’கடவுளே’ என
உடல்முறித்து
அலுத்துக்கொள்ள
முன்னாலிருப்பவன்
தன்னைக் கூப்பிட்டதாக
'நானா' என்கிறான்.
கடவுளை
அறிமுகப்படுத்தவில்லையே
அம்மா இப்படி.
சூலும் வேலும்
புலியும் மயிலும்
அகோரமாயும்
ஆயுதங்களோடும்...
சிலசமயம்
சின்னப்புன்னகையோடு
கே ஆர் விஜயா
உருவத்தில்
பெண் கடவுளாகவும்
சிவாஜி கணேசன் உருவத்தில்
ஆண்கடவுளாகவும்
நாகேஷ் உருவத்தில்
நகைச்சுவைக் கடவுளாகவும்...
பூக்களும் நகையுமாய்
பணக்காரச் சாமிகள்
பலவாய்
விதம் விதமாய்.
கடவுளிடம்
கிழிந்த சட்டையில்லை
கூரையில்லா வீடில்ல
பசியில்லை
கழிவறையுமில்லை
காலையில் எழும்பி
படிக்கவும் தேவையில்லையாம்
தானாகவே புத்தி அதிகமாம்
பொன்னையா மாஸ்டர்
சொன்னது ஞாபகம்.
நீதி சொல்ல
காதலித்த கடவுள்
களவாடிய கடவுள்
கதை சொன்ன கடவுள்
கோபித்த கடவுள்
மண் சுமந்த கடவுளென
ஆயுதம் இல்லாக்
கடவுள்களே இல்லை
காணாமல் போகமுடியா
கைதாக முடியா
தீவிரவாதக் கடவுள்களோ.
மீனுக்கும் குருவிக்கும்
கறையானுக்கும் பூனைக்கும்
யார் கடவுள் ?!
கடவுள் உலகத்தில்
ஆயுள் அகலமாமே
புண்ணியம் செய்தால்
பூச்சிகளும் பறவைகளும்
பட்டுச்சிறகோடு
பறக்குமாமே அங்கு.
சிவாஜி கணேசன்
சிவனாய் சிரிக்கிறார்
அட்டகாசமாய்.
விருத்தெரிந்தபின்
சிவாஜி நடிகனெனவும்
கடவுள்கள் ஆகாயத்திலும்
தேவலோகத்திலுமெனச்
சொன்னார்கள்.
அதன்பிறகு கடவுள்கள்
அட்டகாசமாய்ச் சிரித்தே
நான் கண்டதில்லை
எங்குமே.
முதன் முதலாய்
கடவுளென நான் நம்பும்
ஓருருவம் கண்டேன்
என் முன்னால்
சிரிக்கிறது
பார்க்கிறது
பேசுகிறது
அலங்காரமில்லா
குட்டிப்புன்னகை
கண்களில் தேக்கி.
’என்னையா கடவுள்’
என்றாய் என்றதால்
தோள் தொட்டு
’வா காப்பி குடிக்கலாம்’என்றேன்
எனையுரசி நடந்தே வருகிறது
தெருக்கடை தேநீர்ச்சாலைக்கு.
இனி....
கை குலுக்கி விடைபெறும்
கல்லாயும் போகாது
தொலைந்தும் போகாது
தொடர்பிலும் இருக்குமது!!!
ஹேமா(சுவிஸ்)
யாழ் ’உதயன்’ சஞ்சிகையில் வெளியாகிய கவிதை.நன்றி ஜெரா Jera Thampi !
கடவுள் --- அருமையான கவிதை...
ReplyDeleteகடைசி வரிகள் நச்.
வாழ்த்துக்கள் அக்கா.