மகள்களின் தேவைகளை
ரசனைகளை
அப்பாப் பூனைகள் மட்டுமே
வாசம் பிடிக்கிறார்கள்.
கனவு கண்டால்
வீபூதி பூசிவிடவும்
மார்பை
எழுதுபலகையாக்கி
விரல்களை
எழுதுகோலாக்கி
அ...ஆ கிறுக்கவும்
'பித்தா பிறைசூடி' பாடும்
கடவுளர்கள் அவதாரத்தோடு...
அம்மா விடுத்து
கைப்பிடித்து நடக்கவும்
முதுகில் தொங்கவும்
அழகான நண்பனும்
ஆசிரியனும்
ஆனையும்
அப்பாக்கள்தான்
மகள்களுக்கு.
காதலிக்கும் மகளுக்கு
பூனைச் சமாதானம் சொல்லவும்
அம்மாக்களின் திட்டுக்களில்
பங்கெடுக்கவும்
கொடி பிடிக்கும்
மந்திரிகளாகவும்
அப்பாக்கள்.
சுவாரஸ்யமாக
பகிர்ந்துகொள்கிறார்கள்
செல்ல அப்பாக்கள்
அம்மாவிடம் சொல்லாத
டைரிக் காதல்களை
மகள்களிடம்.
புகை பிடிக்கும் பூனைகள்
தைரியமாக
சத்தியம் பண்ணுகிறார்கள்
அம்மாக்கள் தலைமீது
மகள்களின் தைரியத்தில்.
அம்மாப்பூனையின்
உறுமலைக் காப்பாற்றும்
வீரத் தேவதைகளாகிவிடுகிறார்கள்
மகள்கள் எப்போதும்.
மகள்கள் இல்லா வீட்டில்
கொலுசொலி கேட்பதில்லையென்று
பூனையின் காலில் கொலுசு கட்டியும்
விட்டுப்போன உடையைத்
துவைக்காமல்
மகள் வாசனையை
சுவாசிக்கிறது அப்பாப்பூனை.
அப்பாக்களுக்கு மகள்களும்
மகள்களுக்கு அப்பாக்களும்
இல்லாவீடு
புழுதி பிடித்தும்
பேசாமலும் கிடக்கும்!!!
ஹேமா(சுவிஸ்)
எவரெவரோ இருந்து
சுயம் நனைத்த
தெருநாற்காலியொன்றில்
இன்று நான்.
சிறுபிள்ளைக் காதலென்று
மறந்த குறிப்பின்
இருப்பொன்றை
உணர்கிறது மனது.
நீ இன்று
இறந்த செய்தி கேட்டபிறகு
யாருமறியா
தெருக்கதிரையில் தெளிக்கிறேன்
என் சிறு கூச்சலை.
எத்தனை இரகசியங்களை
உயிர்ப்புக்களை
ரசித்தும் ரட்சித்தும்
உள் வைத்த குறிப்புக்கள்
கைப்பிடியிலும் முதுகிலும்
தாங்கிக்கொண்டு இக்கதிரை.
’நிறையப் பேசக் கிடக்கடி உன்னட்ட’
காலம் கடந்த சந்திப்பில்
ஒரு நாள்
ஒரு நிமிடச் சந்திப்பில்
இதே நாற்காலியில்.
என்னதான் இருந்திருக்கும்
உன் அடிமனதில்...
என் கைதொட்டு
விட்டதற்கான காரணமா
அதற்கான மன்னிப்பா ?!
இல்லை....
உறவுகள் விரும்பா
உக்கிய
காதல் கயிற்றின்
கதை சொல்லவா ?!
தனித்தவிழ்த்த நினைவுகளை
தாங்கிய நாற்காலி
தர மறுக்கிறது
உன்....
ஆழ்மனக் கிடக்கையை.
என்னதான்
சொல்ல நினைத்திருப்பாய்
சொல்லுமா இந்த நாற்காலி
நான்.....
இறப்பதற்குள்!!!
அவனுக்கான நினைவஞ்சலியுடன் .....ஹேமா(சுவிஸ்)
நான்.....
தவித்த நேரமெல்லாம்
இறுகிப் பிடித்துக்கொண்டாய்
என்னிரு கைகளை
பாவியாய் நான் தர
எதுவும் என்னிடம் இருக்கவில்லை.
சில கவிதைக் கிறுக்கல்களின்
மடிப்பு விளிம்புகளுக்குள்
மறைத்த உன் முகம்
வழியாமல் தவிப்போடு
எனக்கு மட்டுமே தெரியும்படியாய்.
கோடு கிழிக்காவிட்டாலும்
தாண்ட மனமில்லா
அன்பைத் தந்திருந்தாய்
உள்ளங்கை வெப்பத்துள்
நீ...
மிகச் சுதந்திரமாய்
சாகவாசமாய்
சாமான்யமாய்
காத்திருப்பதே சுகமாய்
நானங்கு.
எதார்த்தமும்
நிதர்சனங்களும்
சமூகமும்
முகம்தானென்று
எதிர்கொண்டால்
வாழ்வு எமக்கானதாய்
நம்பிக்கையில்லையெனக்கு.
உன் முகத்தை
விளிம்பிலிருந்து வழிந்தோடவிட
அதிக நேரமில்லையெனக்கு
ஆனால்....
உன் உள்ளங்கை வெப்பம் குறித்த
கவலைதான் அதிகமெனக்கு.
இன்னும்...
இறுக்கிய
உன் கைகளுக்குள்தான்
என் அன்பு.
சிலுவைகளை
கைகளுக்குள்
ஒளித்து வைத்திருப்பதாய்
பதை பதைக்கிறாய்.
விடுத்து விட்டெழும்பு
கையின் ரேகைகள்
உன் பிறப்பின் அளவைகளை
நிர்ணயிப்பதில்லை.
கைகளைத் திற
என் கவிதை விளிம்புகள் சொல்லும்
வெப்பத்தின் அளவை
என் கைகள் புதையுண்ட
அளவையும் கூட!!!
ஹேமா(சுவிஸ்)
உன்னால்...
நேற்றிரவு விதைக்கப்பட்ட
விதைகளின் பலன்களை
இப்பகலில்
பிடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
நேற்று நீ...
விதைத்தபோது
உன் விரல்களைப்
பற்றிக்கொண்டிருந்தது
நம் காதலும்
களைப்பும்.
முளைத்த
செங்காந்தள் பூவிதழிலின்
தேன் சொட்டுக்களை
பருகிக்கொண்டிருந்தாய்
உயிர் கிழித்து.
மிண்டி மிகுந்த
மேண்டலின் இசையில்
மோகத்திமிர் ஸ்வரங்களை
மீட்டவும்
பின் பசியடக்கவும்
கற்றிருக்கிறாய்.
திக்கற்றுத் தவித்த
இவ்வுயிரின் வாதை
இப்போ
யாரோடுமில்லை
ஆனால் தனித்துமில்லை!!!
ஹேமா(சுவிஸ்)
எப்படி இணைந்தாய்
என்னோடு நீ
உறவின் பாதையை செப்பனிடும்
ஒரு கைதேர்ந்த ஊழியக்காரனாய்.
கை கோர்த்து
எத்தனை பக்குவமாய்
வழிநடத்த முடிகிறதுன்னால்
பாதை மாறாமலும்
தடுமாறாமலும்.
கொஞ்சம் பிசகினாலும்
உறவின் அர்த்தமே
மாறுமென
ஆதி மனிதன்
கதைசொல்கிறாய்.
உன்னை
சந்திப்பதற்காகத்தானோ என்னவோ
சில துரோகங்களை
நானே உண்டாக்கியிருப்பதாக
நம்பிக்கை மனிதர்கள்
சொல்கிறார்கள்.
உடைத்தெறிய
நமக்கான காரணங்கள்
கிடைக்கும்வரை
ஒத்த உணர்வலைகள்
உயிரைச் சுற்றும்.
நரமிருகங்களறிவதில்லை
ஒருமுனையும்
மறுமுனையும்
பிரிவையறியாதென்று...!!!
ஹேமா(சுவிஸ்)
கருப்பு தேசத்தில்
சிங்கங்களின் ஆட்சிக்குள்
பிறந்துவிட்டதால்
எத்தனை நாள்தான் நடிப்பது
நாம் ?
இன்னும்
இப்போதும்
இன்றும்
பாதம் தடக்கிய இடமெல்லாம்
நம் இனத்தில் எலும்புக்கூடுகள்
கேள்விகள் ஏந்திய முகங்களை
எந்தப் பதில்களுக்குள் புதைப்பது ?
கருப்பு வெள்ளை வ(வாக)னங்களில்
யுகப்பசியோடு காணாமல்போனவர்கள்
கனவுகளை
எந்த மணல்கடிகையில்
அடைப்பது ?
தினம் செத்துப் பிறக்கும்
ஈழத் தமிழனின் விதியை
66 வருடங்கள்
நஞ்சு நுரைத்த கடலில்
அலைய விட்டவர்களாய்
விதியை எழுதிய
பிரித்தானியர்களை....???
திடுக்கிட்டு விழிக்கும்போதெல்லாம்
முகத்தருகே
தடமழுத்தி
" மன்னித்து மறந்து
வாழப் பழகிவிட்டீர்களா"
என்கிற கேள்விகளோடு
நொடிதானும் விலகாத
அந்த விம்பங்களை
என்ன செய்வது ?!!!
ஹேமா(சுவிஸ்)
பார்வைக்கு
மெல்லிய ஆடைகளை
பெட்டியில்
அடுக்கி வைத்துவிட்டு
என் பார்வைக்கு
மாத்திரம்
முரட்டுப் போர்வைகளையே
போர்த்துகிறாயே ஏன் ?!
நீ...
கிழக்கில் உதிப்பவன்
என்னை மேற்கிருத்தி
விட்டுப்போன இடத்திலேயே
இன்னும் இருக்கிறேன்
மேற்கு கிழக்காக
மாறும் விரதம்
சொல்லித் தராமல்
போனதுதான்
எனக்கான
கவலை இப்போ !
வெற்றிகள்..
சந்தோஷங்கள்..
துணிவு..
நம்பிக்கை..
தைரியம்..
அத்தனையும்
சரிந்து
தொலைந்து
மடிகிறது..
உன்
ஒற்றைப் ப்ரியத்தில் !!
பகலும் இரவும்
எனக்கானதாய் விடிய
தனக்கானதாய்
ஆக்கிவிடுவதில்
வல்லவன் அந்த வில்லன்
இன்று பகல்....
சருகற்ற தெருக்களில்
ஓடிவரும் சிறுமியோடு
ஒரு சிறுநாய்க்குட்டி
அவன் பெயர் சொல்லியே
தெருவைக் கூட்டிவிடுகிறது !
வட்டப் பரிதியின்
சுற்றளவையும்
தாண்டுகிறது
உன் நினைவு
ஓ.....
இன்று நீ
இல்லாமல் போன நாளோ !
துளும்பும் தாரகை
அளித்த தாழிசை
சில நிழல்களோடு
விளக்கமில்லா
ஒரு நீண்ட பொழுது
வழியனுப்பி வைக்கலாம்
சில குறிப்புக்கள்
போதும்
சேடமிழுக்கும் மனதிற்கு !
சுழலும்....
காதலின் கால்களை
இறுகக் கட்டினேன்
சொற்களுக்கு
வளைவுகள் தருவதாய்
ஒருவன் சொல்லிப்போனான்
கைகளையும் இறுக்கிக் கட்டி
காத்திருக்கிறேன்
சுகம் !
உன் குரல்
நிலவெழும் நேரத்தில்
முகம் திரும்ப
நிலவுதான் கையசைக்கிறது !
ஹேமா(சுவிஸ்)