Thursday, September 23, 2010

குதிரையும் கனவும்...

நித்தமும்....
சிவப்புக் குதிரையொன்றின் துரத்தல்
கனவில்கூட
திரும்பிப்பார்த்தல் இயலாமல்.

உடல் எங்கும் இரத்தப் பிசுபிசுப்பு.
தூரத்தே எட்டி அணைக்கும் கையொன்று
நீண்டு நீண்டு
வந்து வந்து மறைவதாய்.

புழுதி கிளப்பி
குதிரை எகிறிக் கனைக்க
என் நகங்கள் என்னையே
பிறாண்டிக் காயப்படுத்த...

இடையிடை விழுத்த எத்தனிக்கும்
கொடிகளும் காட்டு மரங்களும்
பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
சிதைவுற்ற போதும்
எதிர்க்கும் உறுதியோடு
ஓடிக்கொண்டிருந்த நாளில்...

சூரியன் உதித்த
காலையின் பொழுதில்
கடவுள் என்கிற பெயரில்
ஓர் உருவம் கை அணைக்க
கல்லாய் நான்.

குதிரைக்கும் நிறம் மாற்றி
உருவம் மாற்றிய அது
தானும்
நிலையற்ற உருவமாய்.

ம்ம்ம்....

இப்போதைக்கு கனவுகளின்
தொன்மங்களுக்குள் நான்!!!

ஹேமா(சுவிஸ்)

52 comments:

  1. கனவின் படிமங்கள் அருமை ஹேமா!

    //சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்.//
    மேனி வலித்திடும் போதும் நம்பிக்கை குறையா நிலையின் வரிகள்!

    //குதிரைக்கும் நிறம் மாற்றி
    உருவம் மாற்றிய அது
    தானும்
    நிலையற்ற உருவமாய்//
    கனவில் தோன்றும் சில அரூபங்களே அலறவைக்குமே!
    நல்லா இருக்கு தோழி:)

    ReplyDelete
  2. //இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!//

    படிப்பவர்களையும் கனவுக்குள் இழுத்து விட்டது போல் இருக்கிறது.... அருமை தோழி.

    ReplyDelete
  3. கனவுக்கவிதை நல்லாயிருக்கு ஹேமா.

    ReplyDelete
  4. இது எல்லாம் கனவா?

    ReplyDelete
  5. 'சிவப்பு குதிரை' , 'கனவின் தொன்மம்'
    மிக சிறப்பான தளத்தில் பயணம் செய்றீங்க ...
    வாழ்த்துகள் ஹேமா

    ReplyDelete
  6. வாங்க ஹேமா...நலமா ?
    கனவுகளில் இப்படி பயங்கரமா?

    கவிதை படைப்பு அருமை....

    ReplyDelete
  7. பயங்கர கனவுகள்,
    இளகிய மன ஹேமா தாங்குமா ?

    கடவுளே நல்ல கனவுகள் மட்டும் தருக !!!

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  8. உடல் கிழிக்க
    சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு]]

    நல்ல உறுதி

    இந்த உறுதி - இன்னும் உறுதியாய் இருக்கட்டும்

    ReplyDelete
  9. உறுதிக்கு மகிழ்ச்சி.

    விட்டாலச்சாரியார் படமோன்னு நாந்தே பயந்துட்டன்.

    ReplyDelete
  10. இப்படி பயங்கரமா? கனவுக்கவிதை நல்லாயிருக்கு ஹேமா,

    ReplyDelete
  11. டக் டக் டக்... என்று காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும் கவிதை.. தூள் ஹேமா..

    அன்புடன் ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  12. தண்டுமாரியம்மன் கோவில் குங்குமத்த நெத்தில வெச்சிண்டு படுத்துக்கிட்டா இந்த மாதிரி கனவுகள் வராது..

    :B

    சீரியஸான கவிதை நல்லாயிருக்குங்க... :)

    ReplyDelete
  13. கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள்.....

    இது தான் இப்ப வரைக்கும் தெரிந்த கனவு...........

    ஆனா குதிரை ரொம்பவே பிடிக்கும். ஆனா இப்ப.........

    வேண்டாம் நம்ம ஒடம்பு அடி தாங்காது.

    ReplyDelete
  14. ஹேமா, இடையிடை விழுத்த எத்தனிக்கும்
    கொடிகளும் காட்டு மரங்களும்
    பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
    சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்......அருமை...அருமை கனவுக் கவிதை அருமை........

    ReplyDelete
  15. இடையிடை விழுத்த எத்தனிக்கும்
    கொடிகளும் காட்டு மரங்களும்
    பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
    சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்...


    ......அருமையோ அருமை..... You are gifted!

    ReplyDelete
  16. புழுதி கிளப்பி
    குதிரை எகிறிக் கனைக்க
    என் நகங்கள் என்னையே
    பிறாண்டிக் காயப்படுத்த.

    படிமம் உபயோகப்படுத்தி உள்ள விதம் நன்று தோழி!!!!

    கனவுக்கவிதை கலக்கல்ஸ்

    ReplyDelete
  17. //சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்.//
    இந்த உறுதி நிஜத்திலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. பயங்கரமா irukku உங்க கனவுக்கு குதிரை

    ReplyDelete
  19. //இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!//

    உங்க கவுஜையப் படிச்ச நாங்க ?

    ReplyDelete
  20. //இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!//

    அழகு... பாலகுமாரன் ஒரு நாவலில் குதிரைகளைப்பற்றியே கவிதை, அத்தியாயத்துக்கு அத்தியாயம் எழுதி இருப்பார். அதே போல!

    குதிரை காட்டும் குறியீடுகள் நிறைய.... கவிதையும் அதுபோல பல வடிவங்களை எடுக்கின்றது!

    ReplyDelete
  21. தொன்மத்தின் கனவுகளில் வந்த புரவியில் வழிந்தோடும் குருதி ஆதி தமிழனின் மீதியை முள்ளிவாய்க்கால் முழுதும் ஈராமாக்கியது.. ஒரு கனவைப்போல் அது முடிந்தே விட்டாலும், கற்சிலையென வேடிக்கைதான் பார்க்க முடிகிறது ....

    ReplyDelete
  22. கனவுக்கவி பிரமாதம்ங்க.

    ReplyDelete
  23. குதிரைக்கனவு வெளிப்படுத்தும் அர்த்தம் மிக அருமை ஹேமா..

    ReplyDelete
  24. குதிரையும்,கல்லாவதும் குறியீடுகளாய் எத்தனையோ தாக்கத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன ஹேமா.மனம் கசிய கவிதையில் கரைந்து போனேன். எழுதிய போது உனக்கு என்ன ஆனதோ எனும் இந்த அண்ணனின் பரிதவிப்பு உனக்கு புரிகிறதா?

    ReplyDelete
  25. ரொம்ப நல்லா வந்திருக்கு

    கனவை மொழிபெயர்த்தலில் இருக்கும் சிடுக்குகள் சொற்களில் விரவாமல் நிகழ்த்திப் பார்த்திருக்கும் மொழியில் இருக்கும் தெளிவு பிரதிக்குள் ஒரு நேர்த்தியை கொணர்கிறது

    சந்தோஷம் ஹேமா தொடருங்கள்

    ReplyDelete
  26. கவிதை நல்லா இருக்கு.லே அவுட் சூப்பர்.ஏகப்பட்ட அவார்ட்ஸ் எல்லாம் வாங்கி இருக்கீங்க போல.ம் ம் ம் நடத்துங்க .(தொன்மம் என்றால் என்ன?)

    ReplyDelete
  27. தொடர்பு இல்லாமல் விட்டு விட்டு வரும் கனவினை நேர்த்தியாய் தொடுத்து இருக்கின்றீர்கள்..!

    சற்று ஆழ்ந்து படித்தால் படிப்பவரையும் கனவுக்குள் கூட்டி செல்கிறது..!

    ReplyDelete
  28. இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!

    "நினைவினால் தான் நல்காதவரைக் கனவினால்
    காண்டலினால் தான் உண்டேன் உயிர்
    ---திருக்குறள் ---

    கனவுகள் பொல்லாதவை கவனம் ஹேமா
    கவிதை அருமை

    ReplyDelete
  29. அருமை..அருமை...

    ReplyDelete
  30. ஹேமா
    உங்கள் வலைப்பூவை

    http://www.tamilcnn.net/
    http://ethiri.com/

    இல்
    இணைக்க பரிந்துரைத்தேன் அவர்கள் இணைத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

    ReplyDelete
  31. இந்த இறுக்கம் தளர வேண்டும், எல்லாம் உதறிவிட்டு வெற்றுடலாய் பயணிக்க இந்த கனவினால்கூட முடிவதில்லை. நல்ல கவிதைங்க.. துரத்திக்கொண்டிருக்கும் வார்த்தைகளும் வலிமை சேர்க்கிறது..

    ReplyDelete
  32. கனவு நல்ல கனவு
    கவிதை நல்ல கவிதை

    ReplyDelete
  33. //நித்தமும்....
    சிவப்புக் குதிரையொன்றின் துரத்தல்
    கனவில்கூட
    திரும்பிப்பார்த்தல் இயலாமல்.//

    கனவே ஒரு கவிதை
    காரணமில்லாமல் சுமக்கும்........

    ReplyDelete
  34. பிரமாதமா எழுதுறீங்க...ஏழு விருதுகளா? தினம் ஒண்ணுன்னு ஒரு வாரத்துக்கு வாங்கியிருக்கீங்க...சீக்கிரமா ஒரு மாசத்துக்கும் வாங்கிடுங்க...

    ReplyDelete
  35. //சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்.//
    அருமை

    ReplyDelete
  36. chitra சொல்வது போல நீங்கள் gifted தான் ஹேமா...என்ன இரண்டு தளங்களிலும் கனவுகள் பற்றிய பதிவு?

    ReplyDelete
  37. நல்லா இருக்கு தோழி:)

    ReplyDelete
  38. பாலா...நன்றி நண்பா.கனவுகள் க லைத்தபடிதான்.அதுதான் விழித்தபடி இருக்கிறேன் !


    கௌசி...ரொம்பக் காலமாச்சு என் பக்கம்.கனவிலயாச்சும் வந்தீங்களே !


    இர்ஷாத்...அன்புக்கு நன்றி.


    சௌந்தர்...உண்மையா கனவிலதான்ப்பா.
    ஆனா கொஞ்சம் அழகு படுத்தினேன் !


    குமார்...சுருக்கமா சொல்லிட்டீங்க.கனவு பிடிக்காதோ !


    கண்ணன்..ரொம்ப நாளுக்கப்புறம்.கனவுமாதிரித்தான் இருக்கு உங்க வரவு.நன்றி.


    வினோ...நான் சுகம்.
    நீங்களும்தானே.இதைவிடப் பயங்கரக் கனவோடுதான் வாழ்க்கை !


    விஜய்...கனவுக்கு தெரியாது என் மனசு மென்மைன்னு.எதையும் தாங்கும் இதயம்ன்னு நினைச்சிருக்கும் கனவு !


    ஜமால்...எப்பவுமே என்னைச் சரியாகப் புரிஞ்சிருக்கிறீங்க.
    நன்றி நண்பா.


    ராஜவம்சம்...எனக்கே கனவில விட்டாலச்சாரியார் மாதிரித்தான் தோணிச்சு.ஏன்னா எனக்கும் ராணிமாதிரி உடுப்புப் போட்டுவிட்டாங்க!


    ஜெஸி...உங்களுக்கு வராதா இப்பிடிக் கனவு.மனசு குழப்பமா இருக்கிறப்போ பாம்பு கலைக்கிற மாதிரியாவது வரலாம்.


    ஆர்.வி.எஸ்...உங்க பதிவில நாய் குரைக்கிறாப்போல இங்க குதிரை.மனுசரை விட
    நன்றியுள்ள ஜீவன்கள் !


    அஷோக்..யாரு அவ...
    தண்டுமாரியம்மன்.உங்க பக்கத்துவீட்டுக்காரியா !


    ஜோதிஜி...ம்க்கும்...வீட்ல வாங்குறது போதாதா.
    குதிரையும் கேக்குதோ !


    நித்திலம்...வாங்க கனவிலயும் ஒரு சுகமும்.சந்தோஷமும்தானே.
    நினைவில என்கிட்ட குதிரை வருமோ !


    சித்ரா...உங்க பாராட்டுச் சிலிர்க்க வைக்குது.நன்றி தோழி.கனவை மொழிபெயர்த்தேன்.அவ்ளோதான் !


    சக்தி...என்கே பதிவு எதையும் காணோம்.ஒரு கனவு காணுங்கள்.கவிதை வரும் !



    அம்பிகா...உறுதி நிறையவே இருக்கிறது ஈழத் தமிழரிடம்.
    அதனால்தான் அகதி வாழ்வானாலும் உங்களோடு உறவாடியபடி !


    ஸ்டார்ஜன்...நன்றி அன்புக்கு.
    அக்பரிடம் சுகம் சொல்லுங்க.


    கார்த்திக்(LK)...கனவிலயும் நினைவிலயும் கனவோடயே வாழ்றோம் நாங்க.அதான் இப்பிடி!


    நசர்...நீங்கதானா..கிள்ளிப் பாத்துகிறேன்.அதான் சிலசமயம் உங்க இடத்தை அஷோக் நிரப்புறார்.ரவியைக் காணோம் !

    ReplyDelete
  39. விந்தையாரே...சந்தோஷம்.பாலகுமாரனின் கதை எங்கே நான் எங்கே.பாராட்டுக்கு நன்றி நண்பரே !


    செந்தில்...உங்களை "சே"ன் முகத்தோடுதான் எப்போதும் காண்கிறேன்.உங்கள் சொந்த முகம் காட்டினாலும் மறுப்பேன் நான்.என் மனதைத் தொட்டது உங்கள் பின்னூட்டம்.நான் கருவெடுத்து எழுதியதைத் தொட்டீர்கள் தோழரே !


    அன்பு...அன்புக்கு நன்றி நன்றி.


    சாரல்...கவிதையின் உட்பொருள் கண்டீர்களா !


    மோகன்ஜி...அண்ணா என்று உறவோடு இணைந்துவிட்டீர்கள்.இனி எப்போதும் என் அண்ணாதான் நீங்கள்.உணர்வைப் புரிந்துகொண்டீர்கள்.
    அதுதான் என் இனம்,பாசம் !


    நேசா...கவிதை பிடிக்கவில்லையோ என்று நினைச்சிருந்தேன்.வெறுமை நிரப்பும் வண்ணம்போல உங்கள் பின்னூட்டம் ஒரு ஊட்டச்சத்து எனக்கு !


    செந்தில்குமார்...உங்கள் அன்புக்க்கு நன்றி.ஒவ்வொரு விருதுகளும் ஊக்கம் தரும் மாத்திரைகள்போல."தொன்மை" என்றால் பழைமை அல்லது ஊழ்வினை என்றுகூடக் கொள்ளலாம் !


    அமுதன் ஜீவன்...நினைவோடுதான் போராடுகிறோம் என்று பார்த்தால் சிலசமயம் கனவிலும் போராட்டம்தான் !


    தியா...என் ஊர்க்காற்றுக்கு நன்றி.
    அடிக்கடி உங்களைக் காண்பதில் நிறைவான சந்தோஷம்.என் தளத்தை இணைக்கவென்று நினைத்த அன்பை நினைத்துப் பெருமிதமடைகிறேன் சகோதரனே.இணைத்துக்கொண்ட தளங்களுக்கும் மிக்க நன்றி.சொல்லிவிடுங்கோ !


    பாலாஜி...சுகம்தானே.ஈழத்தவர் வாழ்வில் இறுக்கம் தளர்வது எப்போ !


    யாதவன்...கவிதையின் கருவைத் தொட்டிருப்பீர்கள் !


    தினேஸ்....மனதின் வலிகள்தான் இரத்தம் சுமக்கும் கவிதைகள் !


    உழவன்...சுகம்தானே தோழரே.
    ரொம்ப நாளாக் காணோம்.
    குழந்தையோடு பொழுது போகிறதுபோல !


    ராஜா...குழந்தைநிலாவையே ஒரு வலம் வருகிறீர்கள் போல.இன்னும் நிறைய விருதுகள்.அவைகளின் ஊக்கம் தந்ததுதான் இத்தனை எழுத்துக்களும்.


    லஷ்மிக்கா..அன்புக்கு நன்றி.


    கார்த்திக்.சி...இருந்து இருந்து தமிழோடு வருகிறீர்கள்.நன்றி.


    ஸ்ரீராம்...ஏன் இவ்ளோ பிந்தி.சுகமா இருக்கீங்கதானே.ஓ..எதார்த்தமாக இரண்டு தளத்திலும்கனவின் பதிவு. ஏன் கௌதம் அவர்கள் வாறதில்ல என் பக்கம் ?


    பிரியமுடன் பிரபு....அதிசயம்தான் என் பக்கம்.சுகமா நீங்க.இன்னும் வாங்க.சந்திக்கலாம்.

    ReplyDelete
  40. ஹேமா கனவுகளை முழித்த பின் சிந்தித்தால் பெரும் ஆயாசம் தான் .அதுவும் எதனிடமிருந்தோ தப்பி ஓடுதல் பெரும் சோர்வை கிளப்பும்.

    தப்பிக்கும், வலியுடன் கூடிய தப்பித்தலை ,கனவை வார்த்தைகளில் கொண்டு வந்தது சுகம்.

    அமிழ்ந்து போனேன் ஹேமா

    ReplyDelete
  41. என் நகங்கள் என்னையே
    பிறாண்டிக் காயப்படுத்த...

    இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!

    நிஜத்தில் கனவுகளைத் தவிர்க்க முடியாதுதான்..

    ReplyDelete
  42. அருமையான வரிகளில் கனவின் உணர்வாய் அமைந்த கவிதை வாழ்த்துகள்

    ReplyDelete
  43. நல்ல முரட்டுக் கவிதை ஹேமா...
    விந்தைமனிதன் சொன்னது போல பாலகுமாரன் நினைவில் வந்தார்.
    //இடையிடை விழுத்த எத்தனிக்கும்
    கொடிகளும் காட்டு மரங்களும்
    பூச்செடிகளும்கூட உடல் கிழிக்க
    சிதைவுற்ற போதும்
    எதிர்க்கும் உறுதியோடு
    ஓடிக்கொண்டிருந்த நாளில்//
    நல்லா வந்திருக்கு. பிடிச்சது...

    ReplyDelete
  44. // ஸ்ரீராம்...ஏன் இவ்ளோ பிந்தி.சுகமா இருக்கீங்கதானே.ஓ..எதார்த்தமாக இரண்டு தளத்திலும்கனவின் பதிவு. ஏன் கௌதம் அவர்கள் வாறதில்ல என் பக்கம் ?//

    ஹேமா - எங்கள் ஆசிரியர் குழுவில் யார் எந்த வலைத்தளத்தில் பதிவு படித்து கருத்துரை இட்டாலும், அது நாங்கள் ஐவரும் படித்ததற்கு சமம. நாங்கள் வாரம் ஒருமுறை சந்தித்து உரையாடும்பொழுது, ஒவ்வொருவரும் படித்ததையும், கருத்துரை இட்டதையும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். யாராவது ஒருவர் ஒரு தளத்தில் கருத்துரை அளித்திருந்தாலும், அது நாங்கள் எல்லோருமே படித்ததைப் போலத்தான். எனவே, உங்கள் பதிவு பக்கம் நானோ அல்லது மற்ற ஆசிரியர்களோ வருவதில்லை என்று எண்ணவேண்டாம்.நான் வந்து, படித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். எங்கள் ஸ்ரீராம் கருத்து எழுதியிருந்தால், அது என் கருத்தை ஒத்து இருந்தால், நான் தனியாக கருத்து எதுவும் பதிவதில்லை.

    அன்புடன்
    கௌதமன்
    எங்கள் ப்ளாக்.

    ReplyDelete
  45. கனவின் கசங்கல்களில் இனிமையும் தெரியும் என்பீர்களோ? ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  46. இப்போதைக்கு கனவுகளின்
    தொன்மங்களுக்குள் நான்!!!//

    அருமை

    ReplyDelete