Tuesday, November 03, 2009

எனக்குண்டான நிலத்துண்டு...

பருந்துகள் அலறிச் சுழலும்
சம​வெளிக்கு வந்தாலும்
பாதாளம் பார்க்கப் பயந்து
கால்கூசும் உயரத்தில்
வேறெங்கோ விரைகிறேன்.

எனக்கான நிலத்துண்டு
ஒரு அல்கெமிஸ்டின் குடுவைக்குள்
நீர்மமாக நிறைந்திருக்கிறது
கவிழ்க்கவியலா மர்மத்தைத் துக்கித்து
மீண்டு கடுகிப் பறக்கிறேன்.

பழைய பீடபூமியின் செவ்விந்தியன்
அழுகும் பிணங்களின் பித்ருக்களுக்கு
இயற்றிய பாடலுக்குள்
இளைப்பாறப் பார்த்தாலும்,
இறந்தவர்களின் கனவு மிச்சங்க​ளை
மொழி​பெயர்க்கப் பயந்து
மீண்டும்
புலம் பெயர்ந்தேன்.

பேராழிகள்
தோட்டங்கள் ​
மெக்பத் நாடக அரங்கின் திரைசீலை
மனிதர்களின் ஆறாம் விரல்கள்
கிதாரின் நரம்பு அறுந்த இசை
பறந்து கொண்டேயிருக்கும்
ஹீலியம் பலூன்கள்
எங்கும் இல்லை
எனக்குண்டான வாழ்நிலம்.

உடன்பாடு கொண்ட உறவுகளின்
அணுக்கத்தின் இருள்மையில்
மீண்டும் மீண்டும் ஏமாந்து
இருளின் திணறலிருந்து விடுபட்டு
நிலவொளிக்கு வந்து
கூந்தல் உதறி முடிந்து கொண்டேன்
மிக மிக ஆசுவாசமாய்.

கதவு திறக்கும் அக்ஸெஸ் கார்டு சாவிகள்
வாய்ஸ் மெயிலில் கேட்ட ஏலியன் அழுகுரல்
பாம்பின் வாசம் வீசம் என் ஆடைகள்
இரண்டாவது தற்கொலைக் கடிதம்
தனியே அழுது நடந்த இரவின் தெருக்கள்...
எங்கும் எங்கும் எங்குமே
எனக்குண்டான
ஏமாற்றத்தின் முகவரிகள் மட்டும்
கிழிந்து தொங்குகின்றன.

இறுதி நடவடிக்கையாய்
ஒரு கைவிடப்பட்ட தெய்வம்
கனவொன்று கண்டது.
கனவின் மொழிபெயர்ப்பில்
என் நிலமுகவரி தெரிந்தது
அது.....
கணணியின் விசைப்பலகையில் என்று !!!

ஹேமா(சுவிஸ்)

38 comments:

  1. ஹேமா நீங்கள் கவிதையின் அடுத்த நிலைக்கு சென்று விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நேரம் வேண்டும் பொறுமையாய் புரிந்து கொள்ள.

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  2. முதல் கை கொடுப்புக்கு நன்றி விஜய்.

    ReplyDelete
  3. //ஒரு கைவிடப்பட்ட தெய்வம்
    கனவொன்று கண்டது.
    கனவின் மொழிபெயர்ப்பில்
    என் நிலமுகவரி தெரிந்தது
    அது.....
    கணணியின் விசைப்பலகையில் என்று !!!//

    ஹேமா,

    நண்பர் விஜய் குறிப்பிட்டிருப்பது போல், நீங்கள் ...இடம் பெயர்ந்திருக்கிறீகள் என் உணர்கிறேன்.

    உங்கள் கவிதைச் சொல்வதைப் போல் உலக நிலப்பரப்பின் ஒவ்வோர் திசையிலிருந்தும் கணிணியின் விசைப்பலகையினூடே உறவுகளின் விரல்கள் விழி துடைப்பதும், நம்பிக்கை ஒளி கொடுப்பதும் தொடர்கிறது.

    'இருண்மைக் கவிதை' என்பார்களே... இது அந்த ரகமா?

    ReplyDelete
  4. //'இருண்மைக் கவிதை' என்பார்களே... இது அந்த ரகமா?//
    அதே தான் சத்ரியன். அது மட்டுமில்லாமல் 'இருக்கும்'
    கவிதையும்.

    ReplyDelete
  5. வார்த்தைகள் இல்லை ஹேமா...

    //'இருக்கும்'
    கவிதையும்.//

    நிஜம் தான் ...

    ராஜன்

    ReplyDelete
  6. உயர்தளக் கவிதை. அதனால் புரியவில்லையோ? யோசிக்கிறேன்.

    ReplyDelete
  7. ஹேமாவின் கவிதைகள் அதன் அடுத்த நிலையை அடைந்துவிட்டதை உறுதிப்படுத்தும் கவிதை இது.

    சில நேரம் எடுத்தாலும் கவிதை உட்புகுந்ததும் வெளியேர மறுக்கிறது.

    அருமை ஹேமா

    ReplyDelete
  8. புலன்களால் புரிந்துகொள்ளுதல்
    உள்ளத்தால் உணர்ந்துகொள்ளுதல்
    சம்யமத்தால் அதுவாகவே ஆகுதல்
    இதில் இப்பொழுது உங்களை
    இரண்டாம் நிலையில் அணுகுதல்
    சரியென்று நினைக்கிறேன்.
    உணர்தலில் ஆரம்பித்து
    புரிதலில் முடித்திருக்கிறீர்கள்.
    நன்று ஹேமா
    வாழ்க வளமுடன்.
    இவன் வி.என்.தங்கமணி www.vnthangamani.blogspot.com

    ReplyDelete
  9. உங்கள் எழுத்துக்களில் வலிமையும் வலியும் கூடிக் கொண்டே போகிறது ஹேமா.......

    வலிக்கு மருந்திடுவதா? மேலும் வலுவடைய வாழ்த்துச் சொல்வதா?

    என்ன செய்யட்டும்........?

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //எனக்கான நிலத்துண்டு
    ஒரு அல்கெமிஸ்டின் குடுவைக்குள்
    நீர்மமாக நிறைந்திருக்கிறது//

    ம்ஹூம்...புதுசா இருக்கு.....!!! ஆனா நல்லா இருக்கு ...

    good work hema !!

    ReplyDelete
  11. ரசித்தேன்..ஆனால் வலித்தது

    ReplyDelete
  12. நன்று சகோதரி ஹேமா! கவிதையில் நவீனத்துவம் தெரிகிறது! எல்லாராலும் புரிந்துகொள்வது சுலபமாயிராது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  13. //கதவு திறக்கும் அக்ஸெஸ் கார்டு சாவிகள்
    வாய்ஸ் மெயிலில் கேட்ட ஏலியன் அழுகுரல்
    பாம்பின் வாசம் வீசம் என் ஆடைகள்
    இரண்டாவது தற்கொலைக் கடிதம்
    தனியே அழுது நடந்த இரவின் தெருக்கள்...
    எங்கும் எங்கும் எங்குமே
    எனக்குண்டான
    ஏமாற்றத்தின் முகவரிகள் மட்டும்
    கிழிந்து தொங்குகின்றன.//

    கவிதையாய் உங்களின் இடுகையை படிக்கமுடியவில்லை. பின்னூட்டம் ஆறுதலாக வேண்டுமா? வாழ்த்துதலாக வேண்டுமா? வார்த்தையின்றி இப்போதும் மௌனமாக போக விரும்பவில்லை. ஏனெனில் முன்னமே வந்துவிட்டேன்.

    ReplyDelete
  14. En nila muhavari therinthathu-nice Hema.

    ReplyDelete
  15. இத்தகையக் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்காகவே கவிதைகள் படித்துப் பழக வேண்டும் போலிருக்கிறது. வாழ்த்துக்கள் ஹேமா....!!!

    ReplyDelete
  16. புரிந்துகொள்வது மிக சிரமமாக இருக்கிறது ஹேமா.
    எனக்கும் புரியும்படி எழுதுங்கோ ... என் புரிதலும் சத்ரியன் அளவே!!
    (இதைபடித்து விட்டு சத்ரியனுடன் விவாதித்த பின் எழுதுகிறேன்)

    ReplyDelete
  17. உங்கள் எழுத்துக்களில் வலிமையும் வலியும் கூடிக் கொண்டே போகிறது ஹேமா.......

    வலிக்கு மருந்திடுவதா? மேலும் வலுவடைய வாழ்த்துச் சொல்வதா?

    என்ன செய்யட்டும்........?

    வாழ்த்துக்கள்
    pls mail me ..pari.invent@gmail.com

    ReplyDelete
  18. ஹேமா ஹேமா ஹேமா
    புதுசா இருக்கு
    புரிய கஷ்டமாய் இருக்கு
    நன்றாக ஆழமாக ஜோசிதுவிடீர்

    ReplyDelete
  19. //பேராழிகள்
    தோட்டங்கள் ​
    மெக்பத் நாடக அரங்கின் திரைசீலை
    மனிதர்களின் ஆறாம் விரல்கள்
    கிதாரின் நரம்பு அறுந்த இசை
    பறந்து கொண்டேயிருக்கும்
    ஹீலியம் பலூன்கள்
    எங்கும் இல்லை
    எனக்குண்டான வாழ்நிலம்.//

    புதுமையான வரிகள்.......
    இந்த கவிதையை படிக்கும் போது, நிறையா விடயங்களை கட்ருக்கொளவும் முடிகிறது.........

    ReplyDelete
  20. எப்பவும்போல் நிதர்சன வரிகள்

    ReplyDelete
  21. ஹேமா

    உங்கள் கவிதை எய்திவரும் பரிணாமம் . மொழி காட்டும் பரிமாணம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

    படிமஙகளின் வீச்சு... பிரயோகஙகள்

    வாழ்த்துகள்

    ReplyDelete
  22. //எங்கும் இல்லை
    எனக்குண்டான வாழ்நிலம்//.

    //என் நிலமுகவரி தெரிந்தது
    அது.....
    கணணியின் விசைப்பலகையில் என்று !!!//

    அருமை ஹேமா

    நமக்குண்டான நிலம் அதுதான்

    ReplyDelete
  23. கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டு வந்து பார்த்தா எல்லாமே மாறி இர்க்கு...
    நல்லா இருக்கு கவிதை ஹேமா...
    தொடரவும்....
    (எனக்கும் சொல்லிக் கொடுங்க....)

    ReplyDelete
  24. முன்னெப்போதுமில்லாத தாக்குதலுக்கு ஆட்படுத்துகிறது கவிதை.

    மடைதிறந்து பாடும் இளங்கவிநான் என்ற பாடலை ஒளியாக ரசித்திருக்கிறேன்.. இங்கு மட்டுமே நான் அதை மொழியாக ரசிக்கலாம் போலிக்கிறது.

    கவிதையின் அழகு அதன் உண்மையில் பாதி மற்றும் அதன் கர்வத்தில் பாதி என்று வீற்றிருக்கிறது. கர்வமாக உண்மையை ஒத்துக் கொண்ட பக்குவமாக இல்லை உண்மையாக கர்வத்தை உடைத்துக் கொண்ட பருவமா என்று தெரியவில்லை... இந்த கவிதையின் ஆளுமை விசேஷமானது.

    இதை வேறொரு தளம் என்று வித்தியாசத்தை கொண்டாடுவதை விட இதுதான் உங்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட தளம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

    அல்கெமிஸ்டுகள்.. பாலைவனத் தேள் மாதிரி.. யாருக்கு நல்லது செய்வார்கள்.. எப்போது கொடடித் தீர்ப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. நினைத்த மாத்திரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து இரண்டு குடுவைகளிலிருக்கும் திரவங்களைக் கவிழ்த்து தங்கம் வரவழைக்கும் சாமார்த்தியம் உண்டு.. அதே போல் ஒரு போர்ப்படையையே காற்றூதி மறையவைக்கும் அமானுஷ்யமும் உண்டு... அல்கெமிஸ்டிடமிருந்து அவன் நீர்மத்தை சாய்க்கும் மர்மம் யாருக்குத்தான் கைவரும்..??

    உங்களின் இந்த வரிகளுக்காக நான் அல்கெமிஸ்டின் அடிமையாகி ஒரு தங்கக்கட்டியை உங்களுக்காக நிலத்துண்டாக பரிசளிக்கலாம்!

    கவிதையெங்கும் படர்ந்து வரும் இயலாமையின் இருளும் கயமையின் கருமையும்.. இனிய சுவாசத்திணறல்களை உருவாக்குகின்றன.

    இதுதான் கவிதை... படைப்பை மீறி பேசவைக்கும் செறிவு, படைப்பை உடைத்து வாசகனைப் பிரவாகிக் வைக்கும் அழுத்தம் இதுதான் (இது மட்டும்தான்) கவிதை. நீங்கள் அதை இங்கு கண்டடைந்து விட்டீர்கள்.

    புரியாத மர்மமாய் விளங்கும் சம்பவங்கள், சங்கதிகளில் வாழ இடம் தேடும் அவலம் - மொழிபெயர்த்தால் உலகத்தின் முத்தம் உங்களுக்கு நிச்சயம்!

    மனிதர்களின் ஆறாம் விரல்களில் வசிக்க இடம் தேடும் நெருக்கடியை எல்லோரும் புரிந்து கொள்ளட்டும்.. நான் இந்த 6ம் விரலை என் சிகரெட்டாக திகைத்து புகைத்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  25. //கதவு திறக்கும் அக்ஸெஸ் கார்டு சாவிகள்
    வாய்ஸ் மெயிலில் கேட்ட ஏலியன் அழுகுரல்
    பாம்பின் வாசம் வீசம் என் ஆடைகள்
    இரண்டாவது தற்கொலைக் கடிதம்
    தனியே அழுது நடந்த இரவின் தெருக்கள்...
    எங்கும் எங்கும் எங்குமே
    எனக்குண்டான
    ஏமாற்றத்தின் முகவரிகள் மட்டும்
    கிழிந்து தொங்குகின்றன.//


    ஹே........... மா !!!!
    எங்க இருக்கீங்க
    பறந்து கொண்டா!!
    பறந்து சொன்ன வரிகளை
    திறந்து கொஞ்சம் பார்க்கின்றேன்
    வியந்து விரிந்துகொண்டே செல்கிறது.

    நிலை உயர்ந்து
    கலை வளர்கிறது
    வருத்தங்களை விளித்தாலும்..

    வாழ்த்துக்கள் ஹேமா..

    ReplyDelete
  26. டேய்,ஹேமா பயலே...என்ன இப்படி புரட்டி போடுகிறாய்?குபீரென நீரில் வீழ்ந்து மீன் கவ்வி செல்லும் பறவை மாதிரி...ஒரு தளத்தில் இருந்து அடுத்த தளத்துக்கு.கண் சிமிட்டும் நேரத்தில்!

    ரொம்ப சந்தோசமாய் இருக்கு ஹேமா!ஆனால் கவிதையில் உள் இருக்கு வலியில் சோர்ந்து போகிறேன்.பிரமிப்பான பரிணாமம்!!!!!நீ எழதிய கவிதைகளில் மிக பிடித்த கவிதை மக்கா!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. என் அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.எல்லாரும் என்னை முறைக்கிறீங்க.தெரியுது.அது ஒண்ணுமில்லீங்க.நேசனின் பாதிப்பு கவிதை.அவ்ளோதான்.கவிதையில பெரிய விஷயம் ஒண்ணும் ஒளிஞ்சிருக்கல.சில சொற்கள் புதுசா இருக்கு.அதை விலக்கிப் பார்த்தால் கவிதை விளங்கிடும்.

    கவிதை நம்ம ஊரின் பிரச்சனை.
    அதனால் ஓடி ஓடி எனக்கான அமைதியான இடம் தேடுகிறேன்.
    இறந்தவர்களுக்கான ஆவியின் பாடல்களிலாவது இளைப்பாறப் பார்த்து முடியாமல் அகதியாகிறேன்.
    அதன் பிறகும் அமைதிக்கான தேடுதல்.எனக்குண்டான நிலம் எங்கும் இல்லை.மனிதனின் ஆறாம் விரலில் கூட.ஜெகன் அழகாக விளக்கம் தந்திருக்கார்.எங்குமே
    ஏமாற்றம்தான்.அதன் பிறகு "வானம் வெளித்த பின்னும்".வானின் நிலவொளியில் கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுதிக்கொண்டே இன்னும் தேடுகிறேன்.அங்கேதான் ஒரு தெய்வம் கண்ட கனவில் கணணியின் விசைப்பலகை[கீபோர்ட்]யில் என் அமைதி முகவரி கண்டு சொல்கிறது.
    உண்மையில் அங்கு நிறைந்த அமைதியைக் காண்கிறேன்.என் துக்கமோ சந்தோஷமோ கொட்டித் தீர்க்கிறேன்.மனதின் பாரம் குறைகிறது.

    அடிக்கடி இப்படியான கவிதைகள் வராது.எப்போதும்போல எழுதுவதே என் இயல்பு.எனக்கும் பிடித்தது.
    அன்புக்குக் கட்டுப்பட்டு எழுதிய கவிதை இது.

    ReplyDelete
  28. எனக்கு பித்தம் இருக்கும் அளவுக்கு கவிதை ஞானம் கிடையாது. ஆனாலும் உங்கள் கவிதைகள் நல்லா இருக்கு. நிறைய எழுதுங்கள். உங்களுக்கும் ஆறுதல், படிப்போர்க்கும் பாசம். நன்றி.

    ReplyDelete
  29. ஹேமா,போன பதிவில் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தரவில்லை. இந்த பதிவிலும் அது தான் கேள்வி.

    ReplyDelete
  30. அருமை ஹேமா!!! கவிதை புதுசா நல்லா இருக்கு.

    ReplyDelete
  31. ஹேமா நான் கொஞ்சம் தாமதம்
    மீண்டும் ,மீண்டும் படித்தேன்
    உங்கள் மனதில் “பட்டதையும்”
    நடந்தவைகட்கும் எழுத்தில்
    உருக்கொடுத்து உலவவைத்திருக்கின்றீர்கள்
    ஆறாத வரிகள்.மா

    ReplyDelete
  32. உங்கள் கவிதையை புரிந்துகொள்ள நாங்கள்தான் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்.

    வார்த்தைகளின் விளிப்பிற்குள் சிக்கிக்கொண்ட வாழ்க்கையின் கோலம் புரிகிறது.

    அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. எனக்கான நிலத்துண்டு
    ஒரு அல்கெமிஸ்டின் குடுவைக்குள்
    நீர்மமாக நிறைந்திருக்கிறது]]

    என்ன சொல்ல :(

    ReplyDelete
  34. வலிகள் சுமந்த வரிகள்

    ReplyDelete
  35. ஒரு தொடர் அழைப்பு ஹேமா..

    ReplyDelete