான்.
அடுத்த கணம் அசந்துவிட்டேன்
கண்ணுக்குள் என்னவனோ!

கேட்டிருந்தேன் பூ ஒன்று.
பூப்பறிக்கப் போனவன்
பூந்தளிர் உன் சிறகுக்குள்.
சிக்கினானோ சிலவேளை!
என்னைவிட நீ அழகோ
இல்லை...
உன் காந்தக்கண் கூட அழகோ!

பறித்தது நீ...
பறிகொடுத்தவள் நான்.
இமையென்ற சிறைக்குள்ளே
சிறையாகிப்போனானே.
இமைக்காமல் கிடக்கின்றான்
உன் ஆழ விழிக்குள்ளே.

பொம்மை காட்டினாயா
பொத்தி வைத்த
பூஞ்சிரிப்பால் மயக்கினாயா.
பல்லாங்குழி விளையாட
கண்ணுக்குள் குழி கிண்டி...
கள்ளியடி நீ.

விட்டுவிடு என்னவனை.
வேண்டாமடி பூ எனக்கு.
எனை விட்டுப் பிரிந்தபோது
அவன் விட்ட சுட்ட கண்ணீர்
நான் நீந்தும் வெந்நீராய்
இப்போதும்.

உலகளவு காதல்
என்றாலும்...
அடி தோழி
என் காதல் உன் விழி அளவு !!!

ஹேமா(சுவிஸ்)

படம் தந்தது நண்பர் கடையம் ஆனந்த்.நன்றி ஆனந்த்.
கண்ணைப் பிடித்த நண்பர் சாமிநாதனுக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, July 23, 2009

வணங்காமண்...

எல்லைகள் ரெண்டிலயும் விரட்டியடிக்க
நட்ட நடுக்கடலில
"வணங்காமண்" அகதியாய்.

பிரபாகரனுக்கா அனுப்பினம்.
ஆயுதங்களா அனுப்பினம்.
அகதித் தமிழனுக்குத்தானே அனுப்பினம்.
பிச்சைப் பாத்திரத்தோட
பச்சைத்தண்ணியோட பிஸ்கட்டும் தின்னும்
பச்சைத்தமிழன்ர
மிச்ச உயிரைக் கொஞ்சம் பிடிக்க எண்டுதானே
மினக்கெட்டுச் சேர்த்து அனுப்பினம்.

'ராஜபக்ச' ஆராயிராராம்
'கோத்தபாய' கொக்கரிக்க
'பசில்' படுத்துக்கிடக்க
"வணங்காமண்"
அங்கயும் இங்கயுமா அல்லாடினபடி.

தொப்புளின்ர கொடி எண்ட தாய்த் தேசமோ
தப்புத் தப்பா
நாளுக்கு ஒண்டாய் நடிச்சுக்கொண்டு.
கலைக்குப் பேர் போன நாடெல்லோ.
நல்லாய்த்தான் நடிக்கினம்.
ரஜனியும் கமலும் எந்த மூலைக்கு அப்பா...டி!

பிச்சை எடுக்கவும் மனுசரில்ல.
பிச்சை போடவும் தேவையில்ல.
அன்றாடம் காய்ச்சிகள்தான் நாங்கள்.
ஆனா அடுத்தவீட்டுக்கு
உப்புத் தா கொஞ்சம் புளி தா எண்டு போனதில்ல.
வேலிக்குள்ள சின்னக் குடில்.
குசினியும் கக்கூசும் குளிக்கக் கிணறுமாய் இருந்தம்.

தண்ணியைத் தெய்வமாக் கும்பிட்ட நாங்கள்
எங்கட மண்ணிலேயே
தண்ணிக்குக்கூடத் தவம் கிடக்கிறம்.
தர்மம் தலை காக்கும் எண்டிச்சினம் ஆரோ.
தர்மமும் தானமும் தலையும் எங்க போச்சுது.

பெட்டைப் பிள்ளைகளை முந்தானைக்குள்ள மூடி மூடி
அடைக்கோழியாய் காத்த பரம்பரை.
பெடிச்சிக்கு வெயில் பட்டாப் போச்சு
நொந்தா நொடிச்சாப் போச்சு
பெத்தவன் பிறந்தவன் தவிர
அடுத்தவன் கண்பட்டா
சுத்திப் போட்டே வளர்த்த கூட்டம்.

இண்டைக்கு...
பெண் புரசுகள்
உடுப்பு மாத்தவும்...
குளிக்கவும்...
பால் கொடுக்கவும்...
ஆமிக்காரன் பாக்கத்தான்

முள் வேலிக்குள்ள இருந்துகொண்டும்
விடியும் எண்ட நினைவோடதான்
அந்த நல்லூர் கந்தனைக் கூப்பிடுறம்.
வருவானோ அவன் !!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 17, 2009

அம்மா....அப்பா

அம்மா ...
வாழ்வின் துயர் நெடி வழி நெடுகிலும்.
உன் மடி கடந்தபின்
புன்னகை மறந்து
போரும் வருத்தமும்,
பசப்பும் பொய்யான பருந்துகள் நடுவில்
நானும் நடிப்போடு.
நடிக்கும் வல்லமை
இல்லை என்றாலும் நடிக்கிறேன்.
முன்னால் நிற்பவர்
என்னைவிட நடிகனாக இருப்பதால்.

அம்மா சுகம்தானே...அப்பா எப்படி ?
இனிப்பானவர் என் அப்பா.
சீனியம்மா சீனிஐயா
என்று அழைத்ததாலோ என்னவோ
அளவில்லாச் சீனியாம் உடம்பில் இப்போ.
அப்பாவின் கையில்
நாளுக்கு முப்பதிற்கும் குறையாத சிகரெட்டுக்கள்.
ம்ம்ம்...சீனியாவது சர்க்கரையாவது அவருக்கு.
சொல்லப்போனால்"சும்மா போம்மா"என்பதோடு சரி.

அம்மா நேற்றைய கனவில் அம்மம்மா வந்தா.
இடுப்புச் சேலையில் ஒளித்து வைத்த மாம்பழத்தோடு
எங்கட மண் திண்ணையில இருந்தா.
என்னவோ தெரியவில்லை
இன்று நினைவு முழுதும் நீங்கள் இருவரும்தான்.

என்றும் இப்படி இருந்ததில்லை.
எந்நேரமும் நினைக்காவிட்டாலும்
காலில் கல் இடறும்போது
தலை வலிக்கும்போது
வேலை முடிந்து அசந்து வந்தபோது
அம்மா...என்று தலையணை தேடி
அப்பா...என்று போர்த்தியபோது
என்னையும் அறியாமல்
எனக்குள் நீங்கள்தான் !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 14, 2009

நினைவுகளோடு நிமிடங்கள்...

myspace love comments,  Image Hosting

அடித்து ஓய்ந்த மழைபோல
அமைதியாயும் அமைதியற்றும்
அமிழ்ந்து கிடக்கிறது என் வீடு.
சுவாசத்தைத் தவறவிட்டாலும்
இழுத்துப் பிடித்து
உன் வாசத்தை மட்டுமாவது
சேமித்து வைத்திருக்கிறேன்
நுரையீரலுக்குள்.

நுழைவாயில் தொடக்கம்
நூர்ந்து உறங்கும் மெழுகுதிரி வரை
துக்கம் உறைந்து கிடக்க
நானும் ஏதோ இருக்கிறேன்.
நீயும் சுகம்தானே!


உன் நினைவு நூல்களில்
பட்டம் விடுவதைத் தவிர
வேறு வழியில்லை
என்றாகி விட்டது என் நிலைமை.
அவலங்களின் நடுவில்
அன்பின் ஆழத்தை
இப்போதைக்குக் கண்டதாய்
ஞாபகம் இல்லை.
நான் என்னை நேசிப்பதை விட
என் நிழலைக் கூட
நீதானே நேசிக்கிறாய்.


நீ வந்து போனதன் பூரிப்பு எனக்குள்.
சொல்லாமலே களைகட்டிக்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
அடுத்தவர்களுக்கு.
நான் இந்த வாரத்தில்
மிக மிக அழகாய் இருகிறேனாம்.

எனக்குத் தெரியாமலேயே எனக்குள்
குடியிருக்கிறாய் பார்த்தாயா!
நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நீருக்குள்ளேயே வாழும்
சில உயிரினங்கள் போல.


தும்பியின் வாலில்
நூல் கட்டி விளையாடும் வயதில் வராமல்
பாவம் தும்பியைத் துன்புறுத்தாதே
என்கிற வயதில் அருகில் உறவாய் நீ.
வாழும் வயதைத்
தவற விட்டவளாய் நான்.
இனியும் விட்டு விடாமல்
யுகங்கள் தொலையும் வரை
இறுகப் பற்றியபடி.


நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவாக.
கடற்கரையில் உன் தோள் சாய்ந்ததும்,
தாராக்களோடு பேசியதும்,
வள்ளத்தில் தூண்டிலோடு போராடிய
அந்த மூன்று மனிதர்களுக்காகக்
கவலைப்பட்டதும்,
சிவந்த கண்களோடு
சூரியன் கடலுக்குள் மூழ்கிப் போனதும்.


இன்றும்...
அதே சூரியனும்...தாராக்களும்
வள்ளமும்...அந்த மனிதர்களும்
அப்படியேதான்
இன்றும் வந்து போவார்கள்.
உன் தோள் இல்லாத நான் மட்டும்
மீண்டும் தனிமைக்குள்.

காற்றின் வேகத்தோடு
பறக்கும் விமானத்துள்
கரைந்துவிடும் உன்னை
நினைவுக்கரையில் நின்று
வழியனுப்பி விட்டு
காத்திருக்கிறேன் மீண்டும்
நீ...வரும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, July 10, 2009

?? ஈழத்தமிழன் ??

நடந்ததெல்லாம் நன்மைக்கே !
நடப்பவையும் நன்மைக்கே !

நமக்கு நாமே மருந்தாகி
கேட்பாரற்றுக் கிடக்க வேண்டியதாயிற்று.
தலை மிதித்து நடந்தவன்
தலையையே எடுக்கத் துணிந்துவிட்டான்.

ஈழத்தமிழன் எடுப்பார் கைப்பிள்ளையாகி
தொங்கு பாலத்தில் நடப்பவனாய் தென்பின்றி.
இரத்த ஆறு உறைந்துவிட்டாலும்
முட்கம்பிகள் இட்ட சர்வாதிகார ஆற்றுக்குள்.

நம்பிக்கை நடைபாதையெங்கும்
முட்கள் நெருடியபடி.
நடை தடுமாறினாலும் நினைவுகள் சீராய்
இருப்பிடம் நோக்கியே.

மௌனமே சுகமாயிருக்கிறது
உலகையே வெறுத்துவிட்ட
இறுமாப்போடு இருக்கிறேன்.
கற்பைக் களவு கொடுத்ததாய் என் தேசம்.
குற்றம் புரிந்தவளாய்
இனி ஒருபோதும் மன்னிக்க முடியாதவளாய் நானும்.

நட்பும் காதலும் உண்மையற்று
நானும் அசுத்தப்பட்டவளாய்
கர்வம் தொலைத்து மௌனித்துக் கிடக்கிறேன்.
ஆசைகள் கொன்று
கவலைக் குழந்தைகள் சுற்றிலும் அழுதபடி.

அர்த்தமற்ற கனவுகளின் மேல் ஆணி அறைந்து
அரற்றியபடி
தொடராத மைல்கல் மேல்
சுமை இறக்க முயன்றபடி.

தப்புத் தப்பாய் விடைகள்.
எப்படித்தான்
கூட்டிக்
கழித்து
பெருக்கிப்
பிரித்துப் பார்த்தாலும்
மீண்டும் மீண்டும்
அதிகமாகவே கழிக்கப்படுவதாய்
தமிழனின் வாழ்வு !!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, July 07, 2009

திரும்பவும் இங்கே...

உதிர்ந்து...அடங்கிக் கிடக்கிறது என் எண்ணங்கள்.
எண்ணச் சருகுகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது என் ஓலங்கள்.
தவிப்பின் காற்று அசைத்தாலும்
தத்தளித்துத் தத்தளித்து
படபடத்து விட்டுப் படுத்துக்கொள்கிறேன்.

உங்களையும் என் எழுத்துக்களையும்
மறந்துவிட்டதாய் நினைக்கிறீர்களா நீங்கள்?
எப்படியாகும் அது !
பறவையின் இறக்கைகள்
விட்டுப் பிரிந்தபிறகும்
பறத்தல்போலவே நானும் அலைந்தபடி.

தடுக்கி முட்டி மோதும் அத்தனை திசைகளிலும்
உள் உணர்வின் வலியோடு
பறந்துகொண்டுதான் இருக்கிறேன் இன்னும்.
மனம் பறந்து
முட்கம்பிகளுக்கூடான என் தேசத்தில்.

என்னைமாத்திரம்
ஏதோ என்னையுமறியா
ஒரு இயற்கையின் இயல்பு
ஏந்தியபடியே
திரும்பவும் இங்கே !!!

ஹேமா(சுவிஸ்)