Saturday, April 04, 2015

கனவும் கடனும்...

கண் மூடினால்
கனவுகளில்
கனவுகளைத் துரத்தும்
பிரமாண்டப் பாம்பு
இடிந்து விழும் வானம்
புயல்
போர்
வன்முறை
வறுமை.

இன்றைய புதுக்கனவில்
என்றோ
தாத்தா சொன்ன
ஒற்றைக் கண்ணன்
துரத்த....

ஓடிய திசையில்
ஆழக் குழியொன்றில்
குப்பறத் தள்ளிய
நடு இரவில்
பிஞ்சுக் குழந்தையின்
கரங்களில் தஞ்சமாய்
தூங்கும் கனவில் நான்.

இனிப்புக்கள்
தேவதைகள்
நட்சத்திரங்கள்
பனிப்பாறைகள்
பளிங்கு மாளிகைகள்
மூக்கு முட்டும் வாசனையோடு.
வேண்டாக் கனவுகளை
அடித்து விரட்ட ....

பச்சைத் தவளை
டோராக்குதிரை
சிவப்புச் சிங்கம்
மஞ்சள் நாய்
சிவப்புப் பாம்பு
ஓடும் ஊர்தி
பறக்கும் விமானம்
குட்டிக் குட்டியாய்.

போர் நிறைந்த உலகில்
சிசுக்கள் நசுக்கும் பூமியில்
கை உயர்த்தி
அடிமைப் படா
ஓர் குழந்தை.

சிரிக்கும் கனவை
சிதைக்காமல் இணைகிறேன்
குட்டிப் புன்னகைக்குள்!!!

குழந்தைநிலா ஹேமா (சுவிஸ்)

No comments:

Post a Comment