Tuesday, July 14, 2009

நினைவுகளோடு நிமிடங்கள்...

myspace love comments,  Image Hosting

அடித்து ஓய்ந்த மழைபோல
அமைதியாயும் அமைதியற்றும்
அமிழ்ந்து கிடக்கிறது என் வீடு.
சுவாசத்தைத் தவறவிட்டாலும்
இழுத்துப் பிடித்து
உன் வாசத்தை மட்டுமாவது
சேமித்து வைத்திருக்கிறேன்
நுரையீரலுக்குள்.

நுழைவாயில் தொடக்கம்
நூர்ந்து உறங்கும் மெழுகுதிரி வரை
துக்கம் உறைந்து கிடக்க
நானும் ஏதோ இருக்கிறேன்.
நீயும் சுகம்தானே!


உன் நினைவு நூல்களில்
பட்டம் விடுவதைத் தவிர
வேறு வழியில்லை
என்றாகி விட்டது என் நிலைமை.
அவலங்களின் நடுவில்
அன்பின் ஆழத்தை
இப்போதைக்குக் கண்டதாய்
ஞாபகம் இல்லை.
நான் என்னை நேசிப்பதை விட
என் நிழலைக் கூட
நீதானே நேசிக்கிறாய்.


நீ வந்து போனதன் பூரிப்பு எனக்குள்.
சொல்லாமலே களைகட்டிக்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
அடுத்தவர்களுக்கு.
நான் இந்த வாரத்தில்
மிக மிக அழகாய் இருகிறேனாம்.

எனக்குத் தெரியாமலேயே எனக்குள்
குடியிருக்கிறாய் பார்த்தாயா!
நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நீருக்குள்ளேயே வாழும்
சில உயிரினங்கள் போல.


தும்பியின் வாலில்
நூல் கட்டி விளையாடும் வயதில் வராமல்
பாவம் தும்பியைத் துன்புறுத்தாதே
என்கிற வயதில் அருகில் உறவாய் நீ.
வாழும் வயதைத்
தவற விட்டவளாய் நான்.
இனியும் விட்டு விடாமல்
யுகங்கள் தொலையும் வரை
இறுகப் பற்றியபடி.


நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவாக.
கடற்கரையில் உன் தோள் சாய்ந்ததும்,
தாராக்களோடு பேசியதும்,
வள்ளத்தில் தூண்டிலோடு போராடிய
அந்த மூன்று மனிதர்களுக்காகக்
கவலைப்பட்டதும்,
சிவந்த கண்களோடு
சூரியன் கடலுக்குள் மூழ்கிப் போனதும்.


இன்றும்...
அதே சூரியனும்...தாராக்களும்
வள்ளமும்...அந்த மனிதர்களும்
அப்படியேதான்
இன்றும் வந்து போவார்கள்.
உன் தோள் இல்லாத நான் மட்டும்
மீண்டும் தனிமைக்குள்.

காற்றின் வேகத்தோடு
பறக்கும் விமானத்துள்
கரைந்துவிடும் உன்னை
நினைவுக்கரையில் நின்று
வழியனுப்பி விட்டு
காத்திருக்கிறேன் மீண்டும்
நீ...வரும் வரை!!!

ஹேமா(சுவிஸ்)

49 comments:

  1. அப்பாடா ஒருவழியா ஹேமாக்கு ஒன்னு போட்டாச்சு

    ReplyDelete
  2. அருமை .அற்புதம் ..

    எந்த ஒரு வரியயியும் தனியா பிரிச்சு பாராட்ட முடியல..ஒவ்வொரு வரியும் போட்டி போட்டு முன்னாடி நிக்குது...யதார்த்தமான உண்மை..

    சோகம் சும்மா கற்பனை கவிதை என்றே நம்புறேன்.....மற்றபடி சுகம் தானே ஹேமா

    ReplyDelete
  3. கவிதையில் சோகம் இழையோடி இருக்கின்ற போதும் கவிதை வரிகள் அருமை. அருவியாய் வார்த்தைகள் உணர்வுபூர்வமாக தெறித்து இருக்கிறது.

    ReplyDelete
  4. ஒவ்வொரு வரியையும் ரசித்தேன் தோழி. பிரிவின் வலியில் தோய்ந்த வரிகள்.

    ReplyDelete
  5. சுவாசத்தைத் தவறவிட்டாலும்
    இழுத்துப் பிடித்து
    உன் வாசத்தை மட்டுமாவது
    சேமித்து வைத்திருக்கிறேன்
    நுரையீரலுக்குள்.\\

    ஆஹா! அருமை ஹேமா!

    இந்த ஹேமாவைத்தான் தேடினோம்

    ReplyDelete
  6. கவிதை நன்றாக இருக்கிறது ஹேமா.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  7. நானும் ஏதோ இருக்கிறேன்.
    நீயும் சுகம்தானே!]]

    அட அதுக்குள்ளே சோகம் துவங்கிடிச்சா

    ReplyDelete
  8. //நுழைவாயில் தொடக்கம்
    நூர்ந்து உறங்கும் மெழுகுதிரி வரை
    துக்கம் உறைந்து கிடக்க
    நானும் ஏதோ இருக்கிறேன்.
    நீயும் சுகம்தானே!//

    நல்ல வரிகள்... மொத்தத்தில் எல்லாமே நல்ல வரிகளே....

    ReplyDelete
  9. இழுத்துப் பிடித்து
    உன் வாசத்தை மட்டுமாவது
    சேமித்து வைத்திருக்கிறேன்
    நுரையீரலுக்குள்.

    அசத்துறீங்களே.

    ReplyDelete
  10. எனக்குத் தெரியாமலேயே எனக்குள்
    குடியிருக்கிறாய் பார்த்தாயா!
    நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    நீருக்குள்ளேயே வாழும்
    சில உயிரினங்கள் போல.\\

    அருமை ஹேமா! நல்ல ஒப்பீடு

    ReplyDelete
  11. என்கிற வயதில் அருகில் உறவாய் நீ.
    வாழும் வயதைத்
    தவற விட்டவளாய் நான்.
    இனியும் விட்டு விடாமல்
    யுகங்கள் தொலையும் வரை
    இறுகப் பற்றியபடி.\\

    வருத்தமாகவும்

    நம்பிக்கையாகவும் இருக்கு.

    ReplyDelete
  12. கவிதை முழுவதும் சோகம் தெறித்தாலும், வரிகள் அத்தனையும் அருமை ஹேமா

    ReplyDelete
  13. உன் நினைவு நூல்களில்
    பட்டம் விடுவதைத் தவிர
    வேறு வழியில்லை
    என்றாகி விட்டது என் நிலைமை.
    அவலங்களின் நடுவில்
    அன்பின் ஆழத்தை
    இப்போதைக்குக் கண்டதாய்
    ஞாபகம் இல்லை.
    நான் என்னை நேசிப்பதை விட
    என் நிழலைக் கூட
    நீதானே நேசிக்கிறாய்.


    அருமை ஹேமா

    ReplyDelete
  14. நேற்றைய நிகழ்வுகள்
    இன்றைய நினைவாக.
    கடற்கரையில் உன் தோள் சாய்ந்ததும்,
    தாராக்களோடு பேசியதும்,
    வள்ளத்தில் தூண்டிலோடு போராடிய
    அந்த மூன்று மனிதர்களுக்காகக்
    கவலைப்பட்டதும்,

    அழகு தமிழ்

    கவிதை மிக நன்று

    ReplyDelete
  15. ரொம்பா நாள் கழித்து அருமையான வரிகள்

    ReplyDelete
  16. வாங்கோ நிலா அம்மா.நான் நல்ல சுகம்.இது ஒரு நினைவின் பதிவு.திரும்பத் திரும்ப இந்தப் பதிவைப் பார்க்கும்போது அந்த நிமிடத்துக்குள் மூழ்கிவிடுவேன்.

    ReplyDelete
  17. ஆனந்த்,திரும்பவும் நீங்கள் எங்களோடு இணைந்துகொள்வதில் நிறையச் சந்தோஷம்.உங்களுக்குத் தெரியாமலே உங்கள் ரசிகர் ஒருவர் இருக்கிறார்.உங்கள் பதிவு பார்த்து "ஏன் ஆனந்த் பதிவு எழுதாமல் நிறுத்துகிறார்" என்று என்னிடம் கேட்டார்.நன்றி ஆனந்த்.

    ReplyDelete
  18. வாங்க ஜெஸ்வந்தி.அன்பின் பிரிவைச் சொல்ல இது ஒரு வழியானது தோழி.

    ReplyDelete
  19. ஜமால்,பிரிவு என்கிறபோதே சோகம்தானே.என்றாலும் நம்பிக்கையோடு காத்திருப்பதுதான் வேதனை.

    நட்புடன் ஜமால்...
    //ஆஹா! அருமை ஹேமா!

    இந்த ஹேமாவைத்தான் தேடினோம்//

    என்றாலும் இயல்பாக என்னால் இயங்கமுடியவில்லை.உந்தி முயற்சிக்கிறேன்.நன்றி ஜமால்.

    ReplyDelete
  20. வாசு அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  21. கவிதை அழகு ஹேமா...
    ஹேமா ரிடர்ன்ஸ்...

    ReplyDelete
  22. இப்பத்தான் கடை களை கட்டுது

    ReplyDelete
  23. அசத்தலான வரிகளில்கூட சோகத்தை சொல்ல முடியும் என்று தெரிந்துகொண்டேன் இன்று... வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. படித்ததும் கரைந்து விட்டேன்... கனவுகளோடும் நினைவுகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் எவருக்கும் கண்களில் நீர் கோர்க்கும்

    ReplyDelete
  25. சந்ரு...//நல்ல வரிகள்... மொத்தத்தில் எல்லாமே நல்ல வரிகளே....//

    வாங்கோ சந்ரு.முழுமையாய் ரசித்திருக்கிறீர்கள்.நன்றி சந்ரு.

    ReplyDelete
  26. //S.A. நவாஸுதீன் ...
    கவிதை முழுவதும் சோகம் தெறித்தாலும், வரிகள் அத்தனையும் அருமை ஹேமா//

    வாங்க நவாஸ்.அன்பின் பிரிவு- சோகம் அநுபவித்தால் மட்டுமே புரியும்.நன்றி.

    ReplyDelete
  27. //சக்தி...அழகு தமிழ்
    கவிதை மிக நன்று.//

    வாங்க சக்தி.சிலசமயங்களில் கற்பனை அல்லாத நினைவுகள் அழகாக உணர்வோடு தமிழாகிவிடுகிறதோ...!நன்றி.

    ReplyDelete
  28. //அபுஅஃப்ஸர்... ரொம்பா நாள் கழித்து அருமையான வரிகள்//

    வாங்க அபு.சுகமா.ரொம்ப நாளுக்கு அப்புறமா சந்திக்கிறோம்.இனி அடிக்கடி சந்திப்போம்.நன்றி அபு.

    ReplyDelete
  29. http://nilamagal-nila.blogspot.com/2009/06/blog-post.html

    ReplyDelete
  30. Enakku theriyaamal enakkul kudiyirukkiraai paarthaayaa - Nuch varihal; Hema.

    ReplyDelete
  31. கவிதை அருமை
    அதன் வரிகளுக்கிடையில் மிளிரும் சோகம்
    ஆழமானது

    ReplyDelete
  32. கனநாளுக்குப் பின்னர் ஹேமா கவிதைப் பக்கம் வந்திருக்கிறியள்.
    கனமுடன் கவிதை கனக்கிறது. மனசில் துயர் அப்பிச் செல்கிறது.

    சாந்தி

    ReplyDelete
  33. //தமிழ்ப்பறவை ...
    கவிதை அழகு ஹேமா...
    ஹேமா ரிடர்ன்ஸ்...//

    தமிழ்ப்பறவை அண்ணா திரும்ப வந்தாலும் இப்படியான கவிதைகள் எழுத இன்னும் மனசுக்கு இல்லை.
    எழுதி வைத்த கவிதைதான் இது.ஏற்கனவே எழுதிய கவிதைகள் இன்னும் வரும்.

    ReplyDelete
  34. //நசரேயன் ...
    இப்பத்தான் கடை களை கட்டுது//

    நசரேயன் நீங்கதான் நித்தமும் கடை திறந்திட்டே இருக்கீங்களே.அதுவும் பேய்க்கடையா !

    ReplyDelete
  35. //குடந்தை அன்புமணி ...
    அசத்தலான வரிகளில்கூட சோகத்தை சொல்ல முடியும் என்று தெரிந்துகொண்டேன் இன்று... வாழ்த்துகள்.//

    அன்புமணி,முதன் முதலாக குழந்தைநிலாவுக்குள் வந்திருக்கிறீங்க.அனபான வணக்கம்.
    சோகமோ சுகமோ அடிக்கடி வாங்கோ.

    ReplyDelete
  36. வாங்கோ தோழி நிலாமகள்.உங்கள் பக்கம் வந்தேன்.இன்னும் வருவேன்.நேரத்தை இழுத்துப் பிடிக்கத்தான் கஸ்டமாயிருக்கு.
    இழுத்துக்கொண்டு கண்டிப்பாய் வருவேன்.சந்திப்போம்.

    ReplyDelete
  37. //Muniappan Pakkangal said...
    Enakku theriyaamal enakkul kudiyirukkiraai paarthaayaa - Nuch varihal; Hema//

    வாங்கோ வாங்கோ டாக்டர்.இனி உங்கள் பெயர் சொல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.பலநாடகள் சங்கடத்தோடேயே உங்கள் பெயரைப் பதிந்துகொண்டேன்.உங்கள் அன்பு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  38. //நேசமித்ரன் ...
    கவிதை அருமை அதன் வரிகளுக்கிடையில் மிளிரும் சோகம் ஆழமானது//

    வாங்க நேசமித்ரன்.முதன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.எந்தப் பக்கம் திரும்பினாலும் சோகமே வாழ்வாகிறது.என்னதான் செய்யலாம்!

    ReplyDelete
  39. //முல்லைமண் ...
    கனநாளுக்குப் பின்னர் ஹேமா
    கவிதைப் பக்கம் வந்திருக்கிறியள்.//

    வாங்கோ...வாங்கோ சாந்தி.
    உங்களைத் தமிழோடு தமிழால்...24 ல் தேடி அலுத்துப்போய் இருந்திட்டன்.அந்தச் சாந்திதானே நீங்கள் ?

    உங்கட "முல்லைமண்" அசத்தல்.
    பாத்திட்டுப் பேசாமல் வந்திட்டன்.

    ReplyDelete
  40. நினைவு பாலையை யார் கடந்தாலும்
    கூடவே பயணிக்கிற அயர்ச்சியும்,
    தொண்டை கமறலும் தவிர்க்க இயாலாது
    போய்விடுகிறது.திசைகளை சுழட்டுகிறது
    யதார்த்தமான அன்பும்,தேடலும்.
    வாழ்த்துக்கள் ஹேமா...

    ReplyDelete
  41. //இன்றும்...
    அதே சூரியனும்...தாராக்களும்
    வள்ளமும்...அந்த மனிதர்களும்
    அப்படியேதான்
    இன்றும் வந்து போவார்கள்.
    உன் தோள் இல்லாத நான் மட்டும்
    மீண்டும் தனிமைக்குள்.//

    "தேசத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் விடுவதாயில்லை நினைவுகளும் மனதுக்குப் பிடித்த நிழல்களும்..."

    ReplyDelete
  42. ஹேமா அற்புதம், வாழ்த்துக்கள். வரிகள் மின்னலேனத்தெரிக்கின்றன.

    ReplyDelete
  43. //பா.ராஜாராம்...திசைகளை சுழட்டுகிறது யதார்த்தமான அன்பும்,தேடலும்.
    வாழ்த்துக்கள் ஹேமா...//

    வாங்க பா.ரா.உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி.அன்பு மனிதனை ஆளவும் செய்யும் ஆட்டவும் செய்யும்.
    இன்னும் வரணும் நீங்க.

    ReplyDelete
  44. //சத்ரியன்..."தேசத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் விடுவதாயில்லை நினைவுகளும் மனதுக்குப் பிடித்த நிழல்களும்..."//

    சத்ரியன்,அன்பைத் தொலைத்துவிட்டால் நாங்கள் எல்லோரும் நல்ல மனநிலையோடு இருப்போமா என்பதும் கேள்விக்குறிதானே !

    ReplyDelete
  45. //கும்மாச்சி said...
    ஹேமா அற்புதம், வாழ்த்துக்கள். வரிகள் மின்னலேனத்தெரிக்கின்றன.//

    வாங்க....வாங்க கும்மாஞ்சி.
    சுகம்தானே.ஒரு தரமாச்சும் என்னைத் தேடினீங்களா?நன்றி வந்ததுக்கு.

    ReplyDelete
  46. //இன்றும்...
    அதே சூரியனும்...தாராக்களும்
    வள்ளமும்...அந்த மனிதர்களும்
    அப்படியேதான்
    இன்றும் வந்து போவார்கள்.
    உன் தோள் இல்லாத நான் மட்டும்
    மீண்டும் தனிமைக்குள்.//

    தனிமையின் தவிப்பை இணை இல்லாத வேற்று இடத்தை நிரப்ப அழகான வரிகள். வாழ்த்துக்கள் ஹேமா.

    ReplyDelete
  47. ஹேமா said...

    ஆனந்த்,திரும்பவும் நீங்கள் எங்களோடு இணைந்துகொள்வதில் நிறையச் சந்தோஷம்.உங்களுக்குத் தெரியாமலே உங்கள் ரசிகர் ஒருவர் இருக்கிறார்.உங்கள் பதிவு பார்த்து "ஏன் ஆனந்த் பதிவு எழுதாமல் நிறுத்துகிறார்" என்று என்னிடம் கேட்டார்.நன்றி ஆனந்த்.
    //

    அவர் யாருன்னு என்கிட்ட சொல்லக்கூடாதா ஹேமா?

    ReplyDelete
  48. நன்றி முகிலன்.உங்கள் வரவு இப்போ அடிக்கடி சந்தோஷமாயிருக்கு.

    ReplyDelete
  49. //கடையும் ஆனந்த்...அவர் யாருன்னு என்கிட்ட சொல்லக்கூடாதா ஹேமா?//

    உங்கள் ரசிகர்தான்.வேற யார்...!

    ReplyDelete