Friday, July 18, 2008

கறுப்பு ஆடி...

ஆடிப்பிறப்பாம் நேற்று.
ஓப்பிள் காரில் பறந்தேன்
முருகன் கோவிலுக்கு.
அகதிக் கடவுளை சொகுசாய் பார்க்க.
பளபளப்பாய் உயர்ந்தரக ஆடை
நெஞ்சை மறைக்கும் நகைகள்
பிராங்கில் ஓடர் பண்ணிக் கட்டிய
கால்நீள வாசமில்லா மலர்மாலை.
பக்கத்தே இருமனைவிகளோடு.

கூப்பிய கரங்களுக்குள் கொலைவெறி.
முருகனை முறைத்தேன்.
அறைய நீண்ட கைகளை அடக்கியபடி நான்.
தெய்வங்கள் என்பவர் யார்...என்ன...
உண்மையா...?
என்றுமே பேசாத கற்களுக்கு
இத்தனை அலங்காரம்.
லிட்டர் கணக்கில் பக்கெட் பாலில் குளித்து
மிதமிஞ்சிய படையல்.

உண்ணுகின்ற குழந்தைத் தெய்வங்கள்
ஒற்றைப் பருக்கைச் சோற்றை
எறும்பு காவினாலும் தட்டிப் பறித்துத்
தின்னும் அவலம் என் ஊரில்.
இங்கோ....
பல்லக்கில் உலா வந்த
களைப்பில் தூக்கம்தானே.
பிறகெங்கே பக்தர்களின் பிரச்சனைகளும்
பேச்சுவார்த்தைகளும்.
அவனே கனவில் மிதப்பான்.
அடுத்தநாள் குதூகலத்திற்காய்.
வெம்பிய மாம்பழமாய் மனம் அவிய
ஆடிப்பிறப்பைத் தொடர்கிறேன்.

"ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே"
என்று பாடிய காலம் போய்
கறுப்பு ஆடியாய் மாறி
ஆடி மெல்ல அசைகிறாள் என்றாலே
மனம் புயலடிக்கத்
துக்கம் விசாரிக்க சாவீடு போகிறது போல
ஒரு பாரம் ஈழத் தமிழருக்கு.

நேற்றும் மட்டக்களப்பில்
கைகள் கட்டப்பட்ட நிலையில்
மீண்டும் மனிதப் புதைகுழி ஒன்று.
காலகாலமாய் குடியிருந்த
கதிர்காமத்து முருகன் கோவில் கலைக்கப்பட்டு
போதி மரமும் புத்தரும் விகாரையும்.
மனிதனை வழிநடத்த கடவுள் என்கிற
ஹீரோவை வைத்துச் சொன்ன கட்டுக் கதைகள்.
உண்மையாய் ஒரு கடவுளும்
நல்லது செய்ததாய் சாட்சியே இல்லையே.

திசை மாறிப் பறந்த பறவை
திறந்து கிடந்த கதவிற்குள்
புகுந்து விட்டதாய் எங்கள் நிலை இங்கு.
நாகதாளியில் எழுதிய எங்கள் பெயர்கள்
இன்னும் அழியாமல்.
கூடுவிட்டுச் சொல்லாமலே வந்துவிட்டோம்.
எங்கள் கூடுகளை மரங்கள் இன்னும் பாதுகாத்தபடி.
விட்டு வந்த வழித்தெருக்கள்
புழுதி சேமித்துப் பொத்தி வைத்திருக்கின்றன
எங்கள் காலடித் தடங்களோடு.
பனம்பழப் பூச்சிகளும்
எச்சில் அமிலம் பூசி காக்கின்றன
பனம்பழங்களை எங்களுக்காய்.

அன்பு வறண்ட பூமி
வாய் பிளந்து காத்துக் கிடக்கிறது
அமைதி மழைக்காய்.
விழுவது மழை அல்ல.
மனிதச் சடலங்கள்.
தென் திசை தெய்வங்களே
என் தேசம் தூரத்தே அமைதி தொலைத்ததாய்.
உண்ட களைப்பில் நீ தூங்கு.
உண்மைச் சக்தி உனக்கிருந்தால் எமக்குக் கொடு.
நாங்களாவது தேடிக்கொள்கிறோம்
எங்கள் அமைதியை!!!

ஹேமா(சுவிஸ்)

10 comments:

  1. Hi Hema eppidi irukkinga.sugama?unga kavithaikal eppavum pola supperb.eppavum kavalaiya irukkaathinga.mmm naanum kealvipaddu irukken BLACK JULY nu.manasukku rompa varuththamthaan.thodanthum ezhuthunga Hema.
    Hema PLS unga side kku vara rompave late akuthu.ennenamo ellam lord eethiringa.pls konsam thevai illathathu ellam eduthidunga.
    appothan varavangalukku easy ya irukkum.kovikka venam.Ram.

    ReplyDelete
  2. //தெய்வங்கள் என்பவர் யார்...என்ன...
    உண்மையா...?
    என்றுமே பேசாத கற்களுக்கு
    இத்தனை அலங்காரம்.
    லிட்டர் கணக்கில் பக்கெட் பாலில் குளித்து
    மிதமிஞ்சிய படையல்.//

    இதே ஆத‌ங்க‌ம்,கோப‌ம்தான் என‌க்கும்...(திருப்பதி,பழனி..இதர பணக்கார சாமிகள்)
    'வாயிலில் இருக்கும் குருட்டுப் பிச்சைக்கார‌னைக் க‌ட‌ந்து உண்டிய‌லில் போடுவ‌தால் என்ன‌ புண்ணிய‌ம்..?' (எப்போதோ ப‌டித்த‌து).

    ம‌ன்னிக்க‌வும் 'க‌றுப்பு ஆடி' ப‌ற்றி என‌க்குத் தெரியாது(தெரிந்து கொள்கிறேன்)... இதை ஒரு பொதுக் கோப‌மாக‌ப் பார்த்துதான் நான் விம‌ர்சித்துள்ளேன்..
    //வHema PLS unga side kku vara rompave late akuthu.ennenamo ellam lord eethiringa.pls konsam thevai illathathu ellam eduthidungஅ//
    என‌து க‌ருத்தும் அதே...

    ReplyDelete
  3. நன்றி Ram பாராட்டுக்கும் கருத்துக்கும்.அடிக்கடி வந்து ஊக்குவிகிறீர்கள்.மீண்டும் வாருங்கள்.


    ஆமாம் தமிழ்ப்பறவை அண்ணா.
    கடவுள் மீது சரியான கோவம் சில சமயம்.கோவிலில் கடவுள் மட்டும்தான் நின்மதியாக இருக்கிறார் வந்து கும்பிடும் அத்தனை மனங்களிலும் ஏதொ ஒரு பாரம்.
    ஊர்விட்டு ஊர் வந்திருக்கிறோம்.
    யாரிடம் அமைதி.பிறகென்ன கடவுள்.


    என் தளம் பற்றி இருவரும் சொல்லியிருக்கிறீர்கள்.கண்காணிப்பவரிடம் புகார் சொல்கிறேன்.
    நன்றி.இருவருக்கும்.

    ReplyDelete
  4. தங்களின் வலைப் பதிவை வாசிப்போரில் நானும் ஒருவன். என்ன விமர்சனம் எழுதுவதற்கு நேரம் இருந்தும் எழுதுவது குறைவு.தங்களின் புதிய கவிதையை இன்று முழுதாக வாசித்தேன்.அதில் எனக்கு சில விடயங்கள் புரியவில்லை.
    அடிப்படியில் நான் ஒரு கம்யூனிஸ்ட்.சில தடைவிகளில் பப்புலாநெருதா போலவும்,டால்ஸ்ராய் போலவும்,என்னை கற்பனை செய்வதுண்டு,சாள்ஸ் டிக்கின்ஸிண் எழுத்து நிறைய பிடிக்கும்.இது நிற்க.

    அடிப்படியில் ஆங்கில இனத்தவரால் அறிமுகம் செய்யப்பட்ட சொல் தான் கறுப்பு.கறுப்பு என்பது இன துவேசத்தின் வெளிப்பாடு.இந்த கறுப்பு என்னும் சொல்லை வைத்து நிறைய
    கருத்தாங்கள் வந்துவிட்டன.

    இதனை பற்றி நீங்கள் அறிய விரும்பும்நேரத்தில் அறிய தருகிறேன்.

    கல்லான கடவுளிடம் சென்றது முதல் பிழை.
    பின்னர் கறுப்பு ஆடி என்று புதிய பதத்தை அறிமுகம் செய்கிறீர்கள்
    கதிர்காமம் பற்றிய தவறான விளக்கம் தருகிறீர்கள்.

    இப்படி இருப்பவற்றை சொல்ல வேண்டிய தேவை உள்ளது.
    காரணம் இன்னும் ஒரு 10 வருடம் கழித்து உங்கள் கவிகள் கூட
    ஆராய்ச்சி செய்யப்படலாம்.

    எழுத்து என்பது வரலாறு.வரலாறு என்பது வாழும் காலம் அல்ல.
    என்றுமே விமர்சிக்கப்படுவதும்,தொடர்ந்தும் மேற்கோள் காட்டப்படுவதும் தான்.

    நாகதாளியில் எழுதிய எங்கள் பெயர்கள்
    இன்னும் அழியாமல்

    பனம்பழப் பூச்சிகளும்
    எச்சில் அமிலம் பூசி காக்கின்றன
    பனம்பழங்களை எங்களுக்காய்.


    பிராங்கில் ஓடர் பண்ணிக் கட்டிய
    கால்நீள வாசமில்லா மலர்மாலை.
    பக்கத்தே இருமனைவிகளோடு.

    ஆரோக்கியமான எழுத்து.பாராட்டுக்கள்.



    தென் திசை தெய்வங்களே
    என் தேசம் தூரத்தே அமைதி தொலைத்ததாய்.
    உண்ட களைப்பில் நீ தூங்கு.
    உண்மைச் சக்தி உனக்கிருந்தால் எமக்குக் கொடு.
    நாங்களாவது தேடிக்கொள்கிறோம்
    எங்கள் அமைதியை!!!


    இதோடு வட திசை தெய்வங்களையும் சேர்த்து இருக்கலாம்.
    ஏன் என்றால் தங்களின் முதல் கவியில் சில வேண்டுகோள் விடுதுள்ளீர்கள்.

    சுதன்
    2.19 காலை.

    ReplyDelete
  5. ஆழப்பதிந்த ஆடி மாதங்கள்
    19 July 2004

    இவ் ஆய்வு 19.07.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில்
    தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது

    " தமிழர்களின் வேதனைக் காலங்களின் சிகரமான கறுப்பு யூலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவங்கள் நிறைந்த யூலை மாதங்கள்.அந்த மாதங்களை மனதில் தாங்கும் மாந்தர்கள் நாங்கள். வரப்போகும் காலமெல்லாம் எம் நெஞ்சங்களில் அத் தாக்கம் என்றும் இருக்கும்."

    ***********************************
    யூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மீண்டும் எமது நேயர்களைச் சந்திக்கின்ற இவ்வேளையில் இவ்வளவு காலமும் யூலை மாதங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் பல எமது நினைவுகளில் நிழலாடுகின்றன. 1983ம் ஆண்டில்.இந்த யூலை மாத இறுதியில் தான் அன்றைய சிறிலங்கா அரசு தயாரித்து வழங்கிய தமிழினப் படுகொலைகள் அரங்கேறின.
    21 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற படுபாதகச் செயல்கள் மூலம் உலகநாடுகள் முன்பு சிறிலங்கா அரசு தலை குனிந்து நின்றது. அன்று உயிர் துறந்த, உடமை துறந்த அப்பாவித் தமிழர்களை இன்று உளம் கலங்க எண்ணிப் பார்க்கிறோம்.

    அது மட்டுமல்ல... 29ம்திகதி யூலை மாதத்தில் தான் பின்னாளில் வேறு ஒரு காரியமும் நடந்தேறியது.
    17 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி அன்றுதான் சிறிலங்காவின் அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவும்,அன்றைய இந்தியாவின் பிரதமரான ராஜீவ் காந்தியும் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் பொருட்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் என்ற ஏதோ ஒன்றில் கையெழுத்திட்டார்கள்.

    அன்று கையெழுத்துப் போட்டவர்களின் தலையெழுத்தை விதி மாற்றி எழுதியதால் அவர்கள் இப்பொழுது நம்மிடையே இல்லை என்றாலும் அன்று அவசரத்தில் அள்ளித் தெளித்த அலங்கோலத்தின் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கூறியது இவ்வேளையில் எமது ஞாபகத்திற்கு வருகின்றது. 'நாம் பிரபாகரனிடம் சரணாகதி அடைவதை தவிர்க்கவே இந்த ஒப்பந்தத்தை உருவாக்கினோம்.

    பிரபாகரனின் வாளை எனது கட்சி அலுவலகத்தில் நான் தொங்க விடப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை" பாவம் வாளை தொங்க விடப்போவதாகச் சொன்னவர்தான் வாழாமல் வெகுதூரம் சென்று விட்டார். ஆனால் ஜே.ஆர் உம் இந்திய அமைதி காக்கும் படையும் அன்று இட்ட தீயினால் ஆயிரக்கணக்கில் இறந்து போன அப்பாவித் தமிழ் பொது மக்களையும் கோடிக் கணக்கான பொதுச் சொத்து சேதங்களையும் இந்த நேரத்தில் நினைக்கிறோம்.

    தர்மத்தினை சூது வந்து கவ்விய போதும் காலத்தின் தவப்பலனான தமிழர்களின் தேசியத் தலைவனால் தமிழீழம் பின்னர் விடிவெள்ளியைக் கண்டது.17 ஆண்டுகளுக்கு பின்னர் விடிவெள்ளியை மட்டுமல்ல விடியலின் பூபாளத்தையும் தேசம் தேடி நிற்கின்றது.

    அன்றிலிருந்து இன்றுவரை யூலை மாதங்களில் நடைபெற்ற சம்பவங்கள் பலவற்றை இப்போது நேயர்களின் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறோம்.

    1957ம் ஆண்டு யூலை
    27ம் திகதி அன்று பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது

    1975ம் ஆண்டு யூலை
    27ம் திகதி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்ட தினமாகும்.

    1977ம் ஆண்டு யூலை
    21ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழீழ மக்கள் தமக்கு தமிழீழமே வேண்டும் என்று ஆணை கொடுக்கிறார்கள்.

    அதே வருடம் அதே மாதம் சிங்கள காடையர்கள் தமிழர்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.

    1979ம் ஆண்டு யூலை
    20ம் திகதி அன்று Prevention of Terrorism Act - PTA என்று அழைக்கப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழர்களை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    1983ம்ஆண்டு யூலை
    23ம் திகதி அன்று விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 13 இராணுவத்தினர் மரணம் அடைந்தனர்.

    24ம் திகதி சிறிலங்கா அரசின் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலைகள் ஆரம்பமாகின.

    25ம் திகதி 35 தமிழ் கைதிகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில், சிங்களக் குண்டர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

    27ம் திகதி மேலும் 19 தமிழ் கைதிகள் அதே சிறைச்சாலையில் சிங்களக் காடையர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

    1985ம் ஆண்டு யூலை
    8ம் திகதி திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

    1987ம் ஆண்டு யூலை
    5ம் திகதி தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் திருப்புமுனையாக கரும்புலியாக கப்டன் மில்லர் அவர்கள் சரித்திரம் படைத்த தினமாகும்.

    17ம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும், இந்திய தூதுவருடன் பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்த தினமாகும்.

    19ம் திகதி இந்திய ராஜதந்திரிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் பேச்சு வார்த்தைகளை நடாத்திய தினமாகும்.

    27ம் திகதி டிக்ஸிற் இந்தியாவிலிருந்து கொழும்புக்கு வந்து ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய தினமாகும்.

    29ம் திகதி சிறிலங்காவும் இந்தியாவும் உத்தியோகபூர்வமாக, அபகீர்த்தியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தினமாகும்.

    1991ம் ஆண்டு யூலை
    10ம் திகதி வரலாற்றுச் சிறப்பு மிக்க மரபு வழிப் போர் ஒன்றை ஆணையிறவில் விடுதலைப்புலிகள் ஆரம்பித்த தினமாகும்.

    1993ம் ஆண்டு யூலை
    25ம் திகதி மண்கிண்டி இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்ட தினமாகும்.

    1995ம் ஆண்டு யூலை
    9ம் திகதி சிறிலங்கா விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தமான குண்டுத் தாக்குதலால். நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் தாயார் குழந்தைகள் முதியோர் உட்பட 141 உயிர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட தினமாகும். தேவாலயமும் படு சேதம் அடைந்தது.

    14ம் திகதி யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கு முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தின் மீது விடுதலைப் புலிகள் நடாத்திய புலிப்பாய்ச்சல் சமர் நடந்த தினமாகும்.

    1999ம் ஆண்டு யூலை
    18ம் திகதி வரலாற்றுப் புகழ் மிக்க ஓயாத அலைகள்-01 இராணுவ நடவடிக்கையை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த தினமாகும். இந்தச் சமரினால் முல்லைத்தீவு மாவட்டம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

    2001ம் ஆண்டு யூலை
    24ம் திகதி முழு உலகையும் பரபரப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது கட்டுநாயக்கா விமானத்தளம் மீதான தாக்குதல் நடைபெற்ற தினமாகும். அன்றைய தினம் 28 வான் கலங்கள் அழிக்கப்பட்டன.

    அன்பு நேயர்களே! யூலை மாதங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத அத்தியாயங்களாக என்றென்றும் நிலைத்து இருக்கும்.

    எத்தனை வேதனைகள்? எத்தனை சோதனைகள்? எதிர்பாராத இடங்களில் இருந்ததெல்லாம் எவ்வளவோ இடர்ப்பாடுகள் தமிழீழ மக்களும் அவர்களைக் காக்கும் மறவர்களும் கடந்திட்ட நெருப்பாற்றின் கொடுமையை யார் தான் சொற்களினால் விளக்கிட இயலும்? இவர்களின் நெடுங்காலத் தியாகத்தினால் விளைந்த அறுவடைக் கால நேரமிது அல்லவா?

    தமிழர்களின் வேதனைக் காலங்களின் சிகரமான கறுப்பு யூலை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவங்கள் நிறைந்த யூலை மாதங்கள். அந்த மாதங்களை மனதில் தாங்கும் மாந்தர்கள் நாங்கள். வரப்போகும் காலமெல்லாம் எம் நெஞ்சங்களில் அத் தாக்கம் என்றும் இருக்கும்.

    ReplyDelete
  6. திசை மாறிப் பறந்த பறவை
    திறந்து கிடந்த கதவிற்குள்
    புகுந்து விட்டதாய் எங்கள் நிலை இங்கு.நாகதாளியில் எழுதிய எங்கள் பெயர்கள் இன்னும் அழியாமல்.
    கூடுவிட்டுச் சொல்லாமலே வந்துவிட்டோம்.எங்கள் கூடுகளை மரங்கள் இன்னும் பாதுகாத்தபடி.
    விட்டு வந்த வழித்தெருக்கள்
    புழுதி சேமித்துப் பொத்தி வைத்திருக்கின்றன
    எங்கள் காலடித் தடங்களோடு.
    பனம்பழப் பூச்சிகளும் எச்சில் அமிலம் பூசி காக்கின்றன பனம்பழங்களை எங்களுக்காய்.

    அத்தனை வரிகளும் ஏங்கித் தவிக்கிற உங்கள் மனசைக் காட்டுகிறது.
    தொடருங்கள் ஹேமா.

    ReplyDelete
  7. வணக்கம் சுதன்.உங்கள் விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.கறுப்பு என்பது எப்படி ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட சொல் என்கிறீர்கள்.
    உங்களிடம்"கறுப்பு"பற்றி அறிய விரும்புகிறேன்.

    கதிர்காமம் எனக்குத் தெரிந்தமட்டில் காலகாலமாக முருகனின் கோவிலாகத்தான் இருந்து வந்ததாக அறிகிறேன்.

    "கறுப்பு ஆடியின்"சில அநர்த்தங்களின் முக்கியமான சிலவற்றை ஷண்முகம் சபேசன்என்பவர் தந்திருக்கிறார்.
    பாருங்கள்.

    வடதிசைத் தெய்வங்கள்... உங்கள் மனநிலையைப் பொறுத்து இந்தியாவையோ அல்லது யாழ்ப்பாணத்தயோ கற்பனை செய்து கொள்ளலாம்.நன்றி சுதன்.

    பெயர் தராமலே யாரோ பாரட்டியிருக்கிறீர்கள்.அவருக்கும்
    நன்றி.

    ஷண்முகம் சபேசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  8. /என்றுமே பேசாத கற்களுக்கு
    இத்தனை அலங்காரம்.
    லிட்டர் கணக்கில் பக்கெட் பாலில் குளித்து
    மிதமிஞ்சிய படையல்.


    உண்ணுகின்ற குழந்தைத் தெய்வங்கள்
    ஒற்றைப் பருக்கைச் சோற்றை
    எறும்பு காவினாலும் தட்டிப் பறித்துத்
    தின்னும் அவலம் என் ஊரில்.
    இங்கோ....
    பல்லக்கில் உலா வந்த
    களைப்பில் தூக்கம்தானே.
    பிறகெங்கே பக்தர்களின் பிரச்சனைகளும்
    பேச்சுவார்த்தைகளும்.
    அவனே கனவில் மிதப்பான்.
    அடுத்தநாள் குதூகலத்திற்காய்./

    /திசை மாறிப் பறந்த பறவை
    திறந்து கிடந்த கதவிற்குள்
    புகுந்து விட்டதாய் எங்கள் நிலை இங்கு./

    /அன்பு வறண்ட பூமி
    வாய் பிளந்து காத்துக் கிடக்கிறது
    அமைதி மழைக்காய்.
    விழுவது மழை அல்ல.
    மனிதச் சடலங்கள்.
    தென் திசை தெய்வங்களே
    என் தேசம் தூரத்தே அமைதி தொலைத்ததாய்.
    உண்ட களைப்பில் நீ தூங்கு.
    உண்மைச் சக்தி உனக்கிருந்தால் எமக்குக் கொடு.
    நாங்களாவது தேடிக்கொள்கிறோம்
    எங்கள் அமைதியை!!!/

    அருமை வரிகள்

    ReplyDelete
  9. நன்றி திகழ்.சந்தோஷம்.மனதின் கனம் கனத்த வரிகளாக...எதுவரை என்றுதான் தெரியாமல்!!!

    ReplyDelete