Sunday, July 28, 2013

என் காதலன்...


என் வலிகளைத் தனதாக்கி
அகோர வெயிலிலும்
மனதை ஈரமாக்கும்
என் இனிய தோழன்
அந்தசாரன்.

காதோரம் முடி ஒதுக்கி
நாடி(சி) நெருங்கும்
பேராசைக்காரன்
மோகத்தீ மூட்டி
குளிர்காயும் புத்திசாலி.

பைத்தியமாய் உளறினாலும்
ரசித்து
உயிருக்குள் உயிர் திணித்து
நாட்காட்டி நாளில்
நல்லவனாய்
பிரகாசிக்கும் பேரழகன்.

வாழ்தலையும் சாதலையும்
உள்ளங்கைக் கதகதப்பில்
வைத்துக்கொண்டு
கண்ணாமூச்சி ஆடும்
கண்ணழகன்.

இமை அசையும் 
ஒரு கணத்தில்
இதழ் சுவைத்து
இறைவனையும் கண்மூடி
வெட்கப்பட வைக்கும்
இயக்கன்.

போராடி விட்டுக்கொடுத்து
எச்சில் ரசங்களால்
காயங்களாற்றும்
காதல் மருத்துவன்.

தையலிட்ட பள்ளங்களை
நிரப்பிப்போகிறான்
சில முத்தங்களிட்டு
மீண்டும் வரும்வரை
ஆறாக்காயம் தந்து!!!

ஹேமா(சுவிஸ்)

8 comments:

  1. விரைவில் ரசிகரை சந்திக்க வேண்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. காயப்படுத்தாமல்காதல்வளராது

    ReplyDelete
  3. இன்பமும் துயரமும் இரண்டறக்கலந்த கவிதை!

    ReplyDelete
  4. காயம் பட்டால்தானே காதல் இனிக்கும்...
    அருமையான கவிதை சகோதரி.

    ReplyDelete
  5. ஆறாக்காயமும் அவனே தருகிறான், அவள் வலிகளையும் அவனே தனதாக்குகிறான். மாயவித்தையால் அவள் மனத்தைக் கவர்ந்த காதல் வித்தைக்காரன்... அவள் காயமாற்ற விரைவில் வருவானென்னும் அவள் நம்பிக்கையை அவநம்பிக்கையாக்காதிருப்பானாக!

    காதலின் ஆழ்பரிமாணங்களை அழகாக எடுத்துரைத்தக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.

    ReplyDelete
  6. உண்மையான காதலர்கள் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை அப்படியே திரையிட்டுக் காட்டியுள்ளது இந்தக் கவிதை அருமை ! வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  7. ரயில் பாதையில் காதலர் படத்தைப் பார்க்கும்போது இளவரசன்-திவ்யா நினைவல்லவா வருகிறது? நல்ல, அருமையான இக்கவிதைக்கு வேறு படம் போட்டிருக்கலாமோ!

    ReplyDelete