Thursday, May 27, 2010

பொய்யாகாத இரவு...

ஒரு இரவல் இருளில்தான்
உண்மையும் பொய்யுமான
அந்த நாடகம்
காற்றோடு வந்தது
மனதில் நிறுத்தி
ரசிக்கச்சொல்லி.

அன்றைய இரவு
பௌர்ணமியைக் குடித்த போதையில்
தள்ளாடியபடி
மூச்சின் உஸ்ணம்
வந்தடையச் சாத்தியமற்ற பொழுது
இன்றைய இரவும் அதேபோல
பொய்யும் உண்மையுமாய்.

முத்தங்களை வாங்கிக்கொண்ட
நிலவின் துகள்களிலும்
பொய்யான விம்பங்களுக்குள்
சேர்த்த வார்த்தைகளும்
சேமித்த பார்வைகளுமாய்.

வெட்ட வெளியில்
காற்றாட உலவிய வாழ்வு
சூன்யங்களைப்
பிரித்து வேய
விருப்பமின்றியே!!!

ஹேமா(சுவிஸ்)

Sunday, May 23, 2010

மா(ற்)றாத கவிதை...

"யாவும் வற்றிய தடாகங்கள்
பூக்கள் மறந்த தாவரங்கள்
நிலவு ​தொ​லைத்த வானம்
அ​ழைப்புக்கு ஏங்கும் ​தொ​லை​பேசி
எழுத்துக்கள் இருண்ட
என் சாட் வின்​டோ
எழுத மறந்த கவி​தை

ம்ம்ம்.....
மறந்த கவி​தை​யே இன்று
என்னிடம்
கவி​தை வாசிக்கப் பணிக்கிறது.
முகமற்ற அல்லா-வாக
முதலில் இருந்தாள்.
நான் முஸ்லிமாக
அவ​ளைத் ​​தொழு​தேன்.

இன்று.....
முகில் சுமந்த ம​ழையாக
எந்த மதத்தில்
என்​னைச் ​சேர்க்க என்று ​தெரியாமல்
அவளின் ​பெயரில்
புதிதாய் ஒரு மதம் துவங்குகி​றேன்.

ஒற்றை எழுத்துக்கூட மா(ற்)றாமல்
எழுதுகிறேன் உன் வரிகளை
மா(ற்)றிக்கொண்ட
உன்னை நினைத்து!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, May 18, 2010

மே 18 ன் நினைவு நாள்...

தொடர்ந்திருந்தும்
மறந்திருந்த துன்பத்தை
நினவூட்டியது
நாட்காட்டி மே 18 !

ஒட்டு மொத்த உலகமும்
முதுகில் குத்த
ஈழத்தாயின் முலையை
பேய்கள் பிய்த்தெறிய
நிராகரிப்புக்கள் நிரவிய
நினைவு நாள் !

தாரதம்யம் இல்லாமல்
ஈழத்தமிழனுக்கு
அகதி முத்திரை
ஆழமாக
குத்திய பொன் நாள் !

முள்ளி வாய்க்கால்
மூடிய கிடங்குகளில்
குழந்தைகள் மூச்சடக்க
முள்ளிவாய்க்காலே
முட்கம்பியாய் முடங்கிய நாள் !

உலகக் கண் மௌனிக்க
காஞ்சொறிச் செடியில் கஞ்சி சமைத்து
மிஞ்சிய வயிற்றை மெல்ல அடித்தே
கொல்லத் தொடங்கிய மிகுதி நாள் !

ஒரு சிறுவனின் கனவை...
ஒரு கிழவனின் எதிர்பார்ப்பை...
அப்படியே விழுங்கிய
திருவிழாவின் இறுதி நாள் !

என் வார்தைகளில் சில

சுயநலம்...

அயோக்யத்தனம்...

என்றாலும்
துன்பத்தை
விற்கத் தொடங்குகிறேன்
பிணவறை நிரம்பமுன்
அடுத்த கனவைச்
சேமிக்க!!!

(எம் மண்ணின் விடுதலைக்காய்
உயிர் தந்த அத்தனை உயிர்களுக்கும்...)

ஹேமா(சுவிஸ்)

Monday, May 17, 2010

தமிழன்...


ஒன்றாய்
இருக்க வேண்டாம்
ஆனால்
நாம் ...
இரண்டாய்
இருக்க வேண்டாம்!!!
ஹேமா(சுவிஸ்)<>

Thursday, May 13, 2010

மாறாப் புன்னகை...(மே 13)

மரணம் இல்லா வீடொன்றில்
மிளகு கேட்டவன்
உயிர்கள் பறித்த
வெறியோ....வலியோ
முகம் இறுகினாலும்
இன்னும்
சின்னப் புன்னகையோடு
சிரித்தபடிதான் அவன்
புத்தம் சரணம் கச்சாமி !

சிறைக்குள் வாடும்
சீதைகளுக்கும்
கண்ணகிகளுக்கும்
மாமிசம் திணித்தபடி
ஆசை துறந்த புத்தன்
ஆசையோடுதான் என்கிறான்
புத்தம் சரணம் கச்சாமி!!!

(மே 13 முதல் மே 18 வரையான உயிரழிவுகளின் நினைவாக)


ஹேமா(சுவிஸ்)

Monday, May 10, 2010

சுடும் இரவுகளும் நீயும்...

 



உன்னுடன் பேசி முடித்தபின்
சுடும் தண்ணீருக்குள் படுத்தபடி
நிறையவே அழுதேன்.
சுட்டது இரண்டும்
உன் வார்த்தைகள் போலவே !

 


உன்னைத்தான்
நினைத்துக்கொள்கிறேன்
அன்னையர் தினத்தில்கூட !

போகிறதுதான் போகிறாய்
ஏன் விட்டுப் போகிறாய்
உன் நினைவுகளை !

மறக்க நினைத்தபடியே
திரும்பவும் திரும்பவும்
உன்னிலேயே
இடறி விழுந்துகொண்டிருக்கிறேன் !


நீண்ட இரவானாலும்
இருண்ட இரவானாலும்
எனக்கென்ன பயம்
என் நினைவோடு நீதானே !

என் கல்லறையிலும்
உனக்கான இடம் ஒதுக்கியே
படுத்திருப்பேன்.
ஓ...
நீதான் என்றோ இறந்துவிட்டாயே !

இத்தனையும் கதைக்கிறேனே
என்னை விசர் என்பாயோ.
விசரி ஆக்கியவளே நீதானே !

கல்லறை வந்தால் அழுது விடாதே
அன்பே.....
மலரை விட மென்மையானது
உன் கண்ணீர்.
அதைவிட நம் இதயம்!!!

ஹேமா(சுவிஸ்)

Thursday, May 06, 2010

வெட்கம்...

என் வீட்டு மலர்கள்
வாடியதைப் பார்த்தே
என் அந்த மூன்று நாட்களைக்
கணக்கெடுக்கிறாயே !
கள்வனடா நீ.

நடசத்திரங்கள் தூங்குவதற்கும்
நான் முற்றத்தில்
நிலாக் காய்வதற்கும்
சம்பந்தப்படுத்துகிறாய்
சதிகாரா!

உன்னோடு பேசிப்பேசியே
சில பறவைகளின் பாஷைகூட
பரிட்சயமாகிறது.
தூவானத் திரை
முகம் மறைக்க
கலைந்த பொட்டைச் சரிசெய்தபடி
தொங்கிய
பெட்டைக் குருவியின் குசுகுசுப்பை
ரசிக்கிறது மனம்.

கவிதையாய்
உன் பேச்சும்
உன் காதல் குறிப்புக்களும்
எனக்குள் நீ
புதைந்த பொழுதுகள்
உறைந்த நொடிகளின் மயக்கம்
இப்போதும்...
எங்கிருந்தோ ஒட்டிக்கொள்ள
தென்றல் கிச்சுக் கிச்சு மூட்ட
கூசவைக்கிறது வெட்கம்.

பேசுவதும்
கேட்பதும்
கெஞ்சுவதும்
மறுப்பதும்
விலகுவதும்
அணைப்பதுமாய்
எம் நெகிழ்வான விளையாடல்
கனவோடு
நீ நடத்திய
புலவியின் பொழுதுகளை
வெளியில் சொல்லியே
பாடுகிறது அந்தப் பேடு.

அச்சச்சோவென
மனம் அலற
அன்றைய பொழுதை
வெட்கத்தோடு தலையணைக்குள்
ஒளிக்க மறைக்க
முயல்கிறது
என் மன அரங்கம் !!!

ஹேமா(சுவிஸ்)

Saturday, May 01, 2010

கருப்பை இரவல்...

கரிசல் நிலமாய்
காய்ந்த வயிறோடு
முற்றாய் தளர்ந்த மனதோடு
கனவில்....அம்மா...

"அம்மா"
திறந்த கதவோடு
இளமையை வறுமை தின்ன
வேலை கேட்டு ஒருத்தி.

அவளுக்கு உணவளிக்க
தைரியம் எனக்கு வர
வேலை எதுவும் இல்லை
என்றாலும் இருக்கிறது
குழந்தை பெறும் வேலை ஒன்று.

அவள் முகத்தைத் திருத்தித் தெய்வமாய் !

சிந்தித்துச் சிரித்தபடி
இரண்டு குஞ்சுகள் வீட்டில்
நொய்கூட இல்லை கஞ்சிக்கு
காயஞ்ச வயிறுகள் பிஞ்ச பாயில்.

வருந்திச் சிரித்தபடி
என்னதான் இருக்கிறது என்னிடம்
கருப்பையே இல்லை.

பண்டமாற்றாய்
உதவியாய்
வேலையாய்
இதில் ஏதோ ஒன்று...

தோள் சுமக்க
பெற்றுத் தா பூவொன்று
உன் சுமைகள் சுமக்கும்
தோளாய் நான்.

வேலை கொடுத்த திருப்தியும்
வேலை கிடைத்த திருப்தியும்!!!

ஹேமா(சுவிஸ்)