Sunday, March 22, 2009

நிலாக்கால நினைவுகள்....

பிடுங்கப்பட்ட நினைவுகளை
மீட்டெடுத்து நட்டுவிட
நிலாக்காலத்து நினைவுகளாய்.
தொலைத்துவிட்ட காலங்களுக்குள்
உலா வர ஒரு விநாடியா!
நன்றிதான்.

வீணை நரம்பைத் தட்டிவிட
அதிரும் தந்திகள் இசைத்து அடங்க
நேரமெடுப்பது போல்
அன்றைய நினைவுகளைத் தட்டிவிட்டால்
நிற்குமா மனம் ஒரு நொடியில்.

அது ஒரு அழகான காலம்.
எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.
குறும்புகளுக்குக் கோடு போட்டுக் கட்டிவிட
யார் அங்கே ? யாருமேயில்லை.
எண்ணக் கனவுகளையும்
இனிக்கும் இளமையையும்
ஏன் வறுமையையும்கூட
தடுக்காத மிடுக்கான பாதைகள்.

மல்லிகைப் பந்தலைத் தொட்டுத்தடவி வரும்
இதமான தென்றலோடு,
முற்றத்து மணல் குவியலில்
ஒற்றைத்திரி விளக்கின் வட்டத்தில்,
குந்தியிருக்க
தம்பியோடு தங்கையுமாய்
நீ முந்தி நான் முந்தியென்று
நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்.

அன்று எல்லாமே இருந்தது.
இன்று எல்லாம் இருந்தும் எதுமே இல்லாததாய்
தனிமையே துணையாய்.
ஏன் நிலவைத்தான் அண்ணாந்து பார்க்கத்தான்
அரைநிமிட நேரமுண்டா ?
நேர அட்டவணையோடு
ஒட்டிக்கொண்டு ஓடுகிறது கடுகதி வாழ்வு.
இயற்கை இல்லா இயந்திர நாட்டில்
இயல்பு இல்லா நாடக வாழ்வாய்.
ம்ம்ம்...சாப்பாடு முடிய கச்சேரி ஆரம்பம்.
சும்மாதான் தொடங்கும்.
பாட்டும்,கூத்தும்,வில்லுப் பாட்டுமாய்.
சுதி ஏற...ஏற உச்ச சுதியில்
தாள மேளத்தோடு தாண்டிப் போகும்.
பக்கத்து வேலியால் ஒத்துக்கு ஆளும் சேரும்.

சரியாப்போச்சு....
கார் ஒன்று "உர்"என்று உறுமி
வேம்பு வைரவர் ஒழுங்கைக்குள் இறங்க
ஒடுங்கிப்போய் ஒளிச்சுக்கொள்வோம் எல்லோரும்.
அம்மாவின் தம்பி.சின்னமாமா.
சந்தியில் மாடி வீடு.
தண்ணியில் மிதந்து "மருமக்களா" என்று நீந்தி வாறார்.
சித்தம் கலங்கி சட்டென்று சிட்டாய்ப் பறந்து
பதுங்கிக் கொள்வோம் கோழிக் குஞ்சுகளாய்.

இனி மாமாவின் கச்சேரி.
முகாரியாய் பொழிந்து நனைக்கும்.
நாடு போற்றிய நாதஸ்வரக் கலைஞர் அவர்.
இப்போ நம்மோடு இல்லை அவர்.
நினைவோடு மட்டுமே.
அவர் போதையில் அழ
அம்மா பாசத்தில் அழ
அங்கு பாசமலர் ஒன்றே அரங்கேறும்.
"அக்கா பசிக்குது சோறு தீத்திவிடு"
அம்மா "ஏண்டா ஐயா இப்பிடி உடம்பைக்
கெடுத்துக் கொள்கிறாய்"
அப்பப்பா...அந்த நிலவு கூட
கொஞ்சம் கலங்குமோ என்னமோ !

இப்படி இப்படி எத்தனை நினைவுகள்.
தொலைத்தோமா தவறவிட்டோமா !
இனியும் வருமா அந்த நிலாக்காலம்.
கனவில் மட்டும்தானா?
எண்ணித் தவிக்கையில்
வெறுமையைத் தவிர எதையுமே காணோம்.
பொத்திய நினைவுகள் பஞ்சு மெத்தையோடு.
ஓலைக் குடிசையில் கோரைப்பாயில்
கறையானோடு ஒடுங்கிப் படுத்த
பசுமையின் சுகம் சுமையாய் அழுத்த
இமையோடு என்றும் !!!

ஹேமா(சுவிஸ்)

70 comments:

  1. busy now...
    will comment after some time

    ReplyDelete
  2. தொலைத்த நினைவுகளை தேடு பயணமாய் கவிதை.. அருமை ஹேமா..

    ReplyDelete
  3. //தண்ணியில் மிதந்து "மருமக்களா" என்று நீந்தி வாறார்.
    சித்தம் கலங்கி சட்டென்று சிட்டாய்ப் பறந்து
    பதுங்கிக் கொள்வோம் கோழிக் குஞ்சுகளாய்.
    //



    :))

    ReplyDelete
  4. //வெறுமையைத் தவிர எதையுமே காணோம்.
    பொத்திய நினைவுகள் பஞ்சு மெத்தையோடு.
    ஓலைக் குடிசையில் கோரைப்பாயில்
    கறையானோடு ஒடுங்கிப் படுத்த
    பசுமையின் சுகம் சுமையாய் அழுத்த
    இமையோடு என்றும் !!!//


    நிலாக்கால நினைவுகள் மனதில் குதூகலம் கூத்தாடினாலும் இப்பொழுது சோகம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது :(

    சோகம் தீரும் சுகமானதொரு காலம் விரைந்து வரும் என்ற ஆறுதல் மட்டுமே என்னிடம் இருக்கிறது - நினைவுகளை போல நிஜமாக...!

    ReplyDelete
  5. வரிகள் ஒவ்வொன்றும் அருமை

    பழய நினைவுகளை அசைபோடுது

    ReplyDelete
  6. அது ஒரு கனாக்காலம். அசைபோட மட்டுமே ஆகிப்போன நாட்கள்.

    வாசிக்கும்போது நானும் அதில் என்னை கண்டேன்.

    மிக அருமை

    ReplyDelete
  7. வீணை நரம்பைத் தட்டிவிட
    அதிரும் தந்திகள் இசைத்து அடங்க
    நேரமெடுப்பது போல்
    அன்றைய நினைவுகளைத் தட்டிவிட்டால்
    நிற்குமா மனம் ஒரு நொடியில்.\\

    அருமை ஹேமா!

    நிற்குமோ மனம் ஒரு நொடியில் ...

    ReplyDelete
  8. எண்ணக் கனவுகளையும்
    இனிக்கும் இளமையையும்
    ஏன் வறுமையையும்கூட
    தடுக்காத மிடுக்கான பாதைகள்.\\

    வார்த்தைகள் மிடுக்காய் ...

    ReplyDelete
  9. இதமாய் உண்ட

    \\நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்\\

    மீட்டேடுத்து மீட்டி பார்ப்பதே ஒரு சுகம் தான்

    ReplyDelete
  10. //எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.//

    அருமையான வரிகள், கலக்குங்க.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  11. //எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்//

    நல்ல வரிகள்

    ReplyDelete
  12. \\பொத்திய நினைவுகள் பஞ்சு மெத்தையோடு.
    ஓலைக் குடிசையில் கோரைப்பாயில்
    கறையானோடு ஒடுங்கிப் படுத்த
    பசுமையின் சுகம் சுமையாய் அழுத்த
    இமையோடு என்றும் !!!\\

    வலிகள் சொல்லும் வரிகள்

    ReplyDelete
  13. //பிடுங்கப்பட்ட நினைவுகளை
    மீட்டெடுத்து நட்டுவிட
    நிலாக்காலத்து நினைவுகளாய்.
    தொலைத்துவிட்ட காலங்களுக்குள்
    உலா வர ஒரு விநாடியா!//

    அசத்தலான அருமையான ஆரம்பம்

    ReplyDelete
  14. //அது ஒரு அழகான காலம்.
    எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.
    குறும்புகளுக்குக் கோடு போட்டுக் கட்டிவிட
    யார் அங்கே ? யாருமேயில்லை.
    எண்ணக் கனவுகளையும்
    இனிக்கும் இளமையையும்
    ஏன் வறுமையையும்கூட
    தடுக்காத மிடுக்கான பாதைகள்.//

    கடந்து வந்த பாதையை திரும்பிபார்க்கும் போது ஏற்படுகின்ற வலிகளை வார்ததைகளால் சொல்லி தீர்த்து விட முடியாது. இருந்து மீட்டு பார்க்கும் போது கண்ணீரும் கவலையும் தான் மிஞ்சும் அக்கா.

    சூப்பர் வரிகள்.

    ReplyDelete
  15. //அன்று எல்லாமே இருந்தது.
    இன்று எல்லாம் இருந்தும் எதுமே இல்லாததாய்//

    ம்ம்ம்ம் உருக்கமான கவிதை.

    ReplyDelete
  16. "நிலாக்கால நினைவுகள்" குறுங்கதை அருமை ஹேமா, பாராட்டுக்கள்.

    சின்ன வயதில் தடம் பதித்த நினைவுகள் எல்லாம் என்றும் எம் மனதில் அழியாத கோலங்கள் தான் ஹேமா.

    ReplyDelete
  17. "நினைவுகள், நாளங்கள் வழி உள்நுழைந்து நாடக நடிகன் போல் நடிக்கின்றன" என்பது எனது ஒரு கவிதையில் வரும் வரிகள். நினைவுகள் என்பது சிலசமயம் நமக்கு ஒரு சுகபோஜனம். அதீத போகம் எப்படி நம்மை ஆழ்த்தி அமுழ்த்துகிறதோ அதைப் போன்று நினைவுகள் நம்மை அமுக்கிவிடும்..

    வழக்கமான சொல்லாடல்கள் இல்லாத மாறுபட்ட கவிதையிது>. ஏனெனில் ஒவ்வொரு முறறயும் சொல்லாடல்களை எதிர்பார்ப்பது பிழையாம். பிடுங்கப்பட்ட நினைவுகளை நட்ட வைக்கும் உங்கள் வரிகள் உண்மையிலேயெ அருமை!!!

    வாழ்த்துகள் சகோதரி!!

    ReplyDelete
  18. Pidungappatta ninaivugal-nila kala ninaivugal,aarampame nach Hema.

    ReplyDelete
  19. கடந்த நாலைந்து நாட்களாக உங்கள் பதிவு எதையும் என்னால் ஓபன் பண்ணிப்பார்க்க இயலவில்லை...எதுவும் டெக்னிக்கல் புராப்ளமா..?

    ReplyDelete
  20. அன்பின் ஹேமா,

    கவிதையில் கலந்து விட்டேன்.

    >> மல்லிகைப் பந்தலைத் தொட்டுத்தடவி வரும்
    இதமான தென்றலோடு,
    முற்றத்து மணல் குவியலில்
    ஒற்றைத்திரி விளக்கின் வட்டத்தில்,
    குந்தியிருக்க
    தம்பியோடு தங்கையுமாய்
    நீ முந்தி நான் முந்தியென்று
    நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்.>>

    அற்புதமான உணர்வுகளை அள்ளித் தெளித்துள்ளீர்கள்.

    அன்புடன்
    சக்தி

    ReplyDelete
  21. கவிதை பதிவிட்டு 10 நிமிடத்திற்குள் ரசித்து இருக்கிறீர்கள்.முதலாவதாக ஓடி வந்து கருத்தும் தந்தீர்கள்.

    பெயர் சொல்லியிருக்கலாம்.பெயர் சொல்ல இவ்வளவு கூச்சமா?
    நன்றி தோழரே.

    ReplyDelete
  22. மேவி,நீங்கள் இரண்டாவது இடம்தான் இன்று.ஆறுதலாக வந்து கும்மியடிக்காமல் நல்ல பின்னூட்டம் தாங்கோ.

    உண்மையில் உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேணும்."நான் கடவுள்"
    என்னைச் சிந்திக்கவைத்துவிட்டது.
    தேடிப் பொறுக்கிச் சொற்கள் கோர்த்து எடுத்தேன் கவிதைக்காக.நீங்கள் தலைப்புத் தராவிட்டால்,இவ்வளவு அக்கறை எடுத்திருக்கமாட்டேன்.
    நன்றி மேவி.

    மேவி,சந்தோஷமாக எங்கள் நாட்டை நினைத்து ஒரு கவிதை எழுதக் கேட்டீர்கள்.முடியுமா இன்றைய சூழ்நிலையில்.இப்போ செய்தியில் கூட ஒரு பல்கலைக்கழக மாணவி மன அழுத்தத்தால் தீக்குளித்திருக்கிறார்.வன்னியில் குழந்தைகள் உட்பட 79 பொதுமக்கள் இராவணுவத்தினரால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.எப்படி கவிதை?அதுவும் ஹேமா (இலங்கை).

    ReplyDelete
  23. வாங்க கார்த்திகைப் பாண்டியன் மூன்று நாட்களாக விடுமுறையில் வீட்டில் நிற்கிறேன்.ஏனோ மனதைப் பிசைந்தெடுக்கிறது வீட்டு நினைவு.
    அதுதான் கொட்டிவிட்டேன்.

    ReplyDelete
  24. SUREஷ்,எங்கே உங்களை காணக் கிடைக்கவே மாட்டுதாமே.என்னமோ சொல்ல நினைச்சு சொல்லாமலே போய்ட்டீங்களே !

    ReplyDelete
  25. ஆயில்யன் எங்க ரொம்ப நாளாக் காணோம் குழந்தைநிலாப் பக்கம்.
    அழகான ஒரு குட்டிப் பொண்ணு போட்டோ பாத்தேன் உங்க பதிவில.ரொம்ப அழகு கறுப்பு வெள்ளையில்.போட்டோப் போட்டியில் ரொம்ப பிஸியோ?

    ReplyDelete
  26. அபு,வாங்க.மனதை எப்போதும் அசைத்து வலிக்க வைக்கும் நினைவுகள் வரிகளாகின இன்று.

    ReplyDelete
  27. வாங்க இயற்கை.நாலு சொல்லு நல்லதா சொல்லக்கூடாதோ !

    ReplyDelete
  28. செய்யது அகமது நவாஸ்,வீட்டை விட்டு,ஊரை விட்டு வந்திருக்கும் எல்லோரின் மனதையுமே கிளறிவிட்டதோ இந்தக் கவிதை.
    சந்தோஷம்.

    ReplyDelete
  29. ஜமால் என்னாச்சு.உங்க பதவியை இப்போ எல்லாம் மேவி தட்டிக்கிறார் சிலசமயம்.

    என்றாலும் உங்கள் நினைவுகளையும் மீட்டி மிடுக்கான பின்னூட்டங்கள்.நன்றி ஜமால்.

    ReplyDelete
  30. வாங்க ஜோதிபாரதி.ரசித்து கருத்துக்கும் கூட.

    ReplyDelete
  31. //அகநாழிகை ...
    //எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.//

    அருமையான வரிகள், கலக்குங்க.//

    உண்மைதானே அகநாழிகை.நான் அப்படித்தான் உணர்ந்திருக்கிறேன் சின்ன வயசில்.கட்டுக்கடங்காத சுட்டித்தனமும்,கட்டி வைக்கும் பெற்றோரும்.

    ReplyDelete
  32. வணக்கம்ஆ.முத்துராமலிங்கம்.
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  33. //கலை -இராகலை...கடந்து வந்த பாதையை திரும்பிபார்க்கும் போது ஏற்படுகின்ற வலிகளை வார்ததைகளால் சொல்லி தீர்த்து விட முடியாது. இருந்து மீட்டு பார்க்கும் போது கண்ணீரும் கவலையும் தான் மிஞ்சும் அக்கா.//

    கலை,மன அழுத்தங்களை இப்படித்தான் குறைத்துக் கொள்ள முடிகிறது.இல்லை தற்கொலைக்குகூட மனம் நாடும்.

    ReplyDelete
  34. //ஈழவன்...சின்ன வயதில் தடம் பதித்த நினைவுகள் எல்லாம் என்றும் எம் மனதில் அழியாத கோலங்கள் தான் ஹேமா.//

    ஈழவன்,குழந்தைநிலாவைக் கவனித்தபடிதான் இருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  35. ஆதவா,இது மனதில் வலி.இங்கே சொல்லாடல்கள்é குறைவு.ஆனால் மனதில் பாடல்கள் நிறைய.

    ReplyDelete
  36. முனியப்பன் உண்மையிலேயே பிடுங்கப்பட்ட நினைவுகள்தான்.
    மீண்டும் மீண்டும் நட்டு வாடாமல் அழகு பார்த்துக்கொள்கிறேன் சில சமயங்களில்.

    ReplyDelete
  37. //கீழை ராஸா...
    கடந்த நாலைந்து நாட்களாக உங்கள் பதிவு எதையும் என்னால் ஓபன் பண்ணிப்பார்க்க இயலவில்லை...
    எதுவும் டெக்னிக்கல் புராப்ளமா..?//

    கீழை ராஸா,அப்படி எதுவும் இல்லையே.என்றாலும் இன்று வர வழி கிடைத்ததே !வாங்க.

    ReplyDelete
  38. //சக்தி சக்திதாசன் ...
    அன்பின் ஹேமா,

    கவிதையில் கலந்து விட்டேன்.//

    அன்பின் சக்திதாசன்,உங்களையும் இழுத்து போனதா இளமைக் காலத்திற்கு.குழ்ந்தைநிலா இப்படி பழைய நினைவுகளை அடிக்கடி மீட்டிக் கொள்வாள்.கை கோர்த்து ஆறுதல் தேடிக்கொள்வோம்.இன்னும் வாருங்கள்.

    ReplyDelete
  39. "மேவி,சந்தோஷமாக எங்கள் நாட்டை நினைத்து ஒரு கவிதை எழுதக் கேட்டீர்கள்.முடியுமா இன்றைய சூழ்நிலையில்.இப்போ செய்தியில் கூட ஒரு பல்கலைக்கழக மாணவி மன அழுத்தத்தால் தீக்குளித்திருக்கிறார்.வன்னியில் குழந்தைகள் உட்பட 79 பொதுமக்கள் இராவணுவத்தினரால் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.எப்படி "


    illainga...
    pavamunga avanga...
    ivvalavu sogam avagalukku....
    aruthalaai irukkume...
    irukkatume antha kavithai ....


    kavithaikku nna pinnottam piragu podugiren...
    ippo kojam busy

    ReplyDelete
  40. //அது ஒரு அழகான காலம்.
    எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.//

    வித்தியாசமான சிந்தனை ஹேமா...மிகவும் ரசித்தேன் இந்தவரிகளை...

    ReplyDelete
  41. //மல்லிகைப் பந்தலைத் தொட்டுத்தடவி வரும்
    இதமான தென்றலோடு,
    முற்றத்து மணல் குவியலில்
    ஒற்றைத்திரி விளக்கின் வட்டத்தில்,
    குந்தியிருக்க
    தம்பியோடு தங்கையுமாய்
    நீ முந்தி நான் முந்தியென்று
    நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்.//

    சிறு வயது நினைவுகளை கண் முன்பு கொண்டு வருகிறது...

    //ஏன் நிலவைத்தான் அண்ணாந்து பார்க்கத்தான்
    அரைநிமிட நேரமுண்டா ?
    நேர அட்டவணையோடு
    ஒட்டிக்கொண்டு ஓடுகிறது கடுகதி வாழ்வு.
    இயற்கை இல்லா இயந்திர நாட்டில்
    இயல்பு இல்லா நாடக வாழ்வாய்//

    உண்மை தான் இந்த இயந்திர உலகில் நாமும் இயந்திரமாய் சிறுகச்சிறுக மாறித்தான் போகிறோம்...

    ReplyDelete
  42. //இப்படி இப்படி எத்தனை நினைவுகள்.
    தொலைத்தோமா தவறவிட்டோமா !
    இனியும் வருமா அந்த நிலாக்காலம்.
    கனவில் மட்டும்தானா?//

    இந்த நிலாக்கால நினைவுகள் மீண்டும் வந்தால் சுகமாகத்தானிருக்கும் இல்லையா ஹேமா...ம்...பார்க்கலாம்...

    ReplyDelete
  43. //கலை,மன அழுத்தங்களை இப்படித்தான் குறைத்துக் கொள்ள முடிகிறது.இல்லை தற்கொலைக்குகூட மனம் நாடும்.//

    அய்யயோ இப்படியெல்லாம் சொல்ல கூடாது அக்கா. நீங்க கவிதையே எழுதுங்க,
    ஓகேவா?

    ReplyDelete
  44. அது ஒரு அழகான காலம்.
    எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.////

    ஆமால்ல....மீண்டும் வருமா....?
    ------------------------------

    ஏன் நிலவைத்தான் அண்ணாந்து பார்க்கத்தான்
    அரைநிமிட நேரமுண்டா ?////

    இதுக்கு மட்டும் எனக்கு எப்போவும் நேரம் இருக்கு...எனக்கு வானத்தில் நிலவைப் பார்த்த என் நிலாவைப் பார்ப்பது போல் .....
    --------------------------
    இப்படி இப்படி எத்தனை நினைவுகள்.
    தொலைத்தோமா தவறவிட்டோமா !
    இனியும் வருமா அந்த நிலாக்காலம்.
    கனவில் மட்டும்தானா?
    எண்ணித் தவிக்கையில்
    வெறுமையைத் தவிர எதையுமே காணோம்.///////

    தொலைந்தவைகளை அசை போட அசை போட அவை என்றும் நீங்க நினைவுகளே
    -----------------------------
    அருமை அருமை அருமை

    ReplyDelete
  45. தொலைந்த நினைவுகளை வரிசைப் படுத்த பக்கங்கள் போதாது என்பதே என் எண்ணம்!

    ReplyDelete
  46. ஒவ்வொரு நினைவையும் அழகா நினைவுபடுத்தி இருக்கீங்க ஹேமா:)

    ReplyDelete
  47. அன்று எல்லாமே இருந்தது.
    இன்று எல்லாம் இருந்தும் எதுமே இல்லாததாய்
    தனிமையே துணையாய்.
    ஏன் நிலவைத்தான் அண்ணாந்து பார்க்கத்தான்
    அரைநிமிட நேரமுண்டா ?
    நேர அட்டவணையோடு
    ஒட்டிக்கொண்டு ஓடுகிறது கடுகதி வாழ்வு.
    இயற்கை இல்லா இயந்திர நாட்டில்
    இயல்பு இல்லா நாடக வாழ்வாய்.//



    நானும் இங்கே நிலாவைக் காண்பது அரிதிலும் அரிது???

    ReplyDelete
  48. இப்படி இப்படி எத்தனை நினைவுகள்.
    தொலைத்தோமா தவறவிட்டோமா !
    இனியும் வருமா அந்த நிலாக்காலம்.
    கனவில் மட்டும்தானா?
    எண்ணித் தவிக்கையில்
    வெறுமையைத் தவிர எதையுமே காணோம்.
    பொத்திய நினைவுகள் பஞ்சு மெத்தையோடு.
    ஓலைக் குடிசையில் கோரைப்பாயில்
    கறையானோடு ஒடுங்கிப் படுத்த
    பசுமையின் சுகம் சுமையாய் அழுத்த
    இமையோடு என்றும் !!!//



    ஹேமா எல்லாவற்றையும் சேமித்து வைப்போம்? இனி எவையுமே திரும்பி வராது போல?? எங்க எதிர்காலச் சந்ததிக்குக் காட்டி நாங்கள் பின்பொரு காலத்தில் எமது நினைவுகளாக மீட்டிக் கொள்ளலாம்?? என்ன செய்வோம்?? இழந்தவைகள் இனிக் கிடைக்குமா???

    ReplyDelete
  49. கலை பயப்படவேணாம் இன்னும் அந்த நிலைக்கு மனம் வரவில்லை.என் கட்டுக்குள்தான் மனம் இன்னும் இருக்கிறது.

    ReplyDelete
  50. //புதியவன்...உண்மை தான் இந்த இயந்திர உலகில் நாமும் இயந்திரமாய் சிறுகச்சிறுக மாறித்தான் போகிறோம்...

    இந்த நிலாக்கால நினைவுகள் மீண்டும் வந்தால் சுகமாகத்தானிருக்கும் இல்லையா ஹேமா...ம்...பார்க்கலாம்...//

    புதியவன்,இயந்திரங்களாக மாறின பிறகும் நிலாக்கால நினைவுகளால்தான் கொஞ்சமாவது மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  51. //நிலா அம்மா...இதுக்கு மட்டும் எனக்கு எப்போவும் நேரம் இருக்கு...எனக்கு வானத்தில் நிலவைப் பார்த்த என் நிலாவைப் பார்ப்பது போல் .....//
    நிலாக்குட்டி சுகம்தானே ! நிலாவால் அம்மாவுக்கு ரொம்பவே பெருமையும் இறுமாப்பும்.

    //தொலைந்தவைகளை அசை போட அசை போட அவை என்றும் நீங்க நினைவுகளே//

    அசை போட அசை போட ஆசையும் கூடுகிறதே.தொலைந்த காலங்கள் வேணும்ன்னு.

    ReplyDelete
  52. //பூர்ணிமா ...
    தொலைந்த நினைவுகளை வரிசைப் படுத்த பக்கங்கள் போதாது என்பதே என் எண்ணம்//

    உண்மைதான் பூர்ணி.கோர்தெடுத்தால் ஒரு பதிவே போடலாம்.

    ReplyDelete
  53. //கமல்..ஹேமா எல்லாவற்றையும் சேமித்து வைப்போம்? இனி எவையுமே திரும்பி வராது போல?? எங்க எதிர்காலச் சந்ததிக்குக் காட்டி நாங்கள் பின்பொரு காலத்தில் எமது நினைவுகளாக மீட்டிக் கொள்ளலாம்?? என்ன செய்வோம்?? இழந்தவைகள் இனிக் கிடைக்குமா???//

    கமல்,நீங்கள் சொல்றதைப் பாக்க நெஞ்சு"பக்"எண்டு பயமாக்கிடக்கு.

    ReplyDelete
  54. நினைவுகளை எழுத ஆரம்பித்துவிட்டால் எழுதுகோல் போதுமா?! இல்லை எழுதும் தாள் தான் போதுமா?!

    அழகிய பகிர்வு ஹேமா!

    ReplyDelete
  55. உள்ளேன்..உள்ளேன் .
    நல்ல கொசுவத்தி

    ReplyDelete
  56. //பிடுங்கப்பட்ட நினைவுகளை
    மீட்டெடுத்து நட்டுவிட
    நிலாக்காலத்து நினைவுகளாய்.
    தொலைத்துவிட்ட காலங்களுக்குள்
    உலா வர ஒரு விநாடியா!

    வீணை நரம்பைத் தட்டிவிட
    அதிரும் தந்திகள் இசைத்து அடங்க
    நேரமெடுப்பது போல்
    அன்றைய நினைவுகளைத் தட்டிவிட்டால்
    நிற்குமா மனம் ஒரு நொடியில்.//

    நினைவிற்கு நொடி கணக்கா ??? இடிகனக்கா வலிக்குது ...

    //அது ஒரு அழகான காலம்.
    எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.
    குறும்புகளுக்குக் கோடு போட்டுக் கட்டிவிட
    யார் அங்கே ? யாருமேயில்லை.
    எண்ணக் கனவுகளையும்
    இனிக்கும் இளமையையும்
    ஏன் வறுமையையும்கூட
    தடுக்காத மிடுக்கான பாதைகள்.//

    வார்த்தைகள் வற்றாத காட்டாறாய்...

    //அன்று எல்லாமே இருந்தது.
    இன்று எல்லாம் இருந்தும் எதுமே இல்லாததாய்
    தனிமையே துணையாய்.//

    அருமை ...

    //பதுங்கிக் கொள்வோம் கோழிக் குஞ்சுகளாய்.//
    என்ன ஒரு அழகான பதுங்கல்.

    மொத்தத்தில் அழகான வலி ...

    ReplyDelete
  57. //நசரேயன்...
    உள்ளேன்..உள்ளேன் .
    நல்ல கொசுவத்தி//

    நன்றி வாங்க நசரேயன்.அது என்ன கொசுவத்தி?ரொம்ப புகையா இருக்கோ !புரியல.

    ReplyDelete
  58. வாங்க ஷீ-நிசி.இன்னும் நினைவுகள் நிறைய இருக்கு.எழுதினா சிலநேரம் சிலபேருக்கு அலுப்பு.

    ReplyDelete
  59. //இரவீ...நினைவிற்கு நொடி கணக்கா ??? இடிகனக்கா வலிக்குது ...//

    இரவீ இது ஒரு வானொலிக்காகவும் முன்பு எழுதியதைக் கொஞ்சம் சேர்த்தேன்.அவர்கள் ஒரு நொடிக் கவிதை கேட்டிருந்தார்கள்.

    //மொத்தத்தில் அழகான வலி ...//
    உண்மையில் மனசைப் புரட்டிப் போடும் வலியும் மருந்தும்.

    ReplyDelete
  60. ஹேமா என்ன சொல்ல்வது என்று தெரியவில்லை......

    வரிகள் ஓவொன்றும் அருமை ....

    எனக்கு திருச்சி நியாபகம் வந்துருச்சு .....

    என் சொர்க்கம் திருச்சி-13 & 14 தான் ....

    கவிதை படித்த பின் ஒரு வித ஏக்கம் மனசு ல வந்துருச்சு .....

    கொஞ்சம் அழுதுவிட்டேன் .....


    கவிதை மொத்தத்தில் அழகு , அருமை ......

    ReplyDelete
  61. Hi kuzhanthainila,
    Congrats!

    Your story titled 'நிலாக்கால நினைவுகள்.... ஹேமா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd March 2009 05:10:02 PM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/43396

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  62. மேவி,எல்லோருக்குமே பிரிவு என்பதும் அதில் கலந்த இளமைக் காலங்களும் ஒரு நிலாக்காலம்தான்.
    உங்களையும் பாதித்துவிட்டதா.என்ன செய்யலாம்.காலத்தின் கடமைகளோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறதே.
    கலங்க வேணாம்.

    ReplyDelete
  63. //இயற்கை இல்லா இயந்திர நாட்டில்
    இயல்பு இல்லா நாடக வாழ்வாய்.//

    நன்று.....

    ReplyDelete
  64. கனமான விரிகள்!

    ReplyDelete
  65. அது ஒரு அழகான காலம்.
    எங்கள் வீடுகளில் நாங்களே செல்லப்பிராணிகள்.
    குறும்புகளுக்குக் கோடு போட்டுக் கட்டிவிட
    யார் அங்கே ? யாருமேயில்லை.
    எண்ணக் கனவுகளையும்
    இனிக்கும் இளமையையும்
    ஏன் வறுமையையும்கூட
    தடுக்காத மிடுக்கான பாதைகள்.

    மல்லிகைப் பந்தலைத் தொட்டுத்தடவி வரும்
    இதமான தென்றலோடு,
    முற்றத்து மணல் குவியலில்
    ஒற்றைத்திரி விளக்கின் வட்டத்தில்,
    குந்தியிருக்க
    தம்பியோடு தங்கையுமாய்
    நீ முந்தி நான் முந்தியென்று
    நிலாச்சோறு தின்ற அந்த நாட்கள்.
    // அருமை! முடிந்தால் என்னுடைய வலைப்பக்கத்தில் உள்ள கவிதைகளைப் படித்து கருத்தினைப் பகிரலாமே! நன்றியுடன்
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete