ஈரூற்றுக் குருதியின் பெருவலியோடு
வானம் கூடடைகிறது ஒற்றையாய்.
இந்நிகழ்வுக்குத் தேவையாய்
கண்களைக் குளிப்பாட்டித் திரும்ப
வானவில் சமைக்கும்
நிறுத்தல் குறிகளின் விளம்பல்.
தேவையற்ற அலங்காரமும்
பரப்பிய பூவும்
தட்டோடு காத்திருக்கும்
பழங்களும் பாவம்.
ஆதிமனிதன் தின்று
போட்ட விதையில்
முளைத்த முத்தக்கோட்பாடு
எச்சிலாய் வழியும்
அக்கினிக்குச் சாட்சியாய்.
ஏன் இத்தனை
ஆயுதக் கண்கள் கொக்கியாய்
இங்கவிழும் ஆடைக்குள்.
அவசியமற்றது.....
கனவுகளைத் தின்ற
இந்த இரவும் முடியும்
போதும்
மிச்சம் மிச்சமென
தாய் சேய் நலமென்பதோடு!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
வதை முகாம்களில்
தூர நிற்கும்
முள்வேலியோர
அன்பு முத்தம் !
வானவில்லென
ஏமாறும் மீசையில்
பெருமழையென
வான் முத்தம் !
இரத்தநாளங்களைச் சீராக்க
மென்சகியாய்
வேப்பமரத்தடிக் காற்றின்
மூலிகை முத்தம்!
பூனையாய் பொய்யுடுத்தி
நாசி தேடி
பிரிய மூக்கில்
பால் குடிக்கும்
திருட்டு முத்தம் !
மாராப்புச் சேலைக்குள்
இல்லாத பால்தேடி
பல் செருகி வலிக்கவைக்கும்
பாச முத்தம் !
வனம் தொலைத்த ஓரிறகு
உலர்ந்துவிட்ட இரவுகளில்
வனாந்தரமென மடிசாயும்
உதிரா முத்தம் !
மகோன்னதப் போரில்
எம்பி வீசும் வாளில்
தோல்வி தரும்
வெற்றி முத்தம் !
நெருப்பில் வெடித்த
'ஓக்' மர விதைக்கு
இரத்தம் சொரிந்து
வேரை ஈரமாக்கும்
வீரத்தமிழ் முத்தம் !
குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)
பழைய சொற்களோடுதான்
அவர்கள்
ஆட்கள் மாறிக்கொண்டு
எங்களையும் மாற்றாமல்
மாற்றிக்கொண்டு.
பிரகாசமாய்
புத்தனைக் கண்டேன்
பாதுக்காக்கும் தன் பல்லால்
பழைய சொற்களை
அவர்கள் தீட்டிப் புதிதாக்க
வாய்திறவா
தன் சொற்களோடு
மத்தியில்.
நித்திய பாவனையில்
கண்ணை மூடி
பெருங்காதுகளில்
சேமித்த படிமங்களோடு
தனித்திருந்தான்.
எப்போதோ....எப்போதோ
புத்தன் கண்ணொளி பறித்து
பரணில் பதுக்கியதாக
தேசியம் பேசும்
ஒரு பிக்கு.
சமத்துவம் சொல்லும்
'மைத்திரி' க்களும்
'சிறீ' க்களும்
புத்தனின் ஒளிவட்டத்தை
தம் தலையில்
பொருத்தியிருக்கிறார்கள்.
துவக்குகளற்ற தேசத்தில்
'துட்டகைமுனு' க்களும்
'காமினி' க்களும்
'ரணில்' களும்
இந்திய
'மோடி' க்களும்
மாடி உலகமும்
புத்தனை பேசவிடாமல்
பேசிக்கொண்டிருக்க...
அவன் கண்மூடியபடிய
திறந்த பெருங்காதுகளோடு
எப்போதும்போல
வேறு வழியின்றி!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
மூடிக்கிடந்த விழியில்
ஒளியள்ளி வீசிவிட்டு
ஒளிகிறான் ஒரு திருடன்.
கரகரக்கும் இமை உதற
கருநீலக் கண்ணனாய்
சிறைப்பட்ட காற்றாய்
மெல்லக் கசிகிறான்
எங்குமிசைக்கிறான்
ஏதோ ஒவ்வொன்றிலும்
அது அதுவாய்.
காதல் குடில்
புல்லாங்குழல் வேலி
நகரா இசைக்குள்
சுற்றிவளைக்கப்பட்ட
அவன் நினைவுகள் தவிர
ஏதுமில்லை மீட்ட.
மண்பூத்த பனிப்பூவில்
சிலிர்த்து மலர்கிறது
தூரத்துக் காதல்.
அகதிக்காதல் என்கிறேன்
நான்...
அவனோ...
அதிகாலைக் காதலென்கிறான்!!!
குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)
கனவின் கால்களில்
அரூபப் பேயெனத் தொங்கும்
அன்புப்பேய்.
காலாவதித் திகதியிட்டு
அடைபட்ட புட்டிப்பால்போல
அவதிப்படும் பாசம்.
நிராதரவின் வார்த்தைகளில்
இறுகச் சாத்திய கதவுகளில்
முறுக்கிக்கொண்ட அகம்பாவம்
சாவிகளில் துருவேறியபடி.
பகலில்
பிசுபிசுக்கும் காம இடுக்குகளை
கவிதைகளில்
எழுதிக் கிழித்துவிட்டு
இரவின் ஆழங்களில்
அமைதியற்ற படுக்கை.
பசியோடுதான்
ஆனாலும் கொத்த மறந்த பாம்பு...
ஓட்டைகள்தான்
பிணைப்பை விடாத கதவு...
முடியாத் தூரம்தான்
எச்சில் படாத முத்த ஓசை...
ஆழக்கடல்தான்
புயலில் கப்பலோட்டும் மாலுமி...
வெறுப்புத்தான்
ஒட்டிக்கொள்ளும் அகதி வாழ்க்கை...
அடித்து அழித்தவர்கள்தான்
அனுசரிக்கச் சொல்லும் சமூகம்...
நிதர்சனம் இதுதான்...
எனவே...
என்னவனே
வந்துவிடு
உனக்கான
பிரியத்தின் வாசனையை
இதழ் முட்டிய
முத்தத்தை
பெற்றுக்கொள் இப்பொழுதே
இக்கணமே!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
அழகாய்
என் நிலவு
கடலாடி
மீண்டும் புதிதாய்
பிறக்கிறது இன்று.
பெருமதிப்பிற்குரிய
கடவுளே
என் தேவதைக்கு
என் சுட்டுவிரல்
வாழ்த்துகள்
செல்ல வேண்டுகிறேன்.
ஒளி அளவு
உயர்கிறது ஒன்பதாய்.
வாழ்வை
சுகமாய்
மகிழ்ச்சியாய்
எதிர்கொள் செல்லப்பூவே.
பிடித்த மணிக்கூடு
வடிவான சப்பாத்து
உன் அறைச் சித்திரங்கள்
தோள் தேடும் பொம்மைகள்
கடந்த நிமிடங்கள்
கடக்கும் நிமிடங்கள்
உன் அதிகாலைச் சேட்டைக்காய்
காத்திருக்கும்
பிறந்தநாள் பாடலோடு.
காவல் கோடுகள் தாண்டி
கைகளில்லாக் கடவுளிடம்
உனக்கான முத்தத்தையும்
சின்னப் புன்னகையும்
அனுப்பி வைக்கிறேன்
வாங்கிக்கொள்
என் சின்னவளே.
மிடுக்கற்ற
கர்வமற்ற
திமிரற்ற
அன்பான
எள்ளுப்பூவாய் சிரித்திரு
தமிழாய் நிலைத்திரு
ஆழப் புதைந்து
செழித்து வளர் தாயே!!!
வரங்கள் வேண்டியொரு
வானம்
புத்தம் புது நிலவுக்காய்.
கைரேகைகளும் கற்சிலைகளும்
நிர்ணயிப்பதில்லை
கருமுட்டை உடைவதை
தன்னலகே தள்ளி வரும்
உலகுகாண.
முடியும் வாழ்வில்
முடிவற்றதாய் நீளும்
நம்பிக்கை நுனிகளில்
இருந்துகொண்டு
சபிக்கிறேன்
தெருவோர வெளிச்சங்களை.
சிந்தலாம் இன்றோ நாளையோ
சபித்த என்மீது
சில மழைத்துளிகள்
அதில்
எரிவதும் அணைவதும்
என் பொறுப்பு.
இப்போ....
தந்து போகும் இவ்வுலகு
எனக்கொரு பெயர்.
விட்டிலையும் விளக்கையும்
வேடிக்கை பார்த்தவள் நான்
நானே விட்டிலாயும்
விளக்காயும் ஒருநாள்!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)