மஞ்சாடி விதைகளை
சேமித்து
மூடி வைத்திருக்கிறது
அடி வேர்களில்
என் மண்
முகட்டு வளையில்
நகங்கள் கிள்ளிய வடுக்களோடு.
குருதி உலர்ந்த வெடிப்பின்
மூலை மடிப்புக்களில்
பொறுக்கியெடுத்த
ஆயிரமாயிரம் கதைகளை
வியாபாரத்துக்கென
திருடிக்கொண்டிருக்கிறது
சினிமாக்களும் இணையங்களும்
நிறை கொள்கலன்களில்
தப்புத்தப்பாய்.
வான்மேகம்
என் தேசப்படத்தின்
முகவரியழித்துத்
திருகிக்கொண்டிருக்க
காத்திராக் காலங்கள்
நழுவி அதிரும்
தந்திக் கம்பிகளில்.
வாழ்ந்த வீடு
சிதறிய சொந்தம்
கருக்குமட்டைப் படலை
குடல் சிதறிச் செத்த நாய்
என் பாப்பாத்திச் சேவல்
கைசயைத்த காவலரண் போராளி
அனாதரவற்ற உப்புமடச்சந்தி
அலைக்கழிக்கப்பட்டவர்களின் இரவு
வலமும் இடமுமாய்
சப்பித் துப்பி எஞ்சிக் கிடக்கும் குரல்கள்
உவத்தலற்ற காலத்தின்மீது
காய்ந்த விமர்சனங்கள்.
இன்னும் சந்தேகங்கள் தீர்ந்தபாடில்லை.
புழு நெளிய
மலம் மேல் மலமிருக்கும்
என் மக்களின்
விடுதலைத் தகப்பனே
யுத்தத்தின் பிதாக்களே
உங்களைத் தேடுகிறேன்.
தலையில்லாமல் வாழ்வதும்
ஒரு வாழ்க்கைதான்
உயிரும் குருதியும்
வேண்டுமெனில்
இதோ என் தலை.
இழந்த உறவுகளை
அழிக்கப்படும் வரலாற்றை
நினைவூட்டுகிறேனே தவிர
வேறொன்றுமில்லை.
முழந்தாழிடுகிறேன் புத்தனே
குமுத மலரோடு
உனக்காய் ஒருமுறை
அகதி தேசத்து
பனிக்காட்டுப் பெண் நான்!!!
மனதிற்கும் உடம்பிற்கும் தைரியம் கேட்டபடி...
நமக்காய் விதையாய்ப்போன அத்தனை உயிர்களுக்கும்
என் தலை சாய்த்த வணக்கம் !
வரைதல் - சுரேஷ் குமார் Suresh Kumar
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
சூரியச் சாம்பலை
கண்டதாக
சொல்கிறார்கள் சிலர்
தீச்சுடாக் கதிர்களில்
நான்கு மணிகொண்ட
கிரீடங்களோடு.
வல்வை வெளிக்காற்று
வாங்கி வைத்திருக்கும்
அந்தரத்து வார்த்தைகளில்
தொங்கியிருக்கும் அந்த ஒளி.
முட்டையிட்டுக் கொண்டிருக்குபோதே
உயிர்விடும் ஓணான்
சேடமிழுக்கும் வதைகுரலில்
சொல்கிறது
அச்சூரியனைத் தானே
கடைசியாய்க் கண்டதாய்.
அவர்களும் நாமும்
கை கோர்த்து நடக்கமுடியா
கைவண்டிகளையே
செதுக்கி வைத்திருந்தான் காலச்சிற்பி
ஒருக்களித்த சில்லுகளோடு.
ஓணானின் வேலியில்
பட்டுத் தெறிக்கும் தீச்சுவாலை
முட்டையில் பட்டு வெடிக்கிறது.
பிசுபிசுப்பாய்
அருவருக்கும் நாற்றமென
மெல்ல நகர்கிறதொரு கூட்டம்
நான் மட்டும்
நடுத்தெருவில் நிர்வாணமாய்.
இப்போதும் புரியவில்லை
சூரியனை எரிக்கலாமா
எரித்தாலும் சாம்பலாகுமா?
தலை தடவிப்போகிறது
இன்றைய வெயிலென்னை!!!
இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள் ‘அண்ணா’
குழந்தைநிலா ஹேமா
நிலாக்குட்டி சுகமா நீ ?
கதைச்சுக் கன நாளாச்சு.
இருட்டிவிட்டதா உன் நாட்டில் ?
இது கார்த்திகை மாசம் நிலா
இருண்ட நம் ஈழதேசம்
பார்த்திருக்கிறாயா
பதுங்குழிகளோடு ?
உனக்கென்னடி
கனடிய பிரஜை நீ.
மூன்று மணிக்கே
இருளாகிறது ஐரோப்பாவில்
இருளானவர்கள் நிழலாக
பொப்பிப் பூப்போல்
நிமிர்ந்தே நிற்கிறார்கள்
வணங்கிக்கொள்
இது கார்த்திகை மாதம்.
நமக்காய் வீறுகொண்ட
வேங்கைக் குட்டிகள்
நமக்காகவே நாமம் மாற்றி
நமைந்து போனவர்கள்.
யாரும் அழவேண்டாம்
நெய்யூற்று நிலா தீபங்களுக்கு.
மாவீரர் அவர்கள்
நினைவுக் கல்லறை அற்றவர்கள்
ஆணிகளேயில்லாமல்
நமக்குள் அறையப்பட்டவர்கள்.
அவர்கள் நம்மோடு இருந்தபோது
பதுங்குழியாவது இருந்தது
சொந்தமாய் நமக்கு.
இப்போ நம் குழிக்குள்
புத்தனும் அவன் சேவகர்களும்.
யாரோ ஒருவர் நிறுத்திய சைக்கிளை
நான் உழக்கிக்கொண்டிருக்கிறேன்
துப்பாக்கிகள் அடுக்கிய தெருவில்
தற்செயலாக
அவை வெடிக்கலாம் இப்போதும்
எப்போதும்.
இதுதான் ஈழத்தின்
இயல் வாழ்க்கை இப்போது.
யாரும் விஞ்சமுடியா வாளை
உறைக்குள் வைத்தார்களே தவிர
உறங்க(கி) விடவில்லை.
கள்ளருந்திய செல்லப்பூனைகளாய்
எங்களைச் சுற்றியவர்கள்
எங்கள் இல்லங்களில்.
அவர்கள் தீட்சண்யக் கண்களை
கண்டிருக்கிறாயா நிலா
கனவுகள் எரிந்துகொண்டிருக்கும்
எந்நேரமும் தகதகக்க.
வீரமரங்கள்
நம் அண்ணாக்களும் அக்காக்களும்
அணில் அரிக்க வாய்ப்பில்லை.
அண்ணாக்களின் பாதுகாப்பில்லாத
பூக்கள் இப்போது சிரிப்பதில்லை
பொம்மைகள் எல்லாம் ஊனமாய்
நூதனமான கிராமங்களில்.
நள்ளிரவில்
தனித்துக் கரையும் காகங்களை
முடிந்தவரை ஒற்றுமையோடு
துரத்திக்கொண்டேயிருப்போம்.
நீ கனடா தமிழச்சியல்ல
நானும் சுவிஸ் தமிழச்சியல்ல
நாம் ஈழத்தவர்கள்
எமது தேசம் ஈழம்.
வெல்வோம்
விண் அதிரச் சொல்வோம் நிலா
வெல்வோம் வெல்வோம்
விடுதலைக் காற்றைச் சுவாசிப்போம்.
இன்றல்லாவிட்டாலும்
இழந்த அத்தனைக்கும் ஈடாய்
இன்னொரு சூரிய உதிப்பின்
தலைமுறை மாற்றத்தில்.
கை கோர்த்து
உறுதி கொள்வோம் இன்று.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம் !!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
அடித்துச் சொல்கிறார்கள்
போர் இல்லையென்று.
ஏன் இன்னும் ஊருக்குள்
இராணுவம்
சுற்றிவளைப்பு
இறக்கவே முடியா
பாரப் பொதிகளுடன்
கழுதைகளாய் நாம் ?
உச்சுக்கொட்டும்
அவர் அழைப்பு
வீடில்லா நாய்களாய்
மொழியில்லா நாய்களாய்
தலைவனற்ற தேசத்தில் நாம்.
பதுங்கு குழிகள் மூடினாலும்
சீராகாப் பள்ளிகளும்
நீக்கா முள்வேலிகளும்...
தொடரும்
கேள்விகள் பதில்களும்
விசாரணையும்
மண்டியிடுதலும்...
வஞ்சம் தீர்க்க
வடிவான பொறிகளை
வாசனைப் பூக்கள் மறைக்க
பசிக்காமலே புசிக்கும்
உடல் முழுதும் புணர விரும்பும்
புத்தமக(கா)ன்கள்.
யார் சொன்னார்கள்
போர் ஓய்ந்ததென்று ?
கருவறைக் காய்ச்சல்போல
யாருக்கும் தெரிவதில்லை
எம் அவிச்சல்!!!
புகைப்படம் - ஜெரா Jera Thampi
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
கொந்துதல்
கொஞ்சுதல்
கௌவுதல் போல
அன்பின் ஆரத்தழுவல்
ஒரு முத்தம்.
ஆர்ப்பரித்து
ஆகாசத்தில் பறக்க
ஏதுமில்லை நமக்கு
கொஞ்சிக்கொள்ளும்
இருவர் தவிர.
தயவு செய்து
எட்டிப் பார்க்காதீர்கள்.
உறையும் குளிரில்
மழை நீர்போல்
இறுகும் இரு தேகத்தில்
ஒரு முத்தம்.
முலை சுரக்கும் தாயின்
முந்தானை
துளைத்துப் பார்ப்பதுபோல்...
கலவியின் உச்சத்தில்
கதவு தட்டி
அழைப்பதுபோல்...
உடை மாற்றும் தனியறையில்
ஒளிந்திருந்து பார்ப்பதுபோல்...
அந்தரங்கமாய்
அனிச்சையாய்
பேசுமொரு மொழியை
அப்பட்டமாய்
போட்டியென்று ஆக்கையில்
கொஞ்சம் அசூசைதான்.
நாகரிகமென்று
நாம் விரும்பும்
ஆங்கில மோகத்தின்
நிட்டூரமது.
முத்தம் தீட்டல்ல திட்ட
ஊட்ட ஊட்ட உயருமன்பின்
ஊட்டச்சத்தது.
முத்தம் தராத் துணையின்
முகம் நிமிர்த்திப் பாருங்கள்
சிலிம்பியிருக்கும்
அல்லது
முறிந்திருக்கும்
முத்தமொன்றங்கு!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
உதவிக்காய்
மூன்றாவது கரமொன்று
தேவையில்லை உனக்கு
என் தலைமுடி பிடித்து
இறுக்கிக் கட்டு
நான்...
நிமிர்ந்தே நிற்கிறேன்.
தருவேன்
ஒரு சிலுவை
அறையத் தேவையான
ஆணிகள் சில.
கொஞ்சம் பொறு
உன் ஒற்றைச் சிறகில்
ஒரு முத்தம்
பச்சை விளக்கொளி
சின்னதாய்
தனிமையில் சேர்த்த
ஞாபகக் குடுவை
இதில்....
பலதும் பத்தும்.
இப்போ தொடங்கு
என்னைக் கொல்ல
இறுதி ஆசை
என்னவென்று
கேட்கமாட்டாயா ?
கேளேன்....
எனக்கு
நீ
எழுதிய கடிதங்களில்
சில வரிகள்
உன் குரலில்
போதும்!!!
குழந்தைநில ஹேமா(சுவிஸ்)
நேற்றொருவன்
என்னை
உடைக்கத்தொடங்கியிருந்தான்
மொழியற்ற
உளறல் தேசத்துள்
நானற்று
நினைவிழந்திருந்தேன்.
மொழி மந்திரமாய்
புரியத்தொடங்கியது
வீணையின் இதமென்றான்
மெல்ல முறுவலித்தவன்
நீ....
மல்லிகையின் இனமடியென
இடையொடித்து
பின் ஒட்டிக் களிம்பிட்டு
என்னை எரித்து
தானே....
புகைந்துகொண்டிருந்தான்
பெரும் சேவகமென
என் விசும்பல்களுக்கும்
கேவல்களுக்கும்
ஏதேதோ பெயரிட்டபடி!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
நமைந்துகொண்டிருக்கிறது
நிலைக் கண்ணாடி.
அடிக்கும் மழையில் கரைகிறது
வரைந்த
சிவந்த குதிரையொன்று.
உறைபனிக் குதிரைகள்
உண்ண வைத்த கொள்ளில்
கண்களின் அசைவு.
பயன் அறுத்த பின்னும்
எகிறிக் குதித்தோடுகிறது எலிகள்
மீண்டும்
பதப்படுத்தப்பட்ட மண்ணில்.
உடைவதும்
தெறிப்பதும்
கரைவதும்
ஓடுவதுமான....
தூரத்து நினைவுகளைச் சரிசெய்து
களைத்துக்கொண்டிருக்க வேண்டியதாயிருக்கிறது
இந்த வெண்பனிக் காலத்திலும் வேர்க்க வேர்க்க!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
முத்தின மூணு இலையை
முணுமுணுக்காம
தோளில சுமந்து சுமந்து
சுகமா வாழக் குடுத்திட்டு
சொர்க்கம்ன்னு
சாணி மெழுகி
நாலு மூங்கில் கம்பு நட்டு
வீடாக்கிக் குந்தும் வச்சு
குபேரன் நினப்பா
வாழ்ந்திட்டு இருந்தவங்களை
மனுசரா மதிக்காம
மண்ணுக்குள்ள மூடிட்டாங்க.
சிராய்க் கட்டையா
விறைச்ச கை கால்ல
பாம்பு குடிச்சு
அட்டை குடிச்சு
மிஞ்சின ரத்தத்தை
கொஞ்சமும் அஞ்சாம
மிச்சத்தையும் குடிச்சுப்புட்டு
குஞ்சுகளை அநாதையாக்கி
எத்தனை பேர்ன்னு
எண்ணிக்கைகூட தெரில்லன்னு
தமிழனுக்கு
இதுதான் விதின்னு
பதுளைல மூடிட்டாங்க.
நாசமா போன இயற்கைகூட
எப்பவும்
நம்மளுக்கே நாசம் செய்து
மனுசப் பச்சயம் தேடிப் புதைக்குது
அழிச்சவங்க வருங்காலம்
வளமா வாழ.
மாரியம்மா பாப்பாத்தி
வெங்கடாசலம் காத்தையா
தங்கம்ன்னு
பொன்னு பொன்னா
புசுக்குன்னு வெத்தில எச்சி துப்பி
பொய்யில்லாக் கழுதைங்க சிரிச்சது
போக்கடி அம்மனுக்கும் பிடிக்கல.
குண்டு போட்டுக் கொன்னாங்க
ஈழத் தமிழன்னு.
இப்ப......
இலங்கைக்கே
லாபம் தரும்
இல்லாத ஏழைங்களை
அழிஞ்சிடுவாங்கன்னு தெரிஞ்சுமே
காப்பாத்த மாட்டாம
தழையாக்கிப் புதைச்சிட்டாங்க.
தேயிலை பறிப்பவங்க அடுப்பில
கடநிலைத் தேத்தண்ணியோட
மனசும் சேர்ந்து கொதிக்கிறதையும்
கண்மாயைப்போல கண் கலங்குறதையும்
கண்டாங்களா கதிரையில குந்தினவங்க.
ஏகாதிபத்தியக் காரங்களுக்கு
நம்ம குழந்தைங்க
நவீனக் குழந்தைகளா ?
குப்பைகளா ?
தீட்டுப்பட்ட சாதிகளா ?
வாழணும்ன்னு
விதிச்ச விதி சொல்ல
தமிழனா பிறந்த
விதி விதிச்ச சொல்ல
நாசமாப்போன சாமியை
நாக்கில வந்தமாதிரிக்கு
திட்ட வருது.
ஓட்டுக் கேக்கும்
கும்மாரிகளுக்கென்ன
கொன்னு புதைச்சிட்டாங்களே
விருத்தி கெட்ட தமிழனை
’பதுளை’யிலயும்!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
குளிர் கொத்தித் தின்ன
மஞ்சளும் செஞ்சிவப்புமாய்
பரவிய இலைகள் நடுவில்
கணங்கள் கடுக்க நிற்கிறேன் மாயா.
வாழ்ந்த நினைவாய்
வடுக்களை விட்டுக் காலடி
காலடிவந்து விழுகின்றன
இலைகள்.
பிரியமாட்டேனெனச் சொன்ன
பாசத்தின் உச்சமாய் இருக்கலாம் மாயா
கவிழ்ந்து காலடி நசியும் இந்தத் தண்டனை.
தராத தண்டனைகளின் வலி அதிகம் மாயா
நீயே தண்டித்துக்கொள் என்பதாய்.
நீ சோதித்தபோது சிறகிருந்தது எனக்கு
வெட்டிக் கூண்டிலடைக்க நினைக்கும் உரிமையோடு
உன் வக்ர அதிகார புத்தியை மாற்றிக்கொள்ளும்
சுய உரிமையை மட்டும்
மறுத்துக்கொள்கிறாய் ஏன் மாயா ?
உன் சொற்களின் அகங்காரம் சில
என் மனதில் தக்கையாய் மிதக்க
ஆழப்புதைகிறதுன் மிகை அன்பு.
வாழ்வு பற்றி நினைக்காத என்னிடம் வலி பிழிந்து
மழையாய்ப் பொழிந்தொரு திருகுபாதை செய்தாய்
பாறை அமுக்கிய வலியோடு முளைவிட்ட
வெள்ளைப் புல்லாய் நான்
உன் திருகலில் பிளந்து வெளிவந்தேன் மாயா.
மீண்டும் புதைத்துவிடு
குளிரில் நடுங்கி நிற்கிறேன்
மஞ்சள் நிற இலைகள் நடுவில் மரத்த மனதோடு
இன்னுமொருமுறை
ஆசைத் துளிரேதும் வராதபடி திருகிவிடு
என் நுனியை.
கொஞ்சம் இரு மாயா ...
சில முத்தங்கள் தந்திருந்தாய்
நானேதும் தராத கடனாக
மழைநாளில் அப்பிள் பூவாசம்போல
அள்ளிச் சேமித்திருந்தேன்
யாருமில்லா இந்த நடைபாதையில்
கண்ணீரும் கட்டியாக
கொட்டும் ஐஸ் மழையில்
உதிர்த்திக் கரைக்கிறேன்.
மாயா நீ மலையளவா
இல்லை என் உள்ளங்கையின் கனவளவா
புதிர் அவிழா
இன்னும் கண் வரையா கலையழகும் நீ.
நீ எனக்கொரு ஓவியம்போல
கவிதைபோல அவ்வளவே
இடையூறே தவிர
நிறுத்தமுடியா கால அளவு நீ மாயா.
உன் மீசையழகு
விறைத்த முகமழகு
கர்ஜிசிக்கும் குரலழகு
ஆண்மை சிலிர்ப்பும் சிரிப்பழகு
ஆனாலும் ??????!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)
எனக்கு அசதியாய் இருக்கிறது
ஊற்ற ஊற்ற நிரப்பமுடியா
உன் காலிக் குவளை.
நடுங்கும் என் விரல் ரேகை
போதுமெனச் சொல்லா
நிறைவுறா
உன் நிழல்களில் பதிகிறது
பதற்றமாய்.
உதிர்ந்து விழும் விநாடிகளை
பெண்டூலம் உதற
விழுகிறோம் தனித் தனியாக.
அரவமற்ற பொழுதொன்றில்
காத்திருப்போடு
நுரையீரல் சுவர்களை
தட்டித் திறந்தவன்
நீயா இப்படி நிரம்பாமல்.
என்னை நிரப்பி
உன் கையிலேந்த விடுகிறேன்
ஒவ்வொரு துளியிலும்
கனத்தோடு.
கையூட்டில்
உதிரம் வடிந்தாலும்
சிதறாமல்
களவாடிய
முத்தங்கள் ஒளித்த
உதட்டு மடிப்போடு
பொருத்திக்கொள்.
நிரம்பிய துளி நான்
திரும்பிடப் போவதில்லை
இனி!!!
குழந்தைநிலா ஹேமா(சுவிஸ்)