திண்மை அடைத்து
காற்றுவெளி மேவி
பொன்வண்டொத்த
சிறகையும் ஒட்டிவிட்டு
அடையாளத்திற்காய்
ஒற்றைக்கல் வைத்து
கால் மடித்து காத்திருக்கிறது
அந்த விநோதக் காற்று.
புதுப்பித்தல் பற்றிய
மரணித்த வாசகங்கள்
கொண்டு வந்த கானத்தில்
உப்பின் அடர்த்தி குறைத்து
பறக்க முயற்சிக்கிறது
ஒரு மோனரிதப் பூ.
என்றோ உதிர்த்துவிட்ட
சருகின் சப்தம்
விழிக்குள் நடுங்க
ஒடிந்த காம்பில்
அமைதியின் அடையாளம்.
பொன் வண்டொத்த அச்சிறகிற்கு
பூவுடன் பயிற்சியும் தரலாமென
அறிவிக்கிறது அவ்விநோதக் காற்று!!!
குழந்தைநிலாஹேமா(சுவிஸ்)
'வடக்கில் வசந்தம் சொந்தங்களே
பாதுகாப்பேன்
பயம் வேண்டாம்'
அழித்த பேயே
அறங்கூவி
அச்சம் விட்டு
அசிங்கமாய்
நம் வீட்டு வாசலில்
வெட்கமற்று
ஓட்டுப் பிச்சை கேட்டு.
நம் முகம் மூடி
மூடுண்ட வட்டத்தில் அமுக்கி
சாமர்த்தியமாய்
இரத்தம் குடித்த பேய்கள்
பிறழ்ந்த நாக்குகளோடு
நம்முன்.
இடுங்கிய மனங்களில்
நடுக்கம் இன்னும்.
பிசாசுகள்
துளைத்த கதவுகளில்
பூட்டில்லை இப்போதும்.
மறக்கவில்லை
வானத்திற்கும் பூமிக்குமிடையில்
நின்று நிலைத்த விழிகளை.
எங்கள் நகரங்கள்
ஏன் எரிந்து போயின ?
கோயில் முதல் நூல்கள்வரை
கொள்ளை போனது ஏன் ?
ஏன் எங்கள் குஞ்சுகளை
குண்டுகள் பொசுக்கின ?
இரத்தக்குழிகள் பூத்ததே
பெருமூச்சின் குமிழிகளை
எப்படி எப்படி ஏன் ஏன் ???
தெரியாதாம் தமக்கொன்றும்
'தம்ம பதம்' கூட
மறந்து போயிற்றாம்
புத்தனை எரித்த நாளிலிருந்து.
எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே
மறந்துவிடலாம்
ஆனால் ஆனால்...
நாச்சாரம் வீடுகளுக்குள்
வெயில்கூட தீய்க்காமல்
பொத்தி வளர்த்த
குழந்தைகளின்
கொங்கைகள் அறுத்து
போரென்று எரித்ததும்
போவென்று பரதேசம் துரத்தியதும்
பொங்கிய பாத்திரம் உடைத்ததும்
சிதறிய பருக்கைகளையும்
எப்படி எப்படி ???
பேயாளும் திருநாட்டில்
திரு திரு விழிகளோடும்
திருவோட்டோடும்
ஓட்டுப் போடும்
மிஞ்சிய திரு தமிழன்!!!
”தேர்தல் காலம் “ 08.01.2015
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
பெறுநரற்று
அந்தரத்தில் அலைகிறது
வான் மண்டலமெங்கும்
மெல்லிய முத்தங்கள்.
விசும்பலை
வேட்கையை
அன்பை
ஆசையை அடக்கிய
அட்டைப் பொதிகளுடன்.
காதலன் காதலியின்
பூர்த்தியற்ற வார்த்தைகளை
ஒரு தாயின்
அடிவயிற்றுப் பிரார்த்தனையை
ஒரு முதுமையின் அதீத அன்பை
ஒரு சிறுவனின் வேண்டுதலை
ஒரு இளம்பெண்ணின் இயலாமையை
ஒரு கடிதத்தின் அழுகையை
ஒரு கடவுளின் ஆற்றாமையையும்கூட
முத்தமாக்கி
உருட்டிவிட்டிருக்கலாம்.
ஆதூரத் தழும்புகளடைக்க
ஆதங்கங்கள் தேற்ற
இம்முத்தங்கள் களிம்பாகலாம்.
தனக்கான முகவரியடைய
வேண்டிக்கொள்வதைத் தவிர
வேறென்னதான் செய்யலாம்.
கேட்கிறதா
வெறும் கலயம் துளாவும்
ஒரு குழந்தையின்
அகப்பைச் சத்தமாய்
அலையும்
அம்முத்தங்களின் விம்மல்கள்!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
வீலென்றழற
பிரசவித்துக்கொண்டது காலம்
இன்னொரு வருடத்தை.
பிரார்த்திக்கிறது
தனிமையும்
அறையின் மௌனமும்
பேரிரைச்சலும்.
பிறழ்வான ஒருவர்
கடலறியா மீன்
நெகிழிமரப் பறவை
உபவாசமிருக்கும் ஏழை
தீராந்திச் சுவரொட்டி
துருவேறிய அக்காலத்தை
விரட்டியடித்திருக்கலாம்.
புது வருடத்தின்
அலுவல்கள் கையழுந்த
நெளிகிறது ரேகைகள்.
இறுதியாய்
கசிந்த வார்த்தைகளில்
உடைபட்டுக் கிடக்கிறது
வாசல்!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)