Friday, April 27, 2012

பாதையும்...பாசமும் !

கிளைகள் உரசும்
காற்றும் கற்றுக்கொண்டது
காதலை அன்றுதான்.

மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் அனுபவித்த
காதலின் உச்சத்தை
தம்முள்
ரகசியமாய் ரசித்தபடி
பாதைகளும் காத்திருக்க...

ஒற்றைக் கல்லும்
ஒளித்து வெட்கித்த
ஒற்றை நிமிடத்தை
ஈரமாய் வைத்திருக்க...

பாதை கடக்கும்
நத்தையொன்று
கீறிப்போகிறது
அவர்கள் காதலை!!!
தூரத்து நிலவிலும்
கால் பதிப்பேன்
நீ...பக்கமிருந்தால்.

முடிவே தெரியாத பாதைகளிலும் 
பயணிக்க முடியும் 
முடிவில்லா 
 உன் பாசமிருந்தால்.

கடலைவிட ஆழப்பதிவேன் 
அம்மா நீ.... 
தாங்கியாய்த் தாங்குவேனென 
நம்பிக்கை வார்த்தையொன்றை 
சொல்லிவிட்டால்!!! 

ஹேமா(சுவிஸ்)

Friday, April 20, 2012

கொய்யா...முத்தம் !

கொடுப்பது பற்றியும்
எடுப்பது பற்றியும்
யோசிப்பதை
உன் உதடுகள் உணர்ந்திருக்க
வாய்ப்பில்லை.

முன்னம் அறிந்திரா
மிகச் சிறந்த...
மிக மிகச் சிறந்த
ஒன்றை
சமைக்கத் தொடங்கிவிட்டேன்
இப்பொழுதே
உனக்கு மட்டுமானதாய்.

மழைதொடும் மண்
மண்தொடும் மழை
ச்ச.....
ஞாபகக் கள்வனே...
காற்றாய்
வருடுகிறாய்
ஒற்றை மழைத்துளியாய்
உதடு நனைக்கிறாய்
சமையலுக்கான
ஈரம் சேமிக்கிறேன்
உன்னிடமிருந்தே.

வா....வரும்வரை
உலரா உதட்டோடு
அல்லாடித் தொலைக்கிறேன்
இருப்பு ஏதுமற்று
கோடை மழை
பருகத் தவிக்கும்
ஒரு வண்டாய்!!!

ஹேமா(சுவிஸ்)

Wednesday, April 18, 2012

இவள்....மெலேனா !

கட்டட முகப்பில்
உயர்த்தப்பட்ட
கொடியெனக் காம நெடி
பிரிந்த கணவனுக்காய்
கட்டியணைத்து
முத்தம் தந்தவர்களில்
எவரும் அனுதாபிகளல்ல
பயந்து பயந்து மருண்ட
ஒரு விழி உரசுகிறதவளை
தெரிந்துகொண்டதில்
சின்னவனாம் பத்தாண்டு.

காதல் எரிக்க
காமம் அதை முந்த
கறுப்பு மரமேறி
யன்னல் க(ள்)ல் நுழைந்து
இறங்கினான் சின்னவன்
ஆடையில்லா அவளருகில்
பார்த்தானாம் அன்றொருநாள்
அந்தப்புர அந்தியில்
முற்பிறவியில் கணவனென்றான்.

தொடர் இரவில்....
"அதிரவைக்கிறாய் என்னுடலை
விடத்திற்கு நீயே ஒளடதம்
உயிர்த்தெழ உத்தரவாதம்
உந்தி வெளியேற்றும்
என் ஒரு துளி விந்தும்
உன் காதலுமென"
இரத்தம் கீறுகிறான்.

அத்துமீறலென
அலற அலற அடிக்கிறார்கள் அவளை
அதன்பின் அறையத்தொடங்குகிறாள்
அவளை அவளே!!!

("மெலேனா" என்கிற பிரெஞ் படத்தின் தாக்கம்)

ஹேமா(சுவிஸ்)

Thursday, April 12, 2012

தொட்டித் தாவரங்கள்...

சுவாரஸ்யமான வாசிப்பின் நடுவில்
தொலைந்திருந்தாள் நாயகி
பாதி கிழிந்து கருகியுமிருந்தாள்
சுடுகாட்டில் கிடந்தது பக்கம்!

புலம்புகிறாள்
எரியும் சிதைவிட்டெழும்பி
நொந்த பெண்மை பற்றி.

தனக்குள் ஏவிவிட்ட சீதனப் பேயால்
சொற்களைப் பறித்தெறிந்து
பேசவிட்டவனின்
ஆடைகளைக் களைந்துவிட்டு
மானம் பற்றி
பேசிக்கொண்டிருந்தவனின்...

சாட்சியாய் குமுறுகிறாள்!

இரத்தம் பீச்ச என் முன்
பச்சைக் காயங்களுடன்
ஊனமாய் நின்றவன்
ஏன் இங்கு
சங்கு சேகண்டியோடு!

அதோ அடுப்பில்
ஏதோ மணக்கிறதென்கிறான்
எரிந்து முடிந்திருக்கிறது
அதே வசனத்தோடு
அந்தப் பக்கமும்!!!

ஹேமா(சுவிஸ்)

Friday, April 06, 2012

அவன்...

அதிராமல் தூறும் மழைத்தூறல்
^
பௌர்ணமிப் பின்னிரவு
^
தனித்த வேம்பின் நிழல்
^
பெயர் பாடும் கொலுசு
^
சத்தமில்லாக் குச்சொழுங்கை
^
ஈரிதழ் நந்தியாவட்டை
^
இருபது விரல் பதித்த
மணல் குவியல்
^
மரவட்டை வரையும் தெரு
^
தோய்த்துலர்ந்த
ஆடையின் வாசனை
^
தலையணையோடு
வாடிய மல்லிகை
^
தோளணைத்து இறுக்கி்த்
தளர்த்தும் தனிமை
^
இதழ் நெருங்கிப்
பின்
கடித்துத் திருப்பும் காது
^
இன்னும் ஏதோ
^
இதில்
^
அதில்
^
வசித்து
வரப்போகிறேன்
இத்தனைக்குள்ளும்
இன்னுமொருமுறை
^
கள்வன்
காற்றாய்
அவன்தானோ
^
ஏதேனும்
கிட்டுமெனக்கு!!!

ஹேமா(சுவிஸ்)

Tuesday, April 03, 2012

சுவர்களின் குறிப்புகளில்...

காடு நிரப்பும் நகரமென
சூரிய எச்சில்
படாத முகட்டோடு
நாகரீகக் குறிப்பெடுக்கும்
பென்னாம் பெரிய வீட்டுக்குள்...

தூண்கள் அளவு
கனத்த கதைகளோடு
வாய்வு நிறைத்த வயிறும்
பசிக்கும் மனதோடுமாய்
ஞாபகத் திணறலோடு
மூப்பின் உதிர்வொன்று.

ஜாடைகள் அப்பிய
முகங்களோடு
தலைமுறை காவும்
நீ...ண்ட நிழல்கள்
சிரித்த முறைத்த
ஞாபகச் சுவரோடு
வெப்ப மூச்சு
விட்டு விட்டு ஒடுங்க
ஓடி ஒளித்து விளையாடிய
கண்ணாடி மைதானத்து
பல்லிகளும் இல்லாமல்.

காட்டிச் சொல்லும் தடயங்களை
பைகளில் திணித்தவர்கள்
காணாமல் போனவர்கள்
காதுகளோ
நிமிட முட்களோடு மட்டுமே!!!

ஹேமா(சுவிஸ்)