Wednesday, July 16, 2008

ஒரு கிராமத்துக் காலை+மாலை


குயில்களும் காக்கை குருவிகளும்
கூவிக் கரையும் கொஞ்சல்கள்.
உடல் சோம்பல் முறித்து
மலரும் பூஜை மலர்கள்.
புற்களின் நுனியில்
கதிரவனின் முத்தத்திற்காய்க்
காத்துக் கிடக்கும் பனித்துளிகள்.

அடுக்கிய கிடுகின் சுமை
சினம் கொடுத்தாலும்
நெற்றி உரோமத்தை வறட்டியிழுக்கும்
சந்தனமும் குங்குமமும்
கழுத்து நிறை சலங்கையுமாய்

தாங்களே ராஜாக்களாய்
சந்தம் பிசகாமல் துள்ளு நடை போடும்
காளை மாட்டு வண்டில் ஓசைகள்.
இவற்றோடு போட்டி போடும்
காற்றுத் தேடித் தரும்
தூரத்துக் கோவில் மணி ஓசைகள்.

துலாவின் பாரம் போதாமல்
பிற்பாரமாய் நான்கு கற்கள் தொங்க
கூடக் கந்தனும் ராசனும் ஏறி மிதிக்க
துலாப்பாட்டோடு நீர்பாச்சும்
பரம்பரைத் தோட்டக்காரர்கள்.
வருமானம் வேண்டி
விளைந்ததை கலங்களில் கட்டி
உமிக்குள் மிஞ்சியதைக்
கஞ்சியாக்கும் பெண்டுகள்.
கலப்பையோடு வயல்வெளி நடக்கும்
எலும்புக்கூடு மனிதர்கள்.

தூக்கணாங் குருவியாய்
பனை மரத்து நுனியில்
இடுப்பில் பானையோடு தொங்கும்
கள்ளு இறக்கும் ஒருவர்.
இரவு முழுதும் சேர்த்த
நெற்குறுணிகளோடு
விடியலின் வருகையை
வெறுப்போடு புறுபுறுத்தபடி
புற்றுக்குள் ஒளிந்துகொள்ளும்
பெருச்சாளிகள்.

மறைத்தாலும் மறைக்க முடியாத
திக்கித் திணறும் பருவங்களோடு
அன்றலர்ந்த மலர்களாய்
ஆற்றோடும் அருவியோடும்
ரகசியக் காதல் கதை பேசும்
குமரிப் பெண்கள்.
சமவுரிமை சொல்லிச்
சண்டை போட்டு கொஞ்சம்
எக்காளக் கூத்தோடு துள்ளிக் குளிக்கும்
எருமைகளும் மாடுகளும்.

நகரத்து பணக்கார
விக்கிரகங்களுக்கு விதிவிலக்காய்
வறுமைப் பிரசாதமும்
பட்டாடையும் ஆராதனையுமாய்
தங்கள் குடிசையை விட
வறுமைக் கல் ஒன்று உயர்த்தி
மழைக் கம்பி கிழிக்காமல் மூடி
கூரை முகப்பில்"பேச்சியம்மன் கோவில்"
என்று எழுதிய கோவிலில் பூசகரின் மந்திரங்கள்.

மேய்கின்ற மாடுகளும் மனிதர்களும்.
மழைக்கு ஒதுங்க வசதியாய் இருக்குமோ!
பிரம்புத்தட்டி மறைக்க ஐந்து வகுப்புக்கள்
காய்ந்த ரொட்டிக்கும் கறுப்புத் தேநீருக்குமாய்
பேச்சுவார்த்தையோடு காத்திருக்கும்
விரல் விட்டு எண்ண
பன்னிரண்டே மாணவர்களும்
மனம் குடும்பத்தோடு நகரத்திலும்
உடல் வெறும் வருமானத்திற்குமாய்
பொதுக்குரலோடு ஒரு ஆசிரியர்.
ஒருபள்ளிக்கூடம்.

இப்படியாய் விடியும்
ஒரு கிராமத்து விடியல்!!!


தொடரும் மாலையில்...

பனை ஓலை வேய்ந்த குடிசையில்
சொட்டும் முத்துத் தெறிப்பாய் மழை நீர்.
ஏந்திப் பிடிக்க சிரட்டைக் குவளை
அடுக்குகள் ஜலதரங்கமாய்.
தாளம் பிசகாமல் விழும் மழைத் துளிக்கு
மூவர் பாட இருவர் ஆட்டமுமாய்
ஐந்து குட்டிக் குழந்தைகள்.

பாடப் புத்தகம் நனைந்தாலும்
மயிலிறகு நனைந்ததால் அழுவதை
ரசிக்கும்"டயானா"அருகில் உரசஇ
உதைத்த வேகத்தில்
முற்றத்து பங்கருக்குள்ளும் சங்கீதம் பிறக்க.
இன்னிசை கலைக்கும் கலைஞனாய்
கள்ளுப் போத்திலும் கையில் ஒரு சரையுமாய்
காலையில் நடந்த எலும்புக்கூடு குடிகார அப்பா.

குழந்தைகளை முறைக்கும் பருந்திடம்
காத்திடத் தாய்க்கோழியாய் அம்மா.
அடுத்த வீட்டில் அரிசியும் தேங்காயும்
கடன் பட்டு வேலியில் படர்ந்த
தூதுவளையும் பிரண்டையும் தேடி
அரைத்த சம்பலையும்
மண்பானையில் ஆக்கிய சோற்றையும்
காக்கும் காவலாளியாய்
மட்டைப்பந்த்தின் ஓட்ட எண்ணிக்கையாய்
குழந்தைகளுக்கும் குசினிக்கும்
ஓடிக் களைக்கும் பரிதாப அம்மா அவளாய்.

கோழியும் குஞ்சுகளும்
பதுங்கிய கிழிந்த பஞ்சாரத்துள்
சில சமயம் பருந்தின்
அட்டகாசம் பலமாயும்
சிலசமயம் அடக்கமாயும்...

மாலைப் பொழுது அடங்கும்
கிராமம் ஒன்றில் !!!

ஹேமா(சுவிஸ்)

3 comments:

  1. தோழி ஹேமா அவர்களுக்கு, நான் ஒரு மாத விடுமுறையாக தமிழ்நாடு செல்கிறேன், கண்டிப்பாக நேரம் இருந்தால் உங்கள் வலைப்பூவில் என் மறுமொழி இருக்கும். உங்கள் கருத்து பணி தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பு திலீபன் சுகமாய்ப் போய் வாருங்கள்.குடும்பத்தாரோடு சந்தோஷசமாய் விடுமுறை இணைந்துவர என் வாழ்த்துக்கள்.
    சந்திப்போம் மீண்டும் சீக்கிரத்தில்.

    ReplyDelete
  3. கிராமத்தினை கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள் ஹேமா.. ம்ம்.. செம சூப்பர்.

    ReplyDelete