Friday, March 13, 2015

இரவின் முணுமுணுப்பு...

கனவின் கால்களில்
அரூபப் பேயெனத் தொங்கும்
அன்புப்பேய்.

காலாவதித் திகதியிட்டு
அடைபட்ட புட்டிப்பால்போல
அவதிப்படும் பாசம்.

நிராதரவின் வார்த்தைகளில்
இறுகச் சாத்திய கதவுகளில்
முறுக்கிக்கொண்ட அகம்பாவம்
சாவிகளில் துருவேறியபடி.

பகலில்
பிசுபிசுக்கும் காம இடுக்குகளை
கவிதைகளில்
எழுதிக் கிழித்துவிட்டு
இரவின் ஆழங்களில்
அமைதியற்ற படுக்கை.

பசியோடுதான்
ஆனாலும் கொத்த மறந்த பாம்பு...

ஓட்டைகள்தான்
பிணைப்பை விடாத கதவு...

முடியாத் தூரம்தான்
எச்சில் படாத முத்த ஓசை...

ஆழக்கடல்தான்
புயலில் கப்பலோட்டும் மாலுமி...

வெறுப்புத்தான்
ஒட்டிக்கொள்ளும் அகதி வாழ்க்கை...

அடித்து அழித்தவர்கள்தான்
அனுசரிக்கச் சொல்லும் சமூகம்...

நிதர்சனம் இதுதான்...

எனவே...
என்னவனே
வந்துவிடு
உனக்கான
பிரியத்தின் வாசனையை
இதழ் முட்டிய
முத்தத்தை
பெற்றுக்கொள் இப்பொழுதே
இக்கணமே!!!

குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)

1 comment:

  1. இருப்புப் பாதையின் இடைவெளிதான் ஹேமா.... கனவுக்கும் வாழ்க்கைக்கும்... வாழ்க்கை கனவாகிப் போவதை விட, கனவே வாழ்க்கையாதல் ஒரு வரமே அல்லவா...

    ReplyDelete