என் தோள் தொட்டணைத்த என் வீரனுக்கு.....
சுகம் சுகம்தானே.சுகமாய்த்தானிருப்பாய் என்றாலும்...... கடிதம் என்பதின் சடங்கு சுகம் கேட்பது !
உன்
வியர்வை வாசனையோடு உன் நீண்ட பல கடிதங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன்
மினுங்கும் மஞ்சள் பை ஒன்றில்.சில சமயங்களில் உன்னோடு கோவப்பட்டு உன்
முன்னாலேயே சில கடிதங்களை எரித்துமிருக்கிறேன்.சாம்பலாகிய கடிதங்கள் ஒரு
போதும் நினைவுகளை கரைத்து விடுவதில்லை தெரியுமா !
காதலில் சில
நியாயங்கள் உறுதிப்பாடானது.உலகின் எந்த நியதிகளுக்குள்ளும்
அடங்காதது.தனக்காகச் சில விதிகளை எழுதிக்கொள்ள காதலால் மட்டுமே
முடிகிறது.காதலின் தீர்மானங்கள் முடிச்சாகும் இடங்கள் அதிசயமாயும்
அதிர்ச்சியாயும் நம்பமுடியாமலும் இருக்கும்.காதல்
நேசித்துக்கொண்டிருக்கிறது தன்னைத்தானே.இதில் நானும் நீயும் விதிவிலக்கா
என்ன !
எமக்கான சந்திப்புக்களும் பேச்சுக்களுக்கும் சந்தர்ப்பம்
குறைவாகவே இருக்கிறது.நான் என் வேலியோரத்து பூவரசோடுதான் அதிக நேரம்
செலவழிக்கிறேன்.சந்திக்கும் நேரங்களிலும் நாம் கதைத்துக்கொண்ட நேரங்கள் மிக
மிகக்குறைவே.சில சமயம் வார்த்தைகள் தீர்ந்துபோயிருக்கலாமோ !
இருந்தும்.....
உன்னை
நினைத்துக்கொண்டே உன அருகாமையை அணைத்துக்கொண்டே உன் ஆயுதம் கொஞ்சம் தள்ளி
வைத்து என்னில் பொய்க்கோபம் கொள்ளும் உன் கண்களைச் சரிப்படுத்தவோ,உன்
புன்சிரிப்பை இலகுவாக்கவோ,எம் ரகசியங்களை தவிர்க்கவோ,
பக்க இருக்கைகளை உறுதி செய்யவோ இந்தக் கடிதம் இப்போ உனக்கும் எனக்கும் தேவைப்படுகிறது !
இது
நம் இடைவெளிக்கான ஒரு நேசிப்புமடல் மட்டுமே.நாம் சந்தித்துக்
கனநாளாயிற்று.காணும் நிகழ்வொன்றுக்கான காலத்தை அனுமதி கொடுத்து அனுப்பிவிடு
செல்லா.ஏங்கி இடைமெலிகிறேன் என்பதைச் சொல்ல வெட்கமாவும் இருக்கிறது !
பிரியங்களைக்
கடந்து போதல் கடினம்தான் என்றாலும் அது கைவிடுபவர்களை விட்டு
நீங்குவதில்லை.நினைவுகளைக் கரைக்கமுடியாக் கண்ணீரும் தோற்றுப்போய்
இறுகிவிட்டது என்னோடு !
எந்த எதிர்பார்ப்புகளுமற்ற ஒரு கடைக்கண்
பார்வையையோ அல்லது சின்னப்புன்னகையைத்தானும் பரிசாக அனுப்பிவிடு நீ
சுவாசிக்கும் கந்தகக் காற்றுவழி.என்னை நிராகரித்து சட்டைசெய்யாது தாய்
தேசத்தின் பின்னால் அலைந்துகொண்டிருக்கும் உன்னிடம் காலம் முழுதும்
தன்னையும் தன் மொத்த அன்பையும் கொட்டிக்கொண்டிருக்கிறாள் இங்கொருத்தி காதல்
கிளியென !
ஒரு மனிதனின் அந்தரங்கம் என்பது ஒரு இருண்ட குகைவெளி
மட்டுமல்ல அது மலர்வனங்களையும் கொண்டிருக்கிறது என்பதை ஈவா கண்டுபிடித்தாள்
ஹிட்லரிடம்.நானும் கண்டிருக்கிறேன் அதே ஹிட்லரான உன்னிடம்.காதலின் புன்னகை
ஒன்று உனக்காக மட்டுமே உன் வானில் நிலவாக வாழ்ந்துகொண்டிருப்பதை என்றும் நினைவில்
கொள் !
என் உடலுறவுக்கும் ,உண்மைக் காதலுக்கும் உரிமையானவனல்ல
நீ.உயிரைத் தாய்நாட்டுக்காய் அர்ப்பணித்த செல்லப்போராளி.அன்பை ஒரு
பூவுக்குள் ஒளித்து என் தலையணைப் பூவாய் வரைந்து அதில்
உறங்கிக்கொண்டிருக்கும் உனக்கேயானவளின் அன்பு மடலிது.விரைவில் ஒரு முறை உன்
கண்களைச் சந்திக்க விடுவாயென்கிற நம்பிக்கையில் உன் நினைவுகளோடு
உறங்கிக்கொள்கிறேன் !
சந்திப்போமடா....என் செல்ல ஹிட்லரே !
ஹேமா(சுவிஸ்)